“இப்படி பேசாமல் இருந்து வதைக்காதே வது…..” அவளின் அமைதியைத் தாங்க முடியாமல் தவிப்புடன் வந்தது குரல்.
“நீங்கள் பேசி வதைத்ததை விடவா இது பெரிய வதை….”
“வது……” இயலாமையுடன் வந்தது அந்த அழைப்பு.
“உங்களை யார் எங்கள் வீட்டுக்கு வரச் சொன்னது…?”
“அது…”
“நான் சொன்னேனா.. அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொல்லச் சொல்லி…..”
“அது.. வந்து…”
“நமக்குள் நடந்த விஷயத்தை எதற்காக அவர்களிடம் சொன்னீர்கள்??”
“இல்லை வது…..”
“வீடுவீடாகப் போய்ச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு நல்ல காரியம் செய்தீர்களோ?”
“விவாகரத்து தருவதாக சொன்னீர்களாம்.. ஏன் லண்டனில் எவளையாவது பிடித்துவிட்டீர்களா…..?”
இதைக் கேட்டதும் அவனின் வறண்ட உதடுகளில் சிறு புன்னகை.
“எதற்கு இந்தக் கண்றாவிச் சிரிப்பு…?” எரிச்சலுடன் கேட்டாள்.
“என் கண்கள் உன்னைத் தவிர வேறு யாரையும் பெண்ணாகப் பார்க்காது வது. என் வாயும் கையும் வேண்டுமானால் தவறு செய்திருக்கலாம். ஆனால் என் கண்களும் மனதும் எந்தத் தவறும் செய்யாது.” வலி தாங்கி வந்தபோதும் நிறைவுடன் இருந்தது அவன் வார்த்தைகள்.
முகம் கசங்கியது வதனிக்கு. அந்த நாளின் நினைவு மனதில் நிழலாட முகமும் கண்களும் வலியை காட்டியது.
“நான் என்ன தவறு செய்தேன். ஏன் அப்படி எல்லாம் செய்தீர்கள்? உங்களை நம்பி காதலித்ததுக்கு நீங்கள் எனக்கு தந்த பரிசா அது… இன்றுவரை என் நெஞ்சு எரிந்து கொண்டே இருக்கிறதே. உங்களுக்கு புரியவில்லையா..? நீங்கள் சொன்னது போல தரம்… தரம்…”
“சொல்லாதே! சொல்லாதே வது! அதைக் கேட்க என்னால் முடியவில்லை. தயவு செய்து சொல்லாதே….” தாங்க முடியாத வேதனையோடு பதறினான் அவன்.
“ச்சு….. அப்படிச் சொன்னது மல்லாமல் பணத்தை அள்ளி வீசினீர்களே, அதன் அர்த்தம் என்ன? அப்படித்தான் நான் உங்களுடன் பழகினேனா? ஏன் இப்படி எல்லாம் செய்தீர்கள். செத்துவிடலாமா என்று எத்தனை தடவை நினைத்திருக்கிறேன் தெரியுமா. அம்மாவும் அப்பாவும் இல்லாமல் இருந்திருக்க இன்று நான் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். அப்படி நடந்திருக்க யாரிடம் வந்து மன்னிப்பு கேட்பீர்கள்…..” அழுகையில் உடலும் குரலும் குலுங்க, கதறிக் கண்ணீர் விட்டவளை பார்க்கப் பார்க்க இளாவுக்கு நெஞ்சில் இரத்தமே வடிந்தது.
“அழாதே வது. உன் கண்ணீருக்கு தகுதியானவன் நான் இல்லை. தயவு செய்து அழாதேம்மா. என்னால் பார்க்க முடியவில்லை….. என்ன வார்த்தை எல்லாம் சொல்கிறாய். இப்படியெல்லாம் பேசாதே வது. அப்படி ஏதாவது அசபாவிதம் நடந்திருக்க நீ சென்ற இடத்துக்கே நானும் வந்திருப்பேன். நீ இருக்கும் இடம்தான் எனக்கும் சொந்தமானது. எங்கு நீ இருக்கிறாயோ அங்குதான் நானும் இருப்பேன்….!” சுயவெறுப்போடு ஆரம்பித்தவன் உறுதியோடு முடித்தான்.
“நடிக்காதீர்கள்! அன்று உங்கள் தங்கையை சொன்னவுடன் கோபம் வந்ததே. என்னையும் உங்கள் சொந்தமாக நினைத்திருக்க,உங்களால் அப்படி பேசி இருக்க முடியுமா? உங்களை நம்பினேனே.. இப்படி என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டீர்களே….”
“வது! என்ன சொல்லி நான் மன்னிப்பு கேட்க. நீ திருமணத்திற்கு மறுத்தாய் என்பது மட்டும்தான் என் மனதில் நின்றது. என் தங்கை காதலித்தவனையே திருமணம் செய்ய நினைக்க, நீ என்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறாயே என்பதில் உண்டான கோபம்தானே ஒழிய அன்று உன் மனதை நோகடித்த என்னுடைய எந்த வார்த்தைகளையும் நான் உணர்ந்து சொல்லவில்லைமா. இதை நீ நம்பவேண்டும்.”
“நான் எங்கே திருமணத்திற்கு மறுத்தேன். பெற்றவர்களுக்கு தெரியாமல் செய்யும் திருமணம் தான் வேண்டாம் என்றேன். அப்படி செய்வது தப்பில்லையா. ஏன் உங்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை….” அழுதழுது பேசியவளின் தாமரை முகம், சிவந்து வீங்கியது.
“வது.. அழாதே…..”
“பெரிய கரிசனம்! இந்த ஐந்து வருடங்களாக தினமும் மனதில் அழுகிறேனே.. இன்று வந்து நடிக்காதீர்கள்….” என்று பொங்கியவளை சமாதானாப்படுத்தும் வழி தெரியாது திகைத்தான் இளா.
அவளின் முகத்தையே பார்த்தவனின் மனம் வேதனையில் துடித்தது. முன்னொரு காலத்தில் சிரிப்பை தவிர இந்த முகம் வேறு எதையும் அறிந்திருந்ததில்லை. இன்றோ கண்ணீர் மட்டுமே சொந்தமாகிப்போனது அந்த பால்நிலா முகத்துக்கு. அனைத்துக்கும் காரணம் நானே என்று நினைத்தவன், “நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்கிறாயா…” என்று தணிவாகக் கேட்டான்.
“இதுவரை நீங்கள் பேசியது போதாதா. என்னிடம் பேசியது போதாது என்று அம்மா அப்பாவிடமும் வந்து பேசினீர்களே. இன்னும் என்ன கதைக்கப் போகிறீர்கள்?”
“அன்று நான் பேசியது தவறுதான், ஆனால் நேற்று பேசியது சரியானதே. இன்றும் நான் சொல்வதைக் கேள் வது….” கெஞ்சியவனை ஒரு பார்வை பார்த்தவள், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.


