மாணவ மாணவியராலும் பெற்றோர்களினாலும் நிறைந்திருந்த வாணி கல்விநிலையம் தன்னுடைய பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.
மேடையில் வாணியின் ஆசிரியர்கள் அமர்ந்திருக்க, நடுநாயகமாக வவுனியா கல்வித்திணைக்கள அதிகாரி அமர்ந்திருந்தார். வரவேற்புரை வாசித்த மாணவன், சில வார்த்தைகள் பேசுமாறு கல்வித்திணைக்கள அதிகாரியை அழைத்தான்.
தனது பேச்சைத் தொடங்கிய அவர் வாணிநிலையம் கல்வியை மட்டுமல்லாது, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதையும், பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிக மிக பிரயோசனமான கருத்தரங்குகளை இலவசமாக வழங்குவதையும், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாழும் இல்லங்களுக்கு மாணவர்களுடன் இணைந்து மாதா மாதம் செய்யும் உதவிகள் என்று அனைத்தையும் மனதாரப் புகழ்ந்தார்.
இந்த வருடத்தின் வவுனியாவின் சிறந்த பெண்மணி என்கிற பட்டத்தை பெற்றுக்கொள்வது வாணியின் நிறுவனர் என்று அறிவித்தார்.
கரகோஷம் காதைப் பிளந்தது. அங்கிருந்த அனைவருமே அந்தப் பட்டம் தங்களுக்கே வழங்கப்பட்டது போன்று பூரித்தனர்.
தொடர்ந்து பேசியவர், “அந்த பட்டத்துக்கான கேடயத்தை பெருமையுடன் பெற்றுக்கொள்ள, வாணியின் நிறுவனர் திருமதி மதிவதனி இளவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.” என்று அறிவித்தார்..
கரகோஷம் நிற்பேனா என்று வானைப் பிளந்தது. எல்லோரினது முகமும் மத்தாப்பாய் மகிழ்ந்திருக்க, அந்தப் பரிசினை பெற்றுக்கொள்பவளின் முகமோ கல்லுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று இறுகிக் கிடந்தது.
மெலிந்த மேனியில் சாரியினை உடுத்தி, நிமிர்ந்து நடந்தவளின் நடையில் ஒரு நிமிர்வு. நேர் பார்வையை பார்த்த விழிகளிலோ தெளிவு. உதடுகளோ எனக்கு சிரிக்க தெரியாது என்றது. கண்களோ கடினத்தின் மறு பதிப்பு நான் என்றது. மொத்தத்தில் அவளை பார்ப்பவர் அனைவருக்கும் ஒரு வித பயம், மரியாதை, விலகி நில் என்கிற எண்ணமே தோன்றும்.
கம்பீரமாய் மேடை ஏறியவள் நன்றியை தெரிவித்து பரிசினை பெற்றுக்கொண்டாள். வந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை சொன்னவளின் குரலிலும் பேச்சிலும் தெளிவு. கம்பீரம் அவள் குரலில் கனகச்சிதமாய் பொருந்தி இருந்தது.
ஒரு ராணியின் கம்பீரம் குறையாமல் மேடையை விட்டு இறங்கி வந்தவள், தன்னுடைய அலுவல் அறைக்குள் நுழைந்துகொண்டாள். நுழைந்தவளின் கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளி. அதனை அலட்சியமாய் சுண்டி எறிந்தது அவளின் விரல்கள்.
நான் திருமதி இளவழகனா??? ஆமாமில்லை….! ஊருக்கு நான் இளவழகனின் மனைவி….! ஆனால் எனக்கு அவன்??? கணவனா???
அந்த நினைவே அவளுக்கு அமிலமாய் இருந்தது! ஆற்றாமையுடன் சுழல் நாற்காலியில் அமர்ந்தவள் மனப்பாரம் தாங்காமல் மேசை மீதே கவிழ்ந்தாள்.
“மதி, கையை தா! நீ பட்ட கஷ்டத்துக்கு உனக்கு கிடைத்த வெற்றி இது. உன்னுடைய நான்கு வருடத்து உழைப்புக்கு கிடைத்த பரிசு இது. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. என் தோழி ஒரு சிறந்த பெண்மணி என்பது எவ்வளவு பெரிய விஷயம். கையை தாடி என்கிறேன்… நீயானால் தூங்குகிறாய்….” என்றபடி அவளின் கையை பற்றவும், சில்லிட்டு இருந்த கையினை பார்த்து பயந்துபோனான் வாசன்.
“மதி! ஏய் மதி! உடம்புக்கு என்னடி? மாலை வரை நன்றாகத்தானே இருந்தாய்…” என்றபடி அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
சிறிதே கலங்கி இருந்த கண்களைக் கண்டவன் பதறி, “மதி! என்னமா…? என்னவென்று சொல்லேண்டி…. என்ன செய்கிறது…” என்று பதறினான்.
அவனின் அக்கரையிலும் பாசத்திலும் கரைந்தவள் தன்னை சமாளித்து, “ஒன்றுமில்லை வாசா.. கொஞ்சம் தலை வலிக்கிறது.”என்றாள் முணுமுணுப்பாக.
“இந்த நேரம்.. மாத்திரை வேண்டாம்.” என்றவன் அங்கிருந்த ஜூசினை கப்பில் ஊற்றி, “இந்தா, இதைக் குடி…” என்று கொடுத்தான்.
அவள் அதைக் குடித்து முடித்ததும், “வா மதி… கொஞ்சம் காற்றாட நடந்துவிட்டு வருவோம்…” என்று அழைத்தான்.
“இல்லை வாசா.. விழா நடந்துகொண்டு இருக்கும்போது நாம் எப்படி வெளியே செல்வது…”
“நீ என்ன, விழாவை உன் கையிலா தாங்குகிறாய்? அது அதன் பாட்டில் நடக்கும். நாம் தூரம் செல்ல வேண்டாம். இந்தச் சாலை முனை வரை நடந்துவிட்டு வருவோம். வா!” என்றவன் வெளியே சென்று சிலரிடம் விழாவின் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு வந்து அவளை அழைத்துக்கொண்டு சாலையில் நடந்தான்.
“ஏன் மதி, என்னதான் கோபம் என்றாலும் ஒருவரின்மேல் உண்மையாக நாம் வைத்த நேசம் என்றும் நம்மை விட்டுப் போகாது இல்லையா…” என்று கேட்டான் வாசன்.
நடந்தவளின் கால்கள் அப்படியே நிற்க, கண்களோ திகைப்பில் விரிந்து வாசனை வெறித்தது.
“எதற்காக நிற்கிறாய்? நட..! நாம் நடு ரோட்டில் நிற்க வரவில்லை. நடக்கத்தான் வந்தோம்…”
அமைதியாக நடையைத் தொடர்ந்தவளின் மனமோ பாறையாய் இறுகிக் கிடந்தது.
“என்ன மதி, எதுவும் பேசாது அமைதியாக வருகிறாய்?”
“என்ன பேச?”
“மனதில் உள்ளதைப் பேசு…”
“என் மனதில் எதுவும் இல்லை….”


