ஆனால் நீங்கள் சொன்னது போ…ல அந்த மா…திரி பெண் இல்லை…. நான்.” அழுகையில் துடித்த குரலை திடமாக காட்ட முயன்று தோற்றாள்.
அவன் தொடர்ந்தும் அமைதியாக இருக்கவும், “இதுவே உங்கள் தங்கை என்னைப்போல் இருந்து உங்களுக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவரும் நித்திலனுடன் நெருங்கி பழகியிருப்பார் தானே…அதற்காக நித்…”
“ஏய்….! மூடு வாயை! யாரைப்பார்த்து என்ன சொல்கிறாய். தொலைத்துவிடுவேன் ராஸ்கல்! என் தங்கை உன்னைப்போல் தரங்கெட்டவள் இல்லை. அவள் காதலித்தபோதும் என்னிடம் சொல்லிச் சம்மதம் வாங்கியவள். உன்னைப் போல என்னுடன் தனி வீட்டில் சந்திக்க வந்தவள் இல்லை. விட்டால் பேசிக்கொண்டே போகிறாய்…. நீ சொல்வதையும் கேட்போம் என்று பார்த்தால் என் தங்கையையே நீ குத்தி காட்டுகிறாயா….?” அவள் முகத்தருகே நெருங்கி அவன் கர்ஜித்தபோது, நடுநடுங்கிப்போனாள் வதனி.
இப்படியான கொடும் சொற்களோ, கடுமையோ அதுவரை அவள் அறியாதவை!பேசும் மொழி மறந்து அதிர்ந்து நின்றாள்.
“உன் மேல் பிழை இல்லை. உன்னை நம்பி என் தங்கையின் விடயத்தை உன்னிடம் சொன்னேன் பார். என்னைச் சொல்ல வேண்டும். உன்னைப் போன்ற பெண்ணிடம் காதல் சொன்னது என் முதல் தவறு… போதாதற்கு என் வீட்டு விஷயத்தை சொன்னது பெரும் தவறு! தொட்டோமா விட்டோமா என்று இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கடைசிவரை வாழ ஆசைப்பட்டேன் பார். என்னை என்ன செய்தாலும் தகும். இனி மேல் என் முகத்திலும் விழிக்காதே…!” கொதி நீராய் கொட்டியது அவனின் வார்த்தைகள். துடி துடித்தே போனாள் வதனி.
முதலில் அவன் விட்ட வார்த்தைகளே அவளைக் கொல்ல போதுமாக இருந்தது. ஆனாலும் கோபத்தில் பேசிவிட்டான். அவனுக்கு அதைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துதான் தன்னுடைய ரணமான மனதை அடக்கி பெற்றவர்களின் நிலையை அவள் புரிய வைக்க முயன்றதே.
இப்போதானால் என்ன வார்த்தைகளை சொல்லிவிட்டான். அதுவும் அவளைப் பார்த்து. அவளால் தாங்கவே முடியவில்லை.
அதிந்து நின்றவளின் உதடுகள், “அத்தான்?!!!” என்றது அதிர்ச்சியுடன்.
“சீ! அப்படிக் கூப்பிடாதே என்னை. அருவருப்பாக இருக்கிறது. உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை!!” கோபத்தில் வார்த்தைகளை அமிலமாக கொட்டினான் இளவழகன்.
பேச்சும் மூச்சும் மறந்து நின்றாள் வதனி.
அவளையே முறைத்து பார்த்தவன், “கடைசியாகக் கேட்கிறேன். பதிவுத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாயா இல்லையா?” அதிகாரமாக வந்தது அவனின் கேள்வி.
இனியுமா?!
தன்னால் முடிந்தவரை நிமிர்ந்து நின்றாள் வதனி. அவனின் கண்களை நேராகப் பார்த்து இல்லை என்பதாக உறுதியுடன் தலையினை அசைத்தாள். பேசும் சக்தியை இழந்திருந்த போதும் முடிந்தவரை திடமாகவே இருந்தது அவளின் தலையசைப்பு.
அவளின் உறுதியான மறுப்பு இளாவை மிருகமாக மாற்றிப்போட்டது. என்ன செய்கிறோம் என்பதை மறந்து, தன்னுடைய பணப்பையில் இருந்து பணத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசி எறிந்தான்.
சிலையென திகைத்து நின்றவளிடம், “இதுவரை உன்னோடு உறவாடியதற்கு கூலியாக இதை வைத்துக்கொள்!” என்று அமிலத்தை வார்த்தைகளாக்கி அவள் காதுகளில் ஊற்றினான்.
“ஐயோம்மா! இப்படி எல்லாம் பேசாதீர்கள்…” என்று காதுகளை பொத்திக்கொண்டு கதறியவளின் கதறலை காது கொடுத்துக் கேட்காது தன்னுடைய சைக்கிளை எடுக்கப்போனவனின் ஆத்திரம் அடங்க மறுத்தது!
மீண்டும் அவளருகே வந்து, “என்னை என்ன கையாலாகதவன் என்று நினைத்தாயா? ஏழை என்றாலும் கோழை இல்லை நான்! நீ மறுத்தாலும் இந்தத் திருமணத்தை எப்படி நடத்தவேண்டும் என்று எனக்குத் தெரியும். நடத்திக்காட்டுகிறேன்!” என்று உக்கிரமாக வார்த்தைகளை கடித்துத் துப்பிவிட்டுச் சென்றான்.
அதிர்ச்சி…அதிர்ச்சி…மிக ஆழமான அதிர்ச்சி! அவள் அடைந்த அதிர்ச்சியில் கண்கள் கூட கண்ணீரைச் சிந்த மறந்துபோனது. சிந்தனை செயல் எதுவும் இன்றி திகைத்துப்போய் நின்றவள் எவ்வளவு நேரம் நின்றாளோ அவளுக்கே தெரியாது. நின்று நின்று சோர்ந்த கால்கள் தொய்யவும் அப்படியே கால்கள் மடங்க அமர்ந்த வதனியின் மூளையும், இதயமும் இயங்கும் வகை அறியாது மரத்துப்போனது.
சுற்றுப்புறம் மறந்து சுயநினைவை இழந்து சிலையென இருந்தவளின் நிலை, மது உண்ட மடையன் ஒருவனின் பார்வையில் விழுந்தது. பெண்ணைக் கண்டாலே வெறி கொள்ளும் வெறியனுக்கு அவளைச் சுற்றி பணமும் சிதறிக் கிடப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும். அவனின் கண்களில், காமமும் பணத்தின் மீதான மோகமும் அப்பட்டமாய் தெரிந்தது.
கண்களில் வெறி மின்ன அவளை நெருங்கியவனின் மூளை முதலில் பணத்தை பத்திரப்படுத்திய பின்னர் அவளை வேட்டை ஆடுவோம் என்று திட்டம் போட்டது.
தன்னைச் சுற்றி பறந்துகிடந்த பணத்தை ஒருவன் தள்ளாடியபடி பொறுக்குவதைக் கூட உணரும் நிலையில் அவள் இல்லை. அதைப் பார்த்தவனுக்கோ ஆனந்தமோ ஆனந்தம். பணத்தை எடுத்துக்கொண்டவன் தள்ளாடியபடி அவளின் தோளின் மேலே கையை மெதுவாக வைத்தான்.
ஜடமென இருந்தவளின் நிலை அவனுக்கு பேரானந்தத்தைக் கொடுக்க அவளின் முகத்தை வளைக்க நினைத்து கன்னத்தில்கையை வைத்தான். நிதானம் தவறி அவளின் மேலேயே விழுந்தான்.
சுயத்தில் இல்லாத வதனியோ தன் மேல் சாய்ந்த பாரத்தை தாங்க முடியாது பினோக்கி மல்லாந்து விழுந்தாள். அவளின் மேலே விழுந்து கிடந்தவனின் தலைமுடி அவளின் மூக்கில் நுழைந்ததில் வதனிக்கு தும்மல் வந்தது.
பலமுறை தும்மியவளுக்கு சற்றே சுயநினைவு எட்டவும், தன் உடலின் மேல் ஏதோ பாரமாய் கனப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். படக்கென்று கண்களை விரித்துப்பார்த்தாள். அதிர்ச்சி! மறுபடியும் அதிர்ச்சி!


