வேக வேகமாக நடந்தவளின் வேகத்துக்கு ஏற்ப கண்களும் கண்ணீரை கொட்டிக் கொண்டே இருந்தது.
அப்படி யாருக்கு என்ன பாவம் செய்தேன். நித்தியும் தானே காதலித்தாள். இன்று நேசன் அண்ணாவையே திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாளே. எனக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமலே போய்விட்டதே என்று தவித்தவளின் நெஞ்சு அழுகையில் குலுங்கியது.
அன்றொரு நாள் இதே வீதியில் நித்தியை கேலி செய்ததும், அவளுடைய காதல் கைகூடவேண்டும் என்று கடவுளை வேண்டியதும் நினைவில் வந்தது. அன்று என்னுடைய காதலுக்கும் சேர்த்து வேண்டியிருக்க இன்று அந்தக் காதல் உயிர் பிழைத்திருக்குமோ.. நெஞ்சம் பாரமாக கனத்தது.
மனதின் வேதனைக்கு நடையின் வேகம் வடிகாலாக அமைய, நடையின் வேகத்தை கூட்டியவள் தங்கள் வீட்டையும் கடந்து நடந்தாள். நடந்தவளின் கால்கள் அவளை அழைத்து சென்ற இடம், தன் மனதிலும் காதல் உண்டு என்று வதனி இளாவிடம் தெரிவித்த அதே இடம்!
அந்தப் பூங்காவின் மத்தியில் நின்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் அவர்கள் சந்தித்துக் கொண்ட மரத்தடியை நோக்கியது. அந்த மரத்தடி மீதான சொந்தம் அவளை ஈர்க்க, வேகமாக அங்கே நடந்தவள் தன்னை மறந்து, இருக்கும் இடம் மறந்து, அந்த மரத்தை கட்டிக் கொண்டு கதறினாள்.
மனதில் இருக்கும் பாரத்தை கண்ணீராக மாற்றி வெளியேற்ற நினைத்தாளோ என்னவோ, தொண்டை வறண்டு உதடுகள் காயும் வரை அழுதாள்.
தொண்டை தாகம் எடுக்கவே கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள், பொது இடத்தில் நின்று அழுகிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். ஒருவாறு தன்னைச் சமன் செய்தவளின் உடலும் மனமும் சோர்ந்து ஓய்வைக் கேட்டது.
வீசி நடந்த கைகளும் வேகமாக நடந்த கால்களும் புண்ணாக வலித்த போதும் உடல் தளர்ந்து மிக மெதுவாக வீட்டை நோக்கி நடந்தாள் வதனி.
இளா பின்னால் அமர்ந்திருக்க, வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான் கோபாலன். இளாவிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்கவே ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான்.
“டேய்..!!” என்றான் கடுப்புடன்.
அப்போதும் அசைவில்லை. வண்டியில் இருந்து இறங்கிய கோபாலன் இளாவை பிடித்து உலுக்கினான்.
திகைத்து விழித்த இளா, “என்ன?” என்றான் எதுவும் புரியாது.
“என்ன நொன்ன? நான் கேட்க வேண்டிய ‘என்ன’ வை நீ கேட்கிறாய். உனக்கு என்ன பிரச்சினை இப்போது?” என்றான் கடுப்பு நீங்காமல்.
எதுவும் சொல்லாது கோபாலனை பார்த்தவன், “நீ ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போ. எனக்கு உன் வண்டி வேண்டும்.” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாக, “என் வண்டி எங்கேடா…?” என்று கேட்டான்.
கோபாலனுக்கோ பத்திக் கொண்டு வந்தது. பதில் சொல்லாமல் அவனைப் பார்த்து முறைத்தான்.
அப்போதுதான் வாணியிலேயே வண்டியை விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது இளாவுக்கு.
அவனின் முறைப்பை சட்டை செய்யாது வண்டியை நகர்த்தியபடி, “வாணிக்குப் போய் என் வண்டியை எடுத்துக் கொண்டு நீ வீட்டுக்குப் போ. நான் பிறகு வருகிறேன்.” என்றான்.
“எங்கேடா போகிறாய்?”
“அவசர வேலை ஒன்றுக்காக போகிறேன்..” என்றபடி மோட்டார் வண்டியை இயக்கினான் இளா.
“இப்படி அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு செய்தவைகள் போதாது என்று இப்போதும் அவசர வேலை பார்க்கப் போகிறாயா..:?”
சட்டென்று வண்டியை நிறுத்திய இளாவின் உடலில் ஒரு நடுக்கம் வந்து போனது. வலியை காட்டிய கண்களை இறுக மூடித்திறந்து தன்னை நிலைப்படுத்தினான்.
“பட்டதே போதும் கோபாலா. ஆனாலும் நான் செய்ய வேண்டிய வேலையொன்று இன்னும் இருக்கிறது. அதை முடிக்க வேண்டும். இனியும் நாட்களைக் கடத்த எனக்கு விருப்பமில்லை.” என்றான் வலி மிகுந்த குரலில்.
வண்டியில் இருந்த இளாவை பாய்ந்து அணைத்தவன், “என்னை மன்னித்துக் கொள்ளடா. வதனி வாணியில் வைத்து கடைசியாகப் பேசியது என் காதிலும் விழுந்தது. அந்தக் கோபத்தில் வார்த்தைகள் கொஞ்சம் பிசகிவிட்டது….” என்றான் கெஞ்சலாக.
“விடு கோபாலா! நான் செய்தது பிழைதான். எனக்கு இதெல்லாம் வேண்டும் தான். அது தெரிந்தாலும் ஒவ்வொரு முறையும் குட்டுப்படும் போதும் வலி மட்டும் குறைவதே இல்லைடா. விடு! பழகிக் கொள்கிறேன்…” என்றான்.
“நீ உன் வண்டியிலேயே செல். நான் நடந்து போகிறேன்…” என்றபடி இறங்கப் போனவனை தடுத்தான் கோபாலன்.
“என்னிடம் அடிதான் வாங்கப் போகிறாய் நீ! நீ வண்டியில் போ! நான் ஆட்டோவில் போகிறேன்…” என்று இளாவை அனுப்பி வைத்தான்.
அவன் போவதையே பார்த்திருந்தவனுக்கும் கவலையாக இருந்தது.
நீயும் உன் வாயை அடக்குடா கோபாலா… என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் அந்த வழியால் வந்த ஆட்டோ ஒன்றினை மறித்து ஏறிக்கொண்டான்.
இளா சென்ற இடம் வதனியின் வீடு!
உள்ளே நுழைந்து வண்டியை நிறுத்தியவனின் மனம் ஒரு முறை தடுமாறியது. ஆனாலும் தன்னை நிலைப் படுத்தியவன், உறுதி கொண்ட முகத்துடன் உள்ளே நுழைந்தான்.
“மாமா…..” கொஞ்சம் மெலிதாக கூப்பிட்ட போதும் தடுமாறாமல் இருந்தது குரல்.
வெளியே வந்த சங்கரனுக்கும் கலைமகளுக்கும் ‘சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறானே..’ என்று மகிழ்ச்சியும் குழப்பமும் ஒன்றாகத் தாக்கியதில் கொஞ்சம் தடுமாறிப்போனார்கள்.
ஆனாலும் சமாளித்து, “வாருங்கள் தம்பி. வாருங்கள்! மிகவும் சந்தோசம் நீங்கள் வந்ததில். வனிம்மா வாணிக்கு போய்விட்டாள். நீங்கள் இருங்கள். இப்போது வந்துவிடுவாள். கலை தேநீர் வை. அப்படியே சமைத்துவிடு தம்பிக்கும் சேர்த்து…” மகிழ்வுடன் அவர் பேசிக் கொண்டே போனார்.
கணவரின் பேச்சுக்குத் தலையாட்டிவிட்டு சமையலறைக்குள் போவதற்காக திரும்பினார் கலைமகள்.
“கொஞ்சம் பொறுங்கள் மாமி. நான் உங்கள் இருவரிடமும் கொஞ்சம் கதைக்க வேண்டும். அதன்.. அதன் பிறகு மிகுதியை பார்ப்போமே…”
சங்கரன் கலைமகள் இருவரின் முகமும் கேள்வியாக அவனை பார்க்கவும், சற்றே தயங்கியவன் இருந்த கதிரையில் இருந்து எழுந்து கொண்டான். அவனுக்குமே எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. ஆனாலும் பெருமூச்சு ஒன்றினை விட்டு தன்னை தயார் செய்தவன்,
“மாமா மாமி, வது உங்களிடம் என்ன சொன்னாள் என்பது எனக்கு தெரியாது. அதனால் நான் முதலில் இருந்தே எல்லாவற்றையும் சொல்கிறேன்.


