நீ வாழவே என் கண்மணி 5 – 2

அவனது கண்மணி என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? இப்படி அவளிருக்க, அவன் வெளிநாட்டில் மனைவியோடு இனிமையான இல்லறம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அவனை அவனே வெறுத்தான்!

“சாப்பாட்டுக்கு என்ன செய்றாய்?” குரலடைக்கக் கேட்டான்.

“பக்கத்தில இருக்கிற அந்தக் குடும்பத்துக்கு மூண்டு பிள்ளைகள். ஒவ்வொருநாளும் பாடம் சொல்லிக் குடுப்பன். அதுக்குப் பதிலா சாப்பாடு தருவீனம்.”

அதற்குமேல் எதையும் அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்குத்தான் இல்லை.

“இங்கேயே இரு!” என்றவன் வேகமாகச் சென்று அன்றைக்குத் தேவையான உணவை வாங்கி வந்தான். தன்னால் இயன்றதாக வீட்டின் வாசல் கதவுக்கு ஒரு பூட்டினைப் போட்டான்.

“இது என்னத்துக்கு?” அவனது செய்கையால் உண்டான சின்னச் சிரிப்புடன் கேட்டாள் அவள்.

“இரவில எவனாவது வந்தா?”

“என்னட்ட என்ன இருக்கு எண்டு வரப்போறான்?”

“நீ இருக்கிறியேடி விசரி!” கோபம் தான் வந்தது. ஆனால், அதைச் சொல்லி அவளைப் பயமுறுத்த மனமில்லை.

இத்தனை நாட்களாக அவள் இப்படித்தானே வாழ்ந்திருக்கிறாள். இன்று வந்து அவன் பதை பதைத்தால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா என்ன? மனம் கேளாமல் பக்கத்துவீட்டுக்குச் சென்று பார்த்துக்கொள்ளும்படி சொன்னான்.

ஒருவாரம் கடந்தது. கண்மணிக்கு இவன் இங்கேயே நிற்பதில் சற்றே பயம்தான். அதைவிடத் தினமும் அவளையும் வந்து பார்த்து, அவளோடு நேரமும் செலவழித்துக் கொண்டிருந்தான்.

உஷா என்னெண்டு விட்டவா? என்ன சொல்லிப்போட்டு வந்தனீங்கள்? பிள்ளைகள் உங்களைத் தேட மாட்டீனமா? ஏன் இங்கேயே நிக்குறீங்கள் என்று எவ்வளவோ கேட்டுவிட்டாள்.

எதற்கும் பதில் இல்லை.

திரும்பத் திரும்பக் கேட்டால், “நான் சொன்னதை நீ கேட்டியா? நீ கேக்கிறதுக்குப் பதில் சொல்ல.” என்று கேட்டு வாயை அடைத்துவிடுவான்.

ஒருநாள் அதிகாலையிலேயே ஒரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு பரபரப்பாக வந்துவிட்டான். அவள் அதிர்ந்து விழிக்க, “வெளிக்கிடு வெளிக்கிடு!” என்று துரத்தினான். அங்கிருந்த பொருட்களை எல்லாம் வாகன ஓட்டியோடு சேர்ந்து ஐந்து நிமிடங்களில் வாகனத்துக்குள் அள்ளி எறிந்தான்.

“நிர்மலன், ப்ளீஸ் நான் உங்கட வீட்டை வரமாட்டன்.” சட்டென்று நின்றவன் முறைத்த முறைப்பில் கப்சிப் ஆனாள் கண்மணி.

“உன்ர வீட்டுக்கு வரலாம்தானே!”

அவளின் தேகம் ஒருமுறை அதிர்ந்தது.

“என்னால ஏலாது. அம்மா, அப்பா, அண்ணா எண்டு வாழ்ந்த அந்த வீடு ஆருமே இல்லாம பாழடைஞ்சு கிடைக்கிறத என்னால பாக்கேலாது. ப்ளீஸ் விடுங்கோ!” கண்ணீரோடு கெஞ்சினாள்.

“நான் இருக்கிறன் தானே. வா!” கோபம் கரைத்துவிட ஆதரவாகச் சொன்னான் நிர்மலன்.

அவளுக்கு அது மட்டுமா பிரச்சனை? அந்த ஊரிலிருக்கும் அத்தனையும் மற்ற எல்லாவற்றையும் விட அவனைத்தான் அதிகமாக நினைவூட்டும். அதனால்தானே அந்தப் பக்கமே எட்டியும் பார்க்கவில்லை. அவனோ அதை உணராமல் வா என்கிறான். அவளோ அசையவில்லை. தன்மையாகக் கதைத்து இவளை வழிக்குக் கொண்டுவர முடியாது என்று தெரிந்துபோயிற்று அவனுக்கு.

“இப்ப நீயா வரேல்லையோ நடக்கிறதே வேற!” அவன் பொறுமையும் பறந்துவிட்டது என்று தெரிந்து அடங்கிப்போனாள் கண்மணி. அங்கே கொண்டுபோய்ச் சேர்க்காமல் அவன் இங்கிருந்து சுவிஸ் போகப் போவதில்லை என்பதும் இத்தனை நாட்களுக்குள் புரிந்திருந்தது.

மெல்லத் தன் சக்கர நாற்காலியில் வாகனத்தை நெருங்கியவளுக்கு அழுகை வரும்போலாயிற்று! எப்படி அதில் ஏறுவாள். வாகன ஓட்டியும் என்ன செய்ய முடியும்? நிர்மலனைப் பார்க்க, அவன் நெஞ்சிலும் பாரம்!

என்ன நிலையில் இருக்கிறாள் அவனது கண்மணி? வேகமாகச் சென்று அவளை அப்படியே பூவைப்போல அள்ளினான்.

விழிகள் வெளியே தெறித்துவிடுமோ என்கிற அளவில் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் அவள். அந்தச் சாரதி தூக்கியிருந்தால் கூட அதிர்ந்திருக்க மாட்டாள். நிர்மலன்.. அவன் நிர்மலன்.. அவளைத் தூக்கியிருக்கிறான்.

விழிகள் நான்கும் நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ள, இருவராலும் பிரிக்க முடியாமல் போயிற்று! மெல்ல அப்படியே சீட்டில் அவளை அமர்த்தினான்.

“இரு வாறன்!” என்றுவிட்டு, இறங்கிச் சென்று அவளது நாற்காலியையும் பின்னால் தூக்கி வைத்துவிட்டு வந்து அவளருகிலேயே அமர்ந்துகொண்டான்.

எப்போதுமே முழு நீட்டுப் பாவாடை அணிந்துதான் பார்த்திருக்கிறான். அத்தனை அதிகாலையில் அவன் வருவதில்லை என்பதாலோ என்னவோ அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அதைத் தாண்டித் தெரிந்த கால் சூம்பி முடிந்திருந்தது. விழிகளில் நீர் கோர்த்துவிட்டது அவனுக்கு.

கைகள் நடுங்க முழங்காலுக்குக் கீழ் பகுதியை மெல்லத் தடவிக்கொடுத்தான். அதிர்ந்து அவள் திரும்ப, அவனால் பேச இயலவில்லை.

ஆண் என்பதையும் மறந்து கதறிவிடுவான் போலிருந்தான். அதுநாள் வரை நடமாடித்திரிந்த காலை திடீரென்று இழப்பது என்றால் எப்படி இருக்கும். அவனது கால்கள் நடுங்கின. அந்தக் கசப்பான நிஜத்தை உள்வாங்கிக்கொள்ள மனதளவில் எவ்வளவு போராடியிருப்பாள்? காலை இழந்தகணம் எப்படி இருந்திருக்கும்? காயம்பட்ட வலி ஒரு பக்கம், கால் இனி இல்லை என்கிற நிஜம் மறுபக்கமாய்த் துடித்திருப்பாளே!

அவளின் எந்தத் துன்பத்தின்போதும் அவளருகில் அவன் இல்லை. விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான்.

வாகனம் அவர்களின் ஊருக்குள் நுழையும்போதே கண்மணியின் தேகம் நடுங்கத் துவங்கியிருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு அவள் இந்தப் பக்கம் வரவேயில்லை. பயம்.. தன்னால் அதையெல்லாம் தாங்க முடியாது என்கிற நடுக்கம்.

அந்த ஊர், அங்கே நண்பிகளோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை, அந்தத் தெரு, அதிலே அவனது வீடு, அவன் மீது கொண்ட காதல், அந்த வீதியில் ஒருவரை மற்றவர் கடக்கையில் பரிமாறிக்கொள்ளும் பார்வை.. ஐயோ ஐயோ என்று நெஞ்சு தகித்தது. எல்லாம் போச்சு.. அந்த நாட்கள் எல்லாம் போயே போச்சு.. இழப்பின் அளவு படு பயங்கரமாக அவளைத் தாக்க, உதடு நடுங்க அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அதுவரை தன் மனப்போராட்டத்தில் இருந்தவன் திரும்பிப் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து, விழிகள் குளமாகியிருக்க, நடுங்கும் உதட்டைப் பற்களால் பற்றியபடி, வெளிப்புறத்தை வெறித்தவளின் நிலையை அப்போதுதான் வலியோடு உள்வாங்கினான்.

“ஒண்டுமில்லம்மா..” தன் மற்றக் கையால் அவள் கரத்தைப் பொத்திக்கொண்டான்.

அவனது வீடு.. அதன் முன்னே நின்ற அந்தக் கொண்டல் மரம்.. அதிலே அவர்கள் தங்களது கடிதங்களை மறைத்து வைத்து எடுக்கும் இடம்.. அதைக் கண்டபோது அவளையும் மீறி விசித்துவிட்டவளை நெஞ்சில் துயரோடு தன் மீது சாய்த்துக்கொண்டான் நிர்மலன். மறுக்கக் கூட முடியாமல் சரிந்து விம்மினாள் அவள். அவனது விழிகளில் இருந்து வீழ்ந்த கண்ணீர் துளிகள் அவள் தலைமீது விழுந்து சிதறிப்போயின; அவர்களின் காதலைப் போலவே!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock