“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சின்ன பெண், எனக்கும் என்னுடைய குடும்பப் பொறுப்புக்கள் இருந்தது. ஆனாலும் என்னையும் மீறி என் அன்பை அவளிடம் சொல்லிவிட்டேன்.
பதில் சொல்லத் தயங்கியவளையும் கிட்டத்தட்ட கட்டாயபடுத்தி சம்மதம் வாங்கினேன். காரணம், எனக்கு அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது.
“மாமிக்கு நடக்க முடியாமல் இருந்தபோது, மூன்று நாட்கள் வது வாணிக்கு வரவில்லை. அப்போது நான் பட்ட தவிப்பு எனக்கு மட்டுமே புரியும். நானே, வது மீதான என் அன்பின் ஆழத்தை புரிந்து கொண்ட நாட்கள் அவை.” தனது பேச்சை தொடர சிரமப்பட்டவன் சற்றே அமைதியானான்.
சங்கரன் கலைமகளுக்கோ இப்போது எதற்காக இவன் இதையெல்லாம் எங்களிடம் சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தது. ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டனர்.
அடைத்த குரலை செருமிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.
“கோவிலிலும் உங்கள் நண்பர் மணி மாமாவின் வீட்டிலும் தினமும் சந்தித்துக் கொண்டோம்…..” என்றான் தயக்கத்துடன்.
“அந்த நாட்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது மாமா. பெரியவர்களின் பார்வையில் நாம் செய்வது பிழை என்பது அப்போது புரியவில்லை. வது தயங்கினாள் தான். அப்போதும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று கெஞ்சி தினமும் சந்தித்தது நான் தான்.”
“என் தங்கையின் திருமணத்தை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை வந்த போது பணத்துக்காக என்னுடைய மாமாவின் உதவி தேவைப்பட்டது. அவர் தன்னுடைய மகளை திருமணம் செய்யும்படி மறைமுகமாக வற்புறுத்தினார். தன்னுடைய அண்ணன் மகளை எனக்கு கட்டிவைத்தால் தங்கள் சொந்தமும் தொடரும் என்பதால் அம்மாவுக்குமே அதில் விருப்பம் இருந்தது.”
“அவர்களின் பேச்சை என்னால் ஒரு அளவுக்கு மேல் மீறவும் முடியாது. அதற்காக வது இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் வாழவும் முடியாது. இந்த பிரச்சினைக்கு என்ன முடிவு என்று யோசித்த போது, உங்கள் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை நானே எடுத்தேன். வதுவின் மனநிலை என்ன என்பதை நான் யோசிக்கவும் இல்லை. அப்போது அந்த அளவுக்கு நிதானமும் எனக்கு இருக்கவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்துக்காகவும் வதுவை இழந்து விடக்கூடாது என்பது மட்டுமே என் மனதில் இருந்தது.”
சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் தொடர்ந்தான்.
“அந்த முடிவின் விளைவு இன்று வரை என்னை வதைக்கிறது மாமா. போதாததுக்கு உங்கள் எல்லோரையும் துன்பப்படுத்திவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்..”
“தம்பி…”
“முதலில் நான் முடித்து விடுகிறேனே மாமா…..” கெஞ்சலாக வந்த இளாவின் குரலை கேட்க அவர்கள் இருவருக்கும் தவிப்பாக இருந்தது.
“கவலைப் படாமல் சொல்லுங்கள் தம்பி…கேட்கிறோம்…..”
அன்றைய தினத்தை மறுபடியும் மனக்கண்ணில் ஒட்டியவனின் மனமும் முகமும் வலியில் வதங்கியது.
வலியில் குரல் மெலிய, “வதுவிடம் பதிவுத் திருமணம் பற்றி பேசிய போது முடியாது என்று திடமாக மறுத்து விட்டாள்.” சொன்னவனின் குரலிலும் இப்போது கர்வம் மின்னியது.
கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மனமும் முகமும் கூட மகிழ்ச்சியிலும் பெருமையிலும் மலர்ந்தது. எங்கள் மகள் தவறான வழியில் செல்லவில்லை என்கிற நிறைவு அவர்கள் முகத்தில் தெரிந்தது.
“அவள் மறுக்க மறுக்க கோபத்தில் என் சுயத்தை இழந்த நான் செய்தது மிகப் பெரிய பாவம். ஆனால் மாமா…. எதையும் நான் உணர்ந்தும் செய்யவில்லை. வேண்டும் என்றும் செய்யவில்லை. ஆனாலும் செய்தது பெரும் தவறு தான்…”
பொறுமையை இழந்தவர்களின் மனதோ பலதையும் எண்ணித் துடித்தது.
“அப்படி என்னதான் செய்தீர்கள்…?” படபடப்பாக கேட்ட கலைமகளின் குரல் மட்டுமல்ல உடலும் நடுங்கியது.
“அது மாமி…..”
அன்று எந்தவிதமான தயக்கமும் இன்றி கொட்டிய வார்த்தைகளும் செயலும் இன்று சொல்லவே நாக் கூசியது அவனுக்கு. அதுவும் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணி முன்னால் கூனிக் குறுகினான் இளா. அவனுக்கு தன்னை நினைத்தே வெட்கமாக, அசிங்கமாக இருந்தது.
அன்று அர்த்தத்தை உணராது கொட்டிய வார்த்தைககளை இன்று உணர்ந்து சொல்லவே முடியவில்லை அவனால்.
தயங்கியவன், கலைமகளின் முகம் பார்க்கக் கூசி அவர்களுக்கு முதுகாட்டி திரும்பிக் கொண்டான்.
“வதுவை… என் வதுவை தரம் கெட்ட பெண்களுக்கு ஒப்பிட்டு பேசியதும் இல்லாமல் ப.. பணத்தையும் அவள் முகத்தில் தூக்கி வீசினேன். அது.. வது.. அவள்.. என்னை.. அவளை.. ” அதற்குமேல் அவனால் முடியவில்லை. தன்னை தானே வெறுத்தான். எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டேன். எப்படி துடித்திருப்பாள்….
வலி.. வலி.. வலி.. மட்டுமே!
நெஞ்சம் பாரமாக கனத்தது. கண்ணம்மா என்னை மன்னித்துவிடு. என்னாலேயே தாங்க முடியவில்லையே. எப்படி உன் மெல்லிய இதயம் இந்தக் கொடும் சொற்களை தாங்கியது.
கண்களின் ஓரம் கசிந்த கண்ணீர் துளியினை பின்னால் நிற்பவர்களுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டான்.
தன் நிலையிலேயே தவித்தவன், அங்கு இன்னும் இருவர் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான். அவர்களிடம் இருந்து எந்த விதமான சத்தமும் இல்லாமல் போகவே சட்டென்று திரும்பினான்.
கலைமகள் அதிர்ச்சியில் பேச்சை இழந்து, வாயில் கையை வைத்து பொத்தியிருந்தார். அவரின் அதிர்ந்த கண்களோ வெறுப்புடன் அவனைப் பார்த்து கண்ணீரை தாரை தாரையாகக் கொட்டியது.


