அந்தக் காமுகனின் கைகள் அவளின் மேனியை வலம்வர ஆரம்பிக்கவும் வெறி கொண்ட வேங்கையாய் அவனை எட்டி உதைத்த வதனி, மின்னலென எழுந்து நின்றாள்.
பந்தாய் உருண்டு விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்து, “ஏய்… அறிவில்லை… இப்படி தள்ளிவிடுகிறாயே.. வலிக்கிறது. சரி..சரி… கிட்ட வா….” என்றபடி தள்ளாடித்தள்ளாடி வதனியின் அருகில் வந்து மீண்டும் அவளை தொடக் கையை நீட்டினான்.
அவ்வளவுதான்!
எங்கிருந்துதான் வதனிக்கு வெறி வந்ததோ, உடையாமல் வளர்த்து அழகாய் வெட்டிப் பாதுகாக்கும் அவளின் பத்து விரல் நகங்களினாலும் அவனின் முகம் முழுவதும் விறாண்டினாள்.
“ஏய்! என் முகத்தையாடி கீறுகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.”
அவளின் நகங்கள் கொடுத்த வேதனையில் ஆங்காரம் கொண்டு அவளை பிடிக்கப் பார்த்தான் அந்தக் காமப்பேய். அவனின் திட்டம் அறிந்து இரண்டு கைகளாலும் அவனை தள்ளிவிட்டவளின் கண்களில் மரத்தில் இருந்து விழுந்துகிடந்த மரக்கிளை படவே, அதனை தூக்கி அவனை அடித்து துவைத்துவிட்டாள்.
“என்னை பார்த்தால் தரங்கெட்டவளாக தெரிகிறதா உனக்கு? கண்ணே மணியே என்று காதல் வசனம் பேசி என் மனதை பறித்துவிட்டு இப்போது என்னவெல்லாம் சொல்கிறாய்.. நீ எல்லாம் மனிதனாடா. எதற்காக உயிரோடு இருக்கிறாய்.. பூமிக்கு பாரம் சேர்க்கவா. இனிமேல் உன் மனைவியின் மேல் கைவைக்கவும் உனக்கு பயம் வரவேண்டும். பெண் என்பவள் இந்த உலகத்தின் சக்தியடா…..” என்று எதை யாரிடம் சொல்கிறோம், என்ன சொல்கிறோம் என்பதே புரியாது மனதின் குமுறலை கொட்டிக்கொண்டு இருந்தவளின் கைகள் அவனை அடித்துத் துவைத்துக் காயப்போட்டது.
“ஐயோ…… விடு… என்னை விடு. நான் எங்கே உன்னைக் காதலித்தேன். இனி உன் பக்கமும் வரமாட்டேன்…. வலிக்குது விடுடி…”என்று அவன் கத்தியது அவளின் செவியில் விழவே இல்லை.
“மதீஈஈஈஈஈஈஈஈஈஇ…!!” என்கிற ஒரு திகைத்த குரல் புதிதாய்க் கேட்டபோதும் வதனியின் காதில் அது விழவேயில்லை.
“மதி! என்னடி செய்கிறாய்? இவன் யார்? எதற்காக அவனை அடிக்கிறாய்….” அந்த புதுக் குரலுக்குச் சொந்தக்காரன் வதனியின் கையை பிடிக்கவும், காளியென நிமிர்ந்தவள் அவனுக்கும் அடிப்பதற்கு கையை ஓங்கினாள்.
அவளை விட்டு இரண்டடி பின்னோக்கி வேகமாக நாகர்ந்து, “நான் வாசுடி… என்னை அடித்துவிடாதே. மதி… நன்றாக பார்…. நான் கீர்த்திடி…” என்றான் வாசன்.
மரக்கிளையை ஓங்கியபடி கண்களை விரித்து அவனை சில நொடிகள் பார்த்தவள், உயிர் நண்பனை இனம் கண்டுகொண்டாள்.
அந்த நிமிடம் உடல், மனம், உயிர் அனைத்தும் சோர, “வாசு….!!!” என்றவளின் அந்த அழைப்பு கதறலாய் பரிதவிப்பாய் ஆற்றாமையாய் கோபமாய் அனைத்துமாய் வெளிவந்தது.
“வாசு…. இவன் என்னை மானம் கெட்டவள் என்று சொன்னானடா. என்னை தொட….. அம்மா….. முடியவில்லையே….” என்று கதறியவளின் கதறலில் வெறிகொண்ட வாசன் விழுந்துகிடந்தவனை எட்டிமிதித்தான்.
அதன் பிறகுதான் அந்த காமுகனின் உடல் புண்ணாகி அகோரமாக கிடப்பது அவன் கண்ணில் பட்டது.
அதை பார்த்தவன், “எழுந்து ஓடிவிடு! இல்லை… உன்னைக் கொன்றே விடுவேன்.” என்று கர்ஜித்தான்.
விட்டால் போதும் என்று அந்த நிமிடமே இடத்தை காலி செய்தான் அந்த வெறியன்.
முகத்தை மூடிக்கொண்டு கதறியவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான். அப்படியே அவன் மேலேயே மயங்கிச் சரிந்தாள் வதனி. பயந்துபோன கீர்த்திவாசன், அவளை எழுப்பப் பார்த்தும் முடியாது போகவே அருகில் இருந்த அரசு வைத்தியசாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றான்.
வைத்தியர்களின் பரிசோதனைகளுக்கு பிறகு அதிர்ச்சியில் உண்டான மயக்கம் என்பதை அறிந்து, கலைமகளுக்கு இன்னும் அரை மணித்தியாலங்களில் வதனியுடன் வீடு வருவதாக தொலைபேசியில் சொன்னான். காரணம் கேட்டவரிடம் வந்து சொல்வதாகச் சொல்லிச் சமாளித்தான்.
வாடிய ரோஜாவாய் வதங்கி முகம் சோர்ந்து அரை மயக்கத்தில் செலைன் ஏறக் கிடந்தவளை பார்க்கவே முடியவில்லை அவனால். அவளின் அருகில் அமர்ந்தவனின் கைகள் கலைந்துகிடந்த அவளின் முடியினைக் கோதிவிட்டது.
கீர்த்திவாசன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவன். பெற்றவர்களுக்கு வதனியை போலவே ஒற்றைப் பிள்ளை. அதனால் அவனும் குறும்புகளின் மன்னன். அவனின் வீட்டின் அருகில்தான் சங்கரனின் தம்பி வித்தியாதரன் வசிக்கிறார். பள்ளி விடுமுறைகளுக்கு வதனி அங்கு செல்லும்போது சண்டையில் ஆரம்பித்த அவர்களின் உறவு நாளடைவில் அழகிய நட்பாய் மாறியது.
அதன் பிறகு அவன் தனது விடுமுறைகளுக்கு வவுனியாவுக்கும் அவள் தனது விடுமுறைகளுக்கு மட்டக்களப்புக்கும் என செல்லும் போதெல்லாம் சண்டைகள் வலுப்பதைப் போலவே அவர்களினது நட்பும் வலுத்தது.
அவனுக்குத் தெரிந்து அவள் அழுது இன்றுதான் பார்த்திருக்கிறான். குறும்பும் கிண்டலும் கேலியும் மின்னும் அந்த அழகிய விழிகளில் தெரிந்த வலியை வேதனையை அவனால் பார்க்கவே முடியவில்லை. வாசு என்ற அவளின் கதறல் மனதில் இன்னுமே ஒலித்தது.
அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனை நிறைய நேரம் தவிக்க விடாது இமைகளைப் பிரித்து சோர்ந்த கண்களால் பார்த்தாள் வதனி.
முகம் மலர, “மதிக்குட்டி….! விழித்துவிட்டாயா….” என்றான் மகிழ்ச்சி பொங்க.
உலர்ந்த உதடுகளை பிரிக்க சிரமபட்டவளின் நிலை மனதை அறுத்தபோதும், அதைக் காட்டாது வாங்கி வைத்திருந்த குளிர்பானத்தை அவளின் வாயருகில் கொண்டுசென்று அவள் பருக உதவி செய்தான்.
அவள் விழிகளில் தெரிந்த நன்றியைக் கண்டு முறைத்தான் வாசு.
“எப்போது வந்தாய் வாசு?” என்று சிரமத்துடன் கேள்வி எழுப்பியவளிடம்,
“இப்போது…சற்று முன்தான்…” என்றான் சுருக்கமாக.
வைத்தியரை அழைத்து அவளின் நிலை அறிந்தான். வீடு செல்லலாம் என்று அவர் சொன்னபிறகு அவளை அழைத்துக்கொண்டு பூந்தோட்டம் நோக்கி செலுத்தினான் தனது வண்டியை.
அவன் முதுகில் சாய்ந்துகொண்ட வதனி அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. இதுவே சாதரணமாக அவள் இருந்திருக்க அவனால் ஒரு மீட்டர் கூட வண்டியை நகர்த்தியிருக்க முடியாது. அந்தளவுக்கு அட்டகாசம் பண்ணி இருப்பாள். அதுவும் அவளிடம் சொல்லாமல் அவன் வந்தான் என்கிற ஒரு காரணமே போதுமே அவனை அவள் படுத்தி எடுக்க!
அவளை அந்தக் காமுகன் வேட்டையாட பார்த்திருப்பான் என்பது புரிந்தது. அவனைக் கொன்றால் என்ன என்று வந்த எண்ணம் அவனின் உடலில் உயிர் மட்டுமே எஞ்சி இருந்ததை பார்த்ததில் சற்றே அமைதி கொண்டது. அந்த நிலையிலும் மதியின் தைரியம் அவனுக்கு பெருமையாக இருந்தது. “என் தோழி தைரியமானவள்!” என்று நினைத்துக்கொண்டான்.
இவளை எப்படித் தேற்ற? மாமி மாமாவிடம் எதைச் சொல்ல… என்று சிந்தித்துக்கொண்டே மிக மெதுவாக வண்டியை வதனியின் வீடு நோக்கி விட்டான் கீர்த்திவாசன்.

