தங்கையின் முடிந்த கல்யாணத்தின் மிகுதி வேலைகளுடனேயே இளாவுக்கு நேரம் சரியாக இருந்தது. உடல் களைக்காத போதும் மனதளவில் சோர்ந்துபோனான். அது ஏன் என்பதை அவனால் சிந்திக்கவும் முடியவில்லை. சிந்திக்க நேரமும் இல்லை!
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் வாணிக்கு சென்றான். தான் லண்டன் செல்லப்போவதையும் இனிமேல் அடிக்கடி கொழும்பு சென்று வரவேண்டி இருக்கும் என்பதால் வாணிக்கு வரமுடியாது என்பதையும் மூர்த்தியிடமும் தமிழ்வாணியிடமும் சொன்னான்.
வாழ்த்துக்களை தெரிவித்து, மறுபடியும் இலங்கைக்கே வந்துவிட வேண்டும் என்கிற அன்புக்கட்டளையையும் இட்டார்கள் மூர்த்தி தம்பதியினர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும் அவனுடைய கண்களும் மனதும் அதற்கு சொந்தமானவளை தேடியது. அவன் வாணிக்கு வந்ததன் நோக்கமே அவள் இங்கு வந்திருப்பாள், தன் பயணத்தை சொல்லும் சாக்கில் அவளுடன் பேசலாம் என்கிற ஆவலில் தான்.
அவளைக் காணாமல் ஏமாற்றம் மனதை சூழ்ந்தது.
“என்ன வாணி அக்கா. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி செய்ய பழைய மாணவர்கள் வருவார்களே. எங்கே ஒருவரையும் காணோம்….” சுற்றி வளைத்துக் கேட்டான்.
“என்னவென்று தெரியவில்லை இளா. நித்தி திருகோணமலையில் இருந்து இன்னும் வரவில்லை. வதனி நீங்கள் வராத நாட்கள் முழுதுமே வரவில்லை. அவள் வீட்டுக்கு ஒரு முறை போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது….”
ஏமாற்றம் மனதைக் கவ்வ, “ஓ…! அப்போ நா.. நான் வருகிறேன் மூர்த்தி அண்ணா, வாணி அக்கா….” என்றபடி எழுந்தான்.
“எப்போ மட்டில் லண்டன் செல்கிறாய் இளா?” மூர்த்தி விசாரித்தார்.
“நாளைக்கு கொழும்புக்கு போகிறேன். விசாவும் டிக்கட்டும் எடுக்க வேண்டும். நாலைந்து நாட்கள் அங்கே நிற்கவேண்டி வரும் என்று நினைக்கிறேன். பிறகு வவுனியா வந்துவிட்டுத்தான் போவேன். எப்படியும் இன்னும் இரண்டு கிழமைகள் இலங்கையில் இருப்பேன் என்று நினைக்கிறேன்.” என்றவன் அவர்களிடம் விடைபெற்று வாணிநிலையத்தின் வாசலுக்கு வந்தான்.
அங்கேயே நின்று வாணியை திரும்பிப் பார்த்தான்.
‘என் அழகு தேவதையை முதன் முதலில் பார்த்த இடம். குறும்பு மின்னும் கண்களுடன் அவனுக்கு ஒற்றைக்கையால் வணக்கம் சொல்லிய வதனி.. கேக்கை உண்டுவிட்டு வெட்கமும் கூச்சமுமாக முகம் சிவக்க அவனைப் பார்த்த வதனி.. அவன் திட்டியபோதும் துணிந்து அவனை லூசன் என்று கேலி செய்த வதனி.. காதலனாக மாறியவனை அந்த மீன் விழிகளால் வெட்கத்துடன் அவனை வருடிய வதனி.. அவனைப் பொய்யாக முறைத்த வதனி..’ என்று அவன் மனதைப்போல வாணி நிலையமெங்கும் வதனியே தெரிந்தாள்.
அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை அவனால் .
‘அழகிய கோலமாக நான் வரைந்த காதல் இன்று கலைந்து போனதா… காதல் கொண்டுவிட்டு கண்ணின் மணியாக போற்ற வேண்டியவளை தூற்றிவிட்டேனா…’
நடந்தவைகளை அசைபோட்டுக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அனைத்தையும் உணர்ந்தான் அவன்.
கண்களில் கண்ணீர் மின்ன நெஞ்சின் வலியை மறைக்க முயன்றபடி அவனை நிமிர்ந்து பார்த்த வதனி கண் முன்னால் வந்தாள்.
நீயா இதையெல்லாம் செய்தாய்? என்று கண்ணீருடன் கேட்டாள். துடித்துப்போனான் அவன்!
கண்ணே மணியே என்று கொண்டாடியவளை கொடிய வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டேனே என்று நினைத்தவனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. தான் செய்துவிட்ட பெரும் தவறுகளுக்கு அவளிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நினைத்து வதனியின் வீடு நோக்கி சைக்கிளை விட்டான்.
அன்று அவன் பேசிய பேச்சுக்கள் வாளாய் மாறி அவன் நெஞ்சை அறுத்தது என்றால் அவன் செய்த செயல் அந்த நெஞ்சுக்குள் இருந்த இதயத்தை பிடுங்கி எறிந்த வலியை கொடுத்தது.
சொல்லிய எனக்கே இந்த வலி என்றால் அதைக் கேட்டவளுக்கு எப்படி வலித்திருக்கும்.
‘எதையும் உணர்ந்து நான் செய்யவில்லையே. வனிம்மா, அதை அறிவாயா நீ? என் மனதில் இருந்த குழப்பங்கள், இயலாமை அனைத்தையும் உன்னை வடிகாலாக்கி உன்னிடம் கொட்டிவிட்டேனா. இந்த நிமிடம் வரை அதை நான் உணரவில்லையே….’
‘உன் முகம் பார்த்து மன்னிப்பை கேட்கும் தகுதியை கூட இழந்துவிட்டேனா….. இது தெரியாமல் உன்னை சொந்தமாக்கி கொண்டேன் என்று வேறு இறுமாந்திருந்தேனே.’
‘கண்களில் கண்ணீரோடு கையெழுத்து போடுகிறாயே என்று கோபம் கொண்டேனே…. திருமணத்தை பற்றி பேசும்போதே முகம் சிவந்தவளின் மனதை சிதைத்துவிட்டேன் என்பது புரியாமல் போய்விட்டதே. மூடன்! பாவி நான்….! பொறுமை அற்ற என்னைக் காதலித்ததால் கண்ணீரில் தவிக்கிறாயா…. என்னை மன்னித்துவிடு…. உன்னவனாய் இருந்து உன்னை காக்கும் தகுதி எனக்கில்லாமல் போய்விட்டதே…..’
‘என் நெஞ்சில் சாய்ந்து, உலகை மறந்து என் உயிரோடு உறவாடும் உன்னையா அப்படிச் சொன்னேன். இல்லை! இல்லவே இல்லை….! உன்னைக் கண்டதும் தடுமாறும் நான்தான் பெண் பித்தன்! இந்தக் கை… இந்தக் கைதானே அந்த செயலை செய்தது.இந்த வாய்தானே உன்னை அப்படி பேசியது…..’ வெறிகொண்டவனாய் தன் வாய் மீதே பலமாய் அறைந்துகொண்டான்.
பளார்.. பளார்.. என்று தொடர்ந்துகொண்டே இருந்தது அறைகள். பல்லில் பலமாய் பட்ட உதடுகள் வெடித்து இரத்தம் வழிந்தபோதும் அதை உணரும் நிலையில் அவன் இல்லை.
“தம்பி…. ஏன் உதட்டிலிருந்து இரத்தம் வழிகிறது?”
திடீரெனக் கேட்ட குரலில் ‘என்ன?’ என்பதாக பார்த்தான் இளா. அறிமுகமில்லாத ஒருவர் முன்னே நின்றார்.
அவர் சொல்வது எதுவும் புரியாமல் விழித்தான்.
“என்னை ஏன் பார்க்கிறாய் தம்பி. சைக்கிளால் விழுந்தாயா..? வாயில் அடிபட்டு இரத்தம் வழிகிறது. துடைத்து மருந்தைப் போடு அல்லது வைத்தியரைப் பார்” என்றுவிட்டுச் சென்றார் அவர்.
அவர் சொல்வது எதுவும் புரியாத போதும் தலையை ஆம் என்பதாக அசைத்தவனின் கைகளும் கால்களும் தானாகவே சைக்கிளை இயக்கியது.
எப்படி வீடு வந்தான் என்பதை அறியான். அவனின் நல்ல காலத்திற்கு மாதங்கியின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று வைதேகி அங்கு சென்றிருந்தார். அதனால் இளாவின் கோலம் அவரின் கண்களில் படவில்லை.
உடை மாற்றாது, உடல் கழுவாது, வழிந்த இரத்தத்தின் ஈரம் உணராது, வலி தெரியாது, உணர்வுகளை இழந்து அப்படியே கட்டிலில் விழுந்தான் அவன்.
‘வது…. வது… வது….’ என்று மனதில் மஞ்சம் கொண்டவளின் பெயரே மந்திரமாக உச்சரித்தது அவனின் உதடுகள்.
அடுத்தநாள் காலை எழுந்தவனின் உடல் நெருப்பாக கொதித்தது. அதை உணரும் நிலையில் அவன் இல்லை. தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு செல்ல தயாராகி தாயாரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
வீங்கி வெடித்திருந்த உதடுகளை பார்த்து பதறியவரிடம் இரவு வரும்போது சைக்கிளால் விழுந்துவிட்டேன் என்று சமாளித்தான்.


