வாணியை பார்த்ததும் பிரமித்து விட்டான் இளா. அந்தளவுக்கு பெரிதாக காட்சி அளித்தது. கோபாலன் மூலம், வசதியுள்ள பலர் அன்பளிப்பாக கொடுத்ததாக மாற்றி, அதன் வளர்ச்சிக்கான பண உதவி செய்தது இளாதான். ஆனாலும் இந்தளவான வளர்ச்சியை அவனுமே எதிர்பார்க்கவில்லை.
சாதாரண கல்விநிலையமாக இல்லாமல் அனைத்து வசதிகளுடனும், ஆடம்பரம் இன்றி அழகிய கல்விக்கூடமாக,முக்கியமாக, மாணவர்களுக்கு மிகப் பாதுகாப்பான நிலையமாக இருந்த வாணியை பார்க்கப் பார்க்க சாதித்தவள் என்னுடையவள் என்கிற பெருமிதம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை அவனால்.
கோபாலனும் எத்தனையோ தடவைகள் கேட்டிருக்கிறான் இளாவிடம், வதனியின் போட்டோக்கள் வாணியின் போட்டோக்கள் அனுப்பவா என்று. இளாதான் மறுத்து விட்டான். அவனுக்கே தெரியும், அவளைப் பார்க்காத வரைதான் தன்னால் லண்டனில் இருக்க முடியும் என்று.
நேற்று, வாடி வதங்கி இருந்த வதனியின் நிலை அவனை பாடாய் படுத்தியது என்றால் இன்று வாணியின் வளர்ச்சி அவனை சந்தோஷப் படுத்தியது.
“வாடா….” என்ற கோபாலனின் அழைப்பில், அவனுடன் சேர்ந்து நடந்தவனின் உள்ளம் படபடத்தது. என்ன சொல்வாளோ…என்ன செய்வாளோ என்று யோசித்த போதும், அவளின் மதி முகத்தை பார்க்கும் ஆவலும் சேர்ந்திருந்தது அவனிடம்.
வதனியின் அலுவலக அறைக்குள் இருவரும் நுழைந்த போது, வதனியும் வாசனும் அருகருகே அமர்ந்து எதையோ முக்கியமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். கோபாலனைக் கண்ட வாசன், “வாருங்கள் கோபாலன் அண்ணா……” என்று அழைத்தவன், “வாருங்கள்…” என்று, கோபாலனுடன் வந்தவன் யார் என்று அறியாததில் வெறுமனே வரவேற்றான்.
புதிதாக ஒருவர் வந்தபோதும் அசையாமல் எதுவும் பேசாமல் இருக்கும் வதனியை அதிசயமாகப் பார்த்தான் வாசன். அவன் பார்வைக்கு பதிலைச் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வதனி. இப்போது கோபாலனைக் கேள்வியாகப் பார்த்தான் வாசன்.
“இது என்னுடைய நண்பன்…” வதனியை பார்த்தவாறே சொன்னான் கோபாலன்.
“அமருங்கள்….” என்று அவர்களை பார்த்துச் சொன்ன வாசன்,
“மதி, அவர்களுக்கும் நமக்கும் தேநீர் கொண்டுவா…..” என்று அசையாமல் இருந்தவளின் நிலையை மாற்றும் முகமாக, வதனிக்கு வேலையை ஏவினான். அசையவில்லை வதனி.
இப்படி இருக்கமாட்டாளே என்று குழம்பிய வாசனைப் பார்த்து, “நீங்கள் கீர்த்திவாசன் தானே…” என்று ஆர்வத்துடன் கேட்டான் இளா.
மலர்ந்த முகத்துடன், “ஆமாம், நான் கீர்த்திவாசன் தான். நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோமா. எனக்கு நினைவு இல்லையே….” என்றவனை நோக்கி எழுந்து சென்ற இளா, மிகுந்த அன்புடன் வாசனை கட்டிக் கொண்டான்.
“மிக்க நன்றி வாசன்…” என்றான் உள்ளம் நெகிழ்ந்த குரலில்.
வாசனுக்கோ மிகுந்த ஆச்சரியம். அந்தப் புதியவனின் அணைப்பில் அப்பட்டமான பாசம் தெரிந்தது. ஒருவிதமான அன்பும் நன்றி உணர்வும் கலந்திருந்ததை உணர முடிந்தது. முகம் மலராக கேள்வியாக இளாவை பார்த்தான் வாசன்.
“நாம் இதற்குமுதல் சந்தித்தது இல்லை. ஆனால் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி……” என்றவன், “நான் இளவழகன்…”என்றான் வதனியை பார்த்தபடி.
அதிர்ந்துபோனான் வாசன். இப்போது புரிந்தது அவனுடைய அன்பும் நன்றியும் எதற்காக என்று.
வதனியை முறைத்து விட்டு, “எப்போது வவுனியா வந்தீர்கள்? வேலைப்பளுவால் மாமாவை நான் கண்டு நிறைய நாட்களாகிவிட்டது. இந்த விசரி மதி நீங்கள் வந்ததைப் பற்றி என்னிடம் ஒருவார்த்தை சொல்லவில்லை. தெரிந்திருந்தால் உங்கள் வீட்டுக்கே வந்து பார்த்திருப்பேன்…” என்றவனின் அன்பில் நனைந்து போனான் இளா.
எவ்வளவு அழகிய நட்பு வதுவுக்கு கிடைத்திருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தான்.
ஆண்கள் மூவரும் மேலோட்டமாக பேசிக்கொண்டு இருந்த போதும், அவர்களினது பார்வைகள் அடிக்கடி வதனியை நோக்கி பாய்ந்து கொண்டு இருந்தது. இளாவின் மனமோ அலை பாய்ந்தது. மனதளவில் அவள் எந்தளவுக்கு குமுறிக் கொண்டு இருப்பாள் என்பதை அவன் அறிவானே.
அடிக்கடி அவன் வதனியை பார்ப்பதும், இவர்களின் பேச்சில் கவனம் இல்லாமல் இருப்பதையும் கவனித்த வாசன், இது சரியாக வராது என்று நினைத்து, “கோபாலன் அண்ணா, என்னுடன் வருகிறீர்களா? உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்….” என்று அழைத்தான்.
இவர்களை எப்படி தனியே பேச வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த கோபாலனும், “ஓ.. வருகிறேன். வா வாசா…”என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.
வெளியே செல்ல முதல் வதனியை திரும்பிப் பார்த்த வாசனின் கண்கள் வதனியின் கண்களை நேர்கோட்டில் சந்தித்து பின்னர் விலகி இளாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது.
அவன் வெளியேறியதும் சற்று நேரத்திற்கு அங்கே அமைதி மட்டுமே நிலவியது.
“வது…..”
கண்களாலேயே தீப்பந்தம் கொளுத்தினாள் வதனி.
“என்னால் உன் முழுப் பெயரை சொல்லி அழைக்க முடியவில்லை வது…” இயலாமையுடன் வந்தது அவன் குரல்.
பார்வையின் உக்கிரம் இன்னும் கூடிய போதும் எதுவும் பேசாது இருந்தவளிடம், “ஏதாவது பேசேன் வது. என்னை திட்டவாவது செய்…” என்றான்.
“என்னை என்ன சண்டைக்காரி என்கிறீர்களா….?” கோபத்துடன் வந்த கேள்வியில் திகைத்துப் போனான் அவன்.
நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று யோசித்தவன், “அப்படி இல்லை…..” என்று இழுத்து, “என்னை மன்னித்து விடேன்…”என்றான் கெஞ்சலாக.


