“உத்தரவு மகாராணி!” என்று கேலியாகச் சொன்னபோதும்,
“இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது உனக்கு மட்டுமே சொந்தமான இடம்.” என்றவன் தொடர்ந்து,
“அதுமட்டுமல்ல வது. என்றுமே நானும் உனக்கானவன்தான்!” என்றான் உறுதியாக.
அப்போதுதான் கவனித்தவளாய், “அது என்ன வது?” என்று கேட்டாள்.
கண்களில் குறும்பு மின்ன, “இதழ் மதுவை கொடுத்தவள் என் வது!” என்றான் மயக்கத்துடன்.
இதுவரை அவனுடன் ஒட்டிக்கொண்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு, “நீங்கள் மிகவும் மோசம்!” என்றாள் சிவந்த முகத்தை மறைக்க முயன்றபடி.
வாய்விட்டு பெரிதாக நகைத்தவன், அவளின் தலையில் வலிக்காது குட்டி, “வதனிக்குள் ஒரு ‘வது’வை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்றான் சந்தோசமாக.
“நீ என்ன கண்டுபிடித்தாய்?” என்று அவன் கேட்க,
“கண்டை பிடிக்கவில்லை. ஒரு மாட்டினை பிடித்திருக்கிறேன்” என்றாள் சிரித்துக்கொண்டே.
“என்னை பார்த்தால் மாடு மாதிரி தெரிகிறதோ…” செல்லமாய் கோபம் கொண்டு அவளின் செவியை வலிக்காது திருகினான்.
“சொல்லேன் வது. என்னை எப்படி கூப்பிடப்போகிறாய்?” என்றான் ஆவலுடன்.
அவளின் கண்களோ அவனை பார்த்து நகைத்தது.
அவளின், “அண்ணா” என்ற அழைப்பை அது நினைவுபடுத்த,
“உதைதான் வேண்டுவாய்….” என்றான் மிரட்டலாக.
சலங்கையின் சங்கீதமாய் சிரிப்பவளை ஆசையுடன் பார்த்துக்கொண்டே, “சொல்லுடா…” என்று ஆவலோடு கேட்டான்.
“நீங்களே சொல்லுங்கள். நான் எப்படிக் கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்கும்?” என்றவளிடம்,
“பெயரைச் சொல்லி கூப்பிடு” என்றான் இளா.
உதட்டை சுழித்து மறுப்பை தெரிவித்தாள்.
அவனின் பார்வை அவளின் இஇதழ்களில் குவியவும், பொத்துக்கொண்டு வந்த சிரிப்புடன், “தொலைத்துவிடுவேன்..” என்றாள் ஒற்றை விரலை நீட்டி மிரட்டி.
சற்றே அசடு வழிந்தவன், “ஒரு நாளைக்கு ஒருமுறை போதும்…” என்றான் தன் தடுமாற்றத்தை மறைத்து.
“கிடைக்கும் கிடைக்கும்! அடிதான் கிடைக்கும்.” என்றவளை பெறாமல் விட்டு விடுவோமாக்கும் என்பாதாய் பதில் பார்வை பார்த்தான் அவன்.
அதை அந்த நேரம் பார்ப்போம் என்று பார்வையிலேயே பதில் சொன்னவள், “எப்படி கூப்பிட சொல்லுங்கள். என் ஆசை அத்தான் என்று கூப்பிடவா…” என்று சிரித்தவளிடம்,
“ஹே வது. அத்தான் என்றே கூப்பிடு. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்றான் அவன்.
தயங்கி நின்றவளை நெருங்கி, “ப்ளீஸ்டா.. அப்படியே கூப்பிடு!” என்றவனின் எதிர்பார்ப்பு அவளை அசைக்க மிக மெதுவாய்,
“அத்தான்!” என்றாள் வெட்கத்துடன்.
அவளை அணைத்து நின்றவனின் உடலில் ஓடிய சிலிர்ப்பு அவளை ஊடுருவி சென்றது. அவனை ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டவன்,
“எப்போதும் நீ அத்தான் என்றுதான் கூப்பிடவேண்டும். என் உயிரை தீண்டும் அழைப்புடா!” என்றான் காதல் பொங்க.
எனக்கும்தான் என்று அவளுக்கும் தோன்றியது. விலக மனமே இல்லாத போதும் வீடு செல்லும் நேரமாகி விட்டதால்,தன்னை மறந்து கண்மூடி அவளில் சாய்ந்து இருந்தவனை பார்த்தவள், “அத்தான் நேரமாகிவிட்டது!” என்றாள் மனமே இன்றி!
அவளின் அழைப்பில் மிக மெதுவாய் கண்களை திறந்தவன் மனமே இன்றி அவளை விட்டான்.
“போவோம் வா” என்றவன்,
“நாளை இன்னும் நேரத்துக்கு இங்கு வந்துவிடலாம்” என்றான் ஆர்வத்துடன்.
அவனை சங்கடமாக பார்த்தாள் வதனி.
அதை உணர்ந்து, “என்னம்மா?” என்றவனின் புரிதலில் மகிழ்ந்தவள்,
“அத்தான், எப்போதும் இப்படி நாம் சந்தித்துகொள்வது நல்லதல்ல. யாராவது பார்த்தால்…” இழுத்தாள் வதனி.
புரிகிறது என்பதாய் தலையை அசைத்தான் அவன்.
“ஆனால் வது, என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாதேடா…” என்றான் பரிதாபமாக.
என்னால் மட்டும் முடியுமா என்று மனதில் தவித்தவள், “வெள்ளியில் கோவிலில் சந்திக்கலாம்தானே அத்தான்.” என்று சொன்னாள்.
“கிழமையில் ஒருநாள் எனக்கு போதாது.” அடம் பிடிக்கும் குழந்தையாய் இருந்தது அவனின் பேச்சு.
அவள் அமைதியாக நிற்கவும், “வது, நித்தி குடும்பம் எப்போது திரும்புகின்றனர்?” என்று கேட்டான்.
“தெரியாது. அத்தைக்கு சுகமாகியவுடன் வருவார்கள்…”
“அப்படியென்றால் அவர்கள் வரும்வரை தானே. அதுவரை இங்கு சந்திக்கலாமே. கருணை காட்டுடா கண்ணம்மா…!” என்றான் அப்பாவியாக.
அவளுக்குமே அவனைப் பார்க்காமல் இருக்க முடியாதுதான். அவன் சொன்னதுபோல மணி மாமா வரும்வரைதானே இந்த சந்திப்பும். எனவே சம்மதமாக தலையை அசைத்தாள்.
அவளின் சம்மதம் கிடைத்தவுடனேயே மகிழ்ச்சியுடன், “கிளம்புவோமா?” என்றவனின் முகம் அவளின் முடிவை ஆதரித்தது.


