கலைமகளுக்கு மனது ஆறவே மறுத்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? ஒரே மகள்! எத்தனையோ கனவுகள்!! அத்தனையும் சிதைந்து போயிற்று!
சரி விரும்பியவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று திருமணம் செய்து வைத்தால், அவளும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை. என்னதான் நடக்கிறது? எங்களுக்கு தெரியாமல் காதலித்ததற்குதான் அழுகிறாள் என்று பார்த்தால் திருமணம் நடந்ததில் மகிழ்ந்ததாக தெரியவில்லை என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே இருந்தார்.
வீட்டில் இவர்களை இறக்கிய சங்கரன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றுவிட்டார். கணவரிடமும் எதுவும் கேட்க முடியவில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வரும் என்று கலைமகள் கனவிலும் நினைக்கவில்லை.
தன்னால் முடிந்தது என்று நினைத்து விருந்து சமையல் ஒன்றுக்கு ஆயத்தம் செய்தார்.
சித்திவிநாயகர் ஆலயத்துக்கு சென்ற சங்கரன் தன்னுடைய மகளினதும் இன்றுமுதல் மருமகன் ஆகியவனதும் பெயரில் அர்ச்சனையை செய்தார். கடவுளை நோக்கிக் கை கூப்பியவரின் மனமோ என்னுடைய மகளும் மருமகனும் என்றும் நன்றாக வாழ வழி செய் ஆண்டவா என்று வேண்டியது.
கோவிலுக்குப் பின்னால் இருந்த மரத்தடியில் வந்து அமர்ந்தவர், தன்னுடைய நண்பன் மணிவண்ணனுக்கு அழைத்தார்.
அந்த முனையில் அழைப்பு எடுக்கப்பட்டதும் “மணிஈஈ….” என்ற சங்கரனின் கலங்கிய குரலைக் கேட்டதுமே பதறிவிட்டார் மணிவண்ணன்.
“சங்கரா..! என்ன சொல்லு? வனிக்கண்ணா எங்கே? நன்றாக இருக்கிறாள் தானே…” படபடத்தார் அவர்.
“நன்றாக இருக்கிறாள். அவளுக்கு இன்று திருமணம் நடந்ததடா..” அந்த தந்தையின் மனதைப் போலவே குரலும் தழுதழுத்தது.
“என்ன? என்ன சொல்கிறாய்?”
“வனிம்மாக்கு பதிவுத் திருமணம் நடந்ததடா….”
“ஒருவார்த்தை எனக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை உனக்கு. அப்படித்தானே…” அவருக்குக் கூட கோபம் வந்துவிடும் போலிருந்தது.
“நீயும் என்னைக் கொல்லாதே மணி…” தொய்ந்துபோய்ச் சொன்னார் சங்கரன்.
நண்பனின் வார்த்தைகள் அவரை நிதானம் கொள்ள வைத்தது. அதோடு அவரும் நொந்துபோயிருக்கிறார் என்பதும் விளங்க,
“என்ன நடந்தது என்று விவரமாக சொல்லித்தொலையேன். எனக்கு இங்கே இதயம் படபடக்கிறது. என் கண்ணை… யாராவது…. கட்டாயப்படுத்தினார்களா? அல்லது நீயா? நான் இல்லாமல் அவள் திருமணம் செய்ய மாட்டாள்….! என்ன நடந்தது? உண்மையை சொல்..!”
“அதடா..” என்று ஆரம்பித்தவர் குரல் தழுதழுக்க மகளுக்கு நடந்த அனைத்தையும் சொன்னார். “என்னால் முடியவில்லை மணி. அவள் கண்ணீர் விட்டுக் கதறுகிறாளடா. என்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை. இன்னும் நான் ஏன் உயிருடன் இருக்கவேண்டும்? அவளை பெற்று எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்த்தேனே.. அவளை இப்படிப் பார்க்கவா? உன்னால் முடிந்தால் இங்கு ஒரு தடவை வருகிறாயா. வந்து அவளை சமாதானப்படுத்து..” என்று அழுதவரின் கதறல் அங்கு கேட்டிருந்த அந்த அன்பு உள்ளத்தையும் கண்ணீர் சொரிய வைத்தது.
“இதோ..! இப்போதே நான் வருகிறேன். விசரன் மாதிரி எதையும் உளறாது தைரியமாக இரு.காதலிப்பது பிழை இல்லையேடா சங்கரா. ஆனால் அவனைப் பற்றி விசாரிக்காமல் கட்டி வைத்துவிட்டாயே சங்கரா. என்னடா…” என்கிறார், அவசரப்பட்டுவிட்டானே என்கிற ஆற்றாமையோடு.
“என்னதான் கோபம் என்றாலும் என் பெண்ணைக் கொடுக்க முதல் விசாரிக்க மாட்டேனா? அதெல்லாம் ஒரு பிழை கூட சொல்ல முடியாத நல்ல குடும்பம் தான். அந்தப் பெடியனும் நல்லவன் தான். படித்திருக்கிறான், நல்ல வேலையிலும் இருக்கிறான். போன கிழமைதான் அவன் தங்கைக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறான். இனிக் கடமை என்று அவனுக்கு எதுவும் இல்லை. அவனுடைய அம்மாவைப் பார்த்துக்கொண்டால் போதும். வனிம்மாவுக்கு ஏற்ற பெடியன் தானடா. ஆனால் இப்படியா என் மகளின் திருமணம் நடக்கவேண்டும்? எதற்கும் நீ வாயேன்…”
“இந்தா..! உன்னுடன் பேசிப்பேசியே நான் வெளிக்கிட்டு விட்டேன். பஸ் ஏறுவதுதான் வேலை. அங்கே இன்றே வந்துவிடுவேன். நீ தைரியமாக இரு. அதைவிட என் பெண்ணிடம், இனியும் நீ கோபமாக நடந்தது அறிந்தால், நானே உன்னை அடித்துவிடுவேன் சொல்லிவிட்டேன்…! உன் முரட்டுத்தனத்தை அந்த குழந்தையிடம் காட்டாதே. என் கண்ணம்மாவிடம் நீ கோபம் கொண்டது இதுதான் கடைசியாக இருக்க வேண்டும். புரிந்ததா….!” கோபமும் கட்டளையும் கலந்திருந்தது அவரின் குரலில்.
சங்கரனுக்கே மகளைத் தான் வருத்தியது புரிந்தது. மணிவண்ணனும் சொல்லவே குற்ற உணர்ச்சி மேலோங்க, “சரியடா…” என்றார் மெல்லிய குரலில்.
“சரி நீ வை. நான் புறப்பட்டுவிட்டேன்….”
அங்கேயே கொஞ்ச நேரம் இருந்தவரின் மனமோ சற்று ஆறுதல் அடைந்திருந்தது. சரி.. மகளுக்கு பிடித்தவனுடன் திருமணம் நடந்துவிட்டது. அதுதானே எண்களின் விருப்பமும். நான் கோபித்ததில் என் வனிம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. மணி சொன்னது போல நான் முரடாகித்தான் போனேன். என் பிள்ளையை வருத்தி விட்டேனே. காதலிப்பது அவ்வளவு தவறா? நல்லவனைத்தானே விரும்பி இருக்கிறாள். என்ன கொஞ்சம் முன்கோபி போலும். என் செல்லம் சமாளிப்பாள் அவனை. இப்போதே வீட்டுக்கு போய் மகளை சமாதானப்படுத்த வேண்டும். கலையிடம் பிள்ளைக்கு பிடித்ததை சமைக்கச் சொல்லவேண்டும் என்று நினைத்தவர் மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் தனது வண்டியை வேகமாக வீட்டை நோக்கி விட்டார்.
வீட்டுக்கு வந்தவருக்கோ என்னவோ அவளை பல வருடங்களாய் பிரிந்திருந்ததைப்போலவும் இப்போதுதான் காணப்போகிறோம் என்பதைப்போலவும் இருந்தது தவிப்பு.
“கலை…! சமைத்துவிட்டாயா? இன்று விருந்தாக இருக்கவேண்டும் சமையல்..” என்றவரின் குரலின் துள்ளலிலேயே கலைமகள் ஓடி வந்தார் விறாந்தைக்கு.
“ஏற்கனவே அதற்குதான் ஆயத்தம் செய்து அரைவாசி சமையலும் முடிந்துவிட்டது…” கணவரின் முகத்தைப் பார்த்தே மகிழ்ந்த கலைமகளின் முகம், தானே மலர்ந்தது.
“வனிம்மா எங்கே…” என்றவரின் குரல் பாசத்தில் குழைந்திருந்தது.
கணவரின் மனநிலையை கணித்தவருக்கு தொண்டை அடைத்து கண்ணை கரிக்கவே தலை அசைப்பால் வதனியின் அறையைக் காட்டினார்.
ஆவலுடன் சங்கரன் வதனியின் அறைக்குள் நுழைய பின்னாலேயே சென்றார் கலைமகள்.
“வனிம்மா….”
உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது வதனிக்கு. இனிக் கேட்கவே முடியாது என்று நினைத்திருந்த, ஏங்கிய அந்தப் பாச அழைப்பு அவளை அடியோடு கொன்றது.
“அப்..பா!”
கண்களில் நீர் வழிய எழுந்து நின்றவளைப் பார்த்தவருக்கு, தனது கோபம் மகளை எவ்வளவு பாதித்து இருக்கிறது என்பது புரிய, மனது மிகவும் வலித்தது.
“என்னை மன்னித்துவிடு கண்ணம்மா. அப்பா கோபமாகப் பேசிவிட்டேனா….” என்றவரின் கெஞ்சலில் வதனி முற்றிலுமாக உடைந்தாள்.
“நான் தானேப்பா பிழை செய்தேன். நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும். அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னோடு கதைக்காமல் மட்டும் விட்டுவிடாதீர்கள். செத்துவிடலாம் போலிருக்கும்மா.”
பதறித் துடித்துப் போயினர் பெற்றவர்கள். “என்ன பேச்சம்மா இது?” என்று கண்ணீர் விட்டனர்.
அழகிய கண்ணீர் கோலம் அழகாய் அவர்களை இணைத்தது.
சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து அந்த குடும்பத்தின் நிம்மதி சற்றே திரும்பியது. ஆனாலும் வதனியின் எதிர்காலம்? இளவழகனின் நிலை?


