ஆதினியின் கணிப்பைத் தாண்டியவனாக இருந்தான் சத்தியநாதன். வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த தமயந்தியிடம் அவன் எதுவுமே விசாரிக்கவில்லை. ஆனால், அந்த வீட்டில் அவளுக்கான கண்காணிப்பு அதிகரித்துவிட்டதை உணர்ந்தாள் தமயந்தி.
அந்த வீட்டில் கழியும் ஒவ்வொரு நொடிகளும் திக் திக் நிமிடங்களாகக் கழிந்தன. திருமணமான புதிதில் கணவனோடு தனியாக வந்தபோது துள்ளிய உள்ளம், இன்று அதே தனிமையை எண்ணிப் பயந்து நடுங்கியது.
என் கணவனைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சொல்லி, ஆதினி சொன்னவற்றை அவளால் புறம் தள்ள முடியவில்லை. அவளும் அவனும் என்று வருகிற பொழுதுகளில் எல்லாம் அவளைக் கொண்டாடித் தீர்ப்பான்.
அதற்காக அவன் பார்க்கும் வேலைகள் பற்றியோ, அவன் வீட்டினரைப் பற்றியோ, அவன் சகோதரர்களைப் பற்றியோ அவளால் ஒரு வார்த்தை இன்று வரையில் பேசிவிட முடியாது. பேச விடமாட்டான். பார்வையாலும் செயலாலும் அடக்கிவிடுவான். வெளி வாழ்க்கையைப் பற்றி அவளிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை.
கூடவே, இத்தனை நாள்களும் அசட்டையாகக் கடந்த விசயங்கள் அத்தனையும் கண் முன்னே வந்து நின்று பயமுறுத்தின. மனம் குழம்பிய குட்டையாகிற்று.
ஆதினி சொன்னது போல விசாரித்துத் தெளிவதற்கு நம்பகமான ஆட்கள் என்று அவளுக்கு யாரும் இல்லை. அவளைச் சுற்றிக் காவல் காக்கும் அத்தனை பேரும் அவனது ஆட்கள். அவனோடு நன்றாக இருந்த காலத்திலேயே தனியாக எங்குச் செல்வதற்கும் அவளுக்கு அனுமதி இல்லை. அப்படியிருக்க இப்போது விடுவானா?
பெற்றோரிடம் இதைப் பற்றிப் பேசலாம் என்றால், அவனோடு இருக்கையில் மட்டும்தானே அவர்களோடு உரையாட முடிகிறது? ஆக, கண்ணுக்குத் தெரியாத வேலிகள் கொண்டு, அவளைச் சிறை வைத்திருக்கிறான் என்று புரிந்து, பெரும் அச்சம் கொண்டாள்.
இப்படி, அவள் தவித்துக்கொண்டு இருக்கையில் அவளது பெற்றோர் வந்திறங்கியது அவளே எதிர்பாராதது. “அம்மா!” உள்ளத்தில் இருப்பதைச் சொல்லவும் முடியாமல், நெஞ்சை அடைக்கும் வேதனையை விழுங்கவும் முடியாமல் ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவர்கள் வந்து இறங்கிய கொஞ்ச நேரத்தில் சத்தியநாதன் அங்கு நின்றான். “என்ன மாமா திடீர் எண்டு?” என்று அவன் கேட்ட விதமே, அவர்களின் வரவை அவன் விரும்பவில்லை என்று அப்பட்டமாகச் சொல்லிற்று.
மனைவி மகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, “நடந்ததை எல்லாம் அறிஞ்சதில இருந்து அங்க இருக்கவே ஏலாம இருக்குத் தம்பி. இப்ப வர வேண்டாம் எண்டு நீங்க சொன்னனீங்கதான். எங்களாலதான் இருக்கேலாமப் போச்சு. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. அவளுக்கு இப்பிடி எண்டா எப்பிடித் தாங்கிறது சொல்லுங்கோ?” என்று, நயமாகவே பேசினார் அவள் தந்தை.
பதில் சொல்லாது மனைவியைப் பார்த்தான் சத்தியநாதன். அதில் அவள் நெஞ்சுக்குள் குளிர் பரவும் உணர்வு. கலங்கியிருந்த விழிகளை வேகமாகத் தழைத்துக்கொண்டாள்.
“பிள்ளை மனதளவில நல்லா உடைஞ்சிட்டா தம்பி. கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இருக்கட்டுமே. தாய்க்கும் மகளை நினைச்சுக் கவலை. கொழும்பில எண்டா இன்னும் ஸ்பெஷல் டொக்ட்டர்ஸ்டயும் காட்டலாம். எங்களுக்கும் மகளோட இருக்க ஆசையா இருக்கு.”
“இப்ப நிலைமை கொஞ்சம் சரியில்ல. அதான் வர வேண்டாம் எண்டு சொன்னனான். நீங்க வந்து நிக்கிறீங்க.” என்று தாடையைத் தடவினான் அவன்.
விடமாட்டானோ? தமயந்திக்கு அழுகையே வந்தது. பெற்றவர்களின் வீட்டுக்குச் செல்வதற்குக் கூட, அவன் அனுமதி வேண்டுமா என்று மனம் புழுங்கிற்று.
“நிலம இஞ்சதானே தம்பி சரியில்ல. கொழும்பில இல்லையே. அதவிட அம்மா வீட்டில இருந்து, அம்மான்ர கையாள சாப்பிட்டா பிள்ளைக்கும் மனத்துக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். மனம் நல்லா இருந்தாத்தானே உடம்பும் குணமாகும். நீங்களும் வேலை வேல எண்டு போயிடுவீங்க. அவா தனியாத்தானே நாள் முழுக்க இருக்கிறா. கொஞ்ச நாளைக்குத்தான். நீங்க எப்ப சொன்னாலும் திருப்பிக் கொண்டுவந்து விடுறன்.”
அப்போதும் அவருக்குப் பதில் சொல்லாது, “போப்போறியா?” என்றான் அவளிடம்.
பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, தலையை மட்டும் வேகவேகமாக மேலும் கீழுமாக அசைத்தாள் தமயந்தி.
அவளையே ஒரு கணம் விழியசையாது பார்த்துவிட்டு, “சரி கூட்டிக்கொண்டு போங்க. உங்கட மகளா இல்ல. இந்தச் சத்தியநாதன்ர மனுசியா. அவள் எங்க இருந்தாலும் என்ர ஒரு கண் அங்க இருக்கும். அத மறந்திடாதீங்க!” என்று அவர்களிடம் சொன்னவன், அவளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு வீட்டுக்குள் நடந்தான்.
நெஞ்சு நடுங்க பெற்றவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு அவனைப் பின் தொடர்ந்தாள் தமயந்தி. அறைக்குள் அவள் சென்ற அடுத்த கணமே அறைக் கதவு சாற்றப்பட்டது.
திகைத்துத் திரும்பியவளிடம், “அதென்ன அவ்வளவு வேகமாத் தலையாட்டுறாய்? அந்தளவுக்கு இஞ்ச இருந்து தப்பி ஓடோணும் மாதிரி இருக்கா?” என்றான் அவன்.
அவளுக்குப் பயத்தில் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. என்ன பதில் சொல்வது என்று தெரியாது விழித்தாள்.
“என்ன, பதில் சொல்ல மாட்டியோ? அந்தளவுக்குக் குளிர் விட்டுப் போச்சுது!” என்றவன் வேகமாக நெருங்கி, அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.
இதென்ன இந்த நேரம் என்று மனம் அதிர, “அம்மா அப்பா இருக்கினம்…” என்றாள் கிடைத்த இடைவெளியில்.
“வெளில தானே, இருக்கட்டும்!” என்றவன், தன் தேவை தீர்ந்த பின்தான் அவளை விட்டு விலகினான்.
*****
கொழும்பு வந்து சேர்ந்த பிறகுதான் மூச்சை இழுத்து விட்டாள் தமயந்தி. புகையிரதத்தில் பயணித்த நேரம் முழுக்க அவசியம் தாண்டி மூவரும் வாயைத் திறக்கவே இல்லை. யார் எங்கிருந்து அவர்களைக் கவனிக்கிறார்கள் என்று என்ன தெரியும்?
வீட்டுக்கு வந்து, ஜன்னல்களையும் கதவுகளையும் இறுக்கிச் சாத்திய பிறகுதான், “உன்னக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லிச் சொன்னது ஏஎஸ்பி எல்லாளன் சேர் தானம்மா.” என்று சொன்னார், அவள் தந்தை.
அவளுக்குத் திகைப்பு. “ஏனாம் அப்பா?” என்றவளுக்கு அப்போதுதான் தான் சொல்லாமல், தன் நிலை முழுமையாக அறியாமல், எப்படி இவர்கள் சரியான நேரத்திற்கு வந்து இறங்கினார்கள் என்று விளங்கிற்று. ஆதினியும் ஓடிவிடு என்றுதானே சொன்னாள்!
“ஏன் எண்டு அவர் விளக்கமாச் சொல்லேல்லப் பிள்ளை. ஆனா, வந்து எப்பிடியாவது கூட்டிக்கொண்டு போங்க எண்டு சொன்னவர். அதோட, எங்களுக்கு இங்க மறைமுகமாப் பாதுகாப்பும் போட்டிருக்கிறாராம்.” என்றதும் அவள் நெஞ்சில் திகில் பரவிற்று.
“எங்களைச் சுத்தி அப்பிடி என்னப்பா நடக்குது? நாங்க ஆருக்கு என்ன பிழை செய்தனாங்க?”
“அது தானம்மா ஒண்டும் விளங்குது இல்ல.” வசதியானவர்கள், செல்வாக்கானவர்கள் என்று ஆசைப்பட்டு, ஒரே பெண்ணின் வாழ்வை படுகுழிக்குள் தள்ளிவிட்டேனோ என்று தனக்குள்ளேயே உழன்றார், மனிதர்.
இனி என்னாகும் அவள் வாழ்க்கை? அவரால் கணிக்கவே முடியவில்லை. தற்போதைக்கு அவளை அவனிடமிருந்து கூட்டிக்கொண்டு வந்ததே பெரிய விசயமாகத் தோன்றிற்று.
“அவர் உண்மையாவே சரியில்லப் போலதான் அப்பா. எல்லாமே மூடு மந்திரம் மாதிரி. எங்க போறார், என்ன செய்றார் எண்டு ஒண்டும் சொல்லமாட்டார். வெளில தனியாப் போய் வரவும் விடமாட்டார். கம்பஸ் மட்டும்தான். அவர் அரசியல்ல இருக்கிறதால என்ர பாதுகாப்புக்காக அப்பிடிச் செய்றார் எண்டுதான் முதல் நினைச்சனான். பிறகு பிறகுதான் தெரிஞ்சது, அவரைப் பற்றி எனக்கு ஒண்டும் தெரியாம இருக்கத்தான் அப்பிடிச் செய்திருக்கிறார் எண்டு.”