“அப்படி என்றால் எதற்காக கண் கலங்கினாய். எதற்காக திடீரென்று தலை வலி வந்தது? யாராவது எதையாவது நினைவு படுத்தி விட்டார்களோ…”
இளவழகன் என்கிற பெயரே நான்கு வருடங்கள் கடந்தும் அவளை இந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அவன் அவளின் மனதில் எவ்வளவு ஆழத்தில் பதிந்திருக்கிறான்.
அவளை நினைக்கவே அவளுக்கு கசப்பாக இருந்தது. ஆனாலும் எதையும் நண்பனிடம் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
“என்னைக் கேட்டால்… தலை வலியைப் போய்க் கேள், ஏன் வந்தது என்று…..” என்று எரிச்சலுடன் சொன்னாள்.
“ஹீஈஈஈஈ… நீ சொன்ன பகடிக்கு இவ்வளவு சிரித்தாள் போதுமா…”
வதனியின் இதழ்கள் இப்போது மெய்யாகவே சிறு புன்னகையை பூசிக்கொண்டது. அது சில நொடிகளுக்கு மட்டுமே! அந்தச் சிரிப்போடு சேர்ந்து அவனின் நினைவுகளும்……
இதே வீதியில் ஒருவர் பின் ஒருவராக எத்தனை தடவைகள் சைக்கிளில் சென்றிருப்போம். அத்தனையும் நடிப்பு! காதல் என்கிற பெயரில் என் உணர்வுகளோடு அல்லவா விளையாடி விட்டான்.
இந்த இடைப்பட்ட நாட்களில் அவள் தூங்கிய இரவுகளை விட வேதனையில் துடித்த இரவுகளின் எண்ணிக்கை தானே அதிகம்.
இன்று அவளொரு சாதனைப்பெண். அந்த சாதனைக்கு காரணம், அவளை உடனிருந்து கொள்ளும் அவனின் நினைவுகள். அதிலிருந்து தப்பிக்க அல்லவா அவள் வாணியின் வளர்ச்சியில் தன்னை புதைத்துக்கொண்டாள்.
அப்படி இருந்தும் கூட அவனின் நினைவுகளை இம்மியளவும் அவளால் மறக்கமுடியவில்லை!
காலம் மனப்புண்ணை ஆற்றும் என்பார்கள். இங்கே அப்படி எதுவும் ஆறியதாக தெரியவில்லையே.. இப்போது நினைத்தாலும் ரணமாக வலிக்கிறதே…
ஆனால் இந்தக் கால இடைவெளியில் மனதை ஒரு முகப்படுத்த கற்றுக்கொண்டாள். மற்றவர்கள் முன் நடிக்க கற்றுக்கொண்டாள். அந்தவகையில் வெற்றிதான்!
இதழ்களில் கசப்பான புன்னகை நெளிந்தது.
“என் சிரிப்பு என்ன அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?”
வாசன் கேட்கவும் சட்டென தன் முகபாவத்தை மாற்றினாள்.
“இதை விட கேவலம் உன் சிரிப்பு. நீ என் நண்பனாகப் போய்விட்டதால் இதோடு நிறுத்திக்கொண்டேன்…”
“அடிப்பாவி! ஒரு சின்னப் பெடியனின் மனதை இப்படி கல்லால் அடித்துவிட்டாயே. அதில் குடி வருபவள் ஓட்டை வீட்டிலா குடியிருப்பது….”
கலகலப்பான சிரிப்பு வராவிட்டாலும் முகம் நிறைந்த மெல்லிய சிரிப்பொன்று வதனியின் முகத்தில் வந்தது.
எதை வைத்துச் சிரிக்கலாம் என்று காத்திருக்கும் முந்திய வதனி கண் முன்னால் வந்துபோனாள் வாசனுக்கு. ஆனாலும் இந்த மட்டிலாவது மீண்டாளே…..அப்படி என்ன காயம் அவள் மனதில்…
இந்தியா செல்லப் போகிறோம். வாணியை யாரிடம் கொடுப்பது என்று அன்றொருநாள் மூர்த்தி சங்கரனிடம் கேட்டபோது, வாணியை நான் நடத்துகிறேன் என்றாள் வதனி உறுதியுடன்.
தொடர் கல்வியையும் அவளின் வயதையும் நினைத்து சங்கரன் முதல் தமிழ்வாணி வரை மறுத்தபோதும், பிடிவாதத்துடன் ஏற்றுக்கொண்டவள், அவர்களின் மன நிம்மதிக்காக வாசனையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்.
உதவி செய்கிறாயா என்று வதனி கேட்டதும் மட்டக்களப்பில் பார்த்துக்கொண்டிருந்த வேலையைக் கூட விட்டுவிட்டு வவுனியாவில் தனக்கு ஒரு வேலையையும் தேடிக்கொண்டு வதனிக்கு பக்க பலமாக இருப்பவன் வாசன். அப்படி இருந்த போதிலும் அவளின் வாழ்வின் ரகசியங்கள் அவனிடம் அவள் சொன்னதில்லை.
சங்கரன் மூலம் அவளின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட போதும் அந்த திருமணத்திற்கு முதலில் நடந்தவைகளோ அல்லது இப்போது அவளின் மனநிலையையோ அவளும் சொன்னதில்லை. அவனும் கேட்டதில்லை.
அவள் மனதில் எதுவோ ஒன்று இருந்து அவளை வாட்டுகிறது என்பதை மட்டும் வாசன் அறிவான். அவன் அறிவான் என்பதை அவளும் அறிவாள். அதனாலேயே வதனியின் முகம் வாடும் சந்தர்ப்பங்களில் தன்னால் முடிந்தவரை அவளை தேற்றிவிடுவான் வாசன். இன்று போலவே!
வாணி நிலையத்தை தானே நடத்துவது என்று முடிவானதும் தன்னுடைய தொடர் கல்வியாக ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை தேர்ந்தெடுத்தாள் வதனி.
ஒரு பக்கம் கல்லூரி மறுபக்கம் வாணிநிலையம் என்று கஷ்டபட்ட போதும், மனதின் வலியை மறக்க அவளுக்கு அந்த முழு நேரக் கஷ்டம் தேவையாகத்தான் இருந்தது. அவள் தடுமாறிய ஒவ்வொரு வேளையும் அவளைக் காத்தது வாசன்.
இந்த நான்கரை வருடங்களும் இரவு பகலாக அவள் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த பரிசை நினைத்துக் கூட அவளால் முழுதாக மகிழ முடியவில்லை.
காரணம் அவள் வாழ்வில் விழுந்ததோ மரண அடி!!
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினான் இளவழகன். தரையில் கால் பதித்ததும் நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டான். நம் தேசத்தின் காற்றை நான்கரை வருடம் கழித்து சுவாசித்த நிறைவு முகத்தில் இருந்தபோதும், புன்னகையை தொலைத்திருந்தது அவனின் முகம்.
தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனின் கண்களில் அவனின் அம்மா, அண்ணா குடும்பம், அக்கா குடும்பம் அனைவரும் முகம் நிறைந்த மகிழ்வுடன் நின்றார்கள்.


