நேசம் கொண்ட நெஞ்சமிது 25 – 4

“இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் முன்னால் நிற்கிறாய்…” வதனியையே பார்த்துக் கொண்டு நின்றவனிடம் பாய்ந்தார் அவர்.

“அப்பா…..!!” கோபத்துடன் வந்த அவளின் அழைப்பில் திகைத்துப் போய் மகளைப் பார்த்தார் சங்கரன்.

“அது எனக்கும் அவருக்குமான பிரச்சினை. தயவு செய்து நீங்கள் எதுவும் பேசாதீர்கள்!” கொஞ்சமே கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னவள், இளாவின் புறம் திரும்பி, “நீங்கள் கிளம்புங்கள்…” என்றாள் தன்மையான குரலில்.

அவளும் தான் அவனைத் திட்டி இருக்கிறாள். கொடும் சொற்களால் காயப்படுத்தி இருக்கிறாள். ஆனாலும் அவளின் அப்பாவாக இருந்த போதும், இன்னொருவர் அவனைத் திட்டுவதை அவளால் தாங்க முடியவில்லை.

அந்த மெல்லிய மென்மையிலும் இளாவின் மனது சுட்டது. அவளின் கண்களையே பார்த்தவன், எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் வெளியேறியதும், “கண்ணம்மா….” என்று சங்கரன் ஆரம்பிக்கவும்,

“முடிந்தவைகளைப் பற்றி பேச வேண்டாம் அப்பா!” என்று தந்தையை அடக்கியவள், தாயாரிடம் விரைந்தாள்.

“அம்மா.. அம்மா! இங்கே பாருங்கள். இப்போது ஒன்றும் நடக்கவில்லை. அவை எல்லாம் நடந்து முடிந்தவைகள். அம்மா….என்னைப் பாருங்கள்…” வதனியின் அழைப்பிலும் தொடுகையிலும் சுய நினைவுக்கு வந்தவர், அவளைக் கட்டியணைத்துக் கதறிவிட்டார்.

“என் கண்ணே, எப்படி தாங்கினாய். வாழ்க்கையை வாழ்ந்தவள் என்னாலேயே முடியவில்லையே கண்ணம்மா. யாருக்கு என்ன பாவம் செய்தோம். ஏன் இப்படி எல்லாம் நமக்கு மட்டும் நடக்கிறது….” என்று அழுதவரை பார்க்க வதனியும் சங்கரனுமே அழுதார்கள்.

கண்களை துடைத்த வதனி, “அம்மா…!” என்றாள் அதட்டலாக சற்றே குரலை உயர்த்தி. திகைத்து விழித்த கலைமகளின் கண்கள் அழுகையை நிறுத்தி இருந்தது.

“இனிமேல் இந்த வீட்டில் யாரும் அழக்கூடாது! சரிதானா.. எதற்கு இப்போது அழுகிறீர்கள். அது நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. நானே அழவில்லை. நீங்கள் அழலாமா?” என்று எதை எதையோ சொல்லித் தேற்றினாள்.

அவளுக்காக கண்களைத் துடைத்த போதும் மனம் மட்டும் ரணமாகவே இருந்தது கலைமகளுக்கு.

தந்தையின் புறம் திரும்பி, “வேறு என்ன சொன்னாரப்பா…..?” என்று கேட்டாள் குரல் அடைக்க.

“உன்னுடன் தனக்கு திருமணத்தை நடத்திவைக்கட்டுமாம் என்று சொன்னான் அந்த ராஸ்கல்…”

வதனிக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. அவள் அறிந்த இளவழகன் அப்படித்தான் சொல்வான். அவள் சொன்னதைக் கேட்ட பிறகும் அவன் பேசாமல் இருந்திருந்தால் அதுதான் அதிர்ச்சியாக இருந்திருக்கும் அவளுக்கு.

“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“எனக்கு வந்த கோபத்துக்கு நன்றாக திட்டிவிட்டேன் அவனை. விவாகரத்துக் கடிதம் அனுப்புவதாக சொல்லி இருக்கிறேன். அதற்கு அவன் சொல்கிறான், நீ இன்னொரு திருமணத்திற்கு சம்மதித்து நீயாக விவாகரத்தை கேட்டால் கையெழுத்து என்ன எது வேண்டுமானாலும் செய்வானாம். கதை விடுகிறான் எனக்கு. வந்த ஆத்திரத்தில் பிடித்து தள்ளி விட்டேன்….”

வதனிக்கு நெஞ்சை அடைத்தது. மெல்ல மெல்ல தந்தையிடம் அவன் பேசியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு ஆத்திரமும் அழுகையும் வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு அவளே அழக்கூடாது என்று நினைத்தவள், தன்னை அடக்கிக் கொண்டாள்.

“நான் கொஞ்சம் தூங்கப் போகிறேன்..” தெளிவில்லாத குரலில் அவர்களிடம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தனி அறையில் கட்டிலில் விழுந்தவளின் மனம் முழுவதும் கோபமே குடிகொண்டிருந்தது. இப்போதும் இளாவின் மீதுதான் கோபம். ஆனால் அதன் காரணம் வேறாக இருந்தது.

நம் இருவருக்குள் மட்டும் இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டானே. இவனிடம் நான் கேட்டேனா இதை எல்லாம் செய் என்று. விசரன்.. சரியான விசரன்.. அன்றிலிருந்து இன்றுவரை செய்வது எல்லாம் விசர் வேலைகள். அப்பாவிடம் இப்படி திட்டை வாங்குகிறானே. ரோசமே இல்லையா இவனுக்கு. நாளை நாம் ஒற்றுமை ஆனபிறகு எப்படி அம்மா அப்பாவின் முகம் பார்ப்பான். என்றவள் அதிர்ந்துபோனாள்!

என்னது? ஒற்றுமை ஆனபிறகா… கட்டிலில் சாய்ந்து இருந்தவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் அவளது உடலும் மனமும் மூளையும் ஓய்வைக் கேட்கவே கட்டிலில் சாய்ந்தவளின் கண்கள் உறக்கத்தில் மூடியது.

காலை விடிந்ததும் வதனி காலைக் கடன்களை முடித்து விட்டு வரவும், தேநீரை கொடுத்தார் கலைமகள். அப்படியே அந்த சின்னக் குடும்பம் காலை உணவையும் முடித்தது.

வெளியே செல்ல வதனி கிளம்பவும், மனைவியின் கண்ணசைவில் மகளைப் பார்த்த சங்கரன், “வனிம்மா, கொஞ்சம் இரு. உன்னுடன் கதைக்க வேண்டும்.” என்றார்.

“என்னப்பா…” என்றபடி முதலில் அமர்ந்திருந்த கதிரையிலே வந்து அமர்ந்தாள் வதனி.

“வக்கீலை எப்போது சந்திக்கலாம் வனிம்மா….”

“எதற்கு வக்கீலை சந்திக்க வேண்டுமப்பா….?” தந்தையின் கண்களை நேராகச் சந்தித்து நிதானமாகக் கேட்டாள்.

கணவன் மனைவி இருவரினது பார்வையும் அவசரமாக சந்தித்து மீண்டது. அதைக் கவனித்தபோதும் தந்தையையே பார்த்திருந்தாள்.

“விவாகரத்துக்கு அனுப்ப வேண்டாமா கண்ணம்மா. அதற்குத்தான்.”

“ஓ…. ஆனால் எதற்கு விவாகரத்து?” சாதரணமாக வந்தது கேள்வி.

“அவன் வேண்டாம் உனக்கு. அவன்தான் தரம் கெட்டவன். என் மகளைப் பார்த்து எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறான்!” நேற்றைய கோபம் இன்னும் ஆறவில்லை அவருக்கு.

சங்கரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த வாசனும், “உண்மைதான் மாமா. அவர் வேண்டாம் வதனிக்கு…”என்றான்.

அவனைப் பார்த்து முறைத்தாள் வதனி.

தந்தையின் புறம் திரும்பி, “சரிதான். அதன்பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“பிறகு உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டி வைக்கிறோம்….”

“ஓ… ஏனப்பா, எனக்கொரு சந்தேகம். தப்பித்தவறி நீங்கள் கட்டி வைக்கும் அடுத்த மாப்பிள்ளையும் கெட்டவனாக இருந்தாலோ அல்லது திருமணத்திற்கு பிறகு கெட்டவனாக மாறினாலோ அவனையும் விவாகரத்துச் செய்துவிட்டு எனக்கு இன்னுமொரு நல்ல்ல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைப்பீர்களா…?” எரிச்சலை அடக்கிய குரலில் கடுப்போடு கேட்டாள்.

மூவரும் என்ன பதில் சொல்வார்கள். முழித்தனர்.

“அப்படியானால் உன் முடிவு என்ன?” என்றான் வாசன்.

அவள் இவர்களை மடக்க நினைக்க அவனது கேள்வி அவளை மடக்கியது.

அங்கிருந்த மூவரின் முகத்தையும் பார்த்தவளுக்கு அவர்கள் மூவரும் எதையோ திட்டமிட்டு கதைக்கிறார்கள் என்பது மிக நன்றாகவே புரிந்தது. கதிரையில் இருந்து எழுந்தவள்,

“என் வாழ்வில் ஒரு முறைதான் திருமணம். அது நடந்தாகிவிட்டது. இனி இன்னொருவருடன் திருமணம் என்பது நடக்காது.” என்றவள்,

“எனக்கொரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன்…” என்றவாறே புறப்பட்டாள்.

“வாசன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை வனிம்மா…..”

மூவரையும் பார்த்தவள், “இன்று மாலை நான் பதில் சொல்லலாமா. அந்த அவகாசத்தை எனக்கு கொடுக்க முடியுமா…?” என்று கேட்டாள்.

சங்கரனின் தலை சம்மதமாக அசைந்தது.

வீட்டை விட்டு வெளியேறியவள், கோபாலனுக்கு கைத் தொலைபேசியில் அழைத்து, சில விசயங்களை பேசி விவரம் சேகரித்துக் கொண்டாள்.

மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிய வதனி சென்ற இடம் இளாவின் வீடு!!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock