மனதால் இன்னும் இன்னும் குன்றினான் இளா. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து சில வார்த்தைகள் அவர்களுடன் நட்புடன் உரையாடிவனை தன்னுடைய பிரத்தியோக அறைக்கு அழைத்து சென்ற சங்கரன், அவனின் பயணத்தைப் பற்றி விசாரித்தார்.
“இன்னும் நான்கு நாட்களில் லண்டன் செல்கிறேன் மாமா. நாளன்று கொழும்பு செல்கிறேன்.”
அதிர்ந்த சங்கரன், “என்ன தம்பி… நீங்கள் குடும்பமாக வீட்டுக்கும் வரவில்லை. நாங்களும் உங்கள் வீட்டுக்கு வரவில்லை.அவசரத்தில் அலங்கோலமாய் நடந்த திருமணத்தை சரி செய்ய வேண்டாமா? டிக்கட்டை தள்ளி போட்டிருக்கலாமே…” ஆற்றாமையுடன் கேட்டார்.
பதில் சொல்லத் தெரியாமல் அமைதியாக இருந்தான் அவன்.
தன் பதிலுக்காக அவர் காத்திருப்பது புரிய, “நான் சொல்வதை தப்பாக நினைக்க வேண்டாம் மாமா..” என்று ஆரம்பித்தான் அவன்.
அப்போதும் அவர் கேள்வியாக அவனைப் பார்க்க கண்களை ஒருமுறை மூடித்திறந்து, “முதலில் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டதுக்கும், போலிசுக்கு போவேன் என்று மிரட்டியதற்கும் என்னை மன்னித்துவிடுங்கள் மாமா…” என்றான் நயந்த குரலில்.
“அதை எல்லாம் நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. என் மகள் மேல் உள்ள அன்புதானே உங்களை அப்படிப் பேச வைத்தது. அதனால் அதை நீங்களும் மறந்துவிடுங்கள் தம்பி.” அவசரமாக சொன்னவரின் முகம் மலர்ந்திருந்தது.
தான் நினைத்ததைப் போல தன் மருமகன் நல்லவனே என்று கண்டதில் அவருக்கு நிறைவு.
“மாமா….. அதோடு வது…. அது வதனி, அவள் படிக்க வேண்டும். அதுவரை அவளின் மனதில் எந்தவிதமான குழப்பமும் வேண்டாம். இதுவரை நடந்தவைகளே போதும். அதனால்.. அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். அதுதான் நான் அங்கு வரவில்லை. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்…” என்று எதை எதையோ சொல்லி அவரின் மனதை நிறைய வைத்தான்.
“அதோடு மாமா… வதுவின் படிப்புச் செலவு.. இனி அனைத்து அவளின் செலவுகளையும் நானே பாக்கிறேன்…”
அவர் என்னவோ சொல்லவரவும் அவரைச் சொல்லவிடாது தானே முந்திக்கொண்டான்.
“உங்கள் மகளுக்கு நீங்கள் செய்வீர்கள் என்பது தெரியும். ஆனால் என் மனைவிக்கு நான் செய்ய நினைக்கிறேன். மறுக்காதீர்கள் மாமா…..” என்று கெஞ்சியவனிடம் சந்தோசமாக தலையை அசைத்தார் சங்கரன்.
இதைவிட வேறு என்ன வேண்டும் அவருக்கு.
“ஆனால் இது வதுவுக்கு தெரிய வேண்டாம். நான் உங்களுக்கு அனுப்பும் பணத்தை நீங்கள் அவளுக்கு செலவு செய்யுங்கள்…”
அந்த நொடியில் இருந்து இளவழகனின் ரசிகனாகிப்போனார் சங்கரன். அவன் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆமென்பதாக அசைப்பதே அவரின் வேலையாகிப்போனது. பின்னே.., மகளை மாணிக்கமாகத் தாங்கும் மருமகன் கிடைத்திருக்கிறானே!
அவரின் முகத்தில் இருந்தே அவரின் மனதைப் படித்தவனுக்கு அவரை நேருக்கு நேராய் முகம் பார்க்கும் துணிவு இல்லாது போனது. அந்த அறையைப் பார்ப்பதுபோல் பார்வையை திருப்பிக்கொண்டான்.
மனம் முழுவதும் குற்ற உணர்ச்சியில் தவிக்க அதை அவருக்கு காட்டாது மறைத்து அவரிடம் விடைபெற்றான்.
அவன் கொழும்பு செல்லும் நாளும் வந்தது.
அதைச் சொல்வதற்காக இளவழகன் சங்கரனுக்கு அழைத்தபோது, “நாங்களும் கொழும்பு வருகிறோம் தம்பி. என்னதான் அவளின் படிப்புக்காக என்று நீங்கள் அவளைப் பார்க்காவிட்டாலும் அவளுக்கு உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கும் இல்லையா….” என்றார் அவர்.
“ஏன் மாமா… வது… என்னைப் பார்க்க வேண்டும் என்றாளா….” தடுமாற்றத்துடனும் ஆவலுடனும் கேட்டான் இளவழகன்.
“அவளாகச் சொல்லவில்லை தம்பி. ஆனால் மனதில் விருப்பம் இருக்கும் இல்லையா… எங்களிடம் சொல்லத் தயக்கமாக இருக்கலாம். அதுதான் நானே அழைத்து வரலாம் என்று நினைத்துச் சொன்னேன். நீங்கள் இருவரும் பேசியது போலவும் இருக்கும். உங்களை வழியனுப்பியதாகவும் இருக்கும்.” என்கிறார் அவர்.
திருமணம் முடிந்தபோதும் தாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டுவது அவனுக்கு புரிந்தது. அதற்கு அவனால் என்ன செய்ய முடியும்? அதுதான் எல்லாவற்றையும் செய்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டானே.
ஆனாலும் அவளாகக் கேட்கவில்லை என்பதை அறிந்தவனின் மனம் ஏமாற்றத்தில் சுருண்டது. உன் செயலுக்கு பிறகும் அவள் உன்னைப் பார்க்க விரும்புவாளா என்று கேட்ட மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ஊமையானான்.
“சரிதான்.. எங்களுடனேயே வருகிறீர்களா மாமா…?”
“உங்களுக்கு நாளை மறுநாள் தானே விமானம். நாங்கள் நாளை இரவு இங்கிருந்து வெளிக்கிட்டு நாளன்று மதியம் அங்கு வருகிறோம். எங்களுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். விமானநிலையத்துக்கே நேராக வருகிறோம்.” என்றவர் பயணங்களுக்கு தேவையானவற்றைப் பற்றி பேசிவிட்டு தொலைபேசியை வைத்தார்.
தனது மொத்தக் குடும்பத்துடனும் காந்தன் கோபாலன் சகிதம் இளவழகனின் லண்டன் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது. கிட்டத்தட்ட புகையிரதத்தின் ஒரு பெட்டியின் முக்கால் வாசி இடமும் இவர்களுக்கே போதுமாக இருந்தது.
அந்தப் பெட்டியில் பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமுமே நிறைந்திருந்தது. ஆனால் இளாவோ தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். அவனின் கண்கள் ஜன்னல் வழியாக வெளியை வெறித்தது.
விடிவெள்ளியாய் வாழ்வில் வந்த சொர்க்கத்தை தவற விட்டுவிட்டேனே என்று அவன் மனது அடித்துக்கொண்டது!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இளவழகனின் மொத்தக் குடும்பமும் கூடி இருந்தது. எல்லோரின் முகத்திலும் கவலை அப்பி இருக்க, வைதேகியோ கண்கள் கலங்குவதும் அதை துடைப்பதாகவும் இருந்தார். இதுவரை கோபத்தில் அவனுடன் பாரா முகமாக இருந்தவருக்கு நடந்தவைகள் அனைத்தும் மறந்து, அவரின் சின்ன மகன் தன்னை விட்டு வெகுதூரம் பிரிந்து செல்லப் போகிறானே என்பது மட்டுமே நினைவில் இருந்தது.
இளாவின் கண்களும் மனமும் வாசல் பக்கமாய் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது.
நண்பர்களிடம், “அம்மாவை அப்பப்போ சென்று பார்த்துககொள்ளுங்களடா…” என்று சொன்னான்.
“நீ கவலைப்படாமல் போ இளா. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கதிர் அண்ணாவும் இருக்கிறார். நீ எந்த விதமான கவலையும் இன்றி போய்வா….” என்று தைரியம் சொன்னார்கள்.
காந்தன், கோபாலன் இருவருக்கும் வதனிக்கும் இளாவுக்கும் நடந்த திருமணம் பற்றித் தெரியாது. அதைச் சொல்லி அவளையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல நினைத்தவனுக்கு, தான் செய்த செயல்கள் அதைச் சொல்லும் தைரியத்தை கொடுக்க மறுத்தது.
அவளின் வரவை எதிர்பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று தெரிந்த போதும், நெடுந்தூரம் அவளை விட்டுப் பிரிந்து செல்லப்போகும் இந்த நேரத்தில் அந்த அழகு முகத்தை ஒருதடவை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கினான்.
‘இனி எப்போது திரும்புவேனோ? எத்தனை வருடங்கள் பிடிக்குமோ? அதற்கிடையில் அவளை பார்த்துவிடமாட்டோமா…’ உள்ளுக்குள் தவியாய் தவித்தான்.
இப்போது வருவாள்.. இன்னும் கொஞ்சத்தில் வந்துவிடுவாள்.. நான் போவதற்குள் எப்படியும் வந்துவிடுவாள்.. கண்கள் நிறைய காதலுடன் காத்திருந்தது அவனின் புண்பட்ட மனம்.
அவனது காத்திருப்பைப் பொய்யாக்காமல் வந்தார் சங்கரன். ஆமாம் சங்கரன் மட்டுமே வந்தார். அவரைப் பார்த்து வரவேற்பாய் தலை அசைத்தவனின் கண்கள் ஆவலுடன் தனது மனதுக்கு இனியவளை தேடியது.


