சாலையில் பார்வையைப் பதித்து சைக்கிளில் வந்த வதனி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து பார்வையை உயர்த்தினாள். இளாவை கண்டதும், கண்கள் ஒளிர அவனையே பார்த்தபடி சைக்கிளை மிதித்தாள்.
அவள் அவனைக் கடக்கவும், இளாவும் அவளைப் பின்தொடர்ந்தான். அவன் பின்னால் வருவது தெரிந்தபோதும் அமைதியாகவே முன்னே சென்றாள் வதனி. காரணம் அவளின் சைக்கிளின் பின்னுக்கு கலைமகள் அமர்ந்திருந்தார். கூர்மையுடன் எதையும் கவனிக்கும் அவருக்கும், காலுக்கு மருந்து கட்டியதில் கிளம்பிய வலி, வீதியில் நடந்த பார்வைப் பரிமாற்றத்தை கவனிக்கவிடாமல் செய்தது.
வதனி தனது வீட்டுக்குள் சென்றபிறகும் அவளின் வீட்டுக்கு சற்றுத் தள்ளி நின்றுகொண்டு இருந்தான் இளா. எதற்காக நிற்கிறோம் என்பதை அறியாமலேயே நின்றவனின் மனதில், எதோ ஒரு பட்சி சொன்னது அவள் வருவாள் என்று.
அவனின் காத்திருப்பைப் பொய்யாக்காமல் வந்த வதனி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பூந்தோட்டத்துக்கு செல்லும் திசைக்கு எதிர் திசையில் சைக்கிளை ஓட்டினாள்.
பின்தொடர்ந்து வரும் அவனை கண்டபோது அவளின் இதயம் மட்டுமல்ல உடலின் அத்தனை பாகமும் நடுங்கியது. ஏதோ ஒரு உத்வேகத்தில், அவன் காத்திருக்கிறான் என்கிற தவிப்பில், தெரு முனையில் இருக்கும் கடைக்கு சென்றுவருவதாக தாயிடம் சொல்லிவிட்டு வந்தவளுக்கு இப்போது பதட்டம் தொற்றிக்கொண்டது.
பொட்டு வைத்த அந்த நிமிடமே அவன் அவளுக்கானவன் என்பது வதனிக்கு ஊர்ஜிதமாகி இருந்தது. ஆனாலும் சம்மதம் சொல்வதா வேண்டாமா என்கிற கேள்வி தோன்றிக்கொண்டே இருந்தது.
அவன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டதும் மனதில் இருந்த அந்தக் கேள்வியும் காணாமல் போனது.
அவர்களின் தெருவில் சற்றுத் தள்ளியிருந்த நேசரி குழந்தைகளுக்கான பூங்காவினுள் சைக்கிளை விட்டவள், அங்கிருந்த மரத்தின் கீழ் அதனை நிறுத்திவிட்டு அந்த மரத்தை அண்டி நின்றுகொண்டாள்.
இளாவும் சைக்கிளை நிறுத்திவிட்டு அவளை நோக்கி வரவும், பதட்டம் இன்னும் பற்றிக்கொள்ள தலையை குனிந்துகொண்டாள் வதனி.
“ஏன் இன்று வாணியிலிருந்து நேரத்திற்கே வந்துவிட்டாய்?”
“அப்பாவுக்கு ஏதோ வேலை வந்துவிட்டதாம். அதனால் அம்மாவின் காலுக்கு மருந்து கட்ட நான்தான் கூட்டிச்செல்ல வேண்டும். அதனால்தான் நேரத்தோடு வந்துவிட்டேன்.” என்றாள் முணுமுணுப்பாக.
“ஓ….” என்றவன்,
“பிறகு?” என்றான் கேள்வியாக.
எதுவுமே சொல்லாது தலையைக் குனிந்து கைகளை பிசைந்தபடி நின்றாள் அவள்.
“வனிக்குட்டி, பதிலைச் சொல்லேன்…..” ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்தது அவன் குரல்.
“என்னைக் குட்டி என்று கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேனா இல்லையா. பிறகும் எதற்காக திரும்பத் திரும்ப கூப்பிடுகிறீர்கள்?” என்று தலையை நிமிர்த்தி அதட்டலாகக் கேட்டவளால் அவனிடமிருந்து பார்வையை அகற்றமுடியாமல் போனது.
விழிகளில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் குடியேற்றி, அதனோடு காதலையும் கலந்து அவளை வசியம் செய்தான் அவன். தன் விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியாமல் தவித்தாள் வதனி. முகம் நாணத்தில் முத்துக்குளிக்க மறுபடியும் தலையைக் குனிந்துகொள்ள போனவளுக்கு அதுவும் முடியாமல் போனது.
அவளின் முகத்தை குனியவிடாது ஏந்தி இருந்தது அவனின் கைகள்.
“சொல்லேன்டா, சம்மதமா….” என்றவனுக்கு நாணத்தையே பதிலாகக் கொடுத்தவளின் முகச்சிவப்பு பதிலைச் சொன்னபோதும் எதிர்பார்ப்புடன் இப்போது தவிப்பும் சேர்ந்துகொள்ள,
“சம்மதம்தானே……” என்றான் மனதின் மொத்த எதிர்பார்ப்பையும் குரலில் தேக்கி.
அவளின் தலை ஆமென்பதாக அசைய, “உண்மையாவா???” என்று நம்பாமல் கேட்டவனின் கண்களில் தெரிந்த ஆனந்தம் சொல்லில் அடங்காதது.
அவனின் சந்தோசம் அவளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உண்மையாகவா சொல்கிறாய்??”
“ம்..ம்…”
“சம்மதம் தானே…?”
தலையை மேலும் கீழும் சம்மதமாக அசைத்தாள்.
“சும்மா சொல்லவில்லையே…?”
செல்லமாக அவனை முறைத்தாள். அந்த பார்வை ‘சும்மா சொல்வேனா?’ என்று கேட்டது.
“சத்தியமாக…?”
இதமான புன்னகையை சிந்தினாள்.
நிஜம்தானே…?”
பொறுமை பறந்தது வதனிக்கு!
எத்தனை முறை சம்மதம் சொன்னாலும் திருப்தி கொள்ளாது திரும்பத் திரும்ப கேட்கிறானே என்று அவனை முறைத்தாள் இப்போது.
அவளின் முறைப்பு அவனுக்கு விளங்க அவன் இந்த உலகத்தில் இருக்கவேண்டுமே. அவனோ, அவனுக்கும் அவளுக்குமான உலகில் சிறகில்லாமல் பறந்துகொண்டிருந்தான்.
“பிள்ளையாரின் மேல் சத்தியமாக சொல் சம்மதமா…” என்று மறுபடியும் ஆரம்பித்தான்.
‘இவனை என்ன செய்யலாம்’ என்பதாக பார்த்தவளின் கண்களில் அவனின் சைக்கில் படவே அதை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டாள்.
அவளின் செய்கையின் அர்த்தம் புரியாமல் திகைத்து விழித்தவனிடம், “இனியும் சம்மதமா கிம்மதமா என்று கேட்டால் குரல் வளையை கடித்து பேசமுடியாமல் செய்துவிடுவேன்!” என்றாள் கடுப்புடன்.
ஒரு நொடி திகைத்த இளா அகமும் முகமும் மலர வாய் விட்டு சிரித்தான்.
அவனின் மனதில் விழுந்த காதலின் விதை அவளின் மனதில் செடியாக செழித்திருக்கிறதே இதுதான் காதலின் அற்புதமோ!
மனதின் இறுக்கங்கள் அனைத்தும் பனியென விலக, கண்கள் மலர, முகம் விகசிக்க, புதிதாய் பிறந்த காதலும் மெருகூட்ட மனம் விட்டு சிரித்தவனை பார்த்த வதனிக்கு, ஒரு ஆணின் முகம் சிரிக்கும்போது இவ்வளவு களையாக இருக்குமா என்று தோன்றியது. தன் மனதில் காதல் விதைத்தவனை, கண்களில் நேசம் பொங்கப் பார்த்தாள்.
வதனியின் பார்வையை உணர்ந்துகொண்டவன் கண்களில் காதலும் சந்தோசமும் போட்டி போட அவளை நெருங்கி,அவளின் இடையில் கைகளை கோர்த்து தன்னோடு இறுக்கி அப்படியே தூக்கியவன், “மிகவும் சந்தோசமாக இருக்கிறது வனி.” என்றபடி நின்ற இடத்திலேயே சுழன்றான்.
அவன் சுற்றவும் அவளுக்கு பயமும் வெட்கமும் சேர்ந்துகொள்ளவே “ஹையோ… என்னை விடுங்கள். இறக்கிவிடுங்கள். யாராவது பார்க்கப் போகிறார்கள். விடுங்க…” என்று கத்தியது அவன் செவியில் விழவே இல்லை.
“எனக்கு எவ்வளவு நிறைவாக இருக்கு தெரியுமா. இந்த நிமிடம் இந்த உலகிலேயே மகிழ்ச்சியானவன் நான்தான்…” என்றவனை பார்க்கும்போது வதனிக்கும் மனம் நிறைந்திருந்தது.


