“எப்போது இங்கே.. நம் வீட்டுக்கு வருகிறீர்கள் தம்பி…?” ஆவல் நிறைந்த குரலில் கேட்டவரின் மனதை புரிந்து கொண்டவனின் மனம் நெகிழ்ந்தது.
“வருகிறேன் மாமா. நிச்சயமாக வருவேன்… ஆனால் அதற்கு சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் மாமா..”
அவனின் அந்த நம்பிக்கைக் குரலே அவருக்கு ஒரு நிம்மதியை கொடுக்க, இப்போது தானே வந்திருக்கிறார். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்த அவரும் அவனின் பேச்சை ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவருடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தான் இளா.
வதனி ஆசிரியராக பணிபுரியும் பூந்தோட்ட பள்ளிக்கே சென்று அவளறியாமல் பார்த்துவிட்டு வருவோமா என்று தோன்றிய எண்ணத்தை பெரும் சிரமப்பட்டு தவிர்த்தவன், இப்போது வவுனியா கல்வி திணைக்களத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் கோபாலனை காணச் சென்றான்.
இளாவைக் கண்ட கோபாலனுக்குமே அதிர்ச்சி. “என்னடா கோலம் இது?”
“ஏன்? என் கோலத்துக்கு என்ன குறை….”
“தலை முடி முதல் உன் சிரிப்பு வரை எல்லாமே குறைந்திருக்கிறது, அதுதான் குறை…..”
நீண்ட பிரிவுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்களின் பேச்சுக்கள் எப்படி எப்படியோ இருக்க,
“வனியை பார்த்தாயா?” என்று ஆரம்பித்தான் கோபாலன்.
வேதனை முகத்தில் சூழ சில நிமிடங்கள் அமைதியில் கழித்தவன், ஆம் என்பதாக தலையை மட்டுமே அசைத்தான்.
“என்ன சொன்னாளடா?”
ஆர்வமாக கேட்ட கோபாலனுக்கும், அவர்களுக்குள் எதுவோ ஒரு பிரச்சினை உள்ளது என்பது மட்டுமே தெரியும்.
“மனதின் கோபத்தை வார்த்தைகளால் கொட்டினாள்…” வறட்சிப் புன்னகை ஒன்று தவழ்ந்தது இளாவின் உதடுகளில்.
“அப்படி என்னதான்டா நடந்தது. நீயும் நல்லவன். அவளும் மிக நல்ல பெண். இருவரும் என்ன தான் செய்து தொலைத்தீர்கள்??” எரிச்சலும் எட்டி பார்த்தது கோபாலனுக்கு.
அவர்களும் தங்களுக்குள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளவும் காணோம். உறவுகளிடமோ நட்புகளிடமோ சொல்லி தீர்த்துக் கொள்ளவும் காணோம் என்பதில் கோபாலனுக்கு சற்றே கோபம்.
“அவளைக் குறை சொல்லாதே. வது எந்த தப்பும் செய்யவில்லை. செய்யவும் தெரியாது. எல்லாவற்றையும் செய்தவன் நான் தான்… தப்பு செய்த நான் தண்டனை அனுபவிப்பதில் நியாயம் இருக்கிறது. எதுவுமே செய்யாத அவள் வேதனைப்படுவதைத் தாண்டா தாங்க முடியவில்லை…” என்ற இளாவை பார்க்க கோபாலனுக்கு எரிச்சலாக இருந்தது.
“அட அட… எவ்வளவு அருமைக் காதல் உன்னுடையது. காதல் காவியம் வாசிக்கிறாய் எனக்கு. அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் நான் மண்டையை மண்டையை ஆட்ட வேண்டுமா இப்போது. எனக்கு வருகிற கோபத்துக்கு உன் முதுகில் இரண்டு அப்பு அப்பினால் என்ன என்று வருகிறது. இப்படி சோககீதம் வாசித்து எனக்கு வெறுப்பை ஏற்றாமல் நடந்தவைகளை சீர்திருத்தி வாழ்கையை வாழ்க்கையாய் வாழப்பார்…..” என்றான் கோபாலன்.
“இங்கே பார் இளா. நீ பிழை செய்தாலும் அவள் பிழை செய்தாலும் நடந்தவை முடிந்து விட்டது. அதைவிட அது நடந்து கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. நீ சொல்வதின் படி, நீயே பிழை செய்தாலும் உன்னை அறிந்து செய்திருப்பாய் என்று எனக்கு தோன்றவில்லை. தெரிந்து செய்தவன் அவளை நினைத்து இப்படி உருகவும் மாட்டாய். அவளின் படிப்பு முதல் வாணிக்கு தேவையான உதவிகள் வரை என் மூலம் செய்யவும் மாட்டாய். அதனால் அடுத்து என்ன செய்து அவளை சமாதானப்படுத்தலாம் என்பதை யோசி…” என்றவனை பாய்ந்து அணைத்தான் இளா.
“நன்றிடா கோபாலா. என்னுடைய அன்பை உண்மை என்று நீயாவது நம்புகிறாயே…..” என்றவன் பனித்த கண்களுடன்,
“ஆனால் கோபாலா, நான் செய்ததை அறிந்தால் நீயே என் முகத்தில் காறித்துப்புவாய். அவ்வளவு கேவலமான செயலை செய்துவிட்டேன்….” என்று துயரப்பட்டவனை பார்த்து,
“அப்படி என்னதாண்டா செய்தாய்?” என்று மீண்டும் கேட்டான் கோபாலன்.
“உன்னிடம் மறைக்கும் எண்ணம் இல்லைடா. ஆனால் உன்னிடம் சொல்வது என் வதுவை கௌரவபடுத்தாதுடா. என்னை மன்னித்துவிடு. என்னால் சொல்ல முடியாது. நான் செய்ததே போதுமானது. உன்னிடமும் சொல்லி இன்னமும் அவளை கேவலப்படுத்த விரும்பவில்லை…” என்றான் துயரத்துடன்.
“சரி! யாரிடமுமே நீ எதையும் சொல்ல வேண்டாம். ஆனால் சொல்ல வேண்டியவளிடம் எதையாவது சொல்லி சமாதனப்படுத்து…..”
“ம்..ம்…”
“இந்த இழுக்கும் வேலை எல்லாம் வேண்டாம். இன்று மாலை வேலை முடிந்ததும் நான் வாணி செல்வேன். நீயும் வா.வா என்ன வருகிறாய்…!” என்றான் உத்தரவாக.
“இன்றேவாடா.. நேற்று அவள் பேசியதின் வலியே இன்னும் ஆறவில்லை. நாளை வருகிறேனே..”
“இப்படி எத்தனை நாட்களை கடத்தப் போகிறாய்? அதெல்லாம் சரியாகாது. நீ வருகிறாய்…” என்று இளா சம்மதித்த பிறகே,வேறு பேசினான் கோபாலன்.
அவனிடம் விடை பெற்று வீடு சென்று மதிய உணவை முடித்தவன், மாலையில் அவளை சந்திக்கப் போவதை நினைத்து பயந்து கொண்டு இருந்தான்.
ஆமாம், அவனுக்கு பயமாகத்தான் இருந்தது. தனிமையில் தனக்குத் தானே சமைத்து சாப்பிட்டு, தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி, அதுவும் தன்னை மீறித் தூக்கம் வரும்போது மட்டுமே தூங்கி, அந்த தூக்கத்தில் கூட கண்களில் கண்ணீருடன் வேதனை நிறைந்த முகத்துடன் பார்க்கும் வனியின் முகத்தை பார்த்து மனம் கருகி, நொந்து நொந்து மனதளவில் மிக அதிகமாக பலகீனப்பட்டு இருந்தான் இளா.
இது போதாது என்று, இப்படி பேசி விட்டேனே… இப்படி செய்து விட்டேனே என்று தன்னைத் தானே வெறுத்து, பசுமையாக இருந்த வாழ்கையை நானே நரகமாக்கி கொண்டேனே என்று ஏங்கி, உள்ளத்தால் உருக்குலைந்து இருந்தான் அவன். இதுதான் லண்டன் வாழ்க்கையை அவன் வாழ்ந்த விதம்.
தன்னுடன் வந்து தங்குமாறு ராகவியின் அப்பா அழைத்த போதும் கூட அவன் மறுத்து விட்டான். பண உதவி செய்ததே பெரிது என்று நினைத்து, கடுமையாக உழைத்து அவர் மறுத்த போதும் வட்டியுடன் அவர் கடனை திருப்பி கொடுத்திருந்தான்.
நரகமாக மாறிய வாழ்க்கையை எப்படி நல்வழிப்படுத்த போகிறேன் என்று சிந்தித்தவனின் உடல் களைக்காத போதும் மனம் களைத்து இருந்ததில் தன்னை மறந்து உறங்கினான் இளவழகன்.
மாலையில் எழுந்து தயாராகி கோபாலனின் வீடு சென்றவன் அவனின் பெற்றோருடனும் சில வார்த்தைகள் பேசினான். கோபாலனும் இளாவும் வாணிக்கு புறப்பட்ட போது, இளாவின் மனதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத பாரம் அழுத்தியது.
அவன் காதல் கொண்ட இடம். பொற்காலமாக இருந்த அந்த நாட்களை ரசித்து ருசித்து வாழ்ந்த இடமல்லவா அது! அந்த இடத்தை பார்க்கப் போகிறேன் என்று மகிழ்வதா… ஆலமரமாய் செழிக்க வேண்டிய அழகிய காதலை அடியோடு தொலைத்து விட்டேனே என்று வருந்துவதா… எதுவும் முடியவில்லை அவனால்.


