நேசம் கொண்ட நெஞ்சமிது 18 – 1

“நான் என்ன செய்யட்டும்….. விசாரிக்கவா?” என்றார் சங்கரன் வதனியை பார்த்து.

வதனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதயத்திலோ இரத்தமே கசிந்தது.

‘என்ன சொல்வேன்… இப்படி செய்துவிட்டானே….. ஒருவனை நல்லவன் என்று நம்பி இதயத்தை பறிகொடுத்ததற்கு கிடைத்த தண்டனையா இது? மனதுக்கு பிடித்தவனை நம்பியது தப்பா?’ மனதால் வெதும்பியவளின் உள்ளமோ கதறி அழுதது.

அவள் மறுத்து அவன் சொன்னதுபோல போலிசுக்கு போனால், வாதாடி உண்மையை ஏதோ ஒரு வகையில் நிரூபித்தாலும்,அதுவரை அம்மா அப்பா தாங்குவார்களா? ஊர் உலகம் அப்பாவின் முகத்தில் காறித்துப்பாதா? என்ன பெண்ணை வளர்த்து வைத்திருக்கிறாய் என்று. அதை தாங்குவார்களா இவர்கள். என்னால் அவர்கள் பெருமைதான் படவில்லை, கேவலமாவது படாமல் இருக்கட்டும்.

இப்போது அவர்கள் படும் வேதனையையே தாங்க முடியவில்லையே. இன்னுமா அவர்களை வருத்துவது. இல்லை! கூடாது! மனம் உறுதியாகச் சொன்னது!

தப்பு செய்தவள் நான். ஒரு பச்சோந்தியை நம்பியது நான். பிழை செய்தவள் நான் இருக்க என்னைப் பெற்றவர்கள் தண்டனை அனுபவிப்பதா. இல்லை! இல்லவே இல்லை!!

தான் சொல்லும் முடிவால் தன்னைப் பெற்றவர்களின் மனம் இன்னுமே நோகும் என்பது புரிந்தது. ஆனாலும் வேறு வழி இல்லையே. அவர்கள் படப்போகும் அவமானத்திலிருந்து அவர்களை காப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்று நினைத்தவள் கலங்கிய மனதையும் குரலையும் முடிந்தவரை பலப்படுத்தி, “விசாரியுங்கள் அப்பா. ஆனால் நான் படிக்க வேண்டும்!” மறைமுகமாக தன்னுடைய பதிவுத் திருமணத்திற்கு சம்மதத்தை தெரிவித்தாள்.

கலைமகளுக்கும் சங்கரனுக்கும் தங்களுடைய காதுகளையே நம்ப முடியவில்லை.

நம் மகளா..? என்று தோன்றியது. காதல் என்பது பெற்றவர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்கும் ஆயுதமா?

கலைமகள் அடிபட்ட பார்வை பார்க்க, சங்கரனின் பார்வையோ “நீயா? என் வனிக்குட்டியா?” என்று கேட்டது.

வதனியோ கண்ணீர் நிறைந்த கண்களால் அவர்களை இறைஞ்சினாள்.

‘என்னை மன்னியுங்களேன்’ என்று அவளின் மனம் ஊமையாய் அழுதது.

வாயிருந்தும் சொல்ல வார்த்தைகள் இருந்தும் ஊமையாகிப்போன தன் நிலையை நினைத்து அவளுக்கே அவளை பிடிக்கவில்லை.

அவர்களின் நொந்த முகத்தைப் பார்க்கும் துணிவை இழந்தவள் திரும்பி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள். கட்டிலில் விழுந்தவள் வாயை கைகளால் பொத்தியவாறே கத்தி அழுதாள்.

சித்தி விநாயகா….எனக்கு தெரிந்து நான் யாருக்கும் எதுவும் செய்யவில்லையே. பிறகு ஏன் இப்படி நடக்கிறது? இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்குமளவுக்கு என்ன தவறு செய்தேன். ஏன்??? ஏன்??? ஏன்???

வெளியே இருந்த கலைமகளும் சங்கரனும் என்ன மாதிரியான உணர்வில் இருந்தார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை.

கோபமா.. ஆத்திரமா.. திகைப்பா.. அதிர்ச்சியா…. இல்லை பிள்ளை வளர்ப்பில் தோற்றுவிட்டோம் என்கிற தோல்வி உணர்ச்சியா அவர்களே அறியார்.

இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தபோதும் வார்த்தைகள் வெளி வரவே இல்லை. நிமிடங்கள் பலது இப்படியே கழிய பெரியமூச்சு ஒன்றினை எடுத்துவிட்ட சங்கரன்,

“தூங்கலாம் வா கலை… நாளை எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” என்றவர் கலங்கிய விழிகளுடன் இருந்த மனைவியின் தோள்களை அணைத்தபடியே அவரை அழைத்துச் சென்றார். கட்டிலில் சாய்ந்தவரின் கைகள் மனைவியின் முதுகை தட்டி கொடுத்தபோதும் மனமோ ஆறாத வடுவைச் சுமந்திருந்தது.

மனைவி பிள்ளைகளை சந்தோசமாக வைத்திருப்பவன்தான் உண்மையான குடும்பத்தலைவன் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர் அவர். இதுவரை அதில் வெற்றி வாகை சூடியவர்தான். இன்று தன் கண் முன்னாலேயே அவரின் ஆருயிர் மனைவியும் உயிரான மகளும் கதறியழுததை பார்க்கும் நிலையை கடவுள் வைத்துவிட்டானே என்று கடவுள் மீது கோபம் கொண்டார்.

அழகிய சிறு கூட்டுக் குடும்பம் ஒன்றாக இருந்தபோதும் உருக்குலைந்து போயிற்று!

இன்னும் பத்து நாட்களில் தங்கையின் திருமணம். இருக்க நிற்க நேரமில்லாது ஓடிக்கொண்டே இருந்தான் இளவழகன். மாமாவிடம் இருந்து பணம் கிடைத்தபோதும் , மாப்பிள்ளை வீட்டார் வந்து மாதவியை பேருக்கு பெண் பார்த்தபோதும், திருமண மண்டபம் ஒழுங்கு செய்து திருமண வேலைகளை மாய்ந்து மாய்ந்து செய்தபோதும் அவன் மனம் உள்ளுக்குள் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்தது.

அலைப்புறுதல், வதனி திருமணத்திற்கு மறுத்துவிட்டாளே என்கிற ஆத்திரம், அவள் எப்படி மறுக்கலாம் என்கிற ஆட்சேபம், இப்படி பலவிதமான எண்ணங்கள் அவனை இன்னும் இன்னும் என்று வேகம் கொள்ள வைத்தது. தங்கை திருமண வேலைகளை உடலும் மூளையும் செய்தபோதும் எப்படி அவளைத் திருமணம் செய்யலாம் என்று யோசித்தபடியே இருந்தான். அவனின் சிந்தனையின் முடிவு சங்கரனை சந்திக்க வைத்தது.

அவரிடம் தங்களை பற்றிச் சொல்லி அவரை மறுக்க முடியாத இடத்தில் நிறுத்தினான்.

அவனளவில், அவன் வெளிநாடு செல்லாமல் அவனின் வது சட்டப்படியும் அவனவளாக மாறியிருக்க வேண்டும்!! அதற்கான அத்தனை வேலைகளையும் தயக்கமின்றிச் செய்தான்!

ஆனால் அதற்கு அவன் கொடுக்போகும் விலை அவன் அறியவில்லை! அதுதானே வாழ்க்கை!

ஒரு வாரம் கடந்திருந்தது. தந்தை என்ன செய்தார் அல்லது செய்கிறார் என்று வதனியும் கேட்கவில்லை. சங்கரனும் சொல்லவில்லை. வதனி யாரிடமும் பேசவில்லை. பேசும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. கலைமகளும் சங்கரனும் கூட பேசிக்கொள்வது மிக அரிதாகிப்போனது.

அவர்களின் அனைத்து செயலுமே மக்களை சுற்றியே இருக்கும். அந்த மகள் கொடுத்த வேதனையில் அவர்களும் ஊமையாகிப்போனார்கள்.

தனது அறையில் ஜன்னலின் அருகே கதிரையைப் போட்டு, சுவரில் தலையை சாய்த்து இருந்தவளின் கண்கள் மூடி இருந்தபோதும் கண்ணீர் கோடாக இருபக்க கன்னங்களிலும் வழிந்த படியே இருந்தது. வழியும் கண்ணீரை துடைத்து துடைத்து கன்னங்கள் எரிந்தபோதும் கண்ணீர் நின்ற பாடாக இல்லை. மனம் மறுகிக் கொண்டே இருந்தது.

கதவை திறக்கும் ஓசையில் தலையை திருப்பிப் பார்த்தவள் தந்தையை கண்டதும் பதட்டமும் பயமும் முகத்தை சூழ எழுந்து நின்றாள். தவறு செய்தவளின் தலை தானாகவே நிலம் நோக்கியது.

அதைப்பார்த்த சங்கரனின் இதயம் வலித்தபோதும், அதைக் காட்டாது, “வருகிற புதன்கிழமை உனக்கு பதிவுத்திருமணம்.” என்கிறார். யாருக்கோ எதையோ சொல்வதைப்போல ஒட்டாத குரலில் சொன்னார்.

நிலத்திலே சொட்டு சொட்டாய் விழுந்தது வதனியின் கண்ணீர் துளிகள். அதை பார்க்கும் சக்தி அற்றவராய் உடனே வெளியே சென்றுவிட்டார் சங்கரன்.

அப்பா என்னை முற்றிலுமாக வெறுத்துவிட்டார். என் முகத்தைப் பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை அவருக்கு என்று நினைத்தவளின் உடல் அடக்க முடியாத அழுகையில் குலுங்கியது.

புதன் எப்போது என்று யோசித்தாள். இன்னும் இரண்டு நாட்களில் என்று தெரிந்ததும் பயத்தில் அவளின் உடல் ஒரு முறை தூக்கிப்போட்டது. தூக்கு என்று தெரிந்தபோதும் அது எப்போது என்று அறிந்தால் பதறுமே மனம் அப்படி இருந்தது வதனியின் நிலை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock