அவன் நகராமல் இருக்கவே கேள்வியாகப் பார்த்தாள். அவளையும் அவளின் கையையும் குறும்போடு அவன் மாறிமாறிப் பார்க்க, விடயம் புரிந்து வெட்கத்துடன் கையை பிரித்தவளின் கையை தன் கையால் அழுத்திவிட்டு வெளியே சென்றான்.
அவன் சென்ற பின்னாலும் அவளின் வெட்கம் அவளை விட்டுச் சென்றபாடில்லை. எப்படி உணராமல் போனேன்… என்று தோன்றியது. அவளின் வெட்கம் கூட அவளுக்கு பிடித்திருந்தது.
வகுப்பு முடிந்து வீடு சென்ற வதனி மணி ஆறு பதினைந்து ஆனதும், “அம்மா, நித்தி வீட்டுக்குபோய் விளக்கு வைத்துவிட்டு வருகிறேன்…” என்றபடி புறப்பட்டாள்.
அம்மா அப்பாவிற்கு தெரியாமல் தவறு செய்கிறோமே என்று மனம் வலித்தது. ஆனாலும் காதல் கொண்ட மனம் அவனின் அருகாமையை விரும்பியது.
தன்னுடைய பெற்றவர்கள் அவளின் ஆசையை மறுக்க மாட்டார்கள் என்கிற பெரிய நம்பிக்கையும், இந்த வயதில் காதல் தேவையா என்று கேட்டுவிட்டால் என்ன சொல்வது… எனக்கு காதல் வந்துவிட்டதே என்றா… அதனால் இப்போது சொல்லாமல் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்கிற எண்ணமும்தான் அவளை அவர்களிடம் தன் காதலை சொல்லாமல் தடுத்தது.
எப்படியும் அம்மா அப்பாவிடம் சொல்லுவேன் தானே என்று தன் மனதை சமாதானம் செய்தவள் அவனின் வரவை எதிர்பார்த்து மெதுவாக சைக்கிளை மிதித்தாள்.
சற்று தூரம் சென்றவுடன் அவன் வருவதை கண்டவள் ஆர்வமாக திரும்பி பார்க்கவே, “நீ முன்னுக்குப் போ வனி. என்னை திரும்பி பார்க்கவேண்டாம்….” என்றபடி அவளை முந்திக்கொண்டு சென்றான். சிறிது தூரத்தில் அவனை முந்திசென்றவள் நித்தியின் வீட்டிற்குள் சைக்கிளை கொண்டுபோய் நிறுத்தினாள்.
சுவாமிக்கு வைப்பதற்காக நித்தியின் வீட்டு முற்றத்தில் பூத்திருந்த மல்லிகையை அவள் பறித்துக்கொண்டு இருக்கும்போது உள்ளே வந்தான் இளா.
“சுவாமிக்கு வைக்கவா…?” என்று கேட்டபடி அவளுடன் சேர்ந்து தானும் பூக்களை பறித்தான்.
மல்லிகைகளை பறிக்கிறேன் என்கிற பெயரில், அவளின் கையினை பிடிப்பதும் அவள் முறைத்துப் பார்த்தால் அடுத்த மல்லிகையை பறிப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தான்.
முறைத்து முறைத்துப் பார்த்தவள் அடுத்த தடவை தன் கை மீது அவன் கையை வைக்கவும் பிடித்துக் கிள்ளிவிட்டாள்.
“அம்மா….” என்றபடி கையை உதறினான் இளவழகன்.
“ராட்சசி! இப்படி கிள்ளுவாயா?” என்றவனை பார்த்து ஒற்றைப் புருவத்தினைத் தூக்கி எப்படி என்பதாக கண்களாலேயே கேட்டாள்.
“உன்னை…”
வாயில் விரல் வைத்து, “ஸ்ஸ்ஸ்…” என்றவள் சுவாமி அறைக்குள் நுழைந்தாள். அவளின் பின்னால் பூனைக்குட்டி போல சென்றான் இளா.
பூக்களை சுவாமிக்கு வைத்து விளக்கினை ஏற்றி அவள் சுவாமி கும்பிடும் அழகை ரசித்தவனை, ‘சுவாமியை கும்பிடுங்கள்’ என்பதாக கண்களால் ஆணையிட்டாள்.
‘தெரியாத்தனமா காதலிச்சு, இப்போ அவ கண்ணால் சொல்வதை எல்லாம் செய்ற நிலைக்கு வந்திட்டியே இளா’ என்று மனம் கேலி செய்த போதும் வெகு சிரத்தையாக கண்மூடி கைகளைக் கூப்பினான்.
அவன் மனதோ இதை தங்கள் வீடாகவும் அவனும் அவளும் கணவன் மனைவியாகவும் ஒன்றாக சுவாமி கும்பிடுவதாய் கற்பனை செய்யவும், ‘ஆண்டவா…அந்தக் கொடுப்பினையை எங்களுக்கு கொடு’ என்று மனமுருகி வேண்டிக்கொண்டான்.
கண்களை திறந்தவனுக்கு இமைக்குடையினை மூடி கைகளைக் கூப்பி கடவுளை வணங்கும் அழகு அப்படியே மனதை அள்ளியது. அவளிடம் தெரிந்த அந்த தெய்வீகமான அழகு கல்வெட்டாய் அவன் மனதில் அச்சானது.
கண்களைத் திறந்தவள் தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனை, “என்ன?” என்பதாக ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
‘ஒரு புருவ அசைவிலேயே உயிரை அசைக்கிறாளே’ என்று மனதில் நினைத்தவன் ஒன்றுமில்லை என்பதாய் தலையை அசைத்தான்.
அவனை சந்தேகமாக பார்த்தவள் திருநீறு சந்தன தட்டை எடுத்து அவன் முன்பாக நீட்டினாள். அவளின் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டபடி தட்டிலே இருந்த திருநீறு சந்தனனத்தை அவளின் நெற்றியிலே இட்டான் இளா.
செவ்வானத்தின் நிறம் கொண்ட அவளின் முகம் மலர்ந்து விகசித்தது. கண்கள் சற்றே கலங்கிய போதும் அழகாய் சிரித்தது. அவளின் மலர்ந்த முகம் பார்த்து அவனின் முகமும் மலர்ந்தது.
வதனியின் கைகளில் இருந்த தட்டினை வாங்கி, சுவாமித்தட்டில் அவன் வைக்கவும், “நீங்கள் பூசிக்கொள்ளவில்லையா?” என்று கேட்டவளை நெருங்கினான். அவளின் முகத்தினை இரு கைகளிலும் ஏந்தியவன், அவளின் பிறை நெற்றியில் தன்னுடைய நெற்றியினை ஒட்டிக்கொண்டான்.
விரிந்த விழிகளால் அவனை பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவளின் நெற்றியில் முட்டிவிட்டு அவன் தன்னுடைய நெற்றியை பிரிக்கவும், அவனின் நெற்றியிலும் திருநீறு சந்தனம் அழகாய் வீற்றிருந்தது. அதை பார்த்தவளுக்கு மனமும் உடலும் நெகிழ்ந்தது.
மனதின் நெகிழ்வு உடலின் அதிர்வு எல்லாம் சேர்ந்து அவளின் உடல் நடுங்கவும், நிற்கமுடியாமல் அவனின் மார்பில் சாய்ந்தாள்.
மார்போடு சாய்ந்தவளை அன்போடு அணைத்துக்கொண்டான் இளவழகன். இருவரின் மனமும் நிறைந்துகிடந்தது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ தெரியாது, இப்போதும் இளாவே வதனியின் நெற்றியில் தன்னுடைய உதடுகளை பொருத்தினான்.
அப்போதும் அசையாதவளைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது. அவனின் உடல் சிரிப்பில் குலுங்கவும், அவனின் இடுப்பு பகுதியில் கிள்ளினாள் வதனி.
வலியில் அவன் துள்ளி விலகவும் வெள்ளிச்சலங்கையாய் சிரித்தபடி சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள் அவள்.


