நடந்ததை அறிய ஆவல் இருந்தபோதும், மகனின் முகமே அவனின் களைப்பை உணர்த்த, எதுவும் பேசாது உடல் கழுவி வந்தவனுக்கு இரவு உணவை கொடுத்தார் வைதேகி.
உணவு உண்டதும் கேள்வியாக பார்த்த தாயிடம், “மிகவும் நல்ல சம்மந்தம் அம்மா. நம் மாதிக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.” எனவும் வைதேகியின் முகம் மலர்ந்தது.
“உண்மையாவா தம்பி. நன்றாக விசாரித்தாயா?”
“விசாரித்துவிட்டேன் அம்மா. அண்ணாவிடமும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அவரும் விசாரிக்கட்டும். நித்திலன் மிகவும் களையாக இருக்கிறான். மாதிக்கு பொருத்தமானவன்.” என்றான் புன்னகையுடன்.
“பிறகு ஏன் உன் முகம் யோசனையாகவே இருக்கிறது?”
“அவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் திருமணத்தை நாம் நடத்தவேண்டும். அதுதான்.. மாதிக்கு தெரிந்தால் அண்ணாவைக் கஷ்டப்படுத்துகிறேன் என்று கவலைப் படுவாள். அதுதான் அவளை அக்கா வீட்டுக்கு அனுப்பினேன்.”
“என்ன செய்யலாம் தம்பி…” என்றார் வைதேகியும் வழி தெரியாது.
“ஏதாவது செய்யவேண்டும்! வழி கிடைக்காமல் போகாது. நான் பார்த்துக்கொள்கிறேன் எல்லாவற்றையும்.”
“அண்ணாவிடம் கேட்டுப்பாரேன்.” தனக்குத் தெரிந்ததைச் சொன்னார் அவர்.
“இல்லையம்மா. அண்ணா இதுவரை செய்தது போதாதா? அக்காவை படிக்கவைத்து கட்டிக்கொடுத்தார். என்னை படிக்கவைத்தார். எல்லாமே அவர்தானே செய்தார். இதையாவது நான் செய்ய வேண்டாமா? மாதியின் திருமணத்தை நல்ல படியாக நடத்தவேண்டும் என்பது என் கனவு. நிச்சயம் நல்ல படியாக முடிப்பேன்..” என்றவன் தாயின் மடியில் தலை சாய்த்து,
“என் மேல் நம்பிக்கை இல்லையாம்மா…” என்றான் கலங்கிய குரலில்.
மகனின் தலையை ஆதுரத்துடன் தடவியவர், “என்னப்பு இப்படிக் கேட்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப்படாத நாளில்லை. உன் வாழ்க்கை என்று நினைக்காமல் அம்மா தங்கை என்று நினைப்பவன் நீ. உன் மேல் நம்பிக்கை இல்லாமலா? இப்போது நீதான் சிறுபிள்ளை போல் பேசுகிறாய்…..” என்றவர் தொடர்ந்து,
“உனக்கு அண்ணா தோள் கொடுப்பானே என்கிற எண்ணத்தில்தான் சொன்னேன்.. உன்மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை.” என்றார் பாசத்தோடு.
“அண்ணா எப்படியும் செய்வேன் என்றுதான் சொல்வார். ஆனால் அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். எல்லாமே நானே செய்து மாதவியின் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்துவேன் அம்மா….” என்றான் நம்பிக்கையுடன்.
மகனின் தலையை தடவிக்கொடுத்தவரின் மனமோ, “பிள்ளையாரப்பா.. என் பிள்ளைக்கு நல்ல வழியினை காட்டு.” என்று வேண்டியது.
அடுத்தநாள் வேலை முடிந்து வந்தவனை முகம் முழுதும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற வைதேகி, “தம்பி. அண்ணா இன்று லண்டனில் இருந்து என்னுடன் கதைத்தாரடா. மாதியின் விஷயம் சொன்னேன். உன்னுடன் கதைக்கவேண்டும் என்று சொன்னார்.” என்றார்.
வைதேகி சொன்னதின்படி இளா அவனின் மாமா வைத்தியநாதனுக்கு அழைத்தபோது குசலம் விசாரித்தவர், மாதிக்கு நல்ல வரன் அமைந்ததுக்கு சந்தோசப்பட்டவர், அவளின் திருமணத்திற்கான பணத்தை தான் தருவதாக சொன்னவர், தன்னுடைய மகள் ராகவியை நீயே கட்டிக்கொள் என்கிற மறைமுக வற்புறுத்தலையும் சேர்த்துச் சொன்னார்.
கேட்ட இளாவுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
பதில் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. கோபமாக மறுப்பானா அல்லது ரோசம் பொங்க உங்கள் பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தூக்கி எறிவானா? என்ன செய்ய முடியும் அவனால்? எதிரே இருப்பது அன்புத்தங்கையின் திருமணம்.
தன்னுடைய ரோசத்தையோ கோபத்தையோ காட்டும் நேரம் அல்லவே இது. எனவே எதற்கும் பிடிகொடுக்காது யோசித்துச் சொல்வதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தான்.
இதை அறிந்த வைதேகிக்கோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முகம் மலர, “என்ன தம்பி உனக்கு சம்மதமா?” என்றார் ஆர்வம் பொங்க.
“எதற்கு சம்மதமா என்று கேட்கிறீர்கள்?” என்று புரியாமல் கேட்டான்.
“ராகவியை மணந்துகொள்ளத்தான்!”
“என்னது?! அம்மா, முக்கியமான விஷயம் மாதியின் திருமணமே தவிர என்னுடையது அல்ல! அத்துடன் இப்போது நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமிருக்கிறது. எனவே இந்தப் பேச்சு வேண்டாம்.” என்றான் கண்டிப்பான குரலில்.
ஏமாற்றம் நிரம்பிய குரலில், “ஏனப்பு, ராகவி அழகாய்த்தானே இருக்கிறாள்?” என்கிறார் அவர்.
“இப்போது நான் சொன்னேனா ராகவி அழகில்லை என்று. அதைவிட அழகாய் இருக்கும் எல்லோரையும் பிடித்துவிடுமா?” என்றான் கோபம் எட்டிய குரலில்.
“மாமாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?” ஏமாற்றத்தோடு கேட்டார் வைதேகி.
“கடனாகத் தருவதாக இருந்தால் தரட்டும். லண்டன் சென்றாவது உழைத்து திருப்பிக் கொடுக்கிறேன். வேண்டுமானால் வட்டியும் சேர்த்து கொடுக்கிறேன். ஆனால் பணத்தை தந்துவிட்டு பெண்ணைக் கட்டு என்பது சரிவராதும்மா….” என்றான் ரோசம் கோபம் இரண்டுமே நிறைந்த குரலில்.
அடுத்தநாள் இளா வேலைக்குச் சென்றதும் முதல் வேலையாக தன்னுடைய அண்ணனுக்கு அழைத்து, இளா சொன்னதை ஒப்பித்தார் வைதேகி.
அழகான அன்பான பெண்ணான ராகவி தனக்கு மருமகளாக வந்துவிட்டால் அண்ணாவின் சொந்தமும் விட்டுப்போகாது. மாமியார் மருமகள் பிரச்சினையும் வராது. மகனும் சந்தோசமாக வாழ்வான் என்கிற எண்ணம் வைதேகியை அவரின் அண்ணாவிடம் அனைத்தையும் சொல்ல வைத்தது. அண்ணனும் தங்கையும் தங்களுக்குள் ஒரு திட்டத்தை தீட்டினர்.
ராகவியை திருமணம் செய்ய மறுத்தால் பணம் தருவாரா? அப்படியே பணம் தந்தாலும் அந்தக் கடனை எப்படி அடைப்பது? லட்சக் கணக்கில் கடனை பெற்றுவிட்டு ஆயிரக்கணக்கில் சம்பளத்தை எடுத்து வீட்டைப் பார்ப்பானா அல்லது கடனை அடைப்பானா? விருப்பம் இல்லாவிட்டாலும் வெளிநாடு செல்லும் நிலை வந்துவிடுமோ?
ஒருவேளை பணம் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது?
அப்படி மறுக்கமாட்டார் என்று தோன்றியது. அந்தளவுக்கு சுயநலம் மிக்கவர் அல்ல மாமா. அந்தக் காலத்து மனிதர். சொந்தத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல நினைக்கிறார் என்பது புரிந்தது. அதில் தவறில்லை. ஆனால்……
இதை எப்படி அவருக்குப் புரிய வைப்பான்? தலையே வெடித்துவிடும் போல் வலித்தது.
எதையும் இப்போதே யோசிக்காது முதலில் மாமாவிடம் என் முடிவைச் சொல்லுவோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை வைத்து மிகுதியை யோசிப்போம் என்று நினைத்துகொண்டான்.
மாலை வீடு சென்றதும் இன்றும் வாணிக்கு வர முடியாது என்று காந்தனிடம் சொல்லிவிட்டவன் தன் மாமாவுக்கு தொலைபேசியில் அழைத்து, கதைத்தான்.
அவரின் மனம் நோகாதபடிக்கு தான் சொல்ல நினைத்ததை சொன்னவனிடம் உற்சாகக்குரலில், “சரி இளா. முதலில் உன் தங்கையின் திருமணத்தை சிறப்பாக முடி. பிறகு இங்கு வா. மிகுதியை பிறகு பார்ப்போம்.” என்றார் சிரித்தபடி.


