அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல்லாத செயல்.” என்றவன் தொடர்ந்தான்.
“என் மனதில் இருப்பதை நான் சொல்லாமலே உணர்ந்து கொள்ளும் நீ, என்னளவில் என் மனைவியாக வாழும் நீ, என்னுடைய முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதைவிட ஏற்றுக்கொள்வாய் என்கிற மிக பெரிய நம்பிக்கையும் இருந்தது.”
“அதையும் தாண்டி உன்னிடம் காதலைச் சொல்லி என்னுடயவளாக உன்னை மாற்றிக்கொண்ட போதும், நீ சின்னப் பெண் உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் பதிந்திருந்தது. அதனால் உனக்கும் ஒரு சிந்தனை இருக்கும் என்பதை நான் யோசிக்கவே இல்லை. நான் சொன்னால் நீ கேட்பாய் என்பதே என் மனதில் இருந்த விடயம்.”
“இந்த எண்ணங்கள் என் மனதில் ஆழப்பதிந்து இருந்தபடியாலும், எப்போதும் எந்த விடயத்திலும் நானே முடிவுகளை எடுத்துப் பழகி இருந்ததாலும் பதிவுத் திருமண முடிவையும் நானே எடுத்தேன். நமக்காக என்று யோசித்தேனே தவிர உனக்காக உன் நிலையில் இருந்து நான் யோசிக்கத் தவறிவிட்டேன்.” என்றவன் செய்த தவறை எண்ணி இன்றும் கலங்கினான்.
அடைத்த தொண்டைக் குழியை செருமி சீர்ப்படுத்தியவன் தொடர்ந்தான்.
“அதனால் நீ மறுத்த போது கண் மண் தெரியாத கோபம் வந்தது. நீ மறுப்பாய் என்று நான் கொஞ்சமும் யோசிக்கவில்லை. இன்று பட்டுத் தெரிந்த பிறகு, உலக அனுபவம் கொஞ்சம் கிடைத்த பிறகு அன்று நீ சொன்னது எவ்வளவு சரி என்று இப்போது புரிகிறது. ஆனால் அன்று கோபம் தான் வந்தது வது. பொழுது போக்கிற்கு பழகிவிட்டு திருமணம் என்றதும் தவிர்க்கப் பாக்கிறாய் என்று தான் தோன்றியது…” என்றான் தயக்கத்தோடு.
இதை கேட்டவள் அவனை முறைக்கவும், கைகள் இரண்டையும் விரித்து, “இது என் அன்றைய எண்ணம்.” என்றான் மன்னிப்பு குரலில்.
“என் தங்கை தன் காதலைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரிடமும் போராட நீயானால் முடியாது என்கிறாய். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் நாம் சேர வழி இல்லை என்று நான் சொல்லியும் நீ மறுக்கவும், நீ என்னை ஏமாற்றுகிறாய் என்கிற கோபம் தான், அவளுடன் உன்னை ஒப்பிடாதே என்கிற கொடும் வார்த்தைகளாக வந்தது.” என்றவனின் விழிகள் என்னை நம்பு என்று கெஞ்சியது.
அவள் அமைதியாக இருக்கவே தொடர்ந்தான்.
“எவ்வளவோ மன்றாடியும் விளங்கப்படுத்தியும் கெஞ்சியும் நீ சம்மதிக்காதது என் நிதானத்தை இழக்க வைத்தது. அதுவரை என் பேச்சை யாருமே தட்டியது இல்லை. அதேபோல என் முடிவுகள் தவறியதும் இல்லை. நான் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் என் மனதில் எப்போதும் இருந்தது. அப்படியான என் எண்ணங்கள் அனைத்தையும் உன் மறுப்பு தகர்த்து எறிந்தது. மனதளவில் மிகவும் நொந்து பாதிக்கப்பட்ட நான் என் கோபத்தை வெளிக்காட்டிய விதம்தான் அது.”
கேட்டுக் கொண்டு இருந்த வதனியின் விழிகள் கலங்க ஆரம்பிக்கவும் அதை அவனுக்கு காட்ட விரும்பாது பார்வையை திருப்பிக்கொண்டாள்.
‘அழாதே கண்ணம்மா….’ என்று அவளை அணைக்கத் துடித்த மனதை கல்லாக்கித் தொடர்ந்தான்.
“அந்தக் கோபம் தான் உன்னை சட்டப்படி என்னவளாக மாற்றி உன்னிடமே காட்டவேண்டும் என்கிற வைராக்கியத்தை உண்டாக்கியது. இவை அனைத்தையும் செய்யும் போது உன் மனம் என்ன பாடுபடும் என்பதை நான் யோசிக்கவே இல்லை.நான் செய்யும் செயல்களே என் காதலை என்னிடம் இருந்து பிரிக்கப்போகிறது என்பதை அன்று நான் உணரவே இல்லை.” என்றவன் வேதனையோடு விழிகளை மூடித்திறந்தான்.
“இன்றும் சொல்கிறேன். நான் செய்தவைகளை நானே உணரவில்லை வது. ஏதோ ஒரு விதத்தில் என் கோபத்தை வெளிக்காட்டினேன் என்பது வரைதான் என் மனதில் இருந்தது. லண்டன் செல்வதற்கு முதல், உன்னைப் பார்க்கலாம் என்கிற ஆவலில் வாணிக்கு போனேன். அங்குவைத்து நாம் முதலில் சந்தித்துக் கொண்டதில் இருந்து அனைத்தையும் நினைத்துப் பார்த்த போதுதான் நான் உனக்கு செய்த கொடுமைகள் அனைத்தும் என் மண்டையில் உறைத்தது.
“உன்னிடம் மன்னிப்பு கேட்க வந்த நான் அதைக் கேட்கும் தகுதி கூட எனக்கு இல்லை என்று உணர்ந்து, மன்னிப்பை கேட்காமலேயே லண்டன் சென்று விட்டேன். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை நான் உணர்ந்தவைகள் வார்த்தையால் வடிக்க முடியாது வது. வலி மட்டுமே!”
அங்கே சிறிது நேரம் அமைதி நிலவியது. எங்கேயோ பார்வையை நிலைக்க விட்டிருந்தவனின் முகத்தில் வேதனையின் கோடுகள்…
ஆரம்பித்ததை விருப்பம் இன்றித் தொடர்ந்தான்.
“தினமும் கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு மணித்தியாலங்கள் வேலை செய்துவிட்டு வந்து கண் மூடினாலும், அன்று கண்ணீருடன் என்னை நீ பார்த்த பார்வையும், பதிவாளர் அலுவலகத்தில் வைத்து எந்த உணர்வும் இல்லாமல் நீ பார்த்த வெற்றுப்பார்வையும் என்னை கண் மூட விட்டதே இல்லை.” என்றவனின் உடலில் ஒரு அதிர்வு தோன்றி மறைந்தது.
அவளின் அந்தப் பார்வைகள் இன்றும் அவன் மனக்கண்ணில் வந்துபோனதோ…
“கண்களை மூடவே பயமாக இருக்கும். மூடினால் நீ வந்து அழுவாய். சத்தியமாக சொல்கிறேன். ஒவ்வொரு மணித்துளியும் என் வாழ்க்கையை இழந்துவிட்டேனே. பூப்போல இருந்தவளின் மனதை நோகடித்துவிட்டேனே. என் பொக்கிஷத்தை தொலைத்துவிட்டேனே என்று துடித்துக் கொண்டு இருக்கிறேன் வது. இந்த துடிப்பையும் வேதனையையும் என்னால் தாங்கவே முடியவில்லை. அதனால் தான் தகுதி இல்லை என்று தெரிந்த போதும் உன்னிடம் மன்னிப்பை யாசித்தேன்.” என்றவனின் குரலும் இப்போது அவளிடம் மன்னிப்பை வேண்டியது.
“நடந்தவைகளையே ஜீரணிக்க முடியாமல் தவித்த என்னால் நீ நேற்று சொன்னவைகளை தாங்கவே முடியவில்லை.அதனால் தான் உன் வீட்டுக்கு வந்து உண்மைகளைச் சொன்னேன். ஒன்றில் நீ என்னைத் திருமணம் செய்ய வேண்டும் அல்லது இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் உன் நெற்றியும், கழுத்தும் வெறுமையாக இராதில்லையா….” என்றவனின் குரலில் தான் சொன்ன முதலாவைதைச் செய் என்கிற வேண்டுதல் இருந்தது.
“அதோடு, என்னை நல்லவன் என்று நம்பும் அந்த நல்ல மனிதர்களை எமாற்றுகிறேனே என்கிற குற்ற உணர்ச்சியும் என்னை வாட்டியது. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்தாவது விடுதலை கிடைக்காதா என்கிற நப்பாசையில்தான்மா… உன் அப்பாவிடம் உண்மைகளைச் சொன்னேன். அவர்கள் எனக்கும், என்னைப் பெற்றவர்களை போன்றவர்கள் தான். அவர்கள் இதை அறிந்து கொண்டதாலோ அல்லது என்னை திட்டுவதாலோ எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை.” என்றவன் தொடர்ந்தான்.
“இது எல்லாவற்றையும் விட தவறு செய்தவன் நான். நீ எந்தப் பிழையுமே செய்யவில்லை, என்னைக் காதலித்ததை தவிர. பிழை செய்யாத நீ அந்தக் கொடிய தண்டனையை அனுபவிக்க உன்னை விடமாட்டேன். அதனால் தான் மாமாவிடம் உண்மைகளை சொன்னேன். என்னை வெறுத்து ஒதுக்கினாலும் உனக்கான நல்லதை கண்டிப்பாக அவர் செய்வார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது..” என்றவனின் வார்த்தைகளை விட கண்கள் வலியை அதிகமாக காட்டியது.
அதைப் பார்த்தவளின் கண்களும் சற்றே கலங்கியது. “உங்களை துன்பப்படுத்த வேண்டுமென்றோ அல்லது நோகடிக்கவோ நான் அப்படிச் செய்யவில்லை. ஆனால் உண்மையாகவே என் மனதில் பொட்டு வைக்கும் விருப்பம் போய் விட்டது. அன்று..அன்று நீங்கள் போய்விட்டீர்கள். ஒரு.. வெறியன் என் மேல்…..”
“வேண்டாம்! சொல்லாதே! எனக்கு தெரியும். கேள்விப்பட்டேன்…” என்றான் கண்கள் சிவக்க, முகம் கோபத்திலும் வலியிலும் துடிக்க.
“அவனுக்கும் என் அழகு கண்ணில் படப்போய்த்தானே என்னை நெருங்கினான். அதே போல உங்களுக்கும் என் அழகு…..” சடாரென்று அவளைத் திரும்பி வெறித்தவனின் காதல் கொண்ட மனது பலமாக அடிவாங்கியது.
‘அந்த வெறியனுடன் என்னையும் ஒப்பிடுகிறாளே…’
அவனைப் பார்த்தவளுக்கு அவனின் நிலை புரிய, அதுவும் வேதனையாக இருந்தது வதனிக்கு.
“அன்றைய என் எண்ணம் அது…” என்றாள் முணுமுணுப்பாக.


