அவனின் கேள்வியின் பொருள் புரிய வதனிக்கு சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்ததும் பதில் சொல்ல வாயும் வரவில்லை வார்த்தைகளும் வரவில்லை.
ஆனாலும் நிதானம் தவறக்கூடாது என்கிற பிடிவாதத்துடன், “உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை அத்தான்…”என்றாள் அடைத்த குரலில்.
இளவழகனுக்கு தன் கேள்வியின் அபத்தம் சற்றே புரிந்தபோதும், அவள் திருமணத்திற்கு மறுத்தது மிகுந்த கோபத்தை கொடுத்திருந்தது. நான் சொல்வதை அவள் கேட்கவேண்டும். காரணம் அவள் என் மனைவி என்பதே அவனின் எண்ணம்.
அந்தக் கோபம் மேலே எழுந்ததில் தான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை மறந்தவனாக, “என்ன புரியவில்லை? திருமணத்தில் உனக்கு விருப்பமில்லை என்றால் உன் பொழுது போக்கிற்காகத்தான் நீ என்னுடன் பழகியிருக்கிறாய். அதைத்தான் கேட்டேன்!” விளக்கமாகச் சொல்வதாக நினைத்து அவளின் மனதை தன் வார்த்தைகளாலேயே உடைத்தான் அவன்.
‘பொழுது போக்கிற்காக ஒரு ஆணுடன் பழகும் பெண்ணா நான்? அப்படியா உன் கண்களுக்கு தெரிகிறேன்……..’ மனம் எரிமலையாக கொதித்தது அவளுக்கு.
“அப்படி என் பெற்றோர்கள் என்னை வளர்க்கவில்லை அத்தான். எதையும் யோசித்து பேசுங்கள்.” கோபமாகவே சொன்னாள் வதனியும்.
கண்களிலும் குரலிலும் ஏளனத்தை தேக்கி, “ஓ…. அப்படியென்றால் ஆண்களுடன் கண்டபடி பழக மட்டும்தான் உன் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்தார்களா உனக்கு?” என்றவனின் உதடுகளும் ஏளனமாய் வளைந்தது.
வேதனையில் அகன்ற விழிகளால் அவனை வெறித்தாள் வதனி.
காதல் கொண்டிருந்த நெஞ்சம் முழுவதும் புண்ணாகிப்போனது. கண்களோ எப்போது கண்ணீரைச் சிந்தத் தொடங்கின என்று தெரியாமலேயே கண்ணீரை சிந்திக்கொண்டே இருந்தன. பதில் சொல்ல உதடுகள் துடித்தபோதும் வார்த்தைகள் வர மறுத்தது.
பெரும் கஷ்டப்பட்டு உதடுகளை அசைத்து, “நா…ன்… யாருடன்….” இதை கேட்பதற்குள் அவளுக்கு மூச்சுத் திணறியது.
பாராங்ககல்லை தொண்டையில் வைத்துவிட்டு பேசச்சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வதனியின் நிலை.
ஆனாலும் அவள் கேட்க நினைப்பதை புரிந்துகொண்டான் அவன்.
“என்னுடன் பழகவில்லை நீ…..?” அவனிடமிருந்து உக்கிரமாக பாய்ந்த வார்த்தைகள் அவளின் சிறு இதயத்தை முழுதாக தாக்கியது.
விக்கித்து நின்றாள் வதனி. காதலில், கணவன் ஆகபோகிறான் என்கிற உணர்வில், என்னவன் என்கிற உரிமையில், காதல் கொண்ட மனம் அவனின் தோள் சாய்ந்ததை எவ்வளவு கேவலமாக சொல்லிவிட்டான்.
“அது… நீங்க…ள் நா…ன் உங்கள்…..” முடியவில்லை அவளால்.
பெரிய கண்கள் இன்னும் பெரிதாக விரிந்து கண்ணீரை அடக்கப்பார்த்து தோற்றது. விடைத்த மூக்கு சுவாசிக்க முடியாமல் தவித்தது. இடை விடாது பேசிப்பழகிய உதடுகள் பேச்சை மறந்து மனதை விளக்கும் விதம் தெரியாமல் கிடந்தது துடித்தது.
இந்தப் பதினெட்டு வருட வாழ்வில் அவள் அறிந்தவை அனைத்தும் மகிழ்ச்சி, சிரிப்பு, சந்தோசம் மட்டுமே. ஆனால் இன்றோ புயலில் சிக்குண்ட பூவாக நிலை தடுமாறி நின்றாள்.
கலங்கிச் சிவந்த விழிகள், ‘நீயா? இப்படியெல்லாம் பேசுவது நீயா?’ என்று அவனிடம் கேட்டன.
அந்தக் கண்களைப் பார்க்கமுடியாத இளவழகன் முகத்தை திருப்பிக்கொண்டான்.
“என்னை நீ காதலித்தது உண்மை என்றால் பதிவுத் திருமணத்திற்கு ஒத்துக்கொள். நான் சொல்வது உனக்கு புரியவில்லையா வது. நம் நல்லதிற்குத்தான் சொல்கிறேன். இல்லையேல் நம் பிரிவு உறுதியாகிவிடும். என்னால் உன்னைப் பிரிந்து வாழமுடியாது. எனக்கு நீ வேண்டும் என் வாழ்வின் இறுதிவரை….” அவனின் குரல் இப்போது சுதி இறங்கி கரகரத்தது.
ஏதோ ஒரு இடத்தில் எதையோ தவறவிடுகிறோம் என்பது புரிந்தபோதும் தன் நிலையில் இருந்து இறங்கத் தயாரில்லை அவன்.
ஆழ மூச்சுக்களை எடுத்துவிட்டவள் பேசும் வகை தெரியாது அமைதியாக இருந்தாள். தன்னைச் சற்றே நிலைப்படுத்திக்கொண்டு கண்களை கைக்குட்டை கொண்டு அழுத்தி துடைத்தாள். அவனுக்கு தன் நிலையை புரியவைக்கும் முகமாக,
“நம் பெற்றோர்களை பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். அவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்கள். உங்கள் அம்மா இதை அறிந்தால் துடித்துவிட மாட்டார்களா? தங்கை இருக்கையில் அண்ணன் திருமணம் செய்வதை யாராவது அறிந்தால் சிரிப்பாக சிரித்துவிடமாட்டார்களா…..” அவனின் வீட்டு நிலையை சொன்னாலாவது அவன் புரிந்துகொள்வான் என்கிற எதிர்பார்ப்பு அவள் குரலில் கொட்டிக்கிடந்தது.
“என் வீட்டில் நான் ஒரே ஒரு மகள் அவர்களுக்கு. என் திருமணம் அது பதிவாக இருந்தாலும் சட்டப்படி அதுதானே திருமணம். அப்படி நடந்ததை அறிந்தால் என்னுடைய அம்மா அப்பா தாங்க மாட்டார்கள். அதற்குத்தான் வேண்டாம் என்கிறேன். உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே.”
தொடர்ந்த அவனின் அமைதியை தனக்கு சாதகமாக்கியவள் இப்போது கரகரத்த குரலில்,
“நான்…. நீங்கள் சொல்வது போன்ற பெண் கிடையாது. நீங்கள் கோவிலில் பொட்டு வைத்த அன்றே என் மனதின் ஆழத்தில் நீங்கள் என்னவர் என்கிற எண்ணம் விழுந்துவிட்டது. நீங்கள் சம்மதம் கேட்டபோது இந்த வயதில் இது தேவையா என்றுதான் யோசித்தேனே தவிர நீங்கள் எனக்கு வேண்டுமா வேண்டாமா என்று நான் யோசிக்கவே இல்லை. அந்த எண்ணம் உங்களை என் மனதிற்கு நெருக்கமானவராக காட்டியதால் தான் உங்களின் அருகாமையை நானும் விரும்பினேன்.


