வதனிக்கு வாணிநிலையத்துக்கு போகவே பிடிக்கவில்லை. நித்தியும் இல்லை. அதைவிட அங்குபோய் தேவையில்லாத நினைவுகள் இன்னும் அவளை சொல்வதும் அவளுக்கு பிடிக்கவில்லை.
இதை எல்லாவற்றையும் தாண்டி மனதினில் அரித்துக்கொண்டிருக்கும் வேதனையை, வலியை போக்கும் வழியும் தெரியாமல் தனக்குள்ளேயே பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தாள்.
இதை விடப் பெரிய கொடுமை, பெற்றவர்களின் முன்னிலையில் மலர்ச்சியுடன் இருப்பதாக நடிப்பது. உடலாலும் மனதாலும் முற்றிலுமாக ஓய்ந்தே போனாள். இனி அடுத்து என்ன? பதில் தெரியா கேள்வி.
‘வாழ்வின் இறுதிவரை மாறா வடுவை அல்லவா தந்துவிட்டான். ஒரு தடவை ஏமாந்தவள் தானே மறுபடியும் ஏமாற்றலாம் என்று நினைத்து அன்று தொலைபேசியில் அழைத்தானோ? ச்சே, என்ன மனிதன் அவன்!’
வீட்டு முற்றத்தில் இருந்த ஆலமரத்தடியில் சாய்ந்து இருந்தவளின் கண்கள் கண்ணீரில் நனைந்துகொண்டே இருந்தது. கண்களை இறுக்கி மூடியவள், ஆழ மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன்படுத்த முயன்றாள். முடியவில்லை!
“வனிம்மா… குளித்துவிட்டு வாயேன். சாப்பிடலாம்….”
தாயாரின் அழைப்பில் சிந்தனை கலைந்து, மனதை சமன் படுத்தியபடி எழுந்து சென்றாள். குளித்துவிட்டு ஏனோதானோ என்று ஒரு பழைய ஆடையை உடுத்திக்கொண்டு வந்தவளை பார்த்த கலைமகள், “என்னம்மா இது, பொட்டு எதுவும் வைக்காமல் வருகிறாய். வைத்துக்கொண்டு வா. இப்படி வெறும் நெற்றியாக பெண்பிள்ளைகள் இருக்க கூடாதுடா….” என்கிறார் மெல்லக் கடிந்து.
“பொட்டு! அது ஒன்றுதான் இப்போது குறை அம்மா. பொட்டு பூ என்று வைத்துக்கொண்டு திரிந்ததால் தான் கண்டவனின் பார்வையும் என் மேல் பட்டு, இன்று இந்த நிலையில் துடிக்கிறேன்…” கொதிப்புடன் வார்த்தைகளை கொட்டினாள்.
“என்ன வனி, இப்படி சொல்கிறாயே?” கண்கள் கலங்கியது கலைமகளுக்கு.
எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தவள் தாயாரின் கலங்கிய கண்களை கண்டதும், அவரை கட்டியணைத்து, “மன்னித்து விடுங்கள் அம்மா. ஏதோ நினைவில் தெரியாமல் பேசிவிட்டேன்..” சொன்ன வதனியும் கலங்கிப்போனாள்.
“சரிடா.. விடு! நீ போய் பொட்டை வைத்துக்கொண்டு வா……”
இல்லை அம்மா. வேண்டாம் விடுங்கள்! எனக்குப் பிடிக்கவில்லை! பொட்டு வைக்காவிட்டால் என்ன நடந்துவிடும்? மங்களம் அது இது என்று சொல்லாதீர்கள். இதுவரை மங்களமாக இருந்து நான் கண்டது என்னம்மா? காயப்பட்டதுதானே மிச்சம். ச்சு விடுங்கம்மா…. பொட்டும் மண்ணாங்கட்டியும்! ஒன்றும் வேண்டாம்…!”
தாயின் முகம் தெளியாமல் இருக்கவே, “அம்மா, கிறிஸ்ட்டியன் பெண்கள் அனைவரும் பொட்டா வைக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள்? அல்லது சிங்களப் பெண்கள்? யாருமே வைப்பது இல்லைதானே.. அவர்களுக்கு என்ன நடந்தது. எல்லோரும் நன்றாக வாழவில்லை….” மனதின் ஆத்திரம் வார்த்தைகளை இஸ்திரமாக இறக்கியது.
பாரம்பரியத்தில் ஊறிய அந்தப் பெண்மணியால் வதனி என்ன சொன்னபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“ஆனா கண்ணம்மா, வெறும் நெற்றி… பார்க்க சகிக்கவில்லையேடா. பொ..”
“இப்போது உங்கள் பிரச்சினை என்ன. என் நெற்றி வெறுமையாக இருப்பது தானே….” என்று கேட்டவள் உள்ளே சென்று திருநீறினை பூசிக்கொண்டு வந்தாள்.
“இப்போது என் நெற்றி வெறுமையாக இல்லை. இனியாவது சாப்பாடு போடுகிறீர்களா? பசிக்கிறது அம்மா…”
மனம் சரியாகதபோதும் மகளைக் கட்டாயபடுத்தும் வலு அவரிடம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பவளிடம் கடுமையை காட்டவும் முடியவில்லை.
‘இதுவும் சரியாகும்…’ என்று மனதை தேற்றிக்கொண்டு மகளுக்கு உணவை இட்டார்.
மாலையில் வந்த கணவரிடமும் சொல்லிப் புலம்பினார்.
“அவளின் விருப்பபடி விட்டுவிடு கலைம்மா. நொந்த மனதுக்கு பிடித்ததைச் செய்து ஆறுதல் பட்டுக் கொள்ளட்டும். நாம் அருகில் இருக்கிறோம் தானே. அவளை கவனித்துக்கொண்டால் போதும். காதலித்ததை தவிர நம் மகள் இதுவரை எந்தத் தவறும் செய்தது இல்லை தானேடா. இனிமேலும் செய்ய மாட்டாள். அதனால் நீ கலங்காதே….” என்று மனைவியை தேற்றினார்.
ஆனால் அவரின் மனதிலும் சில நிரடல்கள் இருந்தது. அதை மனைவியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை அவர்.
ஏற்கனவே நடந்த அதிசய திருமணத்தில் பலவிதமாய் குழம்பித் தவிக்கும் மனைவியை இன்னும் வேதனைக்கு உள்ளாக்க அவருக்கு விருப்பம் இல்லை.
தனிமையில் முடங்கும் மகளையும் தனக்குள் புழுங்கும் மனைவியையும் கவனிப்பதிலேயே அவரது நாட்கள் விரைந்தது.
தான் லண்டன் நலமாக போய்ச் சேர்ந்துவிட்டதாக இளவழகன் அழைத்துச் சொல்லி இருந்தான்.
‘மகளுடன் அவன் கதைக்கவில்லையே… வதனியும் அவனின் அழைப்புக்காக காத்திருப்பதாக தெரியவும் இல்லை. ஏன் அவனின் நினைவு கூட அவளுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை…’
இவர்களுக்கு நடுவிலும் எதுவோ ஒன்று நடந்திருப்பதை ஊகித்தார் சங்கரன். அது என்ன என்றுதான் விளங்கவில்லை. இனி பொறுத்திருந்துதான் வருவதை கண்டுகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மகளின் படிப்பும் அவரின் பொறுமைக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.
ஏதோ ஒரு கதியில் விரைந்த நாட்களில், வதனியின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான பெறுபேறும் வந்து சேர்ந்தது. மிக நல்ல பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்திருந்தாள்.
பெற்றவர்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதும், வாழ்க்கைப் பாடத்தில் தோற்று விட்டேனே… இதில் சித்தியடைந்து எதைக் காணப்போகிறேன் என்று வெறுத்த வதனியின் மனது இன்னும் விரக்தியை வேண்டிக்கொண்டது.
ஒரு நாள் மாலை , “கலை மாமி…..” என்கிற அழைப்புடன் வதனியின் வீட்டுக்கு வந்தார்கள் மூர்த்தி தம்பதியினர். அவர்களை கண்டதும் சற்றே கண்கள் கலங்கியது வதனிக்கு.
அதை அவர்களுக்கு காட்டாது, “வாணி அக்கா..! மூர்த்தி அண்ணா..! வாருங்கள்….வாருங்கள்…” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
“எங்களுடன் யாரும் கதைக்கவேண்டாம். நாங்கள் கலை மாமியையும் கரன் மாமாவையும் மட்டும்தான் பார்க்க வந்தோம்.”
வாணியின் வார்த்தைகளைக் கேட்டதும் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது வதனிக்கு.
திகைத்துப்போனார் வாணி. வதனிக்கு அவரின் பேச்செல்லாம் எந்த மூலைக்கு? அப்படியானவள் இப்படிக் கண்ணீர் விடுகிறாளே!
“வனி..! என்ன இது? எதற்கு அழுகிறாய்.. உன் வாணி அக்கா நீ வாணிக்கு வரவில்லை என்கிற கோபத்தில் அப்படி சொல்கிறாள். நீதான் எங்கள் வாணியில் படித்த மாணவர்களில் அதிக புள்ளிகள் எடுத்தவள். அதனால் உனக்கு பரிசு வாங்கி வந்தோம். இந்தா.. இதைப் பிடி! ” என்று பரிசைக் கொடுத்தார் மூர்த்தி.
முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு நன்றி சொல்லி பரிசினை வாங்கியவள், அதை வைத்துவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டாள். கட்டிலில் விழுந்தவளின் உடலோ அழுகையில் குலுங்கியது.
‘என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் என் மேல் உயிராய் இருக்க, நான் உயிரைவைத்த ஒருவன் என் உயிரைப் பிடுங்கி விட்டானே. அம்மா வலிக்கிறதே.. எப்படி ஏமாந்தேன்.. கடவுளே, ஏன் என்னை அவன் கண்ணில் பட விட்டாய்? ஏன் என் மனதில் காதலை வரவைத்தாய்? இப்படி அழ வைக்கவா…..’ குமுறியது அந்த சிறு குமரியின் நெஞ்சம்.
மூர்த்தியும் வாணியும் திகைத்து விட்டனர். அவர்கள் அறிந்த வதனி இவள் கிடையாது. அவளுக்கு சிரிக்க மட்டுமே தெரியும். இருவரும் கலைமகளை கேள்வியாகப் பார்க்கவும், கலங்கிய தனது கண்களைத் துடைத்தபடி அவர் சொன்னவற்றை கேட்டவர்களுக்கு மூளை வேலை செய்ய மறுத்தது.
என்னவெல்லாம் நடந்திருக்கிறது. இளவழகன் நல்லவன்தானே…. ஏன் இப்படி நடந்துகொண்டான்.
கேள்விகள் பல இருந்தபோதும், “கலை மாமி, இளா மிகவும் நல்லவன். அது எனக்கு நன்றாகத் தெரியும். அதே போல நம் வனியை நன்றாக பார்த்துக்கொள்வான். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏதோ கஷ்ட காலம் போல.. அதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது.” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே சங்கரனும் வந்து சேர்ந்தார்.
அவர்களை வரவேற்றவரை கேள்வியாக மூர்த்தி பார்க்கவும் ஆம் என்பதாக தலையசைத்தார் சங்கரன். வதனியின் அறைக்குள் சென்று, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தபோதும் மனம் பிசைந்தது வாணிக்கு. எவ்வளவு கலகலப்பான பெண். ஆனால் இளா… அவனும் நல்ல பிள்ளையே….
எல்லோரும் அமைதியாக இருக்க அதைப் பார்க்க முடியாத மூர்த்தி சங்கரனிடம், “கரன் அண்ணா, நாங்கள் ஒரு முக்கியமான விஷயம் உங்களுடன் பேச வந்தோம்.” என்று ஆரம்பித்தார்.
என்ன என்பதாக பார்த்த சங்கரனிடம், “அது… நாங்கள் இந்தியா செல்ல இருக்கிறோம்….” என்கிறார்.
“ஏன்? உங்களுக்கு என்ன பிரச்சினை?”
“பிரச்சினை எதுவுமில்லை அண்ணா… ஆனால் குழந்தை….” சிறிது அமைதியை துணைக்கு அழைத்த மூர்த்தி, “அது… குழந்தை விஷயம்… இந்திய வைத்தியர்களைப் பார்த்தால் நல்லது என்கிறார்கள் இங்கு இருக்கும் வைத்தியர்கள். அதுதான் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்கிறாள் வாணி…..” என்கிறார்.
கலங்கும் கண்களை சிமிட்டி மறைக்கப் பார்த்த வாணியை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டார் கலைமகள்.
அவரின் தோள் சாய்ந்த வாணி, “எனக்கும் குழந்தை பிறக்கும் தானே மாமி. என் செல்வம் என்னை அம்மா என்று கூப்பிடும் தானே…” என்று கேட்டார் ஏக்கத்தோடு.
“நிச்சயமாக! நான் சொல்கிறேன் பார்… உனக்கு குழந்தை பிறக்கும். அதுவும் நம் வனியைப்போல உன்னை ஆட்டிப் படைக்கும்…” என்றார் பாசத்துடன்.
வாணியின் முகம் தாமரையாய் மலர்ந்தது என்றால் வதனியின் முகமோ கருகியது.
‘உங்களுக்கு குழந்தை பிறக்கட்டும் வாணி அக்கா. ஆனால் என்னைப்போல வேண்டவே வேண்டாம்..’ என்று நினைத்துக்கொண்டாள்


