“இதையெல்லாம் ஏனம்மா முதலே எங்களுக்குச் சொல்லேல்ல?” என்று வினவினார், அன்னை. குழந்தை பிறக்காதாம் என்று தெரிகிற வரைக்கும் அங்கே அவள் சந்தோசமாக வாழ்வதாகத்தானே எண்ணியிருந்தனர்.
“முதல் எனக்கும் ஒண்டும் தெரியாதம்மா. அவரின்ர ரெண்டாவது தம்பிய எல்லாளன் சேர் சுட்ட நேரம் கூட, எப்பவும் இருக்கிற மாதிரியே சாதாரணமா இருந்தார். கவலை, கண்ணீர், சோகம் எண்டு ஒண்டும் இல்ல. அப்பதான் எனக்குப் பயமே பிடிச்சது. அது எப்பிடியம்மா கூடப்பிறந்த தம்பி செத்தும்…” என்றவளுக்கு, அவன் அன்றும் தன்னோடு தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டதைப் பகிர முடியவில்லை. ஏன், இன்று கூட அதைத்தானே செய்தான். இதையெல்லாம் பெற்றவர்களிடம் சொல்லவா முடியும்?
“இப்ப இப்ப அவர் நடக்கிற விதங்களைப் பாக்க என்னவோ மனநிலை பாதிச்சவர் மாதிரி இருக்கிறது. இதில, அண்டைக்கு ஆதினி சொன்னதை எல்லாம் கேக்க நெஞ்சே நடுங்கிட்டுது அப்பா.” என்றுஅனைத்தையும் சொன்னாள்.
ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு அமர்ந்துவிட்டனர் அவளைப் பெற்றவர்கள்.
எல்லாளன் சொன்னது போலப் புதிதாக வாங்கி வைத்திருந்த அலைபேசியிலிருந்து அழைத்து, தமயந்தியை அழைத்து வந்துவிட்டதை அவனுக்குத் தெரிவித்தார் அவள் தந்தை.
“ஓகே அங்கிள். கொஞ்சம் கவனமா இருங்க. அதேநேரம், சந்தேகம் வராத மாதிரி எப்பவும் போல இருங்க. எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.” என்று சொன்னவனிடம் கைப்பேசியை வாங்கித் தமயந்தியும் பேசினாள்.
“எல்லாத்துக்கும் நன்றி சேர்!” அதைச் சொல்லும்போதே அவள் குரல் கமறியது.
“அதெல்லாம் என்னத்துக்கம்மா? நீங்களும் காண்டீபன் செய்ததுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோமா. ஆனா கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும் எண்டு நம்புவம். அவன்ர வைஃபுக்கும் உங்களுக்கு நடந்ததுதான் நடந்தது. சொல்லப்போனா இன்னும் மோசமா பாதிக்கப்பட்டு இருந்தவா. அவாக்கே பேபி கிடைச்சிருக்கு எண்டேக்க உங்களுக்கும் நிச்சயம் நல்லது நடக்கும், சரியா? ட்ரீட்மெண்டுக்கு கட்டாயமாப் போங்கோ. கொஞ்ச நாளைக்கு எதைப்பற்றியும் யோசிக்காம நிம்மதியா இருங்கோ!” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு அவன் அழைப்பைத் துண்டிக்கப் போக, “சேர், ஒரேயொரு கேள்வி.” என்று தயக்கத்துடன் இடைமறித்தாள் தமயந்தி.
“சொல்லுங்க.”
“ஆதினி… அவரைப் பற்றிச் சொன்னது எல்லாம் உண்மையா?” நலிந்து ஒலித்த அவள் குரல் நடுங்கியது.
“இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கோம்மா. நான் எல்லாம் சொல்லுறன். அதுவரைக்கும் கண்டதையும் யோசிக்காதீங்க. சத்தியநாதன் கதைச்சா நல்ல மாதிரிக் கதைங்கோ. இங்க யாழ்ப்பாணத்துக்கு வரச் சொன்னா மட்டும் எடுக்கிற ட்ரீட்மெண்ட்ட காட்டி வராதீங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
*****
எல்லாளனும் ஆதினியும் அவர்களுக்கென்று இதுவரையில் நேரம் ஒதுக்கியதே இல்லை. ஒரேயொருமுறை இவன் கொழும்புக்குச் சென்று அவளைப் பார்த்தது மட்டும்தான்.
அதைத் தாண்டிச் சந்தர்ப்பமும் அமையவில்லை, அவர்களாலும் அமைத்துக்கொள்ள முடிந்ததில்லை. இப்போதும் காண்டீபனின் மரணமும், அது தரும் தீரா வலியும் அவர்களை அவர்கள் வாழ்க்கை குறித்து யோசிக்க விடவேயில்லை.
இன்னுமே அவனுக்கான நியாயத்தை வாங்கி கொடுத்துவிடவும், பரிதவித்து நிற்கும் அவன் குடும்பத்திற்கு ஒரு வழி செய்துவிடவும்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனாலுமே கொஞ்ச நாள்களாக ஆதினியிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை எல்லாளன் உணர்ந்துகொண்டிருந்தான். அது என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
நன்றாகப் பேசுகிறாள்; காண்டீபனின் வழக்குச் சம்மந்தமாக விசாரிக்கச் செல்ல வேண்டும் என்றாலோ, ஏதாவது தரவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அவனோடுதான் வருகிறாள். ஏதும் தேவை என்றாலும் அழைத்துக் கேட்பதற்குத் தயங்குவதில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைந்தது.
எவ்வளவோ யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் அவளிடமே கேட்டுவிட எண்ணி, அவர்கள் வீட்டுக்கு வந்தான்.
வீட்டின் கீழ் தளத்திலேயே தனக்கும் ஓர் அலுவலக அறையை உருவாக்கியிருந்தாள் ஆதினி. எல்லாளன் சென்றபோது அங்கிருந்து ஏதோ ஒரு கோப்பினைப் படித்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கே அது சவால் விட்டிருக்க வேண்டும். புருவச் சுளிப்புடன் இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி, மேசையில் கிடந்த கோப்பில் கவனமாக இருந்தவள், இவன் வந்ததைக் கவனிக்கவில்லை.
மேசையின் ஒரு பக்கமாக வைக்கப்பட்டிருந்த ஐமேக், அவள் வேலை செய்வதற்கு வசதியாகத் திரும்பி இருக்க, அதனருகே நீதி தேவதை நின்றிருந்தாள். அவள் ஏந்தி இருந்த தராசில் கிண்டர் ஜோய் ஒன்றை வைத்திருந்தாள்.
நீதி தேவதையின் நியாயம், கிண்டர் ஜோய் இருந்த பக்கமாகச் சரிந்திருந்ததைக் கண்டவனுக்கு உதட்டோரம் மெல்லிய முறுவல். இன்னொரு பக்கம் பேனைகள் தாங்கி ஒன்று. அதிலே அத்தனை வர்ணத்திலும் பேனாக்கள்.
பெரிய பேப்பர் பாட் ஒன்று மேசையின் பாதியைப் பிடித்திருக்க, அதில் சில தேதிகளை, தரவுகளை, குறிப்புகளைச் சங்கேத மொழியில் கட்டம் கட்டமாகக் குறித்திருந்தாள். கூடவே, பேப்பர்கள் சிலதும் பரவிப் படர்ந்திருந்தன. பக்கத்திலேயே அவளின் கைப்பேசி. அதன் சார்ஜருமே தாங்கிப் பிடிக்கும் கையின் வடிவில் இருந்தது.
எப்படி இருந்த பெண் எப்படி மாறிவிட்டாள்? வலி தாங்கும் கற்கள் சிலையாவது போல, சிலபல காயங்களைக் கடந்து சிற்பமாக ஜொலிப்பவளை மனம் ரசிக்க, அவள் முன்னே வந்து அமர்ந்தான்.
அப்போதுதான் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி. இவன் என்றதும் அவள் விழிகளில் மெல்லிய வியப்பு. உடனேயே அதை மறைத்துக்கொண்டவளிடம் ஒரு விதக் கவனம் வந்து அமர்ந்தது.
காவல்காரனின் கண்கள் அதைக் கண்டுகொண்டன.
“உனக்கு என்னோட ஏதும் கோவமா?” என்றான் நேரடியாகவே.
வந்ததும் வராததுமாக இப்படிக் கேட்பான் என்று எதிர்பாராதவள் ஒரு கணம் தடுமாறிவிட்டு, “இல்லையே. ஏன் கேக்கிறீங்க?” என்று சமாளித்தாள்.
அதற்குப் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன். அது ஆதினியைத் தடுமாற வைத்தது. மேசையில் இருந்த பேப்பர்களை ஒதுக்குவது போன்று பாவனை காட்டினாள்.
“என்ர ஆதினி எதா இருந்தாலும் முகத்துக்கு நேராக் கதைப்பாள் எண்டுதான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தனான். ஆனா, பொய்யும் கதைப்பாள் எண்டு இண்டைக்குத்தான் தெரியும்.” என்றதும் தன் நடிப்பை மறந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி.
அதுவும் அவன், ‘என்ர ஆதினி’ என்று சொன்னது நெஞ்சைக் களவாட, தொண்டையை அடைத்தது அவளுக்கு.
“சாந்தி அக்காட்டத் தேத்தண்ணிக்குச் சொல்லு. தலை இடிக்குது.” ஒற்றைக் கையால் நெற்றி பொட்டை அழுத்திவிட்டபடி சொன்னவன், அதற்கு மேல் அதைப் பற்றி அவளிடம் கேட்கப் போகவில்லை.
இதையும் ஆதினி எதிர்பார்க்கவில்லை. என்ன, ஏது என்று தூண்டித் துருவுவான் என்றுதான் நினைத்தாள். விடுத்து விடுத்து விசாரிப்பதுதானே அவன் குணமே!
அப்படி அவன் கேட்காமல் விட்டது அவளுக்குத் தவறு புரிந்த உணர்வைக் கொடுத்தது. முதல் வேலையாகச் சாந்தியிடம் சொல்லி, தேநீர் வரவழைத்துக் கொடுத்தாள். அவன் தேநீரைப் பருக, ஏதாவது கேட்க மாட்டானா என்று தன் நகங்களை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
அவன் கேட்கவேயில்லை. தேநீர் அருந்துவதில் மட்டும் கவனமாக இருந்தான்.