நீ தந்த கனவு 45 – 2

வலியெடுத்த மார்பை நீவிவிட்டான். தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, அவன் முன்னே சென்று நின்றான். நெஞ்சு அடைக்க ஒரு கை தூக்கி அவன் முகம் வருடியவனுக்கு அன்று தன் மடியில் படுத்துக்கொண்டு ஓடி ஓடிக் களைச்சிட்டன் மச்சான் என்று அவன் சொன்ன காட்சி கண்முன்னே வந்து நின்றது.

“வலிக்க வலிக்க உன்ர உயிரை எடுத்தவன சும்மா விடுவனா மச்சான்? நல்லவனா நேர்மையானவனா இருந்து நான் கிழிச்சது எல்லாம் உன்னைப் பறிகுடுத்தது மட்டும்தான். அதுதான் அவன் சொன்ன கணக்கை அவனுக்கே நேராக்கிவிட்டிருக்கிறன்.”

ஒரு நெடிய மூச்சுடன் கதிரவனுக்கு அழைத்தான்.

“ஹலோ சேர்.”

“எல்லாம் ஓகேதானே கதிரவன்? ஒரு பிரச்சினையும் இல்லையே?”

“இல்ல சேர்! எல்லாமே பெர்ஃபெக்ட்!”

“நான் வரோணுமா?”

“இல்ல சேர். இங்க எல்லாமே ஸ்மூத்தாத்தான் போய்க்கொண்டு இருக்கு.”

“எதுக்கும் கவனம். குற்றவாளி அங்க வர சான்ஸ் இருக்கு.”

“இனி ஏன் சேர் அவர் இஞ்ச வரப்போறார்?” அதைச் சொல்லும்போதே அவன் குரலில் மெல்லிய சிரிப்பு இழையோடியது.

“கதிரவன்! கடமைல கண்ணா இருக்கப் பழகுங்க!” அதட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் உதட்டோரத்திலும் சின்ன சிரிப்பு.

சுவரில் தொங்கிய காண்டீபனிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் புறப்பட்டவன், சத்தியநாதன் கொலை வழக்கு விசாரணையில் தீவிரமாக இறங்கி இருந்தான். குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமே!

காண்டீபனின் ஒரு வருடத் திதியும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அவன் புகைப்படத்தின் முன்னே அமர்ந்திருந்த ஆதினியின் மடியில், தவழ்ந்து வந்து ஏறி அமர்ந்துகொண்டான் காண்டீபனின் மகன் அதிரன்.

“அத்…த!” மழலையில் மிழற்றியவனைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம், தலையைக் கலைத்துவிடும் காண்டீபனின் நினைவுகள்தான். கண்ணோரம் கரிக்க, கூடப் பிறக்காத தமையனின் வார்ப்பை, மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டாள்.

இது என்ன விதமான பந்தம்? நண்பனுக்காக இவளைத் தேடி வந்தவன் அவன். அவனுக்காக அவன் குழந்தையை அத்தையாகத் தாங்கும் இவள். இவ்வுலகின் ஈரமிகு உறவுச் சங்கிலி இதுதானே! அதற்கு இரத்த பந்தம் தேவையாக இருந்ததே இல்லை.

நாள்கள் மீண்டும் நகர்ந்தன. சம்மந்தன் மூண்டு சில்லு வாகனத்தில் வேலைக்குச் செல்லப் பிரியப்பட்டார். எல்லாளனுக்கு அதில் விருப்பமில்லை.

“இனி ஏன் மாமா? பேரனோட இருந்து விளையாடுங்கோவன்.” என்றான்.

தன் மடியில் இருந்த பேரனின் தலையை வருடிக்கொடுத்தபடி, “இனி இவர்தானேப்பு எனக்கு எல்லாம். இவரோட விளையாடாம எங்க போகப்போறன்? ஆனா, வீட்டில சும்மாவே இருந்து, பழசுகளை நினச்சுத் துடிக்கிறதுக்குப் பதிலா, சின்னதா ஏதும் வேல செய்தா நேரமும் போயிடும், அவருக்கு ஏதும் வாங்கிக் குடுக்க நாலு காசும் கைல இருக்குமே.” என்றார் அவர்.

எந்த வயதானால் என்ன? சுய உழைப்பும் சொந்த வருமானமும் தரும் தைரியத்துக்கு எதுவும் ஈடில்லையே! அதற்குப் பிறகு மறுக்கவில்லை எல்லாளன்.

அவர் வாழ்வதற்கும் நாள்களை ஓட்டுவதற்கும் ஏதோ ஒன்று தேவைப்படுவதை விளங்கிக்கொண்டான். அதில், அவரை எங்கும் வேலைக்கு அமர்த்தாமல், தள்ளு வண்டில் போன்று ஒன்றை வாங்கி, லொட்டோவும் தினசரிப் பத்திரிகைகளும் விற்பதற்கு ஏற்பாடு செய்தான்.

அதையும் நிரந்தரமான இடம் என்றில்லாமல், எங்கெல்லாம் அவனுக்குக் கண்காணிப்புத் தேவை என்று நினைத்தானோ அங்கெல்லாம் அவரை அமர்த்துவது போல் பார்த்துக்கொண்டான்.

ஏற்கனவே காவல்துறையில் பணிபுரிந்த மனிதருக்கு உழைப்போடு சேர்த்துத் திரை மறை வேலைகளைக் கண்காணிப்பதும் பிடித்தமான வேலையாகிற்று. உற்சாகமாகவே பார்க்க ஆரம்பித்தார்.

அதற்குமேல் எதற்கும் தாமதிக்கவில்லை அகரன். தந்தையோடு கதைத்து, எல்லாளன் ஆதினி திருமணத்தை முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தான்.

கூரைப் பட்டுடுத்தி, அழகே குடிகொண்டவளாக, குங்குமமும் கழுத்தில் தாலியுமாக, மலர்ந்து பூரித்த முகத்துடன் நண்பனின் அருகில் நின்ற தங்கையைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. விழிகள் கரிக்கும் போலொரு உணர்வு. அவனுக்கு இது எத்தனை நாள் கனவு? அவளருகில் வந்து உச்சி முகர்ந்தான்.

“என்ன அண்ணா?”

“ஒண்டுமில்ல. சந்தோசமா இருக்கு!” என்றவன், “மச்சான், என்ர தங்கச்சிய சந்தோசமா வச்சிரு! இல்லையோ, உன்ன என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விளையாட்டுப் போன்று மிரட்டினான்.

அவளுக்கிணையாக வேட்டி சட்டையில் மணமகனாக நின்றவன், ஆதினியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “அதே மாதிரி அவளையும் என்னைச் சந்தோசமா வச்சிருக்கச் சொல்லு!” என்றான்.

அண்ணாவிடம் என்ன பேச்சு இது? அவன் கையில் நுள்ளி விட்டாள் ஆதினி.

“அவுச்!” என்றவன், “பாத்தியா, கலியாணமாகி கொஞ்ச நேரம் கூட ஆகேல்ல, கொடுமை செய்றாள்.” என்றான் அவள் கிள்ளிய கையைக் காட்டி.

“உன்ர வாய்க்கு உன்னைக் கொஞ்சம் அடக்கித்தான்டா வச்சிருக்கோணும்.” என்றவன், அன்று எல்லாளன் செய்தது போன்று, இன்று மனைவி, மகள், கூடவே மிதிலா, அதிரன் என்று எல்லோரையும் அழைத்து செல்ஃபி எடுத்தான்.

இவர்களையே கவனித்திருந்த கதிரவனைப் பார்த்த எல்லாளனுக்கு அவனும் தன் குடும்பத்தில் ஒருவனாகவே தோன்றிவிட, அவனையும் மேடைக்கு வரச் சொன்னான்.

எல்லோரும் ஒன்றாக நின்று மீண்டும் ஒரு செல்ஃபி.

அந்த நொடியில் கணவனின் இழப்பை அதி பயங்கரமாக உணர்ந்தாள் மிதிலா. அவனும் இருந்திருக்க எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கும். உயிர் நண்பன். அவன் திருமணத்தை எப்படி எல்லாம் கொண்டாடி இருப்பான்? அழுகையில் நடுங்கிய உதட்டைப் பற்றித் தன்னை அடக்கிக்கொண்டாள்.

எடுத்த செல்ஃபிக்களை பார்த்த எல்லாளனின் நிலையும் அதேதான். விழிகள் நண்பனை அந்த மண்டபம் முழுக்கத் தேடின. இங்கே எங்கோதான் அவன் இருப்பான் என்று நிச்சயமாக நம்பினான்.

ஆதினிக்கும் அகரனின் திருமணத்திற்குத் தான் அழைத்ததும், அவன் வராமல் இருந்ததும், தான் கோபப்பட்டதும் என்று எல்லாம் நினைவில் வந்து கண்ணில் நீரைப் பெருக வைத்தன. இன்று அவளுக்கே திருமணம். அவள் அழைக்கவே முடியா இடத்தில் அவன். ‘அண்ணா!’ அவள் மனம் அழுதது. அவளை உணர்த்தாற்போல் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்த எல்லாளன், மிதிலாவைக் கண்ணால் காட்டினான்.

அவர்களை எல்லாம் அப்படி ஒன்றாகப் பார்த்தபோது, மகன் இல்லாமல் போனாலும் மருமகளும் பேரனும் தனியாக இல்லை என்று உணர்ந்த சம்மந்தன் மனது பெரும் ஆறுதல் கொண்டது.

இளந்திரையனும் தன் பெண்ணரசியின் மணக்கோலத்தையும் அவளின் கொண்டாட்டத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். சொன்னதுபோல் செய்துவிட்ட எல்லாளனை அவர் பார்வை தழுவியது. அந்த நேரம் அவனும் பார்க்க, இருவர் முகத்திலும் மற்றவரின் எண்ணத்தைக் கண்டுகொண்ட சிரிப்பு.

எங்காவது ஒரு மாதத்திற்குப் போய்விட்டு வா என்று அகரன் சொன்னதை எல்லாளன் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. என்னதான் காண்டீபனின் இழப்பை ஏற்று வாழப் பழகியிருந்தாலும் ஆழ்மனத்தை அழுத்தும் அந்தச் சோகம் அவர்கள் இருவரையும் விட்டு நீங்குவதாக இல்லை. அதனோடே வாழப் பழகிக்கொண்டிருந்தனர்.

அன்றைய இரவுக்கான அத்தனை ஆயத்தங்களும் எல்லாளனின் வீட்டில் நடந்துகொண்டிருந்த பொழுதில் கதிரவன் எல்லாளனுக்கு அழைத்தான்.

காரணமற்றுத் தன்னைத் தொந்தரவு செய்யமாட்டான் என்று தெரிந்ததால், எல்லாளனும் உடனேயே அழைப்பை ஏற்றான்.

“சேர், சொறி சேர், இங்க ஒரு வாகனம் சந்தேகத்துக்கு இடமா ஓவர் ஸ்பீட்ல போகுது. அதுக்க இருந்து பொம்பிளைக் குரல் கேட்டதாம் எண்டு ஆக்கள் சொல்லீனம். நான் துரத்திக்கொண்டு போறன் சேர்.” என்றவன் குரலில், இன்றைய நாளில் அவனைத் தொந்தரவு செய்கிறோமே என்கிற தடுமாற்றம்.

“ஓ!” என்றவன், எந்தப் பக்கமாக அந்த வாகனம் போகிறது என்று கேட்டுக்கொண்டு, “நீங்க பின்னாலேயே போங்க! விடாதீங்க. நான் மற்றப் பக்கத்தால வாறன்.” என்றபடியே ஓடிப்போய் உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.

“டேய்! இண்டைக்குத் தான்ரா உனக்குக் கலியாணம் நடந்தது!” என்று முறைத்தான் அகரன்.

“உனக்கே தெரிஞ்சிருக்கு எண்டேக்க எனக்குத் தெரியாதா?” வேக வேகமாகத் தன் பேர்ஸ், ஃபோன் என்று எடுத்து ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் அடைந்துகொண்டு சொன்னான் எல்லாளன்.

இவன் இருக்கிறானே என்று பல்லைக் கடித்த அகரன், “நீயாவது சொல்லனம்மா?” என்றான் ஆதினியிடம்.

“விடுங்க அண்ணா! பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரம் ஏறித்தானே ஆகோணும்!”

இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத எல்லாளன், பக்கென்று சிரித்தான்.

“ஏலுமான வரைக்கும் கெதியா வரப்பாக்கிறன்.” என்றுவிட்டுப் போன எல்லாளன், வீடு திரும்ப இரவு பன்னிரண்டு தாண்டியிருந்தது.

வெளியே நின்ற பைக், அகரனும் அங்கேதான் நிற்கிறான் என்று சொல்லிற்று. மெதுவாகக் கதவைத் திறந்தான். வீடு பெரும் அமைதியில் இருந்தது. எதிர்பார்ப்புடன் அறைக்குள் வந்தவனை அவன் சிலுக்கு ஏமாற்றவில்லை. அவன் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அவளைப் பார்த்ததுமே அவன் உடலில் புது உற்சாகம்.

குளித்துவிட்டு வந்து தானும் அவளருகில் சரிந்தான். ஆழ்ந்து உறங்குபவளைத் தொந்தரவு செய்யாதே என்றது அறிவு. ஆசையோ அவளை அள்ளியணைக்கத் தூண்டிற்று. கொஞ்ச நேரம் விழிகளை மூடி உறங்க முயன்றான். முடிய வேண்டுமே. பக்கத்தில் அவள் இருக்கிறாள் என்கிற நினைப்பே அவன் உணர்வுகளைத் தூண்டிவிட்டன.

இப்போது உறங்காவிட்டால் என்ன, நாளைக்கு உறங்கிக்கொள்ளட்டும் என்று எண்ணி, அவளை நெருங்கி அவளைத் தன் புறம் திருப்பினான்.

“அடியேய் சிலுக்கு!” என்றான் அவள் காதுக்குள்.

அவன் தேகத்தின் குளிர்மையும், காதுக்குள் கேட்ட குரலும் அவள் தேகத்தைக் கூசிச் சிலிர்க்க வைத்தன. மெல்லிய சிணுங்கலுடன் அவன் புறமாகவே புரண்டு படுத்தாள்.

சின்ன சிரிப்புடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். கண்கள், மூக்கு, கன்னங்கள் என்று அவன் உதடுகள் அடுத்தடுத்துப் பயணிக்க உறக்கம் கலைவதற்கு அடையாளமாக அவள் புருவங்களைச் சுருக்கினாள்.

முறுவல் விரிய மீண்டும் மீண்டும் அவள் முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். அதோடு விழித்துக்கொண்டாள் ஆதினி. மிக நெருக்கத்தில் தெரிந்த அவன் முகம் கண்டு விழிகளை விரித்தாள்.

கண்களில் சிரிப்புடன் புருவங்களை மாத்திரம் உயர்த்தி என்ன என்றான் அவன். முழுமையாகக் காய்ந்திராத கேசம், உறங்காத விழிகள், அப்போதுதான் குளித்ததில் தெரிந்த புத்துணர்ச்சி, வெற்றுத் தேகம் என்று இருந்தவனை நேரே பார்க்க முடியாமல், அவள் முகத்தைத் திருப்பப்போக. அதற்கு விடாமல் அவள் கழுத்தில் முகம் புதைத்தான் எல்லாளன்.

“நித்திரை வருதா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில் கிசுகிசுப்பாக. “எனக்கு வரேல்ல. வேற என்னென்னவோ ஆசையெல்லாம் வருது.” விரல்கள் அவள் மேனியில் விளையாடச் சொன்னான்.

அவளிடமிருந்து பதில் இல்லாது போகத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தான்.

அவள் முகத்தில் படர்ந்திருந்த செம்மையும், அவன் பார்வையைத் தவிர்த்த பாங்கும் அவனுக்குப் பதிலைச் சொல்லின.

“என்ர சிலுக்குக்கு வெக்கமாடி?” என்றவன் அவளை அள்ளிக்கொண்டான்.

அவள் மென் தேகத்துக்குள் அவன் கிளப்பிவிட்ட புயல் அவனுக்குச் சாதகமாகவே வீச ஆரம்பித்ததில் அவனுக்குள் கரைந்து கலந்துகொண்டிருந்தாள் அவனுடைய ஆதினி!

முற்றும்!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock