இளாவின் குடும்பம் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தபோது, அவன் மனதில் சற்றே வியப்பு எட்டி பார்த்தது. இந்த நான்கு வருடங்களில் அவன் வீட்டில் மட்டுமல்ல அந்தத் தெரு முதல் சாந்தசோலை கிராமம் வரை ஏன் வவுனியாவே மாறி இருந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எவ்வளவு உண்மை!
ஆனால் அவன் மனநிலை மாறிவிட்டதா???இல்லையே…! மனதின் அழுகையும், இதயம் கிடந்து துடிப்பதும் மாறவில்லையே! ஆறாக்காயமாக அல்லவா மாறிப்போனது. வீரியம் அறியாமல் விட்ட வார்த்தைகள் அவன் வாழ்க்கையையே வீணடித்து விட்டிருந்தது.
அக்கா வீடு, அண்ணா வீடு என்று எல்லா வீட்டுக்கும் ஒரு தடவை சென்று வந்தவன், குளித்து தாயின் கையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு உணவு வாங்கிச் சாப்பிட்டான்.
இப்படியே, இழந்தவைகள் அனைத்தும் மீண்டும் கிடைத்துவிடாதா என்று ஆசை கொண்ட நெஞ்சம் ஏங்கியது.
உடை மாற்றி வெளிக்கிட்டவன், தமையனிடம் சொல்லி தனக்கென்று வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
“அம்மா, நான் மாமாவை பார்த்துவிட்டு வருகிறேன்..” என்றவனின் குரல் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் திடமாக வந்தது.
“பார்த்துவிட்டு வா தம்பி. முடிந்தால் உன் மனைவியையும் அழைத்து வா…” மறைமுகமாக நானும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன் என்பதை தெரிவித்தார் வைதேகி.
தாயின் மனமாற்றத்தில் மனம் நெகிழ்ந்தபோதும், வருவாளா… என்னால் அழைக்கத்தான் முடியுமா….என்று ஓடிய எண்ணங்களை எப்போதும் போல் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டான்.
“வருகிறேன் அம்மா…” என்றவன் தாய் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் புறப்பட்டான்.
அவன் சென்றதும், சுவாமி அறைக்குள் சென்ற வைதேகி, “சித்தி விநாயகா, என் மகன் பட்ட கஷ்டங்கள் போதும். அவர்களுக்குள் என்ன நடந்திருந்தாலும், இனியாவது அவர்களை சேர்த்து வையப்பா….” என்று மனமுருகி வேண்டிக்கொண்டார்.
இந்தக் கால இடைவெளியில் எத்தனையோ தடவைகள் வதனியை வைதேகி சந்தித்து இருக்கிறார். முதல் தடவை சந்தித்தபோது, சங்கரன் வைதேகியுடன் கதைத்தபோதும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்ற வதனியை பார்த்த வைதேகிக்கு பத்திக்கொண்டு வந்தது. மாமியார் என்கிற மரியாதை இல்லாமல் நிற்பதைப் பார் என்றும் நினைத்துக்கொண்டார்.
ஆனால் மகளின் நிலையை நொடியில் புரிந்துகொண்ட சங்கரன், “வனிம்மா, இவரை உனக்குத் தெரியுமா?” என்று கேட்கவும், தெரியாது என்பதாக தலையை அசைத்தாள் வதனி.
வைதேகி திகைப்புடன் பார்க்க, சங்கரன் சங்கடமான ஒரு முறுவலை அவர் புறம் சிந்திவிட்டு வதனி பக்கம் திரும்பி, “இவர் இளாவின் அம்மா வைதேகி…” என்று அறிமுகப்படுத்தினார்.
இப்போது அதிர்ந்தது வதனி. ஆனாலும் தன்னை சமாளித்தவள், “வணக்கம் அம்மா…” என்று பணிவாகவே வணங்கினாள்.
“அன்று, உங்களை அவள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்…” என்று சங்கரன் சொல்லவும், வைதேகிக்கும் புரிந்தது.
எழுத்து நடந்த அன்று இவள் இளாவையே நிமிர்ந்து பார்க்கவில்லையே.. என்னை மட்டும் பார்த்து இருப்பாளா என்று எண்ணம் ஓடியது அவருக்கு.
அதன் பிறகு வைதேகியை எங்கு கண்டாலும் வந்து நலம் விசாரிப்பதை வதனி தவறவிட்டதே இல்லை. ஆனால் அதைத் தாண்டி எதையும் பேசியதும் இல்லை. அவர் பேசுமளவுக்கு வாய்ப்பை வழங்கியதும் இல்லை.
பெரிதாக ஒட்டுதல் தோன்றாத போதும் நல்ல பெண்ணே என்கிற எண்ணம் வைதேகிக்கு தோன்றி இருந்தது. இல்லாவிட்டாலும் அவளிடம் கோபம் கொள்ளக் காரணம் இல்லை என்பதும் புரிந்தது. மகனின் காதலை அறிந்த நிமிடம் அவள் மீது ஏதோ ஒரு ஒட்டாமை தோன்றியது உண்மை. காலம் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றி இருந்தது அவரிடம்.
மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த இளா, முதலில் மாமாவை சந்தித்து பேசுவோம் என்று நினைத்து, வண்டியை சங்கரன் கடைக்கு விட்டான். அங்கே கடைக்குள் சங்கரனைக் காணாததால், அவரின் அலுவல் அறைக்குள் லேசாக கதவைத் தட்டிவிட்டு நுழைந்தான்.
“வணக்கம் மா….” உற்சாகமாக வணக்கம் சொல்லிக்கொண்டு நுளைந்தவனின் உதடுகள் அப்படியே உறைந்தபோதும் அகமும் முகமும் ஒருசேர மலர்ந்துபோனான்.
அவனின் வாழ்க்கையே பெண்ணாக மாறி, அங்கே சுழல் நாற்காலியில் கம்பீரமாக இருந்தவள் வதனி!
மலர்ந்தவனின் முகமோ நொடியில் சருகாய் கருகியது. காரணம், அவளின் முகத்தில் இருந்த மாற்றம். கன்னங்கள் ஒட்டி, கண்கள் மட்டுமே அந்த முகத்தில் தெரிந்தது. மிகவும் மெலிந்து, கழுத்து எலும்புகள் தெரிய, உருக்குலைந்து இருந்தவளின் தோற்றம் உன்னால்தானடா என்று சொல்லாமல் சொல்லியது.
“யார்?” என்பதாய் நிமிர்ந்த வதனியின் கண்கள், விரிந்து பின் அதிர்ந்து விழித்தது.
விரிந்த விழிகளில் அவனை உள்வாங்கியவளுக்கு நடந்தவைகள் நினைவில் வர, அந்த நிமிடமே அவள் மனது அணலாய் கொதித்தது.
இளவழகன் அவளுடனான சந்திப்பை எதிர்பார்த்தான் தான். ஆனால் இப்படி ஒரு எதிர்பாரா சந்திப்பை சிந்திக்கவே இல்லை.
வதனிக்கும் தெரியும், அவன் இன்று வவுனியா வந்திருப்பான் என்று. இன்றே சந்திப்போம் என்று அவளுமே எதிர்பார்க்கவில்லை.
நொடியில் தன் முகபாவங்ககளை மறைத்தவள், நேர் கொண்ட பார்வையாய் அவனை பார்த்தாள். அதை எதிர்கொள்ளும் சக்தி இளாவுக்குதான் இல்லாமல் போனது.
ஆனாலும், “எப்படி இருக்கிறாய் வது?” கம்பீரமாக கேட்க நினைத்தும், கரகரத்த குரல் கலங்கித்தோய்ந்தது.
அவள் கண்களில் சீற்றம் ஒன்று எட்டி பார்த்த போதும், இவ்வளவு நாட்களாக கற்றுக்கொண்ட பொறுமையை கையில் எடுத்து,
“என்னுடைய பெயர் மதிவதனி!” என்றாள் நிமிர்வாக.
கண்டிப்பும் கலந்து வந்த குரலில் மலைத்துப்போனான் இளா.
‘என் வதுவுக்கு இப்படிக் கண்டிப்பான குரலில் பேசத்தெரியுமா….’
ஓடிய சிந்தனையை நிறுத்தி, “தெரியும்” என்றான் ஒற்றை சொல்லாக.
கல்லாக இருந்த முகத்தில் கடுப்பை கலந்தவள்,
“வந்த விடயம்?” என்று அலட்சியக்குரலில் கேட்டாள்.
அவள் தன் மேல் கோபமாக இருப்பாள் என்பதும், அவளின் முகம் பார்த்து கதைக்கும் தகுதி தனக்கில்லை என்பதும் அவன் அறிந்ததே. ஆனாலும் அவளின் கடுமையை நேரில் எதிர்கொள்ளும்போது அதைத் தாங்கமுடியாது நெஞ்சம் சிதைந்தது.
இந்த நான்கரை வருடங்களாக பழகிய ஒன்றுதான். எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் இதயம் விண்டு விண்டு வலித்தது. பூவிலும் மென்மையானவளை இப்படி மாற்றிய பெருமை எனக்குதானே என்று இளக்காரமாக தன்னை பற்றியே நினைத்தவன்,
வலி தாங்கிய விழிகளை இறுக மூடித்திறந்து, “மாமாவை பார்க்க வந்தேன்…” என்றான் மெதுவாக.
“மாமா??? யார் யாருக்கு மாமா?” மிக்க கடுமையான குரலில் கேட்டாள்.
“உன்னுடைய அப்பா.. என் மனைவியின் அப்பா.. என் மாமா..!” தயக்கமாக சொன்ன போதும் சொல்லத் தயங்கவில்லை அவனும்.
“ஓ…! நீங்கள் தொட்டுச் சென்ற பெண்கள் அத்தனை பேரினதும் அப்பாக்கள் உங்கள் மாமாக்களோ?”
கத்தியால் கூட இப்படி குத்தி கிழிக்க முடியுமா தெரியவில்லை. அந்த அளவுக்கு ரத்தம் சிந்தியது அவனது இதயம்.
மனம் வலித்தது. இதயம் நொறுங்கியது. தினமும் நடப்பதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறை வலிக்கும்போதும் வலியின் அளவு மட்டும் குறையவே இல்லை அவனுக்கு.
நான் சொன்ன வார்த்தைகளை கேட்கும் போது எனக்கே இவ்வளவு வலிக்கிறதே.. அவள் என்ன பாடு பட்டிருப்பாள்….
“நீ மட்டுமே என் மனைவி. அதனால் அவர் மட்டுமே என் மாமா….” கோபப்படுவாள் என்று தெரிந்தபோதும் தயங்காது சொன்னான்.


