அதற்கு மாறாக, அன்று நடந்ததை அறிந்திருந்தவர், “அவவின்ர கோபம் சரிதானே தம்பி.” என்றார் மகனிடம்.
சியாமளாவுக்கு மனம் சற்றே ஆசுவாசமுற்றது. “அது அங்கிள், அண்ணாக்கு கன்ன(Gun) நீட்டினதும் எனக்குப் பயத்தில உயிரே போயிற்றுது. அதுதான்… எனக்கு எனக்கு… இதெல்லாம் விளையாட்டுக்குக் கூடப் பாக்கேலாது அங்கிள்.” என்று தன்னை விளக்கினாள்.
பெற்றவர்களின் கொடூர மரணத்தைக் கண்ணால் பார்த்தவளின் மனநிலையை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதில், தலையை அசைத்து அவள் சொன்னதை ஆமோதித்துக்கொண்டார்.
கூடவே, “வயசு 21 ஆகப்போகுதே தவிர ஆதினிக்கு இன்னும் சின்ன பிள்ளைக் குணம் தானம்மா. ஆனாப் பாருங்கோ, இன்னும் ரெண்டு வருசம் போக உங்கள மாதிரிப் பொறுப்பா வந்திடுவா.” என்றார் மகள் மீதான கனிவு சொட்டும் குரலில்.
“பிறகு சொல்லுங்கோ, கலியாணத்தை எப்ப எப்பிடி வைப்பம்? ஏதாவது ஐடியா இருக்கா?” மூவரையும் பொதுவாகப் பார்த்து வினவினார்.
“எங்களுக்குச் சிம்பிளா, ஆர்ப்பாட்டம் இல்லாம நடந்தாப் போதும் அப்பா. நாளையும் தள்ளிப்போட வேண்டாம்.” என்றான் அகரன்.
‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பது போல் எல்லாளனைப் பார்த்தார் இளந்திரையன்.
“அவே ரெண்டு பேரின்ர விருப்பம்தான் அங்கிள் எனக்கும். அப்பிடியே சீதனம்…” அவருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று தெரியும். ஆயினும், பெண்ணின் பெற்றவர்களின் இடத்தில் இருக்கிறவன் கேட்க வேண்டுமே என்று மெல்லிய தயக்கத்துடன் வினவினான்.
‘அடேய்!’ என்று பல்லைக் கடித்த அகரன், வேகமாகத் திரும்பித் தந்தையைப் பார்த்தான்.
அவர் முகத்தில் கோபத்திற்கான எந்தச் சாயலும் இல்லை. மாறாக, பெரிய முறுவல் ஒன்று விரிந்திருந்தது. “எனக்குச் சீதனம் வேணும்தான்.” என்றார் அதே முறுவலோடு.
அகரன் விழிகளில் வியப்பு!
“சொல்லுங்க அங்கிள், என்ர சக்திக்கு மீறி எண்டாலும் செய்வன்!” மிகுந்த ஆர்வத்துடன் முன் வந்தான் எல்லாளன்.
“பேச்சு மாறக் கூடாது!”
“இல்ல. மாற மாட்டன்!”
“உண்மையாவோ?”
“உண்மையாத்தான் அங்கிள்!” ஏன் இந்தளவில் உறுதிப்படுத்த விழைகிறார் என்கிற கேள்வி எழுந்தாலும் தயங்காது சொன்னான்.
“அப்ப, பெண் குடுத்துப் பெண் எடுப்பம்.”
அவர் என்னவோ மிகுந்த இலகு குரலில்தான் சொன்னார். கேட்ட மூவருமே திகைத்துப் போயினர்.
எல்லாளன் இதை மருந்துக்கும் எதிர்பார்க்கவில்லை. ஆதினியை அப்படி ஒரு கோணத்தில் யோசித்ததே இல்லை. இப்போதும் யோசிக்க முடியவில்லை. மறுக்க நினைத்தான். ஆனால், வாக்குக் கொடுத்துவிட்டானே! மறுப்பான் என்று தெரிந்துதான் முதலில் வாக்கை வாங்கினாரோ?
“அப்பா, ஆதி சின்ன பிள்ளை. அதைவிட, அவளை விட இவனுக்கு ஏழு வயசு கூட.” முதல் மறுப்பை அண்ணனாகத் தெரிவித்தான் அகரன்.
“ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா வயசெல்லாம் ஒரு விசயம் இல்ல தம்பி. அதவிட, இப்பவே கலியாணம் எண்டு ஆர் சொன்னது? சிம்பிளா மோதிரம் மாத்தி விடுவம். பிள்ள படிச்சு முடிச்ச பிறகு கலியாணத்தை வைக்கிறதுதானே?”
அவர் பதில் சொன்ன விதமே எல்லாவற்றையும் முதலே யோசித்திருக்கிறார் என்று சொல்லிற்று.
“எண்டாலும் அப்பா…” எல்லாளனைப் போல் நல்ல மாப்பிள்ளையைத் தேடிப் பிடிப்பது இலகுவான காரியமல்ல என்றாலும், இத்தனை வயது வித்தியாசத்தில் தேவையா என்று நினைத்தான் அகரன்.
மகனுக்குப் பதிலைச் சொல்லாது, “நீங்க சொல்லுங்கோ எல்லாளன். என்ர பிள்ளையை வேண்டாம் எண்டு சொல்லுவீங்களா?” என்று உரிமையோடு வினவினார் அவர்.
இப்படி நேரடியாகக் கேட்பவரிடம் மறுப்பது எப்படி? அதைவிட, அவர் கேட்பது தங்கைக்கான சீதனமாயிற்றே! சியாமளாவைப் பார்த்தான். அவள் முகம் இதை எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியில் மலர்ந்திருந்தது.
“செல்லமா வளர்ந்தவா. தெரியாத ஒருத்தன்ர கைல குடுத்து நாளைக்கு ஒண்டு எண்டா என்னால தாங்கேலாது. நீங்க அருமையான பிள்ளை. எனக்குப் பிடிச்ச துறையில இருக்கிற, நேர்மையான, திறமையான உங்கள இழக்க மனமில்லை எண்டுறதும் ஒரு காரணம். இது நடந்தா கடைசி வரைக்கும் அவாவும் என்னோடயே இருப்பா. உங்களுக்கும் உங்கட தங்கச்சியோட காலம் முழுக்க இருக்கலாமே.” என்றவரின் பேச்சு அவரளவில் சரிதான்.
ஆனால், அவனால் எப்படி? எங்கெங்கோ தொலைய ஆரம்பித்த மனதை இழுத்துப் பிடித்தான். சிறுவயதின் கனவுகள் எல்லாம் கலைந்து போகிற கோலங்கள் என்று தெரிந்தும் மருகுவதில் அர்த்தம் இல்லையே!
“எங்கட வீட்டுக்கு மருமகனா வர இவ்வளவு யோசினையா? கரும்பு தின்னக் கூலி கேப்பீங்க போலயே?” தன் மீசைக்கடியில் மலர்ந்த குறுஞ்சிரிப்புடன் வினவினார் அவர்.
என்ன சொல்லுவான்? உங்களுக்குத்தான் உங்கள் மகள் கரும்பு. எனக்கு வேப்பங்காய் என்றா? மனதில் இப்படி நினைப்பது தெரிந்தாலே அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட மாட்டாரா? அர்த்தமற்று ஓடிய சிந்தனையைக் கண்டு சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
“டேய் என்னடா? பதில் சொல்லாமச் சிரிக்கிறாய்.” தந்தையின் விடாத கேள்வியில் அவர் ஒன்றும் இதைத் திடீரென்று முடிவு செய்யவில்லை என்று அகரனுக்குப் புரிந்தது. தந்தையின் சொல் கேட்டு நடக்கும் தனயன் அவன்.
கூடவே, வயது வித்தியாசத்தைத் தவிர வேறு என்ன குறையைத்தான் அவனாலும் சொல்லிவிட முடியும்? அதில், அவனும் தன் முடிவை மாற்றிக்கொண்டிருந்தான்.
அப்போதுதான் வெளிப்படையாகவே சிரித்திருக்கிறோம் என்று எல்லாளனுக்கும் புரிந்தது. கூடவே, வேகமாக யோசித்தான்.
எப்படியோ திருமணம் என்கிற ஒன்றை அவனும் செய்யத்தான் போகிறான். வருங்காலத் துணையின் மீது கற்பனைகளோ, கனவுகளோ எதுவும் இல்லை. அதோடு, வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு அவள் குணம் சரியில்லாத பெண்ணும் இல்லை.
பக்குவமற்ற விளையாட்டுத்தனமான செய்கைகள்தான் சினமூட்டுபவை. அவள் படிப்பை முடிக்க இன்னும் மூன்று, அல்லது நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் மாறிவிட மாட்டாளா என்ன?
அவனுக்குத் தேவை நிம்மதியான ஒரு வாழ்க்கை. அது அமைந்தால் போதும். காலத்துக்கும் தங்கையும் தன்னுடனேயே இருப்பாள் என்பதும் பெரும் காரணமாகத் தெரிந்தது.
இது எல்லாவற்றையும் விட, முதலே வாக்கைப் பெற்று, மறுக்க முடியாத நிலையில் நிறுத்தி, சம்மதம் கேட்பவரிடம் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவனிடம்.
அதில், “அதுதான் கரும்பு தின்னக் கூலியா எண்டு நீங்களே கேட்டுடீங்களே அங்கிள்.” என்றான் தன் முடிவைச் சொல்கிறவனாக.
இளந்திரையனின் முகம் மலர்ந்து போயிற்று.
“உறுதியான முடிவுதானே?”
“உறுதியான முடிவுதான் அங்கிள்!” இப்போது அவனிடத்தில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.
“அப்ப, நானும் பிள்ளையோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன். அவாவும் ஓம் எண்டு சொன்னா நாலு பேருக்கும் வசதியான நாளாப் பாத்து நிச்சய மோதிரம் மாத்துவம். அகரன் சியாமளா கலியாண நாளை, கோயில் ஐயாட்டக் கேட்டு முடிவு செய்வம்.” என்று முடித்துக்கொண்டார் இளந்திரையன்.
ஆக, தன்னோடான ஆதினியின் திருமணத்தில் வெகு தீவிரமாகவே இருக்கிறார் என்று புரிந்துகொண்டான் எல்லாளன்.