“ஓ……..” என்று இழுத்தவளின் விழிகளோ ஏளனமாக அவனை மேலும் கீழும் அளந்தது.
“மாமா என்று பாசமாக அழைப்பது போல் நடித்து, அவரை என்ன செய்யப் போகிறீர்கள்? அவருக்கு வேறு பெண் பிள்ளைகளும் கிடையாதே.. அவர்களை நாசமாக்க. அல்லது நம்பவைத்து கழுத்தறுக்கப் போகிறீர்களா?? இல்லை… மொத்தக் குடும்பத்தையும் உயிருடன் புதைத்துவிட்டு இந்த சொத்துக்களை பறிக்கப் போகிறீர்களா?” அடக்கப்பட்ட கோபத்தில் அழுத்தமாக, நிதானமாக வந்தது அவளிடமிருந்து.
“வதூஊஊஊ!!!” குரல் நடுங்கியது அவனுக்கு.
“ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய். நான் அப்படிப்பட்டவனா….. இப்படியெல்லாம் பேசாதே வது. வலிக்கிறது. மிக மிக வலிக்கிறது…”
“வலிக்கிறதா….? வலிக்கிறதா…..? ஆமாம் நீங்கள் அப்படி பட்டவர் இல்லைதான். பட்டும் புரியாமல் போய்விட்டது எனக்கு. நம்பி பழகியவளை விலைமாதுக்கு ஒப்பிட்ட மிகச் சிறந்தவர் நீங்கள், அப்படித்தானே….!!!”
“காதல் என்கிற பெயரில் ஒரு பெண்ணுடன் பழகிவிட்டு, பழகியதற்கு கூலி கொடுத்த நல்லவர் நீங்கள், அப்படித்தானே…!!!”
“உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் பெண்கள், அடுத்த வீட்டு பெண்கள் எல்லோரும் மானங்கெட்டவர்கள் என்று நினைக்கும் நியாயவாதி நீங்கள், அப்படித்தானே…!!!”
அவள் உதடுகளில் இருந்து அடியெடுத்து வைத்த ஒவ்வொரு சொற்களும் இடியென தாக்கியது இளாவின் காதல் நெஞ்சத்தை!
ஏற்கனவே உயிர் மூச்சுக்காய் தவித்திருந்த அவன் இதயம் இன்னும் துடியாய் துடித்தது.
கண்கள் கலங்கி சிவந்தது அவனுக்கு. ஆற்றாமையுடன் அவளை வெறித்தவனின் நிலை கண்ணில் பட்டதும், முகத்தை திருப்பிய வதனியின் உள்ளம் கொதிகலனாய் கொதித்தது.
வலிக்கிறதாமா.. அத்தனையும் நடிப்பு. இப்படித்தானே இன்றுவரை நான் தவிக்கிறேன். மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல்…. எவ்வளவு பாடு படுகிறேன் இன்றுவரை. கண்ணை மூடினால் இவன் வீசி எறிந்த பணத்தின் நினைவும் அதன் பொருளும் தானே கண் முன்னே வருகிறது.
வீட்டில் பெற்றவர்களுக்கு முன்னால் நடிப்பு வாழ்க்கை. கல்லூரியிலோ மற்றவர்களுடன் இணையவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் நரக வாழ்க்கை.
வாணியில் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்கிற வெறியுடன் போராட்ட வாழ்க்கை. இது போதாது என்று விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் நான் துடிக்கும் துடிப்பு. பெற்றவர்களிடமும் உண்மையாக இருக்க முடியாமல் உற்ற நண்பனிடம் கூட உள்ளதைச் சொல்ல முடியாமல் எரிமலையாக கொதிக்கிறதே என் மனம். அதை விடவா நீ துடிக்கிறாய்.. எண்ணங்கள் எல்லை தாண்டவும், எதையும் நினையாதே மனமே என்று தனக்கு தானே கட்டளை இட்டவள் ஆத்திரம் தீராமல் அவன் புறமாக திரும்பினாள்.
முகத்தில் வேதனை அப்பட்டமாக தெரிய உதடுகள் இறுக இரத்தக்கட்டியாய் சிவந்திருந்த கண்கள், என்னை மன்னித்துவிடேன் என்று கெஞ்சியது.
அவன் விழி வழி வந்த கடிதத்தை வாசிக்க விருப்பமின்றி முகத்தை திருப்பிக்கொண்டாள் வதனி.
அவனை பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆத்திரம் கூடியது. நடிப்பு! அத்தனையும் நடிப்பு! இந்த நடிப்பை பார்த்துதானே ஏமாந்தேன்.
“இன்னும் எதற்கு இங்கே நிற்கிறீர்கள்? போங்கள் வெளியே!” உத்தரவாக ஆணையிட்டவளின் கை வாசலை நோக்கி நீண்டு வெளியே செல்லும் வழியை காட்டியது.
“போ… போகிறேன் அதற்கு முதல் என்னை மன்னித்துவிடு…..”
மறுபடியும் நெஞ்சு கொதித்தது வதனிக்கு.
“எதற்கு?” அவனுக்கான அடுத்த அடிக்கு அடி போட்டது அவளின் ஒற்றை வார்த்தைக் கேள்வி.
“நான் செய்த தவறுகளுக்கு”
“மன்னிக்கும் எதையும் நீங்கள் செய்யவில்லை!”
“புரிகிறது. ஆனாலும் என்னை மன்னித்துவிடு.” பணிவாகவே வேண்டுதல் இட்டான் அவன்.
ஆங்காரம் கொண்டது அவள் மனது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது மன்னிப்பு கேட்கிறாயா என்று நினைத்தவள்,
“மன்னித்துவிட்டு?” உக்கிரமாக வந்தது கேள்வி.
என்ன பதில் சொல்வான்.. பேசாமல் நின்றான் இளா.
“மன்னித்துவிட்டு?? சொல்லுங்கள்! மன்னித்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? என் உடலில் அங்கே இங்கே தொடுவதற்கு மறுபடியும் உங்களை அனுமதிக்க வேண்டுமா? இல்லை இல்லை! இப்போது அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது இல்லையா. இப்போது உங்களுக்கு என்னுடைய அனுமதி தேவை இல்லை. இனிமேல் தொட்டாலும் அதற்காக பணம் தரவேண்டிய கட்டாயமும் இல்லை…”
“இப்போதல்லவா புரிகிறது. அன்று எதற்காக ஒற்றை காலில் நின்று திருமணத்தை நடத்தினீர்கள் என்று. உங்கள் கெட்டித்தனத்தை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது.” எகத்தாளம் எள்ளல் அனைத்தும் நிறைந்திருந்தது அவளின் கோபக்குரலில்.
விக்கித்து நின்றான் இளவழகன்.
என் வதுவா.. வார்த்தைகளை அமிலமாக கொட்டுபவள் என் வதுவா.. பேச்சற்று மூச்சற்று நின்றவனை பார்க்கப் பிடிக்காமல்,
“இப்போது நீங்கள் வெளியே போகிறீர்களா இல்லை நான் போகவா…” கோபமாக கேட்டாள் அவள்.
“நான்… நானே….” வார்த்தைகள் வர மறுத்தன அவனுக்கு. அவளை திரும்பித் திரும்பி பார்த்தபடியே வெளியேறினான்.
எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது போலிருந்தது இளவழகனுக்கு. அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் சாட்டையாக மாறி அவனை அடித்து சாய்த்தது. உண்மைதானே… அவள் கேட்டதில் என்ன தவறு.
தனக்கு இது தேவைதான் என்று புரிந்தபோதும் உயிரின் மொத்தமும் துடிப்பதை தடுக்க முடியவில்லை. தன் வீட்டு மொட்டை மாடியில் வெறும் பாயில் மல்லாந்து படுத்திருந்தவனின் கண்களின் ஓரத்தில் சிறு கசிவு.
தன் நெஞ்சின் மேல் கைகளை கோர்த்தவனுக்கு, ஒரு காலத்தில் அதிலே மஞ்சம் கொண்டவளின் நினைவு முற்றாக தாக்கியது. தன்னை தனிமையில் கண்டால் அவள் செய்யும் முதல் வேலை, அவனின் நெஞ்சில் தஞ்சமாவது. எத்தனை தடவை கேலி செய்திருப்பான்.
அவள் சாய்ந்துகொள்ளும் நெஞ்சத்தை தடவிப்பார்த்தவனுக்கு அவளின் அருகாமை, அது தரும் சொர்க்கம், தான் அனுபவித்த அவளின் காதல் அத்தனையும் வேண்டும் என்று உள்ளமும் உடலும் தவித்தது.
எவ்வளவு அருமையான காலம். பழகியது சில மாதங்கள் தான். ஆனாலும் ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்த வாழ்க்கையை அல்லவா வாழ்ந்தோம். ஆற்று வெள்ளமாய் என்மீது கொட்டிய அன்பை தூக்கி எறிந்துவிட்டேனே…..
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல் அவளுடனான அவனின் வசந்த காலத்தை மனக்கண்ணில் கண்டவனுக்கு, என்றும் இல்லாது இன்று அதன் அருமை இன்னும் இன்னும் அதிகமாகத் தாக்கியது. இழந்துவிட்ட சொர்க்கத்தின் அருமை மிக நன்றாக புரிந்தது.
இங்கு வந்ததே தப்போ என்று மறுபடியும் எண்ணினான். அங்கே இருந்திருக்க அவளாவது நிம்மதியாக இருந்திருப்பாள். ஆனால் அவளும் சந்தோசமாக இருப்பதுபோல் தெரியவில்லை.
எப்படி மாறிவிட்டது அவளின் தோற்றம். மேனி மெலிந்து, பொலிவை இழந்து, வெளிறிய முகத்துடன்.. எதுவோ முகத்தில் இன்னும் குறைவாக இருந்ததே…. அது என்ன… அவளின் தாமரை முகத்தை மனதில் கொண்டு வந்தவனின் கண்ணில் பொட்டில்லாமல் இருந்த அவளின் வெறும் நெற்றி அப்போதே கண்ணில் பட்டாலும் இப்போதுதான் கருத்தில் பதிந்தது.
இப்படி தன்னையே கவனிக்காமல் விட்டுவிட்டாளே. குற்றம் செய்தவன் நானே நன்றாக இருக்கும் போது அவள் ஏன் இப்படி இருக்க வேண்டும். மாமாவிடம் சொல்லி அவளை கவனிக்கச் சொல்லவேண்டும். என்று நினைவுகளில் அவளுடனே வாழ்ந்தவனின் கண்கள் மூடி இருந்த போதும், மனமோ அவளுடன் கூடிக் குலாவியது.
அடுத்த நாள் காலை எழுந்தவன் சங்கரனுக்கு அழைத்தான்.
“மாமா, நான் இளா பேசுகிறேன்…” என்றதுமே அவரின் உற்சாகக்குரல் இடை மறித்தது.
“எப்படி இருக்கிறீர்கள் தம்பி? பயணம் நன்றாக இருந்ததா? களைப்பெல்லாம் போய்விட்டதா?” மகளின் வாழ்வு இனி மலர்ந்துவிடும் என்கிற எண்ணமே அவரை உற்சாகப்படுத்தியது.
“நேற்றே நான் அழைக்க நினைத்தேன். ஆனால் நீங்கள் வந்த களைப்பு ஆற வேண்டும் என்றுதான் அழைக்கவில்லை.”என்றவரின் பேச்சிலிருந்தே வதனி அவரிடம் எதையும் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டான்.


