“அவனைப் பற்றி உனக்குத் தெரியும் தானே. சும்மா என்னத்துக்குக் கோவப்படுறாய்? நெட்பிளிக்ஸ்ல என்னவோ சீரியல் வந்திருக்கு, பாக்கோணும் எண்டு சொன்னாய். இவனை விட்டுட்டு அதைப் போய்ப்பார்!” என்று சொல்லிக்கொண்டு இருக்கையில், “இங்க என்ன சண்டை?” என்று கேட்டுக்கொண்டு, வீட்டுக்குள் இருந்து வந்தார் இளந்திரையன்.
வேகமாக நிமிர்ந்து நின்றான் எல்லாளன். அவருக்கு அவனும் இன்னோர் பிள்ளை போல்தான். அவனுக்கோ அவர் அவனின் பெரும் மதிப்பிற்குரியவர். அதனால், எப்போதுமே அவரின் முன்பு பயபக்தியுடன் தான் நிற்பான்.
அவனைப் பார்த்துக் கேலியாக உதட்டை வளைத்துவிட்டு, தந்தையின் அருகில் தானும் ஓடிப்போய் அமர்ந்துகொண்டு, நடந்ததை எல்லாம் சொன்னாள், ஆதினி.
“நீ கூட்டிக்கொண்டு போனா, போலீஸ்காரன் விசாரிக்க மாட்டானாமா? இல்ல, உண்மை என்ன, ஆர் குற்றவாளி எண்டு கண்டுபிடிக்க மாட்டானா? அதுதானே அவன்ர வேல.” என்றார் அவர், சிரிப்பை அடக்கிய குரலில்.
“அப்பிடிச் சொல்லுங்க அப்பா. குற்றவாளிய கண்டுபிடிக்கத் தைரியம் இல்ல. இதுல என்னை மிரட்டுறார்.” அவளின் அப்பா என்றைக்கும் அவள் பக்கம் தான் நிற்பார் என்கிற வெற்றிக்களிப்பில் துள்ளியது அவளின் குரல்.
எல்லாளனின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. அவன் அப்படியே நின்றிருந்தான். தன் தந்தையின் முன்னே, தேவையற்று ஒரு வார்த்தை கூட பேசமாட்டான் என்று அவளுக்கும்தான் தெரியுமே. அந்தத் தைரியத்தில், “ஐஜீ அங்கிளிட்ட சொல்லி, எங்கயாவது பிடிச்சு தண்ணியில்லாத காட்டுக்கு மாத்தி விடுங்கப்பா. அப்பத்தான் புத்தி வரும்.” என்றாள் அவள்.
“சரி விடு. நீ சொன்னமாதிரியே செய்துவிடுவம்!” என்று அவளின் தலையை வருடிச் சொன்னவரின் விழிகள் பெண்ணின் மீதான பாசத்தில் கனிந்திருந்தது. “ஆனா இனி, என்ன நடந்தாலும் அப்பாட்ட வந்து சொல்லோணும். இல்ல, அண்ணாட்டச் சொல்லோணும். அத விட்டுப்போட்டு இப்பிடித் துவக்குத் தூக்குறேல்ல. அது கிரிமினல் குற்றம். சரியா? நடக்கக்கூடாத ஏதாவது நடந்திட்டா பிறகு எல்லாரின்ர சந்தோசமும் போயிடும்.” என்று அவளின் தவறையும் எடுத்துச் சொன்னார்.
அதன்பிறகு, சாமந்தியின் தற்கொலையைப் பற்றி விசாரித்துக்கொண்டார். கூடவே, அன்று காலையில் அவர் வழங்கிய தீர்ப்பைப் பற்றியும் அவனோடு பேசினார். சில அறிவுறுத்தல்களை அவனுக்கு வழங்கினார். இனி எதற்கும் கவலைகொள்ள வேண்டாம் என்கிற தைரியத்தையும் அண்ணன் தங்கை இருவருக்கும் கொடுத்தார்.
அப்போதும், எதையும் வாய்விட்டுப் பேசும் திராணியற்றவளாக அமர்ந்திருந்தாள் சியாமளா. அவளை உணர்ந்துகொண்டான் அகரன். பெற்றவர்களின் கொடூர மரணத்தைக் கண்ணால் கண்டவள் அவள். அப்படியானவளால், தமையனின் முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டிய ஆதினியின் செய்கையைச் சாதாரணமாக எடுக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதில், அவளைக் கண்ணால் தேற்ற முயன்றுகொண்டு இருந்தான்.
“இனி என்ன? கலியாணத்தைப் பற்றிக் கதைக்கலாம் தானே? தங்கச்சிக்கு முடிச்சாத்தானே உனக்கும் பாக்கலாம்.” எல்லாளனுக்கும் அகரனின் வயது என்பதில் சொன்னார் இளந்திரையன்.
தங்கையை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “கதைப்பம் அங்கிள்.” என்றான் அவனும்.
“அப்பா, கதைக்கேக்க சீதனம் கேளுங்கப்பா. சும்மா விடாதீங்க.” என்று இடையில் புகுந்தாள் ஆதினி.
சிரிப்புடன் மகளைப் பார்த்தார் இளந்திரையன். “நீயே சொல்லு, என்ன கேப்பம்? இருக்கிற பேங்க் பலன்ஸ் எல்லாத்தையும் உன்ர பேருக்கு மாத்தச் சொல்லுவமா?” என்றார் நகைக்கும் குரலில்.
“அத வச்சு நான் என்ன செய்ய?” உதட்டைப் பிதுக்கி யோசித்துவிட்டு, “இவர் எனக்குக் காலத்துக்கும் அடிமையா இருக்கோணும் அப்பா. அதுதான் சீதனம். கேட்டு வாங்குங்க. இல்லையோ, நானே இந்தச் சோடிய பிரிச்சு விடுறன்.” என்று, வில்லியைப்போன்று கண்களை உருட்டிப் பிரட்டிச் சொன்னாள், அவள்.
நகைப்புடன் எல்லாளனைப் பார்த்தார் இளந்திரையன்.
அப்போதும், எதுவும் சொல்லாமல் நிமிர்ந்த நிலையிலேயே நின்றான் அவன்.
ஆனால், “உன்ர சண்டை அவனோட. அதுக்காக என்ர வாழ்க்கையில விளையாடாத செல்லம்.” என்றான் அகரன் வேகமாக. பின்னே, அவனின் தங்கை சொன்னதைச் செய்தாலும் செய்துவிடுவாளே. அவனின் அப்பா வேறு, அவள் எள் எனுமுன் எண்ணெய்யாக நிற்பவராயிற்றே.
“அந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்!” என்றபடி எழுந்துகொண்டவள், “அப்பா, நான் கேட்ட சீதனத்த மறக்கிறேல்ல!” என்றுவிட்டு, தன் சீரியலைப் பார்க்கச் சென்றாள்.
அகரன் – சியாமளா திருமணத்தைப்பற்றிப் பேசுவதற்கு ஞாயிற்றுக்கிழமை வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர் அண்ணனும் தங்கையும்.
ஜீப்பில் ஏறியதுமே, “சரியான அரை லூசு ஒண்டு! எனக்கு உயிரே போயிட்டுது அண்ணா.” என்றாள் சியாமளா மூச்சை இழுத்துவிட்டபடி.
அவ்வளவு நேரமாக, அவர்களின் வீட்டில் வைத்து எதையும் பேசமுடியாத அந்த நிலை வேறு, அவளுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. அகரனிலும் மிகுந்த கோபம். அப்படி என்ன செல்லம்? அவள் என்ன குழந்தையா என்று மனம் பொறுமியது.
“எதுக்கும் கவனமா இருங்க அண்ணா. அது எந்த நேரம் என்ன செய்யும் எண்டு யாராலயும் கணிக்கேலாது. எனக்கு இருக்கிறது நீங்க மட்டும் தான்!” என்று சொல்லும்போதே அவளின் குரல் கரகரத்துப் போயிற்று.
அவ்வளவு நேரமும் ஜீப்பைச் செலுத்துவதில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தவன் தங்கையைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் இன்னுமே கலக்கம் நிறைந்து இருந்தது. “அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு. நீ அத விட்டுப்போட்டு நடக்கப்போற கலியாணத்தைப் பற்றி யோசி.” என்று அவளின் சிந்தனையை மாற்றி விட்டவனின் எண்ணங்கள் மாத்திரம், எங்கோ ஒரு உச்சியில் சிக்குப்பட்டு நின்றது.