அது ஒரு புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிலம். அங்கு, நான்கு பக்கமும் மண்சுவரால் எழுப்பப்பட்ட கொட்டில் ஒன்றை, தனக்கான தங்குமிடமாக அமைத்துக்கொண்டிருந்தாள் கண்மணி. பொய்யாக அதனை ‘வீடு’ என்று சொல்வதில் அர்த்தமில்லை. சின்னக் குழந்தைகூட வரையச் சொன்னால் நடுவில் கதவு வைத்து இருபுறமும் ஜன்னல் வைத்து கூரை போட்ட வீட்டைத்தானே வரைந்து காட்டும். மறக்காமல் ஒரு பல்ப்பை கூட வரைவார்கள். அப்படியான அடிப்படை இலக்கணங்கள் அத்தனையையும் மீறிய ஒன்றை எப்படி வீடெனக் கொள்வது?
ஆனால், கண்மணியின், ‘வீடு’ அதுதான்.
அதனருகே, தாழ்வாரம் போன்று இறக்கியிருந்ததற்குப் பெயர் ‘சமையலறை’ போலும். பாத்திரங்கள் நடமாடிய அடையாளமும் இல்லை. சமையல் நடந்ததற்கான தடயமும் இல்லை. ஒரு பிளாஸ்டிக் கப், ஒரு பிளேட், ஒரு குட்டிப் பானை எல்லாம் ஒரு மூலையில் நிரந்தர ஓய்விலிருந்தன. என்றோ எப்போதோ பெயருக்காக மண்ணால் உருவாக்கப்பட்ட அடுப்பு மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாக வாயைப் பிளந்தபடி காட்சியளித்தது.
அந்த ‘வீட்டினுள்’ ஒரேயொரு கட்டில். அவளின் நிலையை உணர்ந்து அமைப்பு ஒன்று இலவசமாகக் கொடுத்திருந்தது. மெத்தை இல்லாமல் இரண்டு பாய்கள் அதன்மேலே விரிக்கப்பட்டு, பழைய ஆடைகளை உள்ளடக்கிய ஒரு தலையணை போடப்பட்டிருந்தது. அதன்மேலே ஒரு பெட்ஷீட். ஒரு மூலையில் கொடி ஒன்று கட்டப்பட்டிருக்க, அதன்மீது நான்கைந்து ஆடைகள் தொங்கின. துணியாலான பை ஒன்று தனக்குள் நான்கைந்து பேப்பர்களை விழுங்கி வயிற்றை உப்பிக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது. தரையில் ஒரு மூலையில் மண்ணெண்ணெய் விளக்கு. ஓலையால் வேயப்பட்டிருந்த கூரையில் வாசலோரமாகச் சீப்பு ஒன்று செருகப்பட்டிருந்தது. இவைதான் அந்த ‘வீட்டின்’ சொத்துப் பத்துக்கள்.
இரவாகிவிட்டபோதிலும் தன்னந்தனியாகக் கட்டிலில் சரிந்திருந்தாள் கண்மணி. கூப்பிடு தூரத்தில் இன்னோர் குடும்பம் உண்டுதான். என்றாலும் அவளுக்கு எந்தப் பயமும் இல்லை. கள்ளனோ காடையனோ வரப்போவதில்லை. வந்தால் ஏமாந்து போவது அவர்கள்தான் என்று அவர்களுக்கே தெரியும். அது கண்மணிக்கும் தெரியும். எனவே பயமில்லாமல் சரிந்திருந்தாள்.
சரிந்திருந்த கண்மணியை நிர்மலனின் கேள்விகளே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் அழைப்பான் என்று நினைத்தே பார்க்கவில்லை. அழைத்தது இனிய அதிர்ச்சி.
அவள் தன்னைச் சுற்றியிருந்த அனைத்தின் மீதிருந்தும் பற்றை அகற்றி நீண்ட காலங்களாகிவிட்டது. ஆசைகொண்டால் ஏமாற்றம் உண்டாகும். ஏமாற்றம் இழப்பினை நினைவூட்டும். அந்த இழப்பின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவளுக்கில்லை. எல்லாவற்றையும் மூன்றாம் நபராக நின்று, மனத்துக்குத் தூரவாகத் தள்ளிவைத்துப் பார்க்கப் பழகியிருந்தாள்.
ஆனால் நிர்மலன்? இவையனைத்துக்கும் அப்பாற்பட்டவன் இல்லையா? அவளின் உலகம் அவன்! அவனைத் தள்ளிவைத்துப் பார்க்க அவளால் முடியுமா என்ன?
அவனது கண்ணசைவே அவளைப் பாதிக்க வல்லது. அப்படியிருக்க அவன் கேட்கும் கேள்விகள்?
கேட்டானே ஒரு கேள்வி, உனக்குக் கவலையா இல்லையா என்று.
அன்று, அவன் நன்றாக வாழவேண்டும் என்றுதான் அப்படிச் சொன்னாள். அவனா அவளா என்கிற கேள்வி வந்தால் அவளுக்கு அவன்தான் முக்கியம்! அன்றும் இன்றும் என்றும்! அதேமாதிரி, இன்றுவரைக்கும் அந்தக் கோயிலில் அவள் வேண்டுவதும் அவனுக்காக மட்டுமே. அவளுக்கென்று கேட்க எதுவும் இருப்பதாய் தோன்றியதில்லை.
ஆனால், நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு, முழுதாக அவனைக் கண்முன்னே கண்டபோது அவளிதயம் ஒருமுறை துடிக்கத்தானே செய்தது. அவனை மனைவி பிள்ளைகளோடு பார்த்த கணம் ஏக்கம் வராமலில்லையே. இழப்பின் வீரியம் தாக்காமல் இல்லையே! அவனையே இழந்துவிட்டாளே! மனைவியையும் பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு அன்று தாயோடு அவன் சென்ற அந்தக் காட்சியைப் பின்னிருந்து பார்த்தவளுக்கு நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது உண்மைதானே. அவர்கள் குடும்பமாகச் செல்கிறார்கள். அவள் தனியாக அங்கேயே நிற்கிறாள்!
கண்ணோரம் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள். நாள்முழுக்க அமர்ந்திருக்கும் தேகம் இப்போது தளர்வாகச் சார்ந்திருப்பது சுகமாக இருக்க, முழங்கால் வரையான அந்தக் காலை. ஒரு கைக்கொண்டு தூக்கி மறுபக்கம் போட்டுவிட்டு பிரண்டு படுத்தாள்.
அன்றைய நாளுக்குப் பிறகு இப்போதெல்லாம் கற்பனைகள் கூட அவளுக்கு வருகிறதே. அவளையும் மீறியே பல சமயங்களில் ஒரு குடும்பத் தலைவியாக வாழ்ந்துவிடுகிறாள். அந்தக் குடும்பத்தில் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். அவள் நன்றாகக் கலகலவென்று சிரித்தபடி கணவனையும் குழந்தைகளையும் கவனிக்கிறாள். முக்கியமாக ஓடி ஆடி நடமாடுகிறாள்.
‘அடச்சை! இந்த மனதுக்கு மட்டும் எவ்வளவு பட்டாலும் விளங்காதாம். நடக்கக் காலே இல்லை. இதில் கணவனாம் குழந்தையாம்.. ஓடி ஆடி நடமாடுகிறாளாம்!’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாலும் அந்தக் கற்பனைகள் இனிக்காமல் இல்லை. இரவுகள் ஒவ்வொன்றும் அதனோடேதான் கழிகிறது.
பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டாள். அதே கற்பனைகள் அவளைச் சூழ்ந்துகொண்டது.
அடுத்தநாள் காலை, அவளின் சக்கரநாற்காலியின் சக்கரங்கள் துயிலுமில்லம் நோக்கி ஏன் என்றே தெரியாமல் நகர்ந்தது.
பெற்றவர்களை எங்கு, யார் புதைத்தார்கள் என்று தெரியாது. ஏன் புதைக்கப்பட்டார்களா என்றுகூடத் தெரியாது. அண்ணா கதிரோன் மட்டும் அங்கே உறங்கி கொண்டிருந்தான். மனம் எப்போதெல்லாம் சஞ்சலம் கொள்ளுமோ அப்போதெல்லாம் அங்கே வந்துவிட்டுப் போவாள்.
எரிமலைகள் உறங்க வைக்கப்பட்ருந்த ஆலயத்துக்குள் அவளின் நாற்சக்கர வாகனம் நுழைந்தது. எழுந்துவந்து கரம்கொடுத்து உதவிசெய்ய முடியாமல் கையாலாகாதவர்களாய் அவளைப் பார்த்து நின்றனர் அங்கே உறங்கிக்கொண்டிருந்த வீரமறவர்கள்!
தமையனின் அருகில் அவள் அமர்ந்திருந்தபோது யாரோ ஒருவன் வந்தான். கை ஒன்று மணிக்கட்டோடு இல்லை. மற்றக் கையால் ‘கார்த்திகா’ என்று எழுதியிருந்த ஒரு பெண்ணின் நினைவுத் தூபியின் மீது, ஒற்றை ரோஜாவை வைத்துவிட்டு அப்படியே நிலத்தில் அமர்ந்துகொண்டான். காலிலும் காயங்கள் பட்டு ஆறிப்போன தழும்புகள் தெரிந்தது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அவளுக்கும் அங்கிருந்து போக மனமில்லை. அவளது அசைவு அவனது மோனத்தைக் கலைத்துவிடுமோ என்று எண்ணினாள். எப்போதுமே அங்கிருக்கையில் மனதில் சொல்லொணா அமைதி கிட்டிவிடும். அவர்கள் எல்லோரும் சுற்றி உறங்கிக்கொண்டு இருந்தாலும், அவர்களுக்கு மத்தியில் இருக்கையில் ஒரு பாதுகாப்புணர்வு தோன்றிவிடுவதால் அப்படியே அவளும் அமர்ந்திருந்தாள். அவன் மௌனம் கலைந்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“என்ர மனுசி.” கார்த்திகாவின் நினைவுத்தூபியைக் காட்டிச் சொன்னான். “இண்டைக்கு எங்கட கல்யாண நாள். அவாவும் என்னைப்போல முன்னாள் போராளிதான். கட்டி ஆறுமாதத்தில வீரச்சாவு.” அந்தத் தூபியைச் சுற்றி நிலத்திலிருந்து ஒன்றிரண்டு புற்களையும் ஒற்றைக்கையால் பிடுங்கிப் போட்டபடி சொன்னான்.
“அவா புதுக்குடியிருப்பில வீரமரணம். எனக்கு முள்ளிவாய்க்கால். உங்களுக்கு?” என்று அவளின் காலைப் பார்த்தான்.
அதாவது அவளின் கால் எந்த ஊரில் போனது என்று கேட்கிறான். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அங்கம் பறிபோனதில் உன் கால் எங்கே போனது என்று கேட்கிறான்.
இப்படியானவர்களுக்குள் அறிமுகங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. எனவே சொன்னாள்.