நேசம் கொண்ட நெஞ்சமிது 20 – 4

தேடித் தேடி பார்த்தவனின் கண்களுக்கு ஏமாற்றமே கிட்டியது.

“வ… மாமியும் வதனியும் வரவில்லையா மாமா….” ஏமாற்றத்தோடு கேட்டான்.

மகளைப் பார்க்கமுடியாததால் மருமகனின் முகம் சோர்ந்துவிட்டதாக நினைத்து வருந்தினார் சங்கரன்.

“அது தம்பி.. வருவதற்கு தான் எல்லோரும் வெளிக்கிட்டோம். வதனி குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டாள். நடக்கவே முடியவில்லை அவளால். அதுதான் அவளுக்கு துணையாக கலையை விட்டு விட்டு நானும் மணியும் வந்தோம். உங்களுக்கு தெரியாதில்லையா… இவன் என்னுடைய உயிர் நண்பன் மணிவண்ணன்.” என்று தனக்கருகில் நின்ற மணிவண்ணனை அறிமுகப்படுத்தினார்.

அப்போதுதான் சங்கரனுக்கு பக்கத்தில் ஒருவர் நிற்பதையே கவனித்தான் இளா.

அவருக்கு வணக்கத்தை வாய் சொன்னபோதும், மனமோ என்னைப் பார்க்கப் பிடிக்காமல் தான் அவள் வரவில்லை என்பதை அடித்து சொல்லியது.

அவருடன் பேசிக்கொண்டிருந்தவனை, “ஒருநிமிடம்” என்று தனியாக அழைத்து சென்ற காந்தன்,

“யாரடா அது? அவரை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே..” என்று விசாரித்தான்.

சிறிது தயங்கிய இளா, “அவரைப் பார்த்தாயோ தெரியாது. ஆனால் அவரின் மகளை உனக்குத் தெரியும்.” என்றான் வேதனை நிறைந்த குரலில்.

கேள்வியாக பார்த்த காந்தனுக்கு, “அவர் வதனி… மதிவதனியின் அப்பா…” என்றான் தொடர்ந்து.

“அவர் ஏன் உன்னைப் பார்க்க வரவேண்டும்?”

வேதனை நிறைந்த சிறு புன்னகையை சிந்தியவன், “தன்னுடைய மகளின் கணவனை வழியனுப்ப வந்திருக்கிறாரடா…” என்றதும் கோபாலனுக்கும் காந்தனுக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.

“என்னடா சொல்கிறாய்? நாங்களும் உன்னுடன் தானே இருக்கிறோம். எங்களுக்கு தெரியாமல் இது எப்போது நடந்தது. மூர்த்தி அண்ணாக்கு தெரியுமா? அவரும் எங்களுக்கு சொல்லவில்லையே. இந்த வதனி… அண்ணா அண்ணா என்று எப்போதும் என்னுடன் சண்டை பிடிப்பாள். அவள் கூட சொல்லவில்லையே.. என்ன மனிதர்களடா நீங்கள்?” பொரிந்து தள்ளினான் கோபாலன்.

“சாரிடா.. திடீர் என்றுதான் நடந்தது. எங்கள் இரண்டு குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்….”

நடந்தவைகளை அறிந்த நண்பர்கள் அவனை முறைத்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் பிரியப்போகிறவனை திட்டவும் முடியாமல் அவனின் செயலை பொறுக்கவும் முடியாமல் வாயை அழுந்த மூடிக்கொண்டு நின்றார்கள்.

“எவ்வளவு அழகிய நட்பு எங்களுடையது. இல்லையா இளா?” எள்ளலுடன் கேட்டான் கோபாலன்.

“சாரிடா…”

“அதைப் பிறகு பேசிக்கொள்வோம். வதனிக்கு என்ன நடந்தது என்று தெரியுமா உனக்கு…” என்று கேட்டான் காந்தன்.

“அவளுக்கு என்ன?” பதட்டம் தொற்றிக்கொள்ளக் கேட்டான் இளவழகன்.

“குளக்கட்டில் வைத்து அவளை யாரோ.. ஒரு குடிகாரன்…..” நண்பனின் முகம் பார்த்துச் சொல்ல முடியாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான் காந்தன் .

“வெறியில் வந்த ஒருவன் தகாத முறையில் நடக்கப் பாத்திருக்கிறான். வதனிக்கு தெரிந்த யாரோ அந்த நேரத்தில் அங்கு வந்ததில் அவள் தப்பிவிட்டாள். ஆனாலும் கைகளில் எல்லாம் காயத்துடன் கிழிந்த உடையுடன் அவளை வைத்தியசாலைக்கு கொணர்ந்தபோது நான் எதேர்ச்சையாக பார்த்துவிட்டேன். நம் நண்பன் சுரேஷ் இருக்கிறானே.. அவன்தான் அவளுக்கு வைத்தியம் பார்த்தான். ஒரு இளம் பிள்ளையைப் பற்றியது என்பதால் நான் யாரிடமும் இதைப்பற்றி பேசவில்லை.”

கேட்டவனுக்கோ மூளை கலங்கியது. மனம் துடியாய் துடித்தது. முதல் நாளே சொன்னாளே குளக்கட்டால் வரப் பயம் என்று. அப்படியானவளை தனியாக விட்டுவிட்டு வந்தேனே. என்னைக் காதலித்து அவள் படும்பாடு…

‘அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்…’ நடுங்கிப்போனான்.

நிற்கமுடியாமல் தடுமாறியவன் சோர்ந்து கதிரையில் தொய்ந்து அமர்ந்தான். தலையை தன் கைகளிலேயே தாங்கியவனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது.

“அவளுக்கு ஒன்றும் ஆகவில்லைடா…” அவனின் தோளில் ஆதரவாகத் தட்டி மற்றவர்களுக்கு கேட்காத குரலில் சொன்னான் காந்தன்.

“உனக்கு ஒன்றும் தெரியாதா?” மெல்லிய குரலில் அவனிடம் கேட்டான் காந்தன்.

இல்லை என்பதாக தலையை ஆட்டினான் இளவழகன்.

புதிராக இருந்தது காந்தனுக்கு. கணவனுக்கு மனைவி பற்றி எப்படித் தெரியாமல் போகும்?

சுற்றிவர ஆட்கள் நிற்கையில் ஒரு அளவுக்குமேல் அவனை தூண்டித் துருவவும் முடியவில்லை. பேசாமல் அவன் தோளை தட்டிக்கொடுத்தான்.

நெஞ்சின் வலியை பொறுக்க முடியாதவன் சங்கரனிடம் சென்று, “மாமா…! உங்கள் கைத்தொலைபேசியை தருகிறீர்களா? வதுவிடம் பேச வேண்டும்…” என்று கேட்டான்.

அவனது தொலைபேசியால் பேசமுடியுமே என்று யோசித்த போதும் தன்னுடையதை எடுத்து நீட்டினார் சங்கரன்.

நடுங்கும் கரங்களால் இலக்கங்களை அழுத்திவிட்டு, பட படக்கும் நெஞ்சுடன் அடுத்த முனையில் தொலைபேசியை எடுப்பதற்காய் காத்திருந்தான் இளா.

“அப்பா….” மெலிந்த குரலில் அழகிய நாதமென வந்தது. அந்தக் குரலை தன் உயிரோடு கலந்து இதயப் பெட்டகத்தில் புதையலாய் சேமித்துக்கொண்டான் அவன்.

“வதூஊஊஊஉ….” தவிப்போடு, பரிதவித்து நடுங்கும் குரலால் மிக மிக மென்மையாக அழைத்தான் அவன்.

அடுத்த நொடியே அழைப்பு துண்டிக்கப் பட்டது!

விக்கித்து விரக்தியின் முழு வடிவமாக தொலைபேசியை வெறித்தான் இளா.

அவனுக்கான விமானத்தின் அறிவிப்பு கேட்க எல்லோரும் அவனை சூழ்ந்துகொண்டனர். எதுவும் புரியாது, எதையும் செய்யும் திறன் இல்லாது கைத்தொலைபேசியையே வெறித்தவனை கதிரவன் உலுக்கினார்.

“என்னடா இது? உள்ளே போக வேண்டாமா?”

அதற்கு மேல் கதைப்பதற்கோ சிந்திப்பதற்கோ முடியவில்லை அவனால். தவிப்புடன் நண்பர்களை பார்க்கவும், “லண்டன் போனபிறகு எங்களுடன் பேசு.” என்றார்கள் அவர்கள்.

உயிரைப் பிரிந்து உணர்வுகள் இல்லா உடலாக மட்டுமே தனது தாயகத்தைக் கடக்க விமான நிலையத்துக்குள் நடந்தவனின் நடையில் உயிர்ப்பு மருந்துக்கும் இல்லை.

எப்படி விடை பெற்றான். யார் என்ன சொல்லி விடை கொடுத்தார்கள் எதுவுமே நினைவில் இல்லை.

ஒருவழியாக விமானதிற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தவனின் விழிகள் கலங்கிக்கொண்டே இருந்தது அவனின் மனதைப்போல!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock