நேசம் கொண்ட நெஞ்சமிது 10 – 2

சுற்றுவதை அவன் நிறுத்த மறந்ததில் அவளுக்கு தலையை சுற்றியது. அவளை அறியாமலே அவனின் கழுத்தை தன் கைகளால் இறுக்கி வளைத்தவள், அவனின் மார்பில் தலையை சாய்த்தாள்.

நெஞ்சமதில் தங்கியவள் தஞ்சம் நீயே என்பதாய் தன் நெஞ்சினில் சாய்ந்ததை உணர்ந்தவனின் மனதில் சொல்லில் அடங்கா பரவசம். சுழல்வதை நிறுத்திவிட்டு காதல் வழியும் கண்களால் தன்னவளின் மதிமுகத்தை மெய்மறந்து பார்த்திருந்தான்.

மஞ்சமாய் மாறிய அவனின் நெஞ்சினில் சாய்ந்தவளோ எழுந்திருக்க மறந்துபோனாள். காலம் காலமாய் அதுதான் அவளிடமாக இருந்து வந்ததுபோலும், அறிந்துகொண்டவளுக்கு பிரிந்துவர விருப்பத்தை காணோம்!

இருட்டிவிட்டதை உணர்ந்து, அவளின் பஞ்சுமிட்டாய் கன்னத்தில் தன்னுடைய உதடுகளை மெல்லப் பொருத்தி, அவளை எழுப்ப நினைத்தான் இளா.

அவனின் அடர்ந்தமீசை அவளை இம்சை செய்யவும், “ம்ம்.. ம்ம்..ம்… சும்மா இருங்கள்….” என்று சிணுங்கினாள்.

அவளின் சிணுங்கள் அவனை சுக்கு நூறாகத் துண்டாட தன் உணர்வுகளை அடக்க முடியாமல், “இப்படியே சிணுங்கியபடி இருந்தாயானால் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாதுடா…” என்று அவளின் காதருகில் தாபத்துடன் கரகரத்தவனின் உதடுகள், அவளின் செவியோடு உறவாடியது.

வாகாக அவனின் மார்பினில் இன்னும் புதைந்து கொண்டவள் எதற்கு தன்னைக் கட்டுபடுத்த முடியாது என்கிறான் என்று யோசிக்க, அவனின் உதடுகளும் கிறங்கிய குரலும் விஷயத்தை விளக்கவே, “என்னது???” என்றபடி அவனைத் தள்ளிவிட்டாள்.

அவளின் செயலில் பெரிதாக சிரித்தவன், “போவோமா நேரமாகிவிட்டதே..” எனவும்தான் அவளுக்கு சுற்றுப்புறம் கண்ணில் பட்டது.

“அச்சச்சோ…. எவ்வளவு இருட்டிவிட்டது. அம்மா தேடப்போகிறார்கள். எல்லாம் உங்களால் வந்தது….” என்றவளை மறுபடியும் தன் கைகளுக்குள் கொண்டுவந்தவன்,

“ஆமாம். என்னால்தான் வந்தது. நான்தான் என் நெஞ்சில் வாகாய் சாய்ந்து சுகம் கண்டது. அதனால் நீ சொல்வது மிகவும் சரிதான்.”என்றான் கேலியாக.

சிவந்த முகத்தை மறைத்த இருளுக்கு மனதில் நன்றியை சொல்லியபடி, “வளவளக்காமல் வாருங்கள் போவோம்.” என்றாள் பொய் மிரட்டலாக.

அவளை புரிந்துகொண்டவனுக்கு ஆனந்தமாக இருந்தது. எப்போது இறுக்கமாக இருக்கும் தானா இப்படி காதலில் திளைக்கிறோம் என்று புதினமாகக்கூட இருந்தது அவனுக்கு.

“நாளை வாணிக்கு வருவாய் தானே…”

ஆமென்றவள் தன்னுடைய சைக்கிளை எடுக்கவும், “உனக்கு கோபம் கொஞ்சம் கூடுதலாகவே வருகிறது வனி. என்னுடைய சம்பாத்தியத்தில் நான் முதன் முதலாக வாங்கிய என் சொத்தை தள்ளிவிட்டு விட்டாயே…” என்றான் இளா.

விழுந்துகிடந்த அவனின் சைக்கிளைப் பார்க்கவும் அவளுக்கு சிரிப்பு பீறிட்டது.

“பின்னே, மறை கழண்டவர் போல திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டால் நானும் எத்தனை தடவைதான் பதில் சொல்வது. அதுதான் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தேன்.” என்றாள் சிரித்தபடி.

மனதில் பூத்த காதலை பரிமாறிக்கொண்ட மகிழ்வோடு கதைத்துக்கொண்டே இருவரும் சைக்கிளை மிதித்தனர்.

அவளின் வீடு வரவும் பிரிந்துசெல்ல மனமே இல்லாது, “வருகிறேன்” என்றாள் மெல்ல.

சரியென தலை அசைத்தவன் அவள் வீட்டுக்குள் சென்றதும் மனமின்றி தன் வீடு நோக்கி சென்றான்.

இருவரும் தங்கள் தங்கள் வீட்டில் இருந்தபோதும் இருவரின் மனங்களும் இணைந்தே இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் அவன் மனதில் அவளும், அவள் மனதில் அவனும் இருந்தனர்.

இனிய கனவுகளின் துணையுடன் அன்றைய இரவினை கடத்தியவர்களுக்கு, விடிந்ததும் மாலை எப்போதடா வரும் என்றிருந்தது.

நகரமாட்டேன் என்று அடம்பிடித்த காலைப் பொழுதினை பெரும் சிரமப்பட்டு நகர்த்திய வதனி, மூன்று மணி என்றவுடனே வாணிநிலையத்துக்குச் செல்வதற்கு தயாரானாள்.

அங்கே சென்றவளுக்கு எப்போதையும் விட இன்று மிகவும் பிடித்தது வாணியை. அவளின் மனதைப் பறித்துக்கொண்டவனை முதன்முதலில் கண்டது இங்குதானே. இப்போது யோசிக்கையில் பல விஷயங்கள் புரிந்தது.

முதலில் அவனின் பார்வையை சந்தித்தபோதே தான் தடுமாறி இருக்கிறோம் என்பது புரிந்தது. சொல்லாமல் கொள்ளாமல் அவன் தன் மனதுக்குள் புகுந்திருக்கிறான் என்பது புரிந்தது. இதயம் எப்படி தன்னுடைய இணையை கண்டு பிடிக்கிறது என்று அதிசயமாக இருந்தது.

அவனுக்குப் பிடித்த அவளுக்கு, எப்படி அவனை பிடித்தது. இதுதான் காதலோ?

‘விட்டால் காதலை பற்றி ஆராய்ச்சியே செய்வேன்…’ என்று தன்னை நினைத்து சிரித்தவள் தமிழ்வாணியை காணச்சென்றாள்.

அங்கு வந்த கோபாலன், “உனக்கு எப்போது முத்தியது?” என்று கேட்க எதுவும் புரியாது விழித்தாள் வதனி.

அவள் விழிகள் கேள்வியாய் அவனை நோக்கவும், “தனியே நின்றபடி சிரித்தாய். அதுதான் தெளிவு படுத்திக்கொள்ள கேட்டேன்…” என்றவனை முறைக்க நினைத்தும் மனதின் மகிழ்ச்சி கலகலத்து சிரிக்க வைத்தது.

“நான் நினைத்தது சரிதான். உனக்கு மேல்மாடியில் ஏதோ பிரச்சினை.” என்றவன்,

“என்ன விஷயம் என்று சொன்னால் நானும் சந்தோசப்படுவேனே..” என்றான் தொடர்ந்து.

அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தைக் கேட்கிறான் என்று புரிந்தது வதனிக்கு. அதை சொல்லவா முடியும்.

எனவே “அதுவா கொக்கோகோ….பாலன் அண்ணா. துன்பத்தின் போது சிரிக்கவேண்டும் என்பார்களே. அதுதான் சிரித்தேன்…” என்றாள்.

அவளை நம்பாமல் பார்த்தவன், “உனக்கு ஒரு துன்பமா? உன்னால் தானே மற்றவர் துன்பப்படுவார்கள்…” என்று சந்தேகமாக கேட்டபோதும்,

“என்னம்மா ஏதும் பிரச்சினையா?” என்றான் பரிவாக.

முகத்தை மிகவும் தீவிரமாக வைத்தவள், “உங்களால் என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லமுடியுமா அண்ணா?” என்று கேட்டாள் சோகமாக.

“என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன். முதலில் என்ன பிரச்சினை என்று சொல்?” என பாசமாக கேட்டவனிடம்,

“எலிசபெத் மகாராணி என்னுடைய இந்தப் பாவாடையை தரச்சொல்லி ஒற்றைக் காலில் நிற்கிறார்.” என்று தான் அணிந்திருந்த ஆகாய நீலநிற பாவாடையை காட்டியவள்,

“அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். நான் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன். ஆனாலும் இந்தப் பாவாடை இல்லாமல் லண்டன் திரும்ப மாட்டேன் என்று பூந்தோட்ட சந்தியில் உண்ணாவிரதம் இருக்கிறார் அண்ணா…” என்றாள் சிரிப்பை அடக்க முயன்றும் முடியாத குரலில்.

அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு கொலை வெறியே வந்தது.

“எது? இந்த நாசமாப்போன பாவடைக்கு எலிசபெத்மகாராணி உண்ணாவிரதம் இருக்கிறார்? அதுவும் பூந்தோட்ட சந்தியில்? உனக்கு அதை கொடுக்க மனம் இல்லை?” கடுப்பாக கேட்டவன்,

“இங்கு ஏதாவது கொட்டான் இருக்கிறதா பார். உன்னை நன்கு சாத்தினால் தான் சரியாக வருவாய்.” என்றான் பொய்க் கோபமாக.

“அண்ணா கோபத்தில் கூட நீங்க அழகில்லையே. இதன் ரகசியம் என்ன?” என்றவள், அவனின் முறைப்பில் சிரிப்பை அடக்க முடியாது சிரித்தபடி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

மாலை ஐந்து முப்பதுக்கு தொடங்கும் வகுப்புக்கு ஐந்து மணிக்கே வாணிநிலையத்துக்கு வந்துவிட்டான் இளா. தன் உயிரினில் உயிராய் கலந்தவளை காணும் ஆவல் அவனின் முகத்தில் நிறைந்திருந்தது.

அவன் வந்ததை தானிருக்கும் வகுப்பில் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் வதனி. அவனின் ஆவல் நிறைந்த முகம், அவனின் கூரிய விழிகள் வாணியை வலம் வந்த வேகம் அனைத்தும் அவனின் தேடலைச் சொல்லியபோதும், வெளியில் சொல்ல முடியா ஒரு கூச்சம் அல்லது வெட்கம் அவளை சூழ்ந்துகொண்டது.

அவனை ஆசை தீர பார்த்துக்கொண்டவளுக்கு இப்போதுதான் அவனின் கம்பீரம் இன்னும் அழகாக தெரிந்தது. பனைமரத்து உயரம். நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் கம்பீர நடை. கண் முதல் உதடுவரை அழுத்தக்காரன் என்று சொன்னபோதும், நான் பாசக்காரனும் கூட என்று சொல்லும் கண்களின் சிரிப்பு. அவளுக்கு இன்னும் இன்னும் அவனை பிடித்தது.

அதுவும் அவனின் பரந்துவிரித்த தோள்களை பார்த்தவளுக்கு ஓடிப்போய் அதில் தஞ்சமாக மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

‘எவ்வளவு அதிரடியாக நடந்துகொள்கிறான்…’ என்றவளுக்கு யோசனை ஓடியது.

‘என்னை பார்க்கத்தான் நேரத்திற்கு வந்தான் என்றால் பார்ப்போம் இப்போது என்ன செய்து என்னைப் பார்கிறான் என்று. நான் வெளியில் செல்லப் போவதில்லை…’ என்று நினைத்தவளுக்கு இதழில் எழிலாய் அழகிய புன்னகை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock