நேசம் கொண்ட நெஞ்சமிது 17 – 1

வதனியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள் சங்கரனும் கலைமகளும்.

“என்ன வாசு… என்ன நடந்தது? எங்கு போனீர்கள்….” ஆரம்பித்த கலைமகளின் பேச்சு வாசனின் பின்னே முடியாமல் சாய்ந்து கிடந்தவளின் நிலையை பார்த்து இடையில் விக்கி நின்றது.

“வனிம்மா! என்ன நடந்தது செல்லம்? சைக்கிளால் விழுந்துவிட்டாயா… எத்தனை தடவை சொல்வது மெதுவாக ஒட்டு என்று…” என்று படபடத்த சங்கரனின் கண்களோ கிழிந்திருந்த அவளின் ஆடைகளை கண்டு அதிர்ந்தது.

“என்ன நடந்தது கண்ணா?” என்று வாசுவை நோக்கியவரால் தன் செல்ல மகளை பார்க்கவே முடியவில்லை.

கலைமகளோ அதிர்ந்துபோய் மரமாய் நின்றார். வண்டியை நிறுத்தியவன், “மாமா… மதியை கொஞ்சம் பிடி… ஹையோ மாமா மாமியை பிடியுங்கள்… விழப்போகிறார்…” என்று கத்தினான்.

“என்ன? என்ன சொல்கிறாய்….” பதட்டத்தோடு திரும்பி மயங்கிச் சரிந்த மனைவியை தாங்கியவருக்கு தன்னையே நிலைப்படுத்த முடியவில்லை.

நிலையின்றித் தவிக்கும் தன் மனதை அமைதிபடுத்துவாரா? மயங்கிச் சரிந்த மனைவியை தூக்கிச் செல்வாரா? இல்லை அரை மயக்கத்தில் கிடக்கும் மகளைப் பார்ப்பாரா? எதுவும் முடியவில்லை அவரால்.

மனைவியை தாங்கியபடி எதுவும் செய்யாது திகைத்து நின்றவரிடம், “மாமா…. மாமியை தூக்கிச் செல்லுங்கள். நான் மதியை அழைத்து வருகிறேன்.” எனக்கூறி அவளைத் தன் தோளில் தாங்கி நடத்திச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.

சற்றே கண்ணைத் திறந்து பார்த்தவளை, “தூங்கு! உனக்கு ஒன்றுமில்லை. சரியா…” என்றான் மிக மிருதுவான குரலில்.

சரி என்பதாக தலையை அசைத்தவளின் கண்கள் உடலினதும் மனதினதும் களைப்பால் தூக்கத்தில் சொருகியது.

அவளின் கண்கள் மூடியதும், அறைக் கதவினை மூடிவிட்டு வெளியே வந்தான். கலைமகளை சோபாவில் கிடத்திக்கொண்டிருந்த சங்கரனுக்கு உதவியாக கலைமகளின் காலை தூக்கி சோபாவில் வைத்தான்.

மனைவியைக் கிடத்தியவர் முடியாமல் அவரின் காலடியிலேயே தொய்ந்து அமர்ந்தார்.

“என் மகளுக்கு என்ன நடந்தது வாசா…. சொல்லு..?” துக்கம் தொண்டையை அடைக்க கேட்க நினைப்பதை கேட்க முடியாமல் தவித்தார். மனமோ நொடியில் பல பயங்கரங்களை நினைத்துப் பயந்தது.

அருகில் வந்து ஆதரவாக அவரின் கையைப் பிடித்து ஆதரவாக அழுத்தினான் வாசன்.

“நம் மதிக்கு ஒன்றுமே நடக்கவில்லை. கவலையோ பயமோ வேண்டாம்! ஒரு வெறிகாரன் இவளிடம் வம்புக்கு வந்திருக்கிறான் போல…. அடித்து பின்னிவிட்டாள். அவ்வளவுதான்!” என்றான் இதமாக.

மனம் ஆறாமல், “ஆனால்…. வனிம்மாக்கு… உடை… கிழிந்து… உனக்கு நன்கு தெரியுமா…” என்று தவிப்புடன் கேட்டவரின் மனமோ என் மகளுக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாது என்று தவித்தது.

“மாமா, எதுவுமே நடக்கவில்லை. எல்லாவற்றையும் விரிவாகச் சொல்கிறேன். இப்போது எதுவும் நடக்கவில்லை என்று மட்டும் அறிந்துவிட்டீர்கள் இல்லையா. மாமியின் மயக்கத்தை தெளிய வைப்போம் வாருங்கள். நீங்கள் இப்படி இருந்தால் விழித்து எழும் மாமி திரும்பவும் மயங்கிவிடுவார். தைரியமாக இருங்கள் மாமா!” என்று அன்போடு அதட்டியவன் நீரில் நனைத்த துணியால் கலைமகளின் முகத்தை துடைத்தான்.

கண்களைத் திறந்த கலைமகள் எதுவும் புரியாது விழித்தது ஒரு வினாடியே. அடுத்த கணமே விருட்டென்று எழுந்து, “என் மகளுக்கு என்ன நடந்தது வாசா…”என்றவரின் குரல் கதறியது.

“மாமி! மதிக்கு எதுவுமே நடக்கவில்லை….!”

நம்பாது பார்த்தவரிடம், “எதுவுமே நடக்கவில்லை மாமி!” என்றான் மீண்டும் அழுத்தி.

அதுவரை மூச்சை விடாது பிடித்திருந்தவரின் சுவாசம் பெருமூச்சாய் வெளியேறவும் தொய்ந்து சோபாவில் சரிந்தார்.

“கலை!” என்று அதிர்ந்த சங்கரனிடம் ‘தனக்கு எதுவுமில்லை’ என்று கையினை அசைத்து சைகையில் சொன்னார். சில நிமிடங்கள் தொய்ந்து சாய்ந்து கிடந்தார். அவருக்கு தன் மகளுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை ஜீரணிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

“என்னதான் நடந்தது வாசா?!” என்ற கலைமகளின் குரல் ஆற்றாமையோடு, அழுகையோடு, ஆத்திரத்தோடு வந்தது.

தான் பார்த்தவற்றையும் அதன் பிறகு நடந்தவற்றையும் சொன்னான் வாசன்.

அவன் சொன்னவற்றை மிகவும் கஷ்டப்பட்டு ஜீரணித்தவர்களுக்கு, எதுவும் ஆபத்தாக நடக்கவில்லை என்பதில் பெரும் ஆறுதல். ஆனாலும் வாசன் அந்த இடத்துக்கு போயிராவிட்டால் என்று தவித்தவர்களிடம், “எதுவுமே நடந்திருக்காது. வதனி தன் சைக்கிளில் வீடு வந்திருப்பாள்.” என்பதை பலமுறை அன்பாகவும் அழுத்தியும் அதட்டியும் சொல்லியே அவர்களை சமாதானபடுத்தினான் வாசன்.

அடிமனதில் ஆழமாக பட்டிருந்த காயம் வதனியை உறங்கவிடாது புலம்ப வைத்தது.

“இல்லை… நான் அப்படியானவள் இல்லை…”, “என்னை நம்புங்கள்…”, “ஐயோ…அம்மா….நெஞ்சு எரிகிறதே…” என்று புலம்பலாக கதறியவள் பாத்திருந்தவர்களையும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்தாள்.

மனதின் வலியை மறைத்த சங்கரன், மகளின் தலையை மடியில் தாங்கி, “கண்ணம்மா… உனக்கு ஒன்றும் இல்லையடா. அப்பா இருக்கிறேன். தூங்கு..” என்றவரின் ஆறுதல் வார்த்தைகளிலோ அல்லது காலடியில் அமர்ந்து கண்களில் கண்ணீர் பெருக அவளின் காலைத்தடவிய கலைமகளின் ஸ்பரிசத்திலோ, “நான் சங்கரனின் மகள். தப்பு செய்ய மாட்டேன்…” என்று புலம்பிக்கொண்டே மெல்ல மெல்ல அப்படியே உறங்கிப்போனாள்.

மற்ற மூவருக்கும் அது உறங்கா இரவாகிப்போனது. எல்லோருக்கும் அதிர்ச்சி! வதனி ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கபட்டுவிட்டாளே என்று வருந்துவதா இல்லை தலையோடு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டதே என்று மகிழ்வதா என்று தவித்தார்கள்.

அவர்களின் தவிப்பு அறியாத விடியல் மிக வேகமாய் விடிந்தது. விடியலுக்கு முதலே விழித்துவிட்டாள் வதனி. அந்த நிமிடம் தொட்டு கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

‘அத்தானா? அவளுடைய அத்தானா? எப்படி முடிந்தது அவனால்? எவ்வளவு அன்போடு நடந்துகொண்டான். அவனைப்போல் யாரும் உண்டா என்று பெருமை பட்டவளிடம் எப்படி இப்படி நடந்துகொள்ள முடிந்தது அவனால்.’

அவளுடயவன் என்கிற எண்ணத்தை தாண்டி அவனை ஒரு பிற ஆணாக அவள் நினைத்தது இல்லையே. அல்லது நினைத்துப் பார்த்திருக்க வேண்டுமோ? அவனை விலத்தி தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் அவளுக்கு வந்ததே இல்லையே. அந்த அளவுக்கு அல்லவா நம்பினாள். அவளது தன்னம்பிக்கைக்கு கிடைத்த அடியில் இருந்து அவளால் வெளியே வரமுடியுமா?

ஆண் என்பவன் கொட்டும் தேளுக்கு சமமானவனோ? வாழ்வின் இறுதிவரை வலிக்க அல்லவா கொட்டிவிட்டான். கட்டிலில் கிடந்தவளின் பூமேனி அழுகையில் குலுங்கியது. தலையணையில் முகத்தை புதைத்து சத்தம் வெளியே வராது கதறினாள் வதனி.

வதனியின் அறைக்குள் நுழைந்த கலைமகளுக்கு அழுகையில் குலுங்கும் மகளை பார்த்ததும் உடலும் உள்ளமும் பதறியது. தன்னை சமாளித்துக்கொண்டு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து மகளின் தலையை தடவினார்.

மூவருமே அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கியபோதும் பழைய வதனியை மீட்கவே முடியவில்லை. அழகிய அந்தப் பெரிய கயல்விழிகளில் வலியொன்று நிரந்தரமாய் குடியேறிப்போனது! இப்படியே கிட்டத்தட்ட இரண்டு கிழமைகள் மிக மெதுவாய் விரைந்தோட, இளவழகன் தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி இருந்தான்.

எதை நடத்த நினைத்தானோ அதை நடத்திக்காட்டி இருந்தான்!!!

அன்றைய அவனின் பேச்சும் செயலும் அவளின் உயிரையே பறித்தது என்றால் இன்றைய அவனது செயல் அவளின் உயிர் பிரிந்தது உண்மைதானா என்பதை சரிபார்த்தது!

வாசனுக்கு வேலை அழைக்கவே அவனும் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மட்டக்களப்புக்கு கிளம்பி இருந்தான். தினமும் முடிந்த போதெல்லாம் வதனிக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தான்.

அன்று மாலை வேலை முடிந்து வந்த சங்கரனின் முகம் வேதனையால் சுருண்டிருந்தது! கணவரின் முகத்தை கவனித்தபோதும் மகளின் முன் எதுவும் கேட்காது சங்கரனின் தேவைகளை கவனித்தார் கலைமகள்.

எதையோ வதனியிடம் கேட்க நினைப்பதும், இல்லை என்பதாக தலையை அசைத்து தன்னை கட்டுபடுத்துவதாகவும் இருந்தவரை பார்த்து இன்னுமே குழம்பினார் கலைமகள். வதனியோ இதை எதையும் அறியாது மனதுக்குள்ளேயே மருகியபடி இருந்தாள்.

ஒரு வழியாக இரவு உணவு முடியவும், தாயின் மடியில் தலை சாய்ந்திருந்தாள் வதனி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock