நீ வாழவே என் கண்மணி 5 – 1

பத்து நாட்கள் கடந்திருக்கும். எப்போதும்போல அன்று மாலையும் கோயிலுக்கு வந்திருந்தாள் கண்மணி. மனதார வணங்கிவிட்டுக் கண்களைத் திறந்தபோது, திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். என்னவிதமாகப் பிரதிபலிப்பது என்றுகூடத் தெரியாமல் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள்.

இப்படி ஓடிவந்து நிற்கிறானே. இதென்ன கொஞ்சநஞ்சத் தூரமா? என்ன செய்கிறான் இவன்? பின்னால் பார்க்க, யாருமில்லை.

“நான் மட்டும் தான் வந்தனான்!” முறைத்துக்கொண்டு சொன்னான்.

‘ஏன்?’ அதிர்ச்சி இன்னும் முழுவதுமாக நீங்கி இராததால், அவளால் கண்களால் மட்டுமே கேள்வி எழுப்ப முடிந்தது.

“நீ சந்தோசமா வாழுறியோ? எங்க காட்டு உன்ர சந்தோசத்தை? நான் பாக்கவேணும்!” பெரும் கோபத்தில் இருக்கிறான் என்று நன்றாகவே புரிந்தது.

“நிர்மலன், ப்ளீஸ்! கொஞ்சம் கோபப்படாம கதைங்கோ. இது என்ன சின்னப்பிள்ளைகள் மாதிரி? தொட்டத்துக்கும் இங்க வந்து நிக்கிறீங்க? உஷா பாவம் எல்லோ. அவவைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்கோ.”

“அதெல்லாம் எனக்குத் தெரியும்! நீ சந்தோசமா வாழுற வாழ்க்கையை முதல் எனக்குக் காட்டு!” என்று அதிலேயே நின்றான் அவன். அவனுக்குத்தானே தெரியும், அந்த வார்த்தைகள் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் சுழற்றி அடித்தது என்று.

இன்றுவரை அவன் படும் துன்பங்களுக்கு அந்த வார்த்தைகள் தானே மூலகாரணம்.

அவளுக்கோ தீராத அவனது கோபத்தில் நெஞ்சடைத்தது. பதில் சொல்லவும் தெரியவில்லை. பேசாமலேயே அமர்ந்திருந்தாள். கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி இருந்தவளைப் பார்க்க, அவனுக்கும் நெஞ்சில் வலித்தது.

அன்று, அவளைக் கண்டபோது எதிர்கொள்ள முடியாத கோழையாக ஓடிவிட்டான். இன்று, கோபம் கொடுத்த உந்துதலில் அவள் முன்னே வந்து கேள்வியும் கேட்டுவிட்டான். இப்போது வெகு அருகில் அவளைப் பார்த்தபோது, முகமெல்லாம் வாடி, பொலிவிழந்து, மெலிந்து, ஒரு காலும் இல்லாமல், தன்னில் கவனமென்பதே இல்லாமல், சக்கரநாற்காலியில் முடங்கிப்போனவளைப் பார்க்கமுடியவில்லை.

அந்த மழைநாளில் மெல்ல மெல்ல பாதம் வைத்து நடந்து வந்தவள் நினைவில் வந்தாள். எப்படி இருந்தவள் இப்படி ஆகிப்போனாளே. விதி வஞ்சித்தது ஒருபாதி என்றால் அவனும் அல்லவோ வஞ்சித்துவிட்டான்.

“ஏன் கண்மணி இப்பிடி இருக்கிறாய்? உனக்காகவும் கொஞ்சம் வாழப்பழகு!” ஆற்றாமையுடன் மனத்தாங்கலாய்ச் சொன்னான் நிர்மலன்.

கோபத்தைத் தாங்கிவிடலாம் போல. வலி நிறைந்த அவன் குரல் நெஞ்சை என்னவோ செய்தது.

விழிகளில் நீர் அரும்ப, அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். “நான் நல்லா..த்தான் இருக்கிறன். எனக்கொரு கு..குறையுமில்லை..” அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல முடியாமல் வார்த்தைகள் திக்கிற்று!

அவனைப் பார்த்து அவனிடமே எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்?

‘இவள் சரிவரமாட்டாள்.’ என்பதுபோலத் தலையசைத்தான் அவன். என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ளப் போவதில்லை. தலைக் கேசத்தைக் கோதிக்கொண்டு யோசித்தான்.

“நீ வா, வீட்டை போவம்!” என்றான் ஒரு முடிவோடு.

“ஆரின்ர வீட்டை?”

“எங்கட வீட்டை.”

“அங்க நான் வரமாட்டன்.” பதறியடித்துக்கொண்டு சொன்னாள்.

அவன் சுருங்கிய புருவங்களோடு ஏறிட்டான். “தயவுசெய்து சொல்லுறதை கேளுங்கோ. உங்களைப் பாத்தது சந்தோசம். அந்தளவும் காணும். கடைசிவரைக்கும் அங்க வரமாட்டன்.” முடிவாகச் சொன்னாள்.

“ஏன்?”

“என்னை இப்பிடியே விட்டுடுங்கோ நிர்மலன். இனி இதுதான் என்ர வாழ்க்கை!” அசையவே மறுத்தாள் அவள்.

“அதுக்குத்தான் அங்க இருந்து இங்க வந்து நிக்கிறன் பாரு!” கோபமாய்ச் சொன்னான்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்ல சொல்லக் கேட்காமல் வந்துவிட்டு இப்படிச் சொல்கிறவனிடம் என்ன சொல்லுவாள்?

அசையாமல் இருந்தவளை ஒன்றுமே செய்யமுடியாத நிலை இன்னும் கோபத்தைக் கிளப்பியது. அதை அவளிடம் காட்டும் தைரியமும் அவனிடம் இல்லை. “உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது கண்மணி!” என்றான்.

அப்போதும் அவள் அசையவில்லை.

“சரி…! நட, உன்ர வீட்டுக்கே போவம்.” என்றான் முடிவாக.

“அங்க நீங்க என்னத்துக்கு?” அந்த ‘வீட்டை’ பார்த்தாலும் ஏதாவது சொல்லுவானே என்கிற பதட்டத்தோடு கேட்டாள்.

அவன் முறைத்தான். “இப்ப நீ அங்க வரவேணும். இல்ல, நான் உன்ர வீட்ட வருவன். ரெண்டுல ஒண்டு!” என்றான் முடிவாக.

அதற்குமேல் முடியாமல் தன் ‘வீட்டுக்கே’ அழைத்துப்போனாள்.

நடந்து செல்லும் தூரம்தான் என்பதில் அவள் சக்கரநாற்காலியில் வர அவன் அருகே நடந்துவந்துகொண்டிருந்தான். அவள் பார்வை அடிக்கடி அவனிடம் பாய்ந்தது. சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் அதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“என்ன பாக்கிறாய்?”

“இல்ல.. முந்தி சின்னப் பெடியன் மாதிரி இருந்தீங்க..” அவள் இழுக்க அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இப்ப?” சிரிப்போடு வினவினான்.

“வளந்த மனுசன் ஆக்கிட்டிங்க.” அவனை ஒருமுறை விழிகளால் முழுவதும் அளந்துவிட்டுச் சொன்னாள்.

வாய்விட்டுச் சிரித்தான் நிர்மலன்.

“பிறகு? ரெண்டு பிள்ளைகள் இருக்கடியப்பா. எப்பவும் சின்னப் பெடியன் மாதிரியே இருக்கேலுமா? வயசு போகுதெல்லோ.” இலகுவான புன்னகையோடு சொன்னான்.

“காலம் எவ்வளவு வேகமா போகுது பாத்தீங்களா?” அவனோடு இப்படி உரையாடுவது அவளுக்கு மிகவுமே நன்றாக இருந்தது.

“ம்ம்.. உண்மைதான்.”

இதே பத்து வருடங்களுக்கு முதல் அவர்கள் இளமையின் ஊஞ்சலில் ஆடியவர்கள். இன்று, நிதானம் கொண்டு சிந்தித்துச் செயலாற்றும் மனிதர்களாக மாறிவிட்டார்கள். அதே பத்து வருடத்துக்குப் பிறகு, அவர்களது பிள்ளைகள் அதே இளமையில் ஊஞ்சலாடுவார்கள். இவர்கள் வயதானவர்கள் ஆகிவிடுவார்கள். இதுதானே வாழ்க்கை!

“ஆரனும் மானசியும் எப்பிடி இருக்கீனம்?”

அவளின் கேள்விகளுக்கு இலகுவாகப் பதிலளித்தபடி சென்று அவளின் ‘வீட்டை’ பார்த்தவனுக்குத் தொண்டை அடைத்தது. முதலில் இது என்ன வீடா? என்ன வாழ்க்கை வாழ்கிறாள் இவள்?

இதை வைத்துக்கொண்டுதான் ‘எனக்கு ஒண்டும் வேண்டாம், நான் நன்றாக இருக்கிறேன்’ என்றாளா? இதில் ‘சந்தோசமாக’ வாழ்கிறாளாம்! கிடுகிடு என்று ஏறிய கோபம் உச்சியைத் தொட்டுவிட முகம் இறுகிப்போய் நின்றிருந்தான்.

வறண்ட நிலத்தில் ஒரு கிணறு இல்லை, மலசலகூடம் இல்லை. எல்லாவற்றுக்கும் பக்கத்துவீட்டுக்குப் போகவேண்டும். இரவில் வயிறு சரியில்லை என்றால் என்ன செய்வாள்? நெஞ்சில் இரத்தம் வடிந்தது.

error: Alert: Content selection is disabled!!