அவனின் அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “காண்டீபன் அண்ணான்ர குடும்பத்தில எல்லாருக்கும் உதவி தேவ. அந்தக் குடும்பத்தத் தனியாக் கொண்டு நடத்திற தெம்பு மிதிலாக்காக்கு இல்ல. குழந்தை வந்தா இன்னுமே சிரமப்படுவா. அதால…” என்றவளுக்கு மேலே பேச வராமல் போயிற்று. தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொள்ள மெல்ல நிமிர்ந்து அவனை ஏறிட்டாள்.
அப்போதும் பார்வை அவளில் இருக்க, அவன் தேநீரைப் பருகிக்கொண்டிருந்தான்.
நெஞ்சில் மெல்லிய நடுக்கம் ஓடியது. வேறு எதையாவது சொல்லிச் சமாளிப்போமா என்று நினைத்தாள். ஆரம்பித்துவிட்டதை இடையில் விடவும் மனமில்லை.
என்றாவது ஒரு நாள், இதைப் பேசித்தான் ஆக வேண்டும் என்பதும் சேர, “அண்ணாக்கு ஒரு வருசம் முடிஞ்ச பிறகு மிதிலாக்காவ நீங்களே கட்டுங்கோ!” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, அவன் கையில் இருந்த தேநீர் கோப்பை, படார் என்று சுவரில் மோதித் தரையில் விழுந்தது.
“அம்மாடி!” இரண்டு கைகளாலும் நெஞ்சைப் பற்றிக்கொண்டாள் ஆதினி. அவளுக்கு மூச்சுக்கூட வரமாட்டேன் என்றது. அவனைப் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
சில நொடிகள் அப்படியே கழிய, “இதுதான் இவ்வளவு நாளும் நீ விலகி நிண்டதுக்குக் காரணமா?” என்று, என்னவென்று பிரித்தறிய முடியாத குரலில் வினவினான் அவன்.
உண்மை அதுதான். என்ன, அதைச் சொல்லும் தைரியம் இப்போது அவளிடம் இல்லை.
“என்னை விடு. நீ என்ன செய்யப் போறாய்?”
அதை எங்கே அவள் யோசித்தாள்? அவனை இழக்கப் போகிறோம் என்பதிலேயே அமிழ்ந்து கிடந்தாளே!
“சொல்லு ஆதினி! நீ என்ன செய்யப் போறாய்? முதல், நான் இல்லாம இருப்பியா நீ? இல்ல, எனக்கு ஒருத்தியப் பாத்த மாதிரி, உனக்கும் ஒருத்தனப் பாத்திட்டியா?”
“சீச்சீ! என்ன கதைக்கிறீங்க?” என்று கோபப்பட்டவள், வேகமாக எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்றாள்.
அவன் அவளை விடுவதாக இல்லை. வேகமாக வந்து, அவள் கையைப் பற்றி இழுத்துத் திருப்பி, “என்ன கதைக்கிறனா? முதல் உனக்கு எவ்வளவு தைரியம், என்னட்டயே வந்து இப்பிடிச் சொல்ல? இந்தக் கைக்க உன்ன வச்சுக் கொஞ்சின என்னால இன்னொருத்தியை… சீச்சீ!” என்றான் அதை யோசிக்கக் கூட முடியாதவனாக.
“அவள் என்ர நண்பன்ர மனுசி. எனக்கு அவளைப் பாக்கிற நேரமெல்லாம் அவன்தான் கண்ணுக்க நிக்கிறவன். ‘என்ர குடும்பத்தைப் பாக்க நீ இருக்கிறாய் மச்சான்.’ எண்டு அவன் சொன்னதுதான் கேக்குது. ஆனா நீ… நினைக்கவே கூசுதடி! நாளைக்கு நான் அவளின்ர முகம் பாத்துக் கதைக்கிறேல்லையா?” என்று சீறினான்.
அப்போதுதான் பெரும் தவறு புரிந்துவிட்டோம் என்பது விளங்க, தவித்துப்போனாள் ஆதினி.
“கட்டாயம் இன்னொரு வாழ்க்கை அவளுக்கு வேணும்தான். நானும் அவளை இப்பிடியே இருக்கவிடப் போறேல்லத்தான். அத, நீயும் நானுமா சேர்ந்து செய்து வைப்பம். அது வேற. ஆனா நீ சொன்னது?” என்றவன், அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் விருட்டென்று வெளியேறப் போக, அவசரமாக அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் ஆதினி.
“அது… முதலே நீங்க அவாவை விரும்பினீங்கதானே எண்டு…” சட்டென்று விறைத்து நிமிர்ந்த அவன் தேகம், இப்போதும் தேவையில்லாததைப் பேசிவிட்டோம் என்று உணர்த்தும் போதே, ஒரே இழுவையில் தன் கையை அவளிடமிருந்து பறித்துக்கொண்டு போனான் அவன்.
தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் ஆதினி. உடனேயே அவனுக்கு அழைத்தாள். எடுக்கவில்லை. சரி, கோபம் குறையட்டும் என்று பொறுத்திருந்து மாலையானதும் அழைத்தாள். அப்போதும் ஏற்கவில்லை. அன்று இரவு சாப்பிடவும் இங்கு வரவில்லை.
இப்போது அவளுக்கும் கோபம் வந்தது. அடுத்த நாள் காலையே அவன் வீட்டு வாசலில் சென்று நின்று, பெல்லை அழுத்தினாள்.
வந்து கதவைத் திறந்தவன் காக்கி உடையின் காற்சட்டையை மட்டும் அணிந்து, மேலே வெள்ளை பெனியனோடு நின்றிருந்தான். அவன் தேகக் கட்டும், தினவெடுத்து நின்ற புஜங்களும், அணிந்திருந்த வெள்ளை பெனியனைத் தாண்டிக்கொண்டு திமிறி நின்ற நெஞ்சின் சுருள் முடிகளும் அவள் விழிகளைத் தடுமாற வைத்தன.
அவளுக்கு முன்னால் அரையும் குறையுமாக நிற்பது அவனுக்கு ஒன்றுமில்லை போலும். தன்பாட்டுக்குச் சமையலறைக்குச் சென்று, தேநீர் ஊற்றுவதில் கவனமானான்.
சாப்பாட்டு மேசையில் அவனுடைய தொப்பியும் துப்பாக்கியும் இருந்தன. நாற்காலியின் முதுகில் சிறு கசங்கல் கூட இல்லாது, அயர்ன் செய்திருந்த காக்கிச் சட்டையைத் தொங்க விட்டிருந்தான்.
உதட்டோரம் முறுவல் அரும்ப, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். அவனே எதிர்பாராத நொடி ஒன்றில், அவனுக்கும் சமையற்கட்டுக்கும் நடுவில் புகுந்து, அவன் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டி, “ஹாண்ட்ஸ் அப் எல்லாளன்!” என்றாள் மிரட்டும் குரலில்.
இந்த முறை அன்றைக்குப் போன்று துப்பாக்கியைப் பறிக்க முயலவில்லை அவன். மாறாக, அவளிடம் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தினான். இதற்குப் பேசாமல் துப்பாக்கியைப் பறித்தே இருக்கலாம் எனும் அளவில் இருந்தது, அவன் பார்வையின் வீச்சு!
காண்டீபனுக்காக அடித்திருந்த மொட்டையும் வழித்திருந்த மீசையும் மீண்டும் அரும்ப ஆரம்பித்திருந்தன. தீட்சண்யம் மிகுந்த விழிகளும் கூர் மூக்கும் சிவந்த உதடுகளும் இன்னுமே எடுப்பாகத் தெரிந்து, அவளை வசீகரித்தன.
அதுவும் அவன் உதடுகள், அவளோடு உறவாடிய நாள்களின் நினைவு வந்ததும் அவளால் அவன் முகம் பார்க்க முடியவில்லை.
அவனுக்கும் அது நினைவு வந்திருக்க வேண்டும். உதட்டோரம் துடித்த சிரிப்புடன், “என்னைக் கொல்ல உனக்குத் துவக்குத் தேவையே இல்ல.” என்றான், தன் காந்தக் குரலில்.
ஆதினியின் கன்னங்கள் சூடேறின. மெல்ல அவனிடமிருந்து விலக முயன்றாள். அதற்கு விடாமல், துப்பாக்கியை வாங்கி ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அவளைத் தூக்கிச் சமையற்கட்டில் அமர்த்தினான்.
“ஹேய், என்ன செய்றீங்க?” முதன் முதலாக அவளைத் தூக்கியிருக்கிறான் எனும் ஆனந்தமும் அதிர்ச்சியுமாகக் கூவினாள் அவள்.
“சொல்லு, நீதான் என்னைத் தூக்கி இன்னொருத்திட்டக் குடுக்கப் போறியா?”
முகம் வாட, “உண்மையா சொறி!” என்றாள் உடனேயே.
“நேற்றுக் கேட்டீங்களே, நான் இல்லாம இருப்பியா எண்டு. சத்தியமா இல்ல. ஆனா, அந்தக் குடும்பத்தை அண்ணா எப்பிடித் தாங்கினவர் எண்டு நான் பாத்திருக்கிறன். ஒரு நேரம் கூட முகம் சுருக்கினது இல்ல. அவே மூண்டு பேருமே அவருக்குக் கிட்டத்தட்டக் குழந்தைகள்தான். அவ்வளவு சந்தோசமா வச்சிருந்தவர். அப்பிடியான குடும்பம் நிலை குலஞ்சு நிக்கிறதப் பாக்கேலாமத்தான் அப்பிடி யோசிச்சனான். அவரின்ர இடத்தில இருந்து, அவரை மாதிரியே உங்களாலதான் பாக்கேலும் எண்டு நினைச்சன்.” என்றாள் மெல்லிய குரலில்.
இதை அவன் நேற்றே யோசித்திருந்தான். அதில்தான் கோபமும் குறைந்திருந்தது. “சரி விடு. என்ன எண்டாலும் நீயும் நானுமாச் சேந்து செய்யலாம். எந்தக் குறையும் இல்லாமப் பாக்கலாம். ஆனா, இனி இப்பிடிக் கதைக்காத. கதைக்கிறது என்ன யோசிக்கக் கூடக் கூடாது. அப்பிடி நீ யோசிக்காம இருக்கோணும் எண்டா என்ன செய்யோணும் சொல்லு?” என்று வினவினான் அவன்.
“என்ன செய்யோணும்?”
“உன்ன, என்னைத் தவிர வேற ஆரையும் நினைக்க விடக் கூடாது.”
“ஓ! காக்கிக்கு அந்த அதிகாரம் எல்லாம் இருக்கோ?”
“இல்லை எண்டு நினைக்கிறியா?” என்றவனின் பார்வை, அவள் இதழ்களில் இருக்க, ஒற்றை விரல் கீழுதட்டை மெல்ல வருடிற்று.
“இந்த வாய் எப்ப வாயடிச்சாலும் அப்பிடிக் கோவம் வரும் எனக்கு. இப்ப எல்லாம் வேற என்னென்னவோ ஆசைதான் வருது…” என்றவனின் பார்வையில் அவள் முகத்தில் வெட்கச் சிரிப்பும் சிவப்பும் சேர்ந்தே மலர்ந்தன. ஆனாலும் குறுகுறு என்று அவனையே பார்த்தாள்.
“என்ன, பார்வையும் சிரிப்பும் பலமா இருக்கு?”
“இல்ல… ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா, பாக்கிறியா பாக்கிறியா எண்டு கூவிக்கொண்டு திரிஞ்சவர், இப்பிடி எல்லாம் நடக்கிறத நம்பேலாமா இருக்கு!” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“உன்ன…” என்றவனுக்கும் சிரிப்புத்தான். அப்போதெல்லாம் இவளைக் கண்டாலே அவனுக்குள் சுறுசுறு என்று என்னவோ ஏறுமே!