சங்கரனிடம் போலிசுக்கு போவதாக சொல்லும் எண்ணம் இளாவுக்கு சற்றும் இருக்கவில்லை. எப்படியாவது மன்றாடித்தன்னும் அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் அவரிடம் பேசச் சென்றதே! ஆனால், அவர் மறுக்க இவன் வற்புறுத்த என்று வாதாட்டம் வலுத்ததில் அவனை அறியாது வந்த வார்த்தைகள் தான் போலிசுக்கு போவேன் என்பது!
ஆனால் அவனே அறியவில்லை. அந்த வார்த்தைகள் வதனி குடும்பத்தை எப்படிப் பிரட்டி போடும் என்பதை.
அனுபவம்… வாழ்வின் மிக பெரிய ஆசான். அவன் கற்றுத்தரும்போது நாம் பட்டுத்தெளிந்திருப்போம். இதுதான் இளாவுக்கும் நடக்கப்போகிறது!
தங்கையின் திருமணம் முடிந்தபோதும் இளாவின் மனம் அமைதி அடையவில்லை. எத்தனை வருடக் கனவு அது. அவனின் லட்சியங்களில் ஒன்று நிறைவேறியபோதும், வெளியில் சிரித்தாலும் மனதில் எதுவோ அரித்துக்கொண்டே இருந்தது இளாவுக்கு.
தங்கையை கணவன் வீட்டுக்கு அனுப்பிய அன்றே, தாயார், அண்ணா கதிரவன், அக்கா மாதங்கி குடும்பங்கள் என்று அனைவரும் இருக்கும் போதே தன்னுடைய காதலை சொல்லிவிட்டான் இளவழகன்.
எல்லோருக்குமே அதிர்ச்சி என்பது சின்ன வார்த்தையாக இருந்தது. யாராலும் நம்பவே முடியவில்லை.
காதலில் விழுந்தது போதாது என்று அவனே வதனியின் அப்பாவிடமும் பேசிவிட்டான் என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தளவுக்கு பொறுப்பில்லாதவனா இளவழகன்?
அவர்களுக்கும் புரியவில்லை, காதல் மாய உலகின் மந்திரி என்பது. எவரையும் எப்படியும் புரட்டிப்போடும் சக்தி காதலுக்கு உண்டு. அந்த காதலுக்கு முன்னால் இளவழகன் எந்த மூலைக்கு?
அவனின் காதலுக்கு சம்மதத்தையோ எதிர்ப்பையோ சொல்வதை விட அவன் காதலிக்கிறான் என்பதைத்தான் அவர்களால் ஏற்கவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.
“தம்பி..நீ காதலிக்கிறாயா? இது விளையாட்டு இல்லை. உண்மையை சொல்?” மாதங்கியாள் நம்பவே முடியவில்லை….
“நீயாடா…?” கதிரவனுக்கோ சந்தேகம்.. உண்மைதான் சொல்கிறானா என்று.
வைதேகிக்கோ மிக பெரிய அதிர்ச்சி. மகளின் காதலையே ஏற்க முடியவில்லை. இளாவின் பேச்சால் ஓரளவுக்கு மனதை தேற்றி வைத்திருந்தார். மகனாவது அண்ணன் மகளைக் கட்டி தன் பேச்சை கேட்பான் என்ற அவரின் மனக்கோட்டைக்கு பெரிய அடி விழுந்துவிட்டதே!
அவன் காதலிக்கிறான் என்பதே அதிர்ச்சி என்றால் அண்ணாவிடம் என்ன சொல்வது என்கிற திகைப்பும் அவருக்கு. இதுவே, இளாவின் காதலுக்கு உட்பட்டவளை வைதேகி ஒதுக்கப் போதுமானதாக இருந்தது. அதிர்ச்சியில் வைதேகி பேசவே இல்லை.
சகோதரர்களின் கேள்விக்கு ஆம் என்பதாக தலை அசைத்தவன், “அம்மா! என்னம்மா எதுவுமே சொல்லவில்லை நீங்கள்….” என்றான் தயக்கமாக. ஆனாலும் உறுதியும் இருந்தது அந்த குரலில்.
வைதேகிக்கோ அடக்கமுடியாத ஆத்திரம்! “எல்லோரும் எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் இந்தக் காதலை. குடும்பங்களின் நிம்மதியை குலைக்க என்றே காதலிப்பீர்களா.. நான் என்ன சொல்ல? சொல்லிப் புரியும் வயதா உங்களுக்கு. எல்லோரும் இப்போது பெரிய மனிதர்கள். அதனால் எங்கள் விருப்பங்கள் உங்களுக்கு செல்லாக் காசு. அப்படித்தானே?” கோபத்தில் குரல் உயர்ந்தது அவருக்கு.
“அம்மா கொஞ்சம் அமைதியாய் இருங்கள். இளா நீ சிறுபிள்ளை இல்லை. யோசித்து முடிவு செய். இரண்டு மாத பழக்கம் எல்லாம் பெரிதில்லை.. கண்ணைக் கவரும் பெண்ணைக் கண்டால் அது காதல் என்று தோன்றுவது இயல்பு. அதனால் இந்தக் கதையை விட்டுவிட்டு ராகவியை திருமணம் செய்யும் வழியை பார்.”
“இல்லை அண்ணா! அது என்னால் முடியவே முடியாது! கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லை நான். என் எதிர்காலம் அவளோடு மட்டும்தான்!” என்றான் அழுத்தமாய்.
எவ்வளவோ வாதாடிப்பார்த்த போதும் இளா தன் முடிவிலிருந்து மாறவே இல்லை. வெல்ல முடியாத கதிரவன், “என்னம்மா செய்வது? நீங்களே சொல்லுங்கள்..” என்று தாயிடம் கேட்டார்.
“எனக்கு இதில் உடன்பாடு இல்லை.” என்கிறார் அவர் பட்டென்று. “ஆனால் அடித்து திருத்தவோ வேண்டாம் என்று கட்டாயப்படுத்தவோ நீ சிறு பிள்ளை இல்லை. அதனால் உன் விருப்பம் போல் செய்துகொள். அம்மா என்கிற முறையில் நீ கூப்பிடும் இடத்துக்கு வருகிறேன். ஆனால் ஒன்று, உங்களையெல்லாம் கஷ்டப்பட்டு பெற்று வளர்த்தத்துக்கு ஆளாளுக்கு நல்ல பரிசு தந்துவிட்டீர்கள். ” என்றார் வைதேகி வெறுப்புடன்.
“மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா. எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். மிகவுமே நல்ல பெண். பார்த்தால் உங்களுக்குமே பிடிக்கும். அவள் இல்லாத ஒரு வாழ்வை நான் வாழ்வதற்கு இறப்பதே மேல். புரிந்துகொள்ளுங்கள்…! உங்களை வேதனைப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம் இல்லை. எனக்கு புரிகிறது உங்கள் மனதின் வேதனை. இதுவரை இப்படி நடந்திருக்கிறேனா? உங்களுக்கு வலிக்கும் என்று தெரிந்தும் அவள் எனக்கு வேண்டும் என்கிறேன் என்றால் வதனி எவ்வளவுக்கு என் மனதில் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அம்மா. அவள்தான் என் வாழ்க்கை…! என் வாழ்க்கையை எனக்கு தாங்கம்மா.” அவரின் கைகளை பற்றி கெஞ்சியபோது உடைந்துபோய் நின்றார் வைதேகி.
அவள் வேண்டும் என்பதற்காக அவளையே நோகடித்து விட்டு வந்திருக்கிறேன் அம்மா… என்று மனதில் நினைத்தவனுக்கு நெஞ்சம் முழுதும் பாரத்தால் கனத்தது.
அங்கிருந்த அனைவருமே பேச்சு மூச்சற்று சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவனின் காதலின் ஆழத்தை கண்டு அவர்களுக்கு பயம் கூட வந்தது. தனது கைகளில் ஈரத்தை உணர்ந்த வைதேகிக்கோ மகனை நினைத்து மனம் பாகாய் கரைந்தது.
“உன் விருப்பம் போல செய் தம்பி…” கலங்கிய குரலில் சம்மதம் கொடுத்தாலும் வதனியின் மேல் ஒரு கோபம், ஆத்திரம் எழுவதை தவிர்க்க முடியவில்லை அவரால்.
என் பிள்ளையை இந்த நிலையில் கொணர்ந்து நிறுத்திவிட்டாளே!
கதிரவனை ஒரு வழியாக சமாதனம் செய்து. போதாதுக்கு மாதங்கியை சமாதனம் செய்து மாதவி குடும்பத்திடம் விஷயத்தை சொல்லி இந்தப் பதிவுத் திருமணத்தை செய்வதற்குள் அவன் பட்ட பாடுதான் என்ன?
இவளானால் இப்படி கோபித்துக்கொண்டு போகிறாளே. இனி என்ன செய்வது? மனதில் தவிப்புடன் யோசித்துக்கொண்டிருந்தவனை, “இளா! இங்கேயே நின்று என்னடா செய்கிறாய்? அவர்கள் போய்விட்டார்கள்…நீ வா!” என்று திருமண பதிவாளர் அலுவலகம் முன் நின்றவனை அழைத்தார் கதிரவன்.
அப்போதுதான் தான் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது புரியவும், தாய் சகோதரிகள் நின்ற இடத்துக்கு கதிரவனுடன் நடந்தான் இளா. மனமோ சோர்ந்துகிடந்தது.
வதனி குடும்பம் சென்றுவிட்டார்கள். வைதேகிக்கு குழப்பத்துக்கு மேல் குழப்பம். காதலித்த பெண் என்று சொன்னான். அவளானாள் இவனை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. மாலை மாற்றுவதைக் கூட வேண்டாம் என்றுவிட்டாள். அவளின் பெற்றவர்களானால் ஒரு வார்த்தை கூட சம்மந்திகள் என்ற முறையில் பேசவில்லை. அவர்களின் முகத்திலும் கூட எந்தவிதமான மகிழ்ச்சியும் இல்லை. சரி.. எங்களைப்போல அவர்களுக்கும் பிடிக்கவில்லை போல என்று நினைத்தாலும் காதலித்த இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லையே. என்ன காதலோ என்ன திருமணமோ என்று சலிப்பாக இருந்தது அவருக்கு!
சங்கரன், கலைமகள், வதனி மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக வீட்டுக்கு வந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு புயலே மையம் கொண்டிருந்தது. எப்படியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை.


