நேசம் கொண்ட நெஞ்சமிது 25 – 3

சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது.

“மாமா…..”

“அப்படி கூப்பிடாதே…..!” கிட்டத்தட்ட கத்தினார் சங்கரன்.

“நீ எல்லாம் மனிதனா? எப்படி அப்படிச் சொன்னாய்? இதுதான் உன் காதலா.. நீ விளையாடுவதற்கு என் பெண்ணின் வாழ்க்கை தான் கிடைத்ததா.. உன்னை எல்லாம் நல்லவன் என்று நினைத்தேனே. போ வெளியே! உனக்கும் என் மகளுக்கும் சரியாக வராது. நீ செய்த கொடுமைகள் தெரியாமல் என் செல்வத்தை நானும் கொடுமைப் படுத்திவிட்டேனே.. எப்படித் தவித்திருப்பாள் என் செல்வம். கடவுளே..”

“போடா வெளியே! எங்கள் வீட்டுப்படியைக் கூட நீ மிதிக்கக் கூடாது! உன் முகத்தை பார்க்கவே அருவெருப்பாக இருக்கிறது…போ வெளியே…..”

அவரின் திட்டல் எதுவுமே அவனுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை. இன்னும் இன்னும் திட்டுங்கள். அப்போதாவது என் குற்ற உணர்ச்சி போகுமா பார்ப்போம் என்றுதான் தோன்றியது.

ஆனாலும் இன்றோடு எல்லாவற்றையும் பேசி முடித்துவிட வேண்டும் என்று நினைத்தவன் பின்னோக்கி நடந்தவாறே, ” நான் போய்விடுகிறேன் மா….. ஆனால் அதற்கு முதல் மிகுதியையும் சொல்லி விடுகிறேனே.. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்…..”

“இன்னும் என்ன சொல்லப் போகிறாய்? இன்னும் என்ன கொடுமைகள் செய்தாய் என் பெண்ணிற்கு. பூப் போல இருந்தவளைப் பார்த்து எப்படி உன்னால் அப்படி எல்லாம் செய்ய முடிந்தது. இன்றுவரை மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வாழ்கிறாளே… இன்னும் என்ன செய்தாய் அவளை?”

“பிறகு.. எதுவும் செய்யவில்லை……”

“அதுதான் ஏற்கனவே மொத்தமாக செய்து விட்டாயே, பாவி..!”

ஒரு நிமிடம் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தான்.

“வதுவுக்கும் எனக்கும் திருமணத்தை செய்து வையுங்கள் மாமா….” என்றான் தடாலடியாக தலையை நிமிர்த்தி.

“என்னது?” எத்தனை முறைதான் அதிர்ச்சியை தாங்குவார்கள் அந்த தம்பதிகள்.

“உனக்கும் என் பெண்ணிற்கும் திருமணமா? நிச்சயமாக முடியாது! பதிவுத்திருமணம் ஒன்றைச் செய்து நீ அவளை கொல்லாமல் கொன்றது போதும். வெகு விரைவில் நீமன்றத்தில் இருந்து விவாகரத்துக்கான கடிதம் வரும். அதிலே கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடு…..” என்றார் கோபத்தோடு உத்தரவாக.

அவளை இழந்து விடவே கூடாது என்பதற்காக அவன் செய்த செயலே இன்று அவளை அவனிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதை நினைத்தவனின் மனம் அந்த நிமிடம் துகள்களாக சிதறியது. முறை தவறும் எதுவும் முழுமையடையாது என்பதை அந்த நிமிடம் உணர்ந்தான். ஆனால் எல்லாம் கை மீறிய பிறகு உணர்ந்தான்.

குரலை திடப்படுத்தியவன், “வதுவும் விரும்பினால், அதோடு இன்னொரு திருமணத்திற்கு அவள் சம்மதித்தால் நிச்சயமாக கையெழுத்து இடுகிறேன். அவளுக்கு வேறு திருமணம் நடக்கப் போகிறது என்பதும், அது அவளின் முழு சம்மதத்துடன் தான் நடக்கிறது என்பதும் எனக்கு உறுதியாக தெரிந்தால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து என்ன, எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால் அவளுக்கு இன்னொரு திருமணம் நடக்கவேண்டும். இல்லை என்றால் என்னுடன் திருமணம் நடக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆகவேண்டும்!” என்றான்.

தொடர்ந்து, “இல்லை என்றால், எப்படி பதிவுத் திருமணத்தை நடத்திக் கொண்டேனோ அப்படி அவள் கழுத்தில் தாலியைக் கட்டி, சம்பிரதாயப்படியும் அவளை என்னுடைய மனைவி ஆக்கிக் கொள்வேன்…” என்றான் உறுதியுடன்.

விக்கித்து நின்றார்கள் அந்த கணவனும் மனைவியும்.

சங்கரனின் ஆத்திரம் தனது எல்லையை கடக்கவே, “என்னுடைய மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்! அதைப்பற்றி பேசும் தகுதியோ உரிமையோ உனக்கு இல்லை. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டாய் தானே,போ வெளியே!” என்றார் ஆத்திரமிகுதியில்.

“இனிமேல் எங்கள் யாரினதும் முகத்தில் விழிக்காதே. அதுவும் என் மகளின் கண்களில் படாதே. உன் குடும்பத்துக்கே புண்ணியமாக போகும். போய்த் தொலை…..” என்று கத்தியவர், அவனைப் பிடித்து வெளியே தள்ளினார்.

அவர் தள்ளியதில், கால் இடறி தடுமாறி வெளியே வந்தவன் மோதி நின்றது வதனியுடன்.

தடுமாறியவனைத் தாங்கிய வதனி தள்ளாடவும் அவளையும் அணைத்து தன்னை நிலைப்படுத்தினான் அவன். அவள் மேனி சிலிர்த்து அடங்கியது.

அவனுக்கே உரித்தான வாசனை, அணைக்கையில் அவள் முகத்தில் வேகமாக மோதிய அவனின் மூச்சுக்காற்று அத்தனையும் அவன் அவளின் உயிரில் கலந்துவிட்டவன் என்பதை மீண்டும் அவளுக்கு உறுதிப்படுத்திச் சென்றது.

அவனிடமிருந்து விலகத் தோன்றாமல் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

வேதனையுடன் அந்த அழகிய பெரிய விழிகளை மிக அருகில் சந்தித்தவனின் கண்கள் மறுபடியும் கலங்கியது. எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இழந்து விட்டேன். வாழ்வின் ஆதாரத்தையே இழந்து விட்டு இனி வாழப் போகும் பயனற்ற வாழ்க்கையை நினைக்கவே முடியவில்லை அவனால்.

அந்த மீன் விழிகள், அவனின் ஆண் மனதை முதன் முதலில் சலனப்படுத்திய கயல் விழிகள்! இன்று வரை அவனின் இதயவறைகள் அத்தனையும் கருவறையாக மாறி தாங்கியிருக்கும் தந்த விழிகளை தன்னை மறந்து பார்த்தவனின் கண்கள் கண்ணீர் துளிகளை சிந்தியது.

“என்னை மன்னித்துவிடு…..” என்றான் அப்போதும் முணுமுணுப்பாக.

வதனியின் கண்களையும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது. அவன் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர்த்துளிகள் அவள் விழிகளின் மீது விழுந்து அவளின் கண்ணீர்த் துளிகளோடு கலந்து கன்னத்தில் வழிந்தது.

“கண்ணம்மா, இந்தப் படுபாவி செய்த அநியாயங்கள் தெரியாமல் உன்னை நானும் வதைத்து விட்டேனே.. இவனெல்லாம் மனிதனே இல்லை! மிருகம்! இன்னும் ஏன் நிற்கிறாய், போ வெளியே…..!” என்று மகளைக் கண்டதும் அவளிடம் ஆரம்பித்து இளாவிடம் முடித்தார் சங்கரன்.

அவனையே பார்த்திருந்தவளின் வாயோ, “என்னப்பா நடந்தது?” என்று கேட்டது.

“இனியும் என்ன நடக்க வேண்டும்? இதுவரை நடந்தவைகளை எல்லாம் சொன்னான் இந்த ராஸ்கல்…”

கலங்கிய விழிகளால் அவனை முறைத்து விட்டு அவனிடமிருந்து வேகமாக விலகி தந்தையின் அருகில் சென்று, “என்னது? இதுவரை நடந்தது என்றால்? விரிவாகச் சொல்லுங்கள் அப்பா…” என்று கேட்டவளின் நெஞ்சு படபடத்தது.

அவளை வாரி அணைத்தவர், “எதையம்மா விரிவாகச் சொல்லச் சொல்கிறாய்… அவன் உன்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகளையா அல்லது பணத்தை உன் முகத்தில் வீசி எறிந்தானாமே, அதையா? என் பிள்ளை எப்படித் தாங்கினாயோ.இது தெரியாமல் நானும் உன்னைப் படுத்தி எடுத்தேனே…” என்றார் வேதனையோடு.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock