தங்கை மாதவி கணவனுடன் வெளிநாட்டில் வசிக்கச் சென்றுவிட்டாள்.
கதிரவனுக்கு கடை வைப்பதற்கு பண உதவி செய்து அவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுத்தவன், தமக்கை குடும்பத்துக்கு நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு உதவியதில் அவர்கள் வாழ்வும் உயர்ந்திருந்தது.
அப்பாவின் வீட்டை புதுப்பித்து கொடுத்தது மட்டுமல்லாமல், கணிசமான தொகையை தாயின் பெயரில் வைப்பாக இட்டிருந்தான். எதற்காகவும் யாரிடமும் அவர் கையேந்தக் கூடாது என்பது அவனுக்கு!
அவர்களின் உடைகளில் இருந்த செழிப்பும், முகங்களில் இருந்த பூரிப்பும் அவனின் உழைப்பின் கடுமையைச் சொன்னது. நினைத்ததை நடத்திவிட்டோம் என்கிற எண்ணம் வந்தபோதும், அதை நினைத்து மகிழ முடியாமல் மனச்சுமை அவனை அழுத்தியது.
அனைவரின் வாழ்வையும் வழப்படுத்தி விட்டேன். ஆனால் என் வாழ்வு??? ஆரம்பிக்க முதலே கருகிவிட்டதா? இதயம் ஒருதடவை நின்று துடித்தது.
எதையும் இப்போது நினைக்க வேண்டாம். அதற்குதான் மீதி வாழ்வு மொத்தமும் இருக்கிறதே என்று எண்ணியவன், தன் குடும்பத்தவர்களை பார்த்து கையை அசைத்தான்.
கிட்டத்தட்ட நான்கரை வருடப்பிரிவின் ஆற்றாமையை, அவனைத் தழுவி, கட்டியணைத்து, கண்ணீர் விட்டு தேற்றிக்கொண்டார்கள் எல்லோரும்.
“இப்படி இளைத்து விட்டாயே தம்பி. உன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டாமா….?” அவனின் கோலத்தை பார்த்து ஆதங்கத்தோடு கேட்ட தாயாரின் தோளில் தலை சாய்த்தவன்,
“இப்படியாவது இருக்கிறேனே என்று சந்தோஷ படுங்கள் அம்மா…..” என்றான் புன்னகையோடு.
“தம்பி…..?” அவரின் கண்களில் கண்ணீர் மின்னியது.
“விடுங்கள் அம்மா. அதுதான் வந்துவிட்டேனே. இனி நீங்கள் சமைத்து தருவதை சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொண்டால் ஆச்சு.”
“அண்ணா, அண்ணி, ராகவி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் தம்பி?
“மிக நன்றாக இருக்கிறார்கள் அம்மா. ராகவிக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. மாமா சொல்லி இருப்பாரே…”
மகிழ்வாக எதை எதையோ பேசியபடி அவர்களது வாகனத்தை நோக்கி நகர்ந்தது அந்தப் பெரிய குடும்பம். இளவழகன் எடுத்துக் கொடுத்த அந்த வாகனத்தை மாதங்கியின் கணவர் சந்திரன் ஓட்ட மொத்தக் குடும்பமும் அதற்குள் புகுந்துகொண்டது.
என் மகன் லண்டன் போகும்போது புகையிரதத்தில் பயணம் செய்த நாம் இன்று நம் வாகனத்தில் சொகுசாக செல்கிறோமே…இது என் மகனின் கடுமையான உழைப்பால் கிடைத்த வாழ்வு என்று நினைத்துக்கொண்ட வைதேயின் மனம் நிறைந்திருந்தது.
கண்கள் கலங்க, முகம் விகசிக்க பெருமையுடன் இளவழகன் முகத்தை பார்த்தவரின் கண்களில் அவனின் தோற்றம் பட்டது.
ஆங்காங்கே எட்டிப் பார்த்த நரை முடிகளும், கண்ணோர சுருக்கங்களும், இறுகி இருந்த தாடையும், ஒட்டி இருந்த கழுத்தையும் பார்க்கப் பார்க்க கண்ணீர் வந்தது.
முப்பது வயது கூட ஆகாதவனுக்கு இந்தளவு வயோதிகம் வருமா… ஏன்? என் பிள்ளை உடலால் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த சான்றா இவை.. இல்லை மனதால் அவன் பட்ட வேதனைகளுக்கு சான்றா… இல்லை இரண்டுமா. எதுவாய் இருந்தாலும் அவன் அனுபவித்தவைகள் அவனின் வயதையும் மீறியவை என்பது புரிந்தது.
ஆதுரத்துடன் அவன் தலையை வைதேகி தடவவும், அவரின் ஸ்பரிசத்தில் மூடி இருந்த கண்களைத் திறந்து கேள்வியாக தாயை பார்த்தான்.
ஒன்றுமில்லை என்பதாக தலையை அசைத்தவரின் உதடுகளிலோ ஒரு வருத்தப் புன்னகை. அதை பார்த்தவனின் கைகள் அவரை அணைக்க, அவனது உதடுகளில் ஒரு சமாதானப்புன்னகை.
தாயை அணைத்தவாறே ஜன்னலோரத்தில் தலை சாய்த்தவனின் விழிகள் மூடிக்கொண்டபோதும் மனது விழித்துக்கிடந்து துடித்துக்கொண்டிருந்தது.
சங்கரனிடம் தான் வருவதை தெரிவித்தவன், அவர் குடும்பத்துடன் விமானநிலையம் வருவதாகச் சொல்லவும் மறுத்துவிட்டான். அவரின் மனது சங்கடப்படுவது அறிந்தபோதும் அவனால் முடியவில்லை. அன்று அவளை எதிர்பார்த்து ஏமாந்தபோது வலித்த வலியின் மிச்சம் இன்னுமே இருந்தது. இன்னொரு தடவை அதை அனுபவிக்கும் வலிமை அவனிடம் இல்லை.
தினமும் காணும் கனவுகளில் அவனுடன் கூடிக்களித்தவள் கண்களை திறந்த போதெலாம் அருகிலின்றி ஏமாற்றியதைப் போல இன்னும் ஏமாறும் சக்தியை இழந்திருந்தான்.
இங்கு வரும்வரை வந்துவிட வேண்டும் என்று இருந்த மனது, வந்தவுடன் வந்தது தப்போ என்று யோசித்தது.
இலங்கையின் காற்றை சுவாசித்தபோதே, அனைத்து நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக படை எடுக்கிறதே…..வவுனியாவில் என்னவளை காணும் நேரம் வரும்போது அதைத்தாங்க என்னால் முடியுமா…..
மனதை திடப்படுத்திக்கொண்டோம் என்று நினைத்து வந்தவனுக்கு இந்த பரிதவிப்பு எதிர் பாராததாக இருந்தது. இப்போதே வதுவை பார்க்கவேண்டும் என்று ஒரு மனது துடித்தது என்றால் இன்னொரு மனதோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்க்கப் போகிறாய் என்று கேட்டது.
தாயகத்தின் வாசம் தந்த சுகமா அல்லது மனதின் ஆழத்தில் நிரந்தரமாக குடியேறியவளின் அருகாமைக்கு வந்துவிட்டோம் என்கிற எண்ணமா… எதுவோ ஒன்று அவனை ஆழ்ந்த துயிலுக்கு இட்டுச் சென்றது. கொழும்பில் இருந்து வவுனியா செல்லப் பிடிக்கும் அந்த ஆறுமணி நேரமும் அவன் தூக்கத்திலேயே கழித்தான்.
இந்த நான்கரை வருடத் தூக்கத்தையும் சேர்த்துத் தூங்க நினைத்தானோ…..
வவுனியாவை வாகனம் நெருங்கவும் இவன் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளவும் சரியாக இருந்தது.
ஏதோ ஒரு ஆறுதல்.. மனதை இதமாக தாக்கியது இளாவிற்கு.
நான் வாழ்ந்த நகரம். என்னை மடி தாங்கிய என் தேசம். என் தாய் எனை தாங்கியதும் இங்கே! என் முதல் பாதடி பதிந்ததும் இங்கே! என் மனம் காதல் வாசத்தை நுகர்ந்துகொண்டதும் இங்கே! என் காதலியை கண்டுகொண்டதும் இங்கே! என் வாழ்வை தொலைத்ததும் இங்கே!
இளவழகன் முகத்தை வெளியே நீட்டவும், வவுனியா நகர காற்று அவன் முகம் கோதி சுகம் விசாரித்துக்கொண்டது.
ஏதோ ஒருவித பரவசம். அதுதான் நம் தேசத்தின் மீதான பாசம்!!


