நீ வாழவே என் கண்மணி 4 – 2

“எனக்கும் முள்ளிவாய்க்கால் தான்.” நான் போராளி அல்ல, பொதுஜனம் தான், ஆனாலும் கால் போய்விட்டது என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லி எதற்கு அவனைப் பிரிக்க?

“இவையல(இவர்களை) மாதிரி நாங்களும் வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். எங்களை மாதிரி ஆராவது வந்து பாத்திட்டாவது போயிருப்பீனம். உயிரோட இருக்கிறதுல ஒரு சனமும் திரும்பியும் பாக்குதில்ல.” என்றான் அவன்.

உண்மைதான்! போரில் ஊனமுற்று உயிர் தப்பியவர்கள் ஏதோ ஒருவகையில் ஒதுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வலி, அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“எங்களைக் கண்டா பாக்கக்கூடாத மனுசரை பாத்தமாதிரி ஓடுதுகள். ஒரு வார்த்த கதையில்ல. சிலநேரம் நான் இங்க வந்திருந்து இவளோட கதைச்சுக்கொண்டு இருந்திட்டுப் போவன். சாவும் வருதில்ல. அதுவரைக்கும் பொழுதும் போகவேணுமே.”

அவளைப்போலத்தான் அவனும் போல. ஒவ்வொரு இரவிலும் கண் மூடுகையில் மீண்டும் விழிக்கக் கூடாது என்று கேட்பான் போலும். அது நடக்காத விரக்தி அவனைப் பேச வைத்தது.

அவளைக் கண்டதும் ‘தன் இனம்’ என்கிற சொந்தம் அவனுக்குள் உருவாகிவிட்டது என்று நன்கே புரிந்தது. நிறையப் பேசினான். அவனை நிறுத்தவோ முகத்தை முறிக்கவோ மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இயக்கத்தில இருக்கேக்கதான் விரும்பினாங்கள்(விரும்பினோம்). அண்ணாதான் செய்து வச்சவர்!” அதைச் சொல்லும்போது மட்டும் அவன் விழிகள் மின்னியது.

வயதில் பெரியவர்களுக்கு ‘தலைவர்’, வயதில் சின்னவர்களுக்கு ‘தலைவர் அண்ணா’. அந்தத் தேசத்தின் மக்களுக்கே உறவாகிப்போன ஒரு மாமனிதனைப் பற்றிப் பேசுகையில் விழிகள் மின்னாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அவனோ பேச ஒருவர் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் தன் வாழ்க்கை வரலாற்றையே பகிர்ந்துவிட்டுப் போனான். இன்று நிம்மதியாக உறங்குவான் என்று அவன் முகத்தைப் பார்த்தபோதே தெரிந்தது.

சுற்றி இருந்தவர்களைப் பார்த்தபோது, அவர்கள் வீரசசாவடைந்தது எவ்வளவோ மேல் என்றுதான் அவளுக்கும் தோன்றியது. ‘முன்னாள் போராளிகள்’ எல்லோரும் ஒரு காலத்தில் பாதுகாப்பாக நெஞ்சை நிமிர்த்தி மக்களை நடக்க வைத்தவர்கள். இன்று? அந்த மக்கள் திரும்பியும் பாராமல் அவர்களைக் கடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் மீட்புக்காய் சுண்டு விரலைக்கூட அசைக்காதவன் எல்லாம் ‘நான் ஈழத்தவன்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்க, அதற்காய் போராடியவர்கள் கூனிக் குறுகி நிற்கிறார்கள். காவல் காத்த தெய்வங்களைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்துவிட்டது சமூகம்.

சூரியன் உச்சிக்கு வருவது போலிருக்கவும் அங்கிருந்து வெளியேறி, வீதிக்கு இறங்கி, மெல்ல அவளது வாகனம் வீட்டை நோக்கி நகர்ந்தது.

அதற்காகவே காத்திருந்தது போல அழைத்தார் நிர்மலனின் அன்னை, பத்மாவதி.

“சொல்லுங்கோ ஆண்ட்டி!” அவனைக் கண்டபிறகு அவன் தேடி அழைத்துப் பேசியத்திலேயே பெரும் ஆறுதல் கொண்டிருந்தாள் அவள். இப்போது அவரும் அழைத்ததில் மனதுக்கு நிறைவாக இருந்தது.

“சுகமா இருக்கிறியா பிள்ளை?” நலம் விசாரித்துத் தெரிந்துகொண்டவர் விசயத்துக்கு வந்தார்.

“தம்பி உனக்குக் கரண்ட்ல ஓடுற சக்கரநாற்காலி ஒண்டு வாங்கச் சொன்னவன். அப்பிடியே பிளாஸ்டிக் காலுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னவன். நீ இங்கயே வாவனம்மா. உனக்கும் அலைச்சல் இல்ல எனக்கும் அலைச்சல் இல்ல. எல்லாத்துக்கும் சுகமெல்லோ.” என்றார் அவர்.

அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்ததும் சும்மா கதைக்கத்தான் எடுத்திருக்கிறான் என்று அதிலேயே நிறைவு கண்டவளுக்கு அவன் அவளுக்காகப் பலதையும் யோசித்திருக்கிறான் என்பது பெரும் சந்தோசத்தைக் கொடுத்தது. இதுவே போதும்!

“எனக்கு ஒண்டும் வேண்டாம் ஆண்ட்டி. இருக்கிறதே போதும். சும்மா காசை வீணாக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ. நீங்க கேட்டதே சந்தோசம். இங்க வரேக்க மட்டும் என்னையும் வந்து பாத்துக்கொண்டு போங்கோ. அவ்வளவும் காணும்!” என்று அவர் எவ்வளவோ சொன்னபோதும், இதமாகவே மறுத்துவிட்டு வைத்துவிட்டாள்.

ஐந்துநிமிடங்கள் கூடக் கழிந்திராது. உடனேயே அவன் எடுத்தான்.

“ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னியாம்!” கோபமாய் ஒலித்தது அவன் குரல்.

மனதை வருடிச் சென்றது அவன் கோபம். “சும்மா ஏன் காசை கரியாக்குறீங்கள். அந்தக் காசுக்குப் பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுங்கோ.” இதமாகச் சொன்னாள் அவள்.

“உனக்கு வேணுமா வேண்டாமா எண்டு கேக்கேல்லை நான், உன்னைச் செய்யச் சொன்னான்!” அவனது அந்தக் கோபம் இப்போது மெல்லிய சங்கடத்தை உருவாக்கியது அவளுக்கு. அவன் தனியல்ல. மனைவி இருக்கிறாள். இப்படியெல்லாம் கதைக்க, உஷா என்ன நினைப்பாள்?

“எனக்கு எதுவும் வேண்டாம் நிர்மலன்!” சற்றே அழுத்தமாக மறுத்தாள்.

“ஒண்டும் வேண்டாம்! ஆரும் வேண்டாம்! இப்பிடியே எவ்வளவு நாளைக்கு எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருக்கப்போறாய்? கொஞ்சமாவது நான் சொல்லுறதையும் கேள் கண்மணி. அது உனக்கு இன்னும் ஈஸியா இருக்கும்.”

“ஒவ்வொரு நாளும் ஒருக்கா கோயிலுக்குப் போறதுக்கும் எப்பயாவது துயிலுமில்லம் போறதுக்கும் இது காணும். என்னைப்பற்றி நீங்க எதுக்கும் யோசிக்க வேண்டாம்.”

“நீமட்டும் எனக்காக எல்லாம் செய்வாய். ஆனா, நான் உன்னைப்பற்றி யோசிக்கவே கூடாது என்ன?” எவ்வளவு சொன்னாலும் கேட்கிறாள் இல்லையே என்று கோபம் வந்தது அவனுக்கு.

“என்ன நிர்மலன் நீங்க..” என்றவளை பேசவிடாமல்,

“நீ ஒண்டும் சொல்லவேண்டாம்! அம்மாட்ட போறாய். அவா சொல்லுறதை மட்டும் செய்யிறாய். அவ்வளவுதான்!” என்று முடிவாக அவன் சொன்னபோது, அவளும் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

இது சரிவராது! நிறுத்தியே ஆகவேண்டும்

“இருக்கிறது எல்லாம் போதும் நிர்மலன். தயவுசெய்து இனி எடுக்காதிங்கோ! நான் ஒரு குறையும் இல்லாம சந்தோசமாத்தான் வாழுறன்! நான் வைக்கிறன்.” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

‘சந்தோசமாத்தான் வாழுறன்!’ என்ற வார்த்தைகளை மீண்டுமொருமுறை அவள் வாயால் கேட்டவன் முற்றிலும் நிதானமிழந்து நின்றிருந்தான்!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock