அப்படி இந்த வருடம் நியமிக்கபட உள்ளவர்களில் இளாவும் ஒருவன்.
மறுபடியும் தன் சிந்தனை சிதறுவதை உணர்ந்து அவன் மூர்த்தி சாரின் பேச்சைக் கவனிக்க ஆரம்பிக்கவும், அவர் புதிதாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களைத் தங்களைத் தாங்களே சுருக்கமாக அறிமுகம் செய்துகொள்ளுமாறு கூறி தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
மற்றவர்கள் தங்கள் பெயர்களையும் கல்வித்தகுதிகளையும் கூறினார்கள். இளவழகனின் தோழன் கோபாலன் தன்னுடைய பெயரைச் சொன்னவுடனே,
“பேசுங்கள் கோப்ப்பால் பேசுங்கள்! சுனாமி வரும்வரை பேசுங்கள். சூறாவளி சுழன்றடிக்கும்வரை பேசுங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஓடிவந்திருக்கும் என்னை ஏமாற்றி விடாதீர்கள் கோப்ப்பால்…. ஏமாற்றிவிடாதீர்கள்! ” என்று சொல்லியது சாட்சாத் நம் வதனியேதான்.
இதனைக் கேட்டவுடன் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த கோபால் முதல் மாணவர்கள் வரை எல்லோரும் சிரித்துவிட்டனர்.
வாணிக்கும் சிரிப்பு வந்தாலும் வதனி சொன்னதை கேட்டவுடன் சத்தமாகச் சிரித்த மூர்த்தியை முறைத்துவிட்டு, “வனி பேசாமல் இரு!” என்று அவளை அதட்டினார்.
“சரிங்கம்மா. உத்தரவு வாங்கிக்கறேன்!” என்ற வதனியை, “பேசாமல் இரடி” என்று நித்தியும் அதட்டினாள். அதன் பிறகே சற்றேனும் அமைதியானாள் அவள்.
கோபாலன் ஒரு வழியாகத் தன்னைப் பற்றிச் சொல்லி முடித்தவுடன் கடைசியாக அமர்ந்திருந்த இளவழகனின் முறையும் வர அவனும் எழுந்துகொண்டான்.
அவனின் உயரத்தை பார்த்த வதனி, “ஒட்டகசிவிங்கிக்கும் ஒரு அண்ணா உண்டு.” என்றாள் வாயை வைத்துக்கொண்டு இருக்கமுடியாமல்.
அதைத் தன் காதில் வாங்கியவன் அவளையே பார்த்தபடி, “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் இளவழகன். பொறியியல் படித்திருக்கிறேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக்கொண்டிருந்தாலும், வவுனியா தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை பார்க்கிறேன். மற்றும்படி என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக எதையும் இன்னும் சாதிக்கவில்லை.” என்று உள்ளதை உள்ளபடி சொல்லவும் வனிக்கு அவனின் பேச்சு மிகவும் பிடித்துப்போனது.
அவன் பேச்சில் கவரப்பட்டு, தன்னை மறந்து அவனையே பார்த்தவளுக்கு, தன்னையே பார்த்துக்கொண்டு பேசிய அவனின் பார்வையை ஏனோ எதிர்கொள்ள முடியாமல் போகவும், தனது விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.
‘ஏன் என்னால் அவனைப் பார்க்கமுடியவில்லை…’ அவளுக்கே புரியவில்லை.
அவளின் அந்தச் செய்கையைப் பார்த்தவனின் கண்கள் ஒரு தடவை கனிந்து பின்னர் அது காணாமல் போனது. இந்த வருடம் பரீட்சை எழுதியவர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவன் கூற, மாணவர் கூட்டமே கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
ஆசிரியர்களின் அறிமுகம் முடிந்ததும் வாணியின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக, கேக் வெட்டுவதற்காக மற்றைய ஆசிரியர்கள் மூர்த்தி சாரை அழைத்தனர். அவரோ வாணியின் செல்லப்பிள்ளை வதனியை அழைத்தார்.
அவளோ என்றும் இல்லாமல் இன்று புதிதாகக் கூச்சப்படவும், “அட…அட! வனி வெட்கப்படுவதை யாராவது போட்டோ எடுங்கள். காணக்கிடைக்காத அரிய காட்சி…” என மாணவர் கூட்டம் கத்தியது.
கூச்சமாகப் போயிற்று அவளுக்கு!
‘இன்று எனக்கு என்ன நடந்துவிட்டது…’
தன்னை நினைத்தே வெட்கியவளாக முன்னே நடந்து தமிழ்வாணியின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
ஒரு வழியாக அனைவரின் கைதட்டல்களுக்கும் வாழ்த்துகளுக்கும் இடையில் கேக்கை வெட்டி ஒவ்வொரு துண்டுகளாக ஆசிரியர்களுக்குக் கொடுத்தாள். இளவழகனின் கைகளில் கேக் துண்டைக் கொடுக்கும்போது மட்டும் ஒருவிதமான தடுமாற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது.
“நான் ஐசிங் போட்ட கேக் உண்பதில்லை.” என்று அவன் மெல்லிய ஆனால் கம்பீரமான குரலில் சொன்னபோதும், கேக்கை நீட்டிக்கொண்டிருந்தவளை என்ன செய்வது என்று தெரியாது பார்த்துவிட்டு அதனை வாங்கிக்கொண்டான்.
தனக்குமட்டும் பெரிய துண்டாக வெட்டியெடுத்து அதை மிக ஆவலுடன் ரசித்து உண்பவளை பார்த்தவனின் விழிகள், அவனின் உத்தரவையும் தாண்டி அவளின் அழகில் மயங்கி நின்றது.
எதேர்ச்சையாக அவன் பக்கம் பார்வையை திருப்பிய வதனியின் கண்களைச் சந்தித்ததும் இளவழகன் கண்களால் நகைத்தான்.
தான் சிறுபிள்ளை போல் உண்பதை பார்த்துவிட்டானே என்று வெட்கி தலையைத் திருப்பிக்கொண்டாள் அவள். அதனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டவன் அவளருகில் சென்று தன்னுடைய துண்டையும் அவள் கைகளில் வைத்து, “இதையும் நீயே சாப்பிடு. நான் உண்பதில்லை.” என்று கூறிச் சென்றான்.
அவனின் அந்தச் செய்கை அவளுக்கு அதிர்ச்சியாகிப்போனது. அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும் அவனோ இவளைப் பார்க்காது தன்னுடைய நண்பர்களுடன் இணைந்துகொண்டான். உடனே சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள் யாராவது பாத்தார்களா என்று. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட வதனி அந்தத் துண்டினையும் ஆசையாக உண்டாள்.
அவளைப் பார்க்காததுபோல் பார்த்துக்கொண்டிருந்த இளாவின் மனம் ஏனென்று அறியாமலே கனிந்து இருந்தது.
‘குமரியின் உருவத்தில் குழந்தை’ என்பதன் பொருள் புரிந்தது போல் இருந்தது அவனுக்கு. இவளின் செய்கைகளில் கோபம் கொள்வதும் குழந்தைகளின் செய்கைகளில் கோபம் கொள்வதும் ஒன்றோ என்றும் தோன்றியது.
எங்கும் சிரிப்புச் சத்தம் மட்டுமே. கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுகள் அல்லவா. அவர்களின் துள்ளல்களுக்கும் துடிப்புகளுக்கும் கேட்கவா வேண்டும். அதுவும் வதனி இருக்குமிடம் தனியாகவே தெரிந்தது. வதனி தன் கண் பார்வையில் படும் விதமாகவே இளா தன்னுடைய இருப்பை அமைத்துக்கொண்டான். அவன் மூளை சொன்னது, செய்வது தவறு என்று. ஆனால் மனமோ சிறுகுழந்தையாய் அடம்பிடித்து மூளையின் சொல்லைக் கேட்க மறுத்தது.
ஒரு சிறு பெண்ணின் மீது ஆர்வம் வருவது நல்லதல்ல என்பதும், இப்போது தான் ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பதும் புரியவே செய்தது.
எல்லாவற்றையும் விடத் தன்னுடைய எண்ணங்களின் வடிவம் என்ன என்பதே அவனுக்குப் புரியவில்லை. மனம் குழம்பிய குட்டையாகக் கலங்கிக் கிடந்தது.
திருமண வயதில் தங்கை, அவளின் திருமணத்தைச் சிறக்க நடத்த வேண்டும். தன்னுடைய தாயாருக்கு கடைசிவரை யாரையும் எதிர்பாக்காமல் வாழ நிரந்தர வழி செய்ய வேண்டும். இவற்றிக்கு அவனுக்கு ஒரு நல்ல வேலை வேண்டும். அது எப்போது கிடைத்து இவற்றையெல்லாம் அவன் எப்போது செய்து முடிக்கப்போகிறான்.
இவை எல்லாவற்றையும் செய்தபின்னரே அவன் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும். அப்படி இருக்க இன்றைய அவன் மனநிலை, அவனின் திட்டங்கள் அனைத்தையும் தலை கீழாக மாற்றிவிடுமோ என்று பயந்து போனான்.
இன்றைய அவனின் சலனத்தின் பெயர் என்ன என்பதே கேள்விக்குறியாக இருந்தது. அதைவிட இதென்ன பார்த்த கணத்திலிருந்து ஒரு பெண்ணைப் பற்றியே சிந்திக்கிறோம் என்று தன்னைக் குறித்தே சற்றே அதிருப்தியும் ஆனான் அவன்!
தலையே வலித்தது இளவழகனுக்கு. முதலில் இப்படி யோசிப்பதை நிறுத்த வேண்டும். இது எல்லாம் தேவையற்ற சிந்தனைகள். இதன் பிறகு இவளை நான் சந்திப்பேனா என்பதே சந்தேகம். கண்ணில் படாதவள் கருத்திலும் பதியாமல் போய்விடுவாள் என்று எண்ணிக்கொண்டான்.
அவர்கள் இருவருக்குமான முடிச்சு ஆண்டவன் போட்டது என்பதை அவன் அறியவில்லையோ?


