நீ வாழவே என் கண்மணி 3 – 2

நெஞ்சில் முட்டி மோதிய எண்ணங்களை எல்லாம் ஒரே மூச்சில் அவன் கொட்டி முடித்தபோது, ‘அந்தப் பெண்ணா? எவ்வளவு அன்பும் சாந்தமுமாய்க் கதைத்தாள். கடவுளே..!’ உஷாவின் கண்களில் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது. மனம் இயல்பாய் அந்தப் பெண்ணின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்தது. எவ்வளவு அருமையான ஒரு துணையையும் வாழ்க்கையையும் இழந்துவிட்டாள்.

அதைக் கண்டவன் துடித்துப்போனான்.

“டேய் உஷ்! உனக்கு மறைக்க நினைக்கேல்லடா. நீயும் என்னைப் பிழையா நினைக்காத. அவளுக்கு நான் செய்ததே போதும்! ஒருத்திய நம்பி ஏமாந்திட்டன் எண்டு சொல்ல தன்மானம் இடம் தரேல்லடி. நீ இல்லாட்டி இண்டைக்கு நான் என்ன நிலைல இருந்திருப்பன் எண்டே எனக்குத் தெரியாது. என்ன நம்புடா!” மனைவியின் கண்ணீரைக் கண்டு பரிதவித்துப்போனான் அந்தக் கணவன்.

“இல்லையப்பா. நான் அதுக்கு அழ இல்ல. அண்டைக்கு அவா சொன்ன பொய்யால தானே இண்டைக்கு நீங்க எனக்குக் கிடைச்சு இருக்கிறீங்க. ஆனா அவா பாவம் எல்லோ. குடும்பமும் இல்லாம நீங்களும் இல்லாம.. கடவுளே காலும் இல்லாம..” என்னவோ தனக்கே நடந்துவிட்டது போல் துடித்துப்போனாள்.

நிர்மலனைப் போன்ற ஒருவனை விட்டுக்கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய இழப்பு? கணவனைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.

“அதுதானம்மா என்ர கவலையும். எல்லாத்தையும் இழந்து, அகதியா, அகதிமுகாமில அனாதையா நிண்ட அந்த நேரத்திலேயும் அவள் எனக்காகப் பொய் சொல்லியிருக்கிறாள். இப்பகூட, அவளின்ர நிலை எனக்குத் தெரியவந்தா நான் குற்ற உணர்ச்சில துடிப்பன் எண்டுதான் ஊர் பக்கமே வராம இருக்கிறாள் போல. அப்பிடியானவளைப்பற்றி நான் யோசிக்கவே இல்லையே. அந்த நேரம் இங்க எனக்கு விசா கிடைச்சிட்டுதுதான். ஆனா, இலங்கைக்கு போகேலாது. எண்டாலும், வேற ஆக்களிட்ட சொல்லி விசாரிச்சு இருக்கலாம். அம்மாவை கதைக்கச் சொல்லி இருக்கலாம். எத்தனையோ வழி இருந்தும் அவளை இப்படி விட்டுட்டேன் எண்டு அதுதானம்மா தாங்க முடியேல்ல. அதைவிட இவ்வளவு நாளும் நெஞ்சில கோபத்தை வளத்து வச்சு.. நினைவு வாற நேரமெல்லாம் அவளைத் திட்டி..” அவனுக்கு விசர் பிடித்துவிடும் போலிருந்தது. அவன் அவனாக இல்லை. குழம்பித் தடுமாறி நிதானமிழந்து நின்றான்.

உஷாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கணவனுக்கு ஆறுதலாக அவனருகிலேயே அமர்ந்திருந்தாள். “வேணுமெண்டு நீங்க எதையும் செய்யேல்லப்பா. மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ. இதெல்லாம் நடக்கவேணும் எண்டு இருந்திருக்குப் போல.” இதமான வார்த்தைகளைக் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொன்னவள், அவன் கரத்தை தன் கரங்களினுள் பொத்தி வைத்திருந்தாள்.

நிர்மலனுக்கு மனைவியோடு கதைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. தெளிவாகச் சிந்திக்கும் அளவுக்கு வந்திருந்தான். அந்த நிலைக்கு அவன் மனைவி அவனைக் கொண்டு வந்திருந்தாள்.

“அவளோட ஒருக்கா கதைக்கவா?” சட்டென்று கேட்டான்.

மெல்லிய அதிர்வு உஷாவுக்குள். கணவனின் மீது சந்தேகமல்ல. அவனைப்பற்றியும் அவனது மனதைப்பற்றியும் அவளுக்குத் தெரியும். அவளது மனதுதான் பெண் மனதாய் ‘முன்னாள் காதலி’ என்கிற நினைவில் ஒருமுறை தடுமாறியது. ஆனாலும், மறைத்துக்கொண்டாள்.

“கதைங்கப்பா.”

ஒருகணமேயானாலும் அவள் விழிகளில் வந்துபோன அதிர்வை அவன் கண்டுகொண்டான். அவளின் நாடியைப் பற்றித் தன் முகம் பார்க்கவைத்தான்.

“என்னில நம்பிக்கை இல்லையா?” அவள் விழிகளையே பார்த்துக் கேட்டான்.

“இல்லையப்பா. அப்பிடி இல்ல. ஆனா ஒரு நிமிசம் என்ர மனம் தடுமாறிட்டுது. உங்கள நம்பாம இல்ல.” கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தாலும் மனதிலிருந்து சொன்னாள்.

அவளை மார்போடு அணைத்துக்கொண்டான் அவன். சற்று நேரம் அவள் தலையை வருடிக்கொடுத்தான். உஷா தேறிக்கொண்டாள். தானே நிமிர்ந்து முகத்தைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள்.

“நீங்க கதைங்கப்பா.” என்றாள் கலக்கமற்று.

“நல்லா யோசிச்சு சொல்லு! அவளுக்கு ஒரு வழி செய்யாம இனி என்னால நிம்மதியா இருக்கேலாது. அடிக்கடி அவளோட கதைக்கவேண்டி வரும். இலங்கைக்குப் போகவேண்டி வந்தாலும் வரும்.”

“நீங்க செய்ற எல்லாத்துக்கும் நானும் துணையா இருப்பன்!” ஒற்றை வரியில் அவன் மனதின் பாரத்தை ஒன்றுமேயில்லாமல் ஆக்கினாள்.

பிள்ளைகளைக் கவனிக்க உஷா நகர்ந்துவிட, தாயிடமிருந்து அவளின் இலக்கங்களைப் பெற்று அவளுக்கு அழைத்துவிட்டுக் காத்திருந்தவனின் இதயம், எல்லாவற்றையும் மீறித் தடதடத்தது. எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறான்? என்ன கதைப்பான்? என்ன கேட்பான்? அவர்களின் உரையாடல் எந்த உறவின் பெயரில் நடக்கும்?

அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

‘கதைப்பது நான்தான்’ என்று எப்படிச் சொல்வதென்றே தெரியாமல் நின்றான்.

ஹலோ நான் நிர்மலன்’ என்பானா? அல்லது, மொட்டையாக ‘நிர்மலன் கதைக்கிறேன்’ என்பானா? ஒருகாலத்தில் அவளின் அவனாக இருந்தவனால் இன்று முற்றிலும் அந்நியனாக நின்று கதைக்கமுடியவில்லை. அவளின் அவனாகவும் நிற்கமுடியாமல் கூசினான்.

ஆனால், அவள் கண்டுகொண்டாள்.

“நி..ர்..ம..ல..ன்” அன்றுபோலவே அவனது பெயரை ஒவ்வொரு எழுத்தாக மெல்ல உச்சரித்தாள்.

‘நான்தான் என்று எப்படி அவளுக்குத் தெரியும்? எந்த உள்ளுணர்வு உணர்த்தியது? நீயில்லாது போனால் இறந்துவிடுவேன் என்றவள், உயிரோடு இருந்துகொண்டு இன்னொருத்தியிடம் அவனைக் கொடுத்தாளே, அந்த நேசம் கண்டு பிடித்ததோ?’

அழவேண்டும் போலிருந்தது. ஏனடி என்னை இப்படி யாரோவாகத் தள்ளி நிற்கவைத்தாய் என்று கேட்கவேண்டும் போலிருந்தது.

திருமணம் குழந்தைகள் மனைவி எல்லாவற்றையும் தாண்டி அவன் மனம் ஒருகணம் உறைந்தது. இதயத்தில் ஒரு வலி! இறக்கமுடியாத பாரம். அவளிடம் கூடக் கொட்டிவிட முடியாத எண்ணங்கள்! என்ன செய்யப் போகிறான்?

இவ்வளவு எண்ணங்களும் மனதில் பொங்கி எழுந்தபோதும், “ம்ம்..” என்று மட்டும் சொன்னான்.

“சுகமா இருக்கிறீங்களா?” மெலிந்து நலிந்த குரலில் ஆவலைத் தேக்கிக் கேட்டாள்.

இன்னுமின்னும் என் நலத்தை மட்டுமே நாடி என்னடி காணப்போகிறாய்?

“ம்ம்..” என்றான்.

‘இவ்வளவு நாளும் உன்னைப்பற்றி யோசிக்காம சுகமாத்தான் இருந்தனான். சந்தோசமாத்தான் வாழ்ந்தனான்.’ துக்கப் பந்தொன்று அவன் தொண்டையை அடைத்துக்கொண்டிருந்தது.

“உஷா, ஆரன், மானசி? எல்லாரும் சுகமா?”

“ம்ம்.”

“ரெண்டுபேரும் அருமையான பிள்ளைகள் நிர்மலன். கவனமா பாருங்கோ. நல்லா படிக்க வைங்கோ. ஆரன் அப்பிடியே சின்னதில உங்களைப் பாத்த மாதிரியே இருக்கிறார். கண்ணுக்கயே நிக்கிறார். ‘நீங்க இன்னும் நடக்கப் பழக இல்லையா’ எண்டு அண்டைக்கு என்னைப் பாத்துக் கேக்கிறார் நிர்மலன்.” அவளே சொல்லிவிட்டு அதை ரசித்து அவளே மென்னகை சிந்தினாள்.

அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதையும் மறந்து அழுதுவிடுவான் போலிருந்தது. ‘கண்மணி..’ அவன் உயிர் அழுதது.

பெரியவளாகும் வரைக்கும் அவள் இப்படித்தான். சலசல நீரோடைதான். எந்த நேரமும் எதையாவது சொல்லிச் சிரித்துக்கொண்டிருப்பாள். அந்த நாட்கள் அப்படியே உறைந்திருக்கக் கூடாதா?

“உஷா அருமையான பிள்ளை. கதச்சது கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அவ்வளவு அன்பா கதச்சவா.”

இவளால் இப்படியெல்லாம் கதைக்க எப்படி முடிகிறது? அவனால் வாயைத் திறக்கக் கூட முடியவில்லையே.

அவளுடைய அவனை இன்னொருத்திக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அவளைப்பற்றியும் அவளது குழந்தைகளைப் பற்றியும் இவளால் எப்படி இவ்வளவு இலகுவாகப் பேசமுடிகிறது. அவனுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

“நிர்மலன்.. கதைங்கோவன். ஏன் பேசாமலேயே இருக்கிறீங்கள்?” பெரும் ஏக்கத்துடன் கேட்டாள்.

அவளுக்கு அவன்மீது எந்தக் கோபங்களும் இல்லை. குற்றச் சாட்டுக்களும் இல்லை. மாறாக அவன் கதைத்து அவள் கேட்டு நெஞ்சம் நிறைய ஆசைகொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock