கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார்.
முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித்தார்.
“நன்றாக இருக்கிறேன் அம்மா. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” பணிவுடனே பதில் வந்தது.
ஆனாலும் மாமி என்று சொல்லவில்லை அவள்!
“நானும் நன்றாக இருக்கிறேன் வதனி. உள்ளே வா. தேநீர் குடிக்கலாம். சாப்பிட்டு விட்டாயா? தோசை வார்த்தேன், உனக்கும் எடுத்து வரவா…..?”
“வீட்டுலேயே சாப்பிட்டு தேநீரும் குடித்துவிட்டேன். நன்றிம்மா….” என்றவள் கொஞ்சம் தயங்கி, “உங்கள் மகனிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும். கதைக்கலாமா…?” என்று கேட்டாள்.
அனுமதி கேட்டவளின் அருமையான குணத்தில் மனம் நிறைந்தது வைதேகிக்கு.
அவளின் கன்னங்களில் கைகளை அன்பாகப் பொருத்தி, “என்னிடம் அனுமதி கேட்க வேண்டுமா வதனி, இது உன் வீடு. அவன் உனக்கு சொந்தமானவன். உனக்கில்லாத உரிமையா.. தாராளமாக அவனுடன் கதை….” என்றார்.
“நான் கோவிலுக்கு போகப் போகிறேன். அப்படியே மாதங்கியின் வீட்டுக்கும் போய்விட்டுத்தான் வருவேன். உனக்குக் குடிக்க அல்லது சாப்பிட என்ன தரட்டும். முதன் முதலாக நம் வீட்டுக்கு வந்திருக்கிறாய். கட்டாயம் நீ ஏதாவது குடித்தே ஆகவேண்டும்.” என்றார் அன்பாக.
“தண்ணீர் மட்டும் தாருங்கள் அம்மா. இப்போது வேறு எதுவும் வேண்டாமே…”
வைதேகி தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கவும் வாங்கி அருந்தினாள்.
அவள் குடித்து முடித்ததும், “நான் கிளம்புகிறேன் வதனி.” என்றவர், அவள் அருகில் வந்து,
“உங்களுக்குள் ஏதோ பிரச்சினை என்பது தெரிகிறது. ஆனால் என்ன பிரச்சினை என்பது தெரியாது. ஆனாலும் வதனி, நீங்கள் இருவருமே போதும் போதும் என்கிற அளவுக்கு கஷ்டப்பட்டு விட்டீர்கள். இனியாவது நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். வயதான எங்களுக்கு வேறு என்ன வேண்டும் சொல்? உங்களின் சந்தோசம் தான் எங்களுக்கு வேண்டும். இன்றில் இருந்தாவது உங்கள் வாழ்க்கை மலரட்டும்.” என்று மனம் நிறைய வாழ்த்தினார்.
அவனின் அறையைக் காட்டி, “அங்கே இருக்கிறான். நேற்றிலிருந்து அவன் முகம் நன்றாகவே இல்லை. போய்ப்பார்…” என்று அவளை அனுப்பியவர் தானும் கோவிலுக்கு புறப்பட்டார்.
அவனின் அறை வாசலுக்குச் சென்றவள், சாத்தி இருந்த கதவில் மிக மெலிதாகத் தட்டினாள்.
“இது என்னம்மா புதுப்பழக்கம், உள்ளே வாருங்கள்…..” அவன் குரல் வறண்டு கேட்டது.
மெல்லக் கதவைத் திறந்தாள் வதனி. வாசலில் நின்றவாறே உள்ளே எட்டி பார்த்தவளின் கண்களில், வெள்ளை உள் பனியனும் சாரமும் அணிந்து, கைகளை மார்புக்கு குறுக்காக மடித்துக் கட்டியபடி ஒரு பக்கமாக சிவரில் சாய்ந்திருந்த இளா தெரிந்தான்.
ஜன்னல் வழியாக வானின் வெளியை வெறித்துக் கொண்டிருந்தவன் வந்தது யார் என்பதைக் கவனிக்கவில்லை.
முகம் காய்ந்து, உதடுகள் வறண்டு, கண்கள் அதன் ஒளியை இழந்து, பார்க்கவே கண்றாவியாக இருந்தான். மனதில் அவன் நிலை பட்டபோதும் முகத்தில் அதைக் காட்டிக்கொள்ளாது, “உள்ளே வரலாமா….?” என்று கேட்டாள் வதனி.
திகைத்துத் திரும்பியவனின் கண்கள், குரலுக்கு சொந்தமானவள் தான் வந்திருகிறாள் என்பதை நம்ப முடியாமல் அவளை உற்று உற்றுப் பார்த்தது.
அவனிடமிருந்து எந்த விதமான பதிலும் வராமல் போகவே, “உள்ளே வரலாமா என்று கேட்டேன்….” என்றாள் இப்போது சற்று அழுத்தமாக.
வந்திருப்பது உண்மையாகவே வதனிதான் என்பது உறுதியாகவும், விரைந்து வாசலுக்கு வந்தவன், “வா வ…” அவளின் பெயரை சொல்ல முடியாமல் இடையில் திக்கியது அவன் குரல்.
உள்ளே நுழைந்தவள், அவனை நேராகப் பார்த்தாள். அவளின் கண்களை நேரே சந்திக்கும் சக்தியை இழந்தவன் பார்வையை வேறுபுறம் திருப்பி, “அமர்ந்து கொள்…” என்று இருக்கையை காட்டவும், எந்தத் தயக்கமும் இன்றி அமர்ந்து கொண்ட வதனி அவனையே பார்த்திருந்தாள்.
எதற்கு வந்திருக்கிறாள் என்பது புரியாத போதும், என் வீட்டுக்கு என்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதில் ஒருவித சந்தோசமும் என்ன சொல்ல வந்திருக்கிறாள் என்று தெரியாததில் சஞ்சலமும் குடிகொண்டது அவன் மனதில்.
மறுபடியும் ஜன்னல் புறமாக பார்வையை திருப்பியவன் அமைதியாகவே நின்றான்.
வதனியோ அவனின் முகத்தை தவிர வேறு எதையும் பார்க்கவே இல்லை. இதற்கு மேலும் அவளின் ஊடுருவும் பார்வையை தாங்க முடியாமல், “சொல்லு….” என்றான் மொட்டையாக.
“எதைச் சொல்ல…?” கடுப்புடன் வந்தது கேள்வி.
திகைப்போடு திரும்பி அவளைப் பார்த்தான்.
“என்ன?” என்றாள் வதனி எடுப்பாக.
ஒன்றுமில்லை என்பதாக அவனின் தலை ஆடியது.
மறுபடியும் அமைதி. பெரும் கொடுமையாக இருந்தது இளாவிற்கு. அறை வரைக்கும் வந்தவள் பேசாமல் சித்திரவதை செய்கிறாளே என்று தோன்றியது.
“வது….” என்றான் பரிதாபமாக.
வாயே திறக்கவில்லை வதனி.
“வது…”


