பார்வையால் அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “சேச்சே! அப்பிடி இருக்காது.” என்றாள் தலையையும் மறுப்பாக அசைத்து.
அவளின் பாவனையில் முறுவல் விரிய, “விளங்கேல்ல.” என்றான் அவன்.
“வரலாறு வாத்திக்குத் தமிழ் விளங்கேல்ல. இதுதான் இந்த நாட்டின்ர இண்டைய நில!” என்று பெரிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, “அவே சொன்னது சும்மாவா இருக்காது எண்டு சொன்னனான்.” என்று விளக்கினாள் அவள்.
இப்போது அவன் உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்துபோயிற்று. கூடவே, அவனை அவள் கவனித்திருக்கிறாள், அவனைப் பற்றிய கணிப்பும் அவளிடம் ஏற்கனவே இருந்திருக்கிறது என்றும் புரிந்தது.
“வரட்டா சேர்.” என்றபடி புறப்பட்டவளுக்குச் சரி என்று தலையை அசைத்துவிட்டு, “கவனமாப் போகோணும்!” என்றான் போய்க்கொண்டிருந்தவளின் முதுகைப் பார்த்து.
*****
அஜயைத் தேடி வந்த கதிரவனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் அவன் எங்கோ தப்பி ஓடியிருந்தான். ‘எல்லாம் அவளால! அவளைப் பாத்தாலே எனக்கு ஏழரைதான்!’ மனம் ஆதினியைத் திட்டித் தள்ளியது. உடனேயே எல்லாளனுக்கு அழைத்து அனைத்தையும் சொன்னான்.
‘இவளொருத்தி கால நேரம் தெரியாம!’ அவனுக்கும் அவள் மீதுதான் கோபம். அதைக் காட்டாமல், “அவன்ர வீட்டு அட்ரெஸ் என்னட்ட இருக்கு. அனுப்புறன். அங்க போய்ப் பாருங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
*****
அன்று மாலை, திருமணம் பற்றிப் பேசுவதற்காக ஆதினியை அவரின் அலுவலக அறைக்கு அழைத்தார் இளந்திரையன். முதலில் படிப்பு, நண்பர்கள் என்று பொதுவாகப் பேச்சை நகர்த்திவிட்டு, “உங்களுக்குக் கலியாணத்துக்குப் பாத்திருக்கிறன் பிள்ளை.” என்று விடயத்துக்கு வந்தார்.
“என்னது கலியாணமா?” என்று வாயைப் பிளந்தாள் ஆதினி. அவளுக்குச் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது. இதுவரையில் மருந்துக்கும் யோசித்திராத ஒன்றைப் பற்றித் திடீரென்று கேட்டால் அவளும் என்னதான் செய்வாள்?
அவர் முகத்திலும் மெல்லிய முறுவல். “இப்பவே கலியாணம் எண்டா சொன்னனான்? பாத்திருக்கிறன் எண்டுதானே சொன்னனான்.”
“அதுவும்தான் ஏனப்பா இப்ப?”
“நல்ல பெடியனா அமையிற நேரம் பிடிச்சிடோணும் தானேம்மா.”
“எவ்வளவு நல்ல பெடியனா இருந்தாலும் இப்ப ஒண்டும் வேண்டாம்!”
“அப்பிடிச் சொல்லக் கூடாதம்மா. இது வாழ்க்கை விசயம். தானா அமையிற நேரம் விட்டுட்டம் எண்டா திரும்பக் கிடைக்காது.”
“அந்தளவுக்கு நல்ல்ல்ல்ல பெடியன் ஆரு?” வயதுக்கு வந்துவிட்டாள், கடமையை முடித்து விடுவோம் என்று நினைப்பவர் இல்லை அவள் தந்தை. பெண்பிள்ளை தைரியமாக, சுயமாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறவர். அப்படியானவர் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கான அந்த நல்லவன் யார் என்கிற குறுகுறுப்போடு வினவினாள்.
“எல்லாளன்.”
“என்னது அவரா?” அவளுக்கு நம்பவே முடியவில்லை. அவன் எப்படி அவளை? இது அறிந்தால் ஊரை விட்டு ஓடியிருக்க மாட்டானா?
“இது அவருக்குத் தெரியுமாப்பா?” உதட்டில் மலர்ந்துவிட்ட குறுஞ்சிரிப்புடன் வினவினாள்.
“எல்லாளனைக் கேட்டு, அவர் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குச் சொல்லுறன்.”
ஆதினியால் இதையும் நம்ப முடியவில்லை. அவளின் தந்தை இதையெல்லாம் விளையாட்டுப் பேச்சாகப் பேசுகிறவர் இல்லை என்பதால் மட்டுமே நம்பினாள். ஆனபோதிலும், அவன் எப்படிச் சம்மதித்தான் என்றான் என்றுதான் ஓடிற்று.
“கலியாணம் அண்ணாக்குத்தான். உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் மாதிரி மோதிரம் மாத்தி விடுவம். படிப்பு முடிஞ்ச பிறகு கலியாணத்தை வைக்கலாம்.”
“ஓ!”
“என்னம்மா? ஒண்டும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” மகள் மனநிலையை ஓரளவிற்கு அவராலும் கணிக்க முடிந்தாலும் வினவினார்.
“உண்மையா அவரிட்டக் கேட்டீங்களா அப்பா?”
“கேக்காம? என்ர பிள்ளையின்ர கலியாணத்தப் பற்றிச் சும்மா கதைப்பனாமா? அகரன், சியாமளா, எல்லாளன் மூண்டு பேரையும் வச்சுக் கதைச்சு, எல்லாருக்கும் விருப்பம் எண்ட பிறகுதான் உங்களுக்குச் சொல்லுறன். இனி நீங்கதான் உங்கட முடிவச் சொல்லோணும்.”
இப்போது அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. வேறு எந்தக் கொம்பனாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மறுத்திருப்பாள். அன்று அவனிடம் சலனப்பட்டுவிட்ட மனது, மறுப்பை உறுதியாகத் தெரிவிக்க விடாமல் தடுமாறியது.
“என்னம்மா? பிடிக்கேல்லையா?”
“எனக்குத் தெரியேல்லயப்பா. இதப் பற்றியெல்லாம் யோசிச்சது இல்ல. அவர் ஓம் எண்டு சொன்னதை நம்பேலாம இருக்கு.”
ஆரம்பத்தில் முடிவாக மறுத்தவள் எல்லாலாளன் என்றதும் குழம்பி நிற்பதே அவள் மனத்தைச் சொல்ல, “ஏன் நம்பேலாது? என்ர பிள்ளைக்கு என்ன குறையாம்? இந்த வீட்டு இளவரசியக் கட்ட ஆருக்குத்தான் கசக்கும்?” என்றார் அவர்.
அப்படிச் சொன்ன தந்தையை ஆதினி மிகுந்த ஆதூரத்தோடு நோக்கினாள். அவனோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்துவிட்டால் காலத்துக்கும் நன்றாக வாழ்வாள் என்று நம்புகிறார். அவனும் அநியாயத்துக்கு நல்லவனாயிற்றே! அதற்குமேல் பெரிதாக எதையும் அவள் யோசிக்கவில்லை.
“உங்களுக்குப் பிடிச்சிருக்காப்பா?” என்று, அதுதான் முக்கியம் போல் வினவினாள்.
“கூடாத பழக்கம் இல்ல. ஒழுக்கமான பிள்ளை. குணத்தில குறை சொல்ல ஒண்டுமே இல்ல. நல்ல வேல. என்ர பிள்ளைக்கு நல்ல பொருத்தமும். அப்பிடியானவர ஏன் கை நழுவ விட? எனக்கு அவர் மருமகனா வந்தா, அத விடச் சந்தோசம் வேற இல்ல.” என்று அவரும் தன் மனத்தைச் சொன்னார்.
அவ்வளவுதான்! வேறு கேள்விகள் எதுவும் அவள் கேட்கவில்லை. “அப்ப எனக்கும் ஓகே தானப்பா! ஆனா, நான் படிச்சு முடிச்சு, அந்த எள்ளு வயலை ஏதாவது ஒரு கேஸுலயாவது வெண்ட பிறகுதான் கலியாணம்!” என்றுவிட்டு எழுந்துகொண்டாள்.