அத்தியாயம் 1
“இந்தப் பெட்டிய நான்தான் கொண்டு போவன்.”
“இல்ல நான்தான்!”
“அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்குச் சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். உற்சாகத்துக்கு என்ன குறை வரப்போகிறது?
அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாகிவிட்டது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள் என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார். கத்தாதிங்கோ!” என்ற மனைவியின் குரல் அதைத் தடுத்து நிறுத்தியது.
உஷா அவனுடைய அன்புக்கினிய துணைவி. எப்போதுமே அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல! இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே வந்தான். ஹோலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது.
தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு அவனிடம் வந்தனர். அவர்களை அவன் சமாளித்துக்கொண்டு இருக்கையிலேயே, “அப்பா! எங்கட அம்மாவுக்கு என்ர இந்தப் பழைய ஃபோனை கொண்டுபோய்க் குடுக்கட்டா? வீட்டுல சும்மாதானே கிடக்கு.” என்றபடி வந்தாள் உஷா.
“என்னட்ட என்னத்துக்குக் கேக்கிறாய்? எடுத்து வையன்!” அவன் சம்மதிக்க, சந்தோசத்தோடு எடுத்து வைத்தாள்.
“நகையெல்லாம் எல்லாருக்கும் எடுத்து வச்சாச்சா?” நினைவு வந்தவனாகக் கேட்டான் நிர்மலன்.
“லொக்கர்ல இருந்து எடுத்துக்கொண்டு வந்திட்டன். ஆனா, ஊருக்குக் கொண்டு போகவேணுமே? களவு கிளவு போய்ட்டுது எண்டா? அதுதான் யோசிக்கிறன்.” என்றாள் உஷா.
“அப்பிடி எல்லாம் நடக்காது. அப்பிடியே களவு போனாலும் வேற வாங்கலாம். ஆனா, அங்க ஊருல எல்லாரும் என்ர மனுசி பிள்ளைகளைப் பார்த்து மூக்கில விரலை வைக்கோணும். அப்பிடி இருக்கோணும் நீங்க மூண்டுபேரும்.” என்றான் ஒரு அழுத்தத்தோடு.
கணவனைப் புதிராகப் பார்த்தாள் உஷா. அவனோ தன்மீது உருண்டு புரண்ட குழந்தைகளோடு ஐக்கியமாகியிருந்தான். மிகவுமே அன்பானவன். குழந்தைகளோடு அவள் படும் சிரமங்களை எல்லாம் உணர்ந்து ஒத்துழைப்பாக இருப்பவன். அவளுக்குக் குறை என்று இதுவரை எதுவுமே இல்லை. அவன் காட்டும் அன்பிலாகட்டும், அக்கறையிலாகட்டும், காதலிலாகட்டும். அவர்களின் பாதுகாப்பை யோசிக்காமல் பகட்டை விரும்புகிறவனும் அல்ல. பின்னே?
அவன் சொன்னது போலவே, எல்லோரும் முதன் முதலாக ஊருக்குப் போவதால் மனைவி பிள்ளைகளைத் தான் நல்லபடியாக வைத்திருப்பதைக் காட்ட விரும்புகிறான் போலும். அதிலே தப்பில்லையே. அவன் அப்படித்தானே அவர்களை வைத்திருக்கிறான்.
மனம் நிறைய அவன் சொன்னபடியே அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவளுக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் என்று எல்லோரையும் பார்க்கப்போகிறோம் என்கிற சந்தோசம். உற்சாகத்தோடு தயாராகினர். நிர்மலனுக்கும் மனதில் துள்ளல் தான். கூடவே ஒரு வேகமும்!
‘பார்! நல்லா பார்! நான் வாழும் வாழ்க்கையைப் பார். என் மனைவி பிள்ளைகளைப் பார். என் சந்தோசமான வாழ்க்கையைப் பார்’ என்று காட்டிவிடும் உத்வேகம்!
சூரிச் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒருவழியாகக் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் சென்றிறங்கினார்கள். பெற்றவர்களைக் கண்டதும் ஆளாளுக்குக் கட்டியணைத்து கண்ணீர்விட்டுச் சந்தோசத்தைப் பரிமாறிக்கொண்டனர். ஒருவரில் தெரிந்த மாற்றங்களை மற்றவர்கள் வியப்போடும் கேலியோடும் பேசிக்கொண்டனர். உற்சாகமாகவே பயணம் வன்னியை நோக்கி நகர்ந்தது.
விசாரிப்பு ஆரவாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க, பேரக்குழந்தைகளை அள்ளியணைத்துக்கொண்ட பெரியவர்களின் மடியிலேயே குழந்தைகள் சோர்ந்துபோய் உறங்கிவிடவும், அவர்களது உறக்கம் கெட்டுவிடாமலிருக்க எல்லோரும் மெல்ல மெல்ல அமைதியாகினர். வீட்டாருக்கு இரவிரவாக முழித்திருந்து பயணித்த களைப்பு. நிர்மலன் குடும்பத்துக்கு நெடுந்தூரப் பயணம் செய்த களைப்பு. அதில், எல்லோரும் அவரவர் அமர்ந்திருந்த சீட்டுகளிலேயே தளர்வாகச் சாய்ந்துகொண்டனர்.
எல்லோரும் மெல்ல மெல்ல உறங்க, நிர்மலன் மட்டும் விழித்திருந்தான். வன்னியை அடைந்து அவர்களின் சொந்த ஊரான வட்டக்கச்சியை வாகனம் நெருங்கவும் பிரதான சந்தியை ஆவலுடன் எட்டிப் பார்த்தான். புதுப்புது கட்டடங்கள், மதில் சுவர்கள், திருத்தப்பட்ட அகன்ற வீதிகள் என்று விழிகள் அங்கிருந்த மாற்றங்களை வியப்போடு வேகமாக உள்வாங்கத் தொடங்கிற்று!
அந்தச் சந்தியைக் கடந்து இருபக்கமும் வயல்காணிகள் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்குள் வாகனம் நுழையவும் சுற்றுப்புறத்தை மறந்து வீதியை வெறித்தான்.
இதே வீதியில் எவ்வளவு வேகமாகச் சைக்கிளை மிதிப்பான். ஹாண்டிலை இறுக்கிப் பிடித்து, முதுகை முன்னே சரித்து. எதிர்காற்றுக்கு முகம் கொடுத்து அவன் மிதிக்கும் சைக்கிளுக்கு முன்னால் மோட்டார் வண்டியே தோற்றுவிடும். அவ்வளவு உத்வேகத்தைக் கொடுப்பது அவள் மீது அவன் கொண்ட ஆசை!
ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் கடல் திடீரெனச் சுனாமியாக மாறிச் சுழற்றி அடிப்பது போன்று, அவன் மனதுக்குள் இருந்து பெரும் கொந்தளிப்புடன் பழைய நினைவுகள் வெளிவந்தன.
காலையில் எழுந்ததும் குளித்து, கண்ணாடி முன் நின்று தங்கையின் ஃபெயார் அண்ட் லவ்லியை அவளுக்குத் தெரியாமல் முகத்தில் அப்பி, பௌடரால் திருநீறு பூசி, சந்தனத்தைக் குழைத்து பெரிய பொட்டாக வைத்துக்கொண்டு, சுவாமியே கும்பிடாமல் வேக வேகமாக அவன் போவது பள்ளிக்கூடத்துக்கு. படிக்கவல்ல! அவளைப் பார்க்க!
அவள் ஒன்றும் அவனுக்குத் தெரியாதவள் அல்ல. ஒரே ஊர். ஒரே தெரு. சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் தான். பாடசாலையும் ஒன்றுதான். அவள் பெரியவளானதும் விழுந்த இடைவெளி மெல்ல மெல்ல நீண்டுகொண்டே போனதை இருவருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் அவளைக் கண்டான்! புதிதாக.. புத்தம் புதுப் பூவாக! அவனுக்காகவே பிரம்மனால் பிரத்யோகமாகப் படைக்கப்பட்ட அவனவளாக! ஏதோ ஒரு நொடியில் அந்த மந்திரக்கோல் சுழலுமே. இனி இவள்தான் உனக்குக் காலம் முழுக்க என்று மனம் சொல்லுமே. அந்த நொடி ஒரு மழைநாளில் அவனுக்குள் நிகழ்ந்தது.
குடையைக் கொண்டுவர மறந்துவிட்டாள் போலும். வேக வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மழைக்கு நனைந்துவிடாமலிருக்க அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து முஸ்லிம் பெண்கள் அணிவது போலத் தலையைச் சுற்றிப் போட்டிருந்தாள். மார்போடு அணைத்தபடி புத்தகங்கள்.
ரோட்டில் இருந்த சேற்றில் காலை வைத்துவிடாமலிருக்க, சேறில்லாத இடமாகப் பார்த்து காலை எட்டி எட்டி வைத்துக்கொண்டிருந்தவள், எதிரே சைக்கிள் வருவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அந்த நொடி.. சைக்கிளில் வந்துகொண்டிருந்த இவன் வீழ்ந்து போனான்! நிலத்திலல்ல! அவளின் ஆழ்கடல் போன்று விரிந்திருந்த அந்த மயக்கும் விழிகளுக்குள்!
தலையில் ஷோல். நெற்றியில் பொட்டு. அவை இரண்டுக்குமான இடைவெளியில் அவள் கூந்தல் சுருள்கள் மழைத்துளிகளைத் தாங்கி நின்றன. கோயிலுக்குப் போய் வந்ததற்குச் சான்றாக அவள் ஒட்டியிருந்த கறுப்பு பொட்டுக்கு மேலே சந்தனத்தையும் பட்டும் படாமல் குங்குமத்தையும் வைத்திருந்தாள். தலை சற்றே குனிந்து தரையைப் பார்த்திருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி இவன் சேற்றை அடித்துவிடுவானோ என்கிற அச்சத்துடன் அவள் பார்த்த அந்த நிமிடத்தில் தான் அவன் தொலைந்தான்.
அவன் விரும்பித் தொலைந்த நொடி!
அதன் பிறகான நாட்கள் அந்த நொடியை சுற்றியே கடந்தது. ஒவ்வொரு நாட்களும் விடிவதே அவளைப் பார்ப்பதற்கு மட்டுமே என்றாகிப்போனது. அந்த இடம் போற்றுதலுக்குரிய புனிதமாயிற்று!
அவளைப் பார்ப்பதற்காகவே அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
இன்றோ அந்த இடத்தைக் கடந்தபோது வெறுப்பை உமிழ்ந்தன விழிகள்! அந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கக் கூடாதா?
“அப்பா மானசிய பிடியுங்கோ. ஆரனுக்குப் பால் குடுக்க விடுறாள் இல்ல.” ஆறு வயது சுட்டி மகளைத் தன்னிடம் நீட்டிய மனைவியின் குரலில் நினைவுகள் கலைந்து, அவளை வாங்கிக்கொண்டான்.
அதற்குள் அவர்களின் வீடும் வந்துவிட, இவர்களைக் கண்டுவிட்டு அயலவர் கூடவும் அவனுடைய உற்சாகம் மீண்டிருந்தது. சந்தோசமாக அவர்களோடு ஐக்கியமாகிப் போனான் நிர்மலன்.
ஒரு கட்டத்துக்குமேல் அதுவும் முடியாமல் போனது. ஏதோ ஒன்று உள்மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஆவலோடு ஊருக்கு வந்தாயிற்று! ஆசையோடு அம்மாவின் கையால் உணவும் வாங்கிச் சாப்பிட்டாயிற்று! சிறுவயதில் அப்பாவின் அடிக்குப் பயந்து ஏறி ஒழிந்துகொண்ட மாமரத்தின் அடியில் பாய் விரித்துப் படுத்தும் எழுந்தாயிற்று! செவ்விளநீர் மரத்தில் பிடுங்கிய இளநீரையும் குடித்தாயிற்று! சொந்தபந்தங்களைக் கண்டு ஆசைதீர பழங்கதை பேசிச் சிரித்துமாயிற்று! அவன் வந்திருப்பதை அறிந்து தேடிவந்த நண்பர்களோடு கேலி கிண்டல் என்றும் இருந்தாயிற்று! ஆனாலும், ஏனோ மனம் கிடந்து புளுங்கிக்கொண்டே இருந்தது. என்னதான் வேண்டுமாம்? ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு.
பழைய நினைவுகள் தான் வேண்டாம் வேண்டாம் என்றாலும் கேட்காமல் ஒன்றாகப் படையெடுத்து வந்து அவனைச் சராமாரியாகப் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தன! அங்கிருந்த ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் அவனது இறந்தகாலத்தைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது. அதுவும் அவன் வீட்டுக்கு முன்னால் பூத்துக் குலுங்கியபடி இப்போதும் நின்ற கொண்டல் மரம்.. பார்வை அங்கே விரைந்தது. ஒருகாலத்தில் அவனது தூதுப்புறா அதுதான்!
‘ஊப்ஸ்..’ காற்றை ஊதி நினைவுகளை விரட்ட முயன்றான். முடியவில்லை!
முதல் காதல். வாழ்வின் அழியா சித்திரம் தான் போலும். இன்றும் ரணமாக் கிடந்து கொதித்தது.
அதன் பிறகோ அவன் பார்வை அவள் மீது ஆர்வமாகப் படியத் தொடங்கிற்று! முதலில் அவள் உணரவேயில்லை. திரும்பியும் பார்க்கிறாள் இல்லையே என்று பரிதவித்தான்.
அவள் உணரத்தொடங்கியதும் சில நாட்கள் படபடப்போடு அவனிருந்த திசைக்கே வரவில்லை. தவிர்க்கமுடியாமல் சந்திக்க நேர்ந்தால் தயக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டு ஓடிவிடுவாள். அவளின் தயக்கம் தான் அவனுக்குத் துணிச்சலைக் கொடுத்தது! அந்தத் துணிச்சலோடு அவளை வேண்டுமென்றே பார்ப்பான்! தன்னைக் கண்டு நாணும் அவளை எண்ணி மனதிலோர் உற்சாகம்! துள்ளல்! வாழ்க்கை எவ்வளவு வண்ணமயமானது என்று அவன் உணர்ந்த நாட்களவை!
பிறகு பிறகு அவளும் தோழியர் அறியாமல், அவனும் அறியாமல் அவனைக் கண்களால் ரசிக்கத் தொடங்கினாள். அதைக் கண்டுகொண்டதும் இவன் பட்ட பாடு என்ன, குதித்த குதி என்ன! இன்று, அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது அந்த நாட்கள்!
‘ச்சே! எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ அந்த நினைவுகளே கசந்து வழிந்தது!
அதுவரை அவன் விழிகளையே சந்திக்காதவள் அதன் பிறகோ மெல்லத் தன் விழிகளை அவன் விழிகளோடு கலக்க முனைவாள். முடியாமல் தடுமாறித் தவித்து, சட்டெனப் பார்வையை விலக்கிவிடுவாள். இமைகள் படபடக்க, கன்னங்கள் மெல்லச் சிவக்கும். இதழோரத்தில் சின்னப் புன்னகை ரகசியமாய் மலரும். அதெல்லாம் அவளிடமிருந்து கிடைத்த அனுகூலமான பதில்கள்.
அவனது ஒற்றைப் பார்வையையே தாங்கமுடியாமல் தடுமாறுகிறவளின் தவிப்பை அவன் ரசிப்பான். தன் ஆளுமை அவளை ஆள்வதில் அவனுக்குள் ஒரு சந்தோச ஊற்று! தான் படும்பாட்டை அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து வெட்கத்தில் அவள் துடிப்பாள். விழிகள் அலைபாயும்!
அதுவே அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது என்று உணர்த்திய ஜாடைகள்.
ஒவ்வொரு வெள்ளியும் அவள் கோவில் செல்வாள் என்பதையறிந்து அவனும் செல்வான். அன்று, தன் கையிலிருந்த மிகுதி திருநீறு, சந்தனம், குங்குமத்தை அவன் தூண் ஒன்றில் கொட்டியபோது, அவள் எடுத்துத் தன் நெற்றியில் இட்டுக்கொண்டாள். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அப்பட்டமாக அவனுக்கு மட்டுமே அவள் தெரிவித்த பதிலது! சந்தோசமாய் அதிர்ந்து நின்றுவிட்டான் அன்று!
எல்லோராலும் ‘நான் உன்னைக் காதிலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்று கேட்டுவிட முடியாது. ‘ஆமாம் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லிவிடவும் முடியாது.
இவைதான் கேள்விகளும் பதில்களும்!
அன்று உலகத்தையே கைக்குள் அடக்கிவிட்ட இறுமாப்பு அவனிடம்! எத்தனையோ சாம்ராஜ்யங்களை வென்ற சோழன் கூட அந்தத் துள்ளல் துள்ளியிருக்க மாட்டான்! அப்படியிருந்தது அவள் மனதை வென்றுவிட்ட போதை!
அதன் பிறகு இதழ்கள் பேசாத அத்தனை காதலையும் விழிகள் நான்கும் பேசிக்கொண்டன! நெடு நாட்களுக்கு விழிகளுக்கு இருந்த தைரியம் இதழ்களுக்கு வரவேயில்லை. கொண்டல் மரத்தின் துணையோடு காதல் கடிதங்கள் மட்டும் பரிமாறப்பட்டன.