“புரிகிறது. சொல்லு…..” என்றான் வலியை விழுங்கியபடி..
“இரண்டு சம்பவமுமே என்னை பலமாக தாக்கியது. இனி எனக்கு என்று வாழ்க்கை இல்லை என்பதும் புரிந்தது. நல்லவன் என்று நம்பியவன்….. நம்பியவர் பொய்த்துப் போனதில் எல்லாமே விரக்தியாக இருந்தது.” என்றவளின் குரல் கரகரத்தது.
“நீங்கள் என் நெற்றியில் பொட்டு வைத்து தான் முதன் முதலில் உங்கள் காதலைச் சொன்னீர்கள். அதன் பிறகு நெற்றியில் பொட்டு வைத்த போதெல்லாம் உங்கள் நினைவுடன்தான் வைத்துக்கொண்டேன். பிறகோ.. உங்கள் நினைவு வருவதும் பிடிக்கவில்லை பொட்டு வைப்பதும் பிடிக்கவில்லை. அதோடு நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை என்றுதான் பொட்டு வைப்பதை நிறுத்திக்கொண்டேன். நேற்று நான் சொன்ன விடயமும் எனக்கான தண்டனை என்றுதான் செய்தேனே தவிர உங்களைத் தண்டிக்க நினைக்கவே இல்லை.” என்றவள் தொடர்ந்தாள்.
“உங்கள் மேல் கோபம் இருப்பது உண்மை. அதற்காக தண்டிக்கும் அளவுக்கு கொடுமையானவள் இல்லை நான்.” என்றாள் அவள்.
அந்த வெள்ளை மனதுக்காரியின் தூய உள்ளத்தின் அன்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டாமோ… அப்படிக் கிடைத்த அன்பைத் தூக்கி எறிந்துவிட்டேனே…. அந்த அன்பைத் திரும்பப் பெற்றுவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது அவனுக்கு.
“அந்தக் கோபம் போக என்ன செய்யவேண்டும் நான்…?” என்றான் மெல்ல.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் மெல்லிய சீற்றத்தை காட்டியது.
“அதுதான் அப்பாவிடம் நேற்றே சொல்லிவிட்டீர்களே, விவாகரத்து தருவதாக. அப்படி தந்துவிட்டால் உங்களுக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி. அதனால் நான் கையெழுத்திட்ட பத்திரத்தை உங்களிடம் தந்துவிட்டுப் போக வந்தேன்….” என்றாள் கோபத்தை உள்ளடக்கிய குரலில்.
ஒரு நிமிடம் திகைத்து விழித்தவன், மறு நிமிடம் மெல்லிய புன்னகை ஒன்றை தன் உதடுகளில் தவழவிட்டான்.
“நிச்சயமாக இல்லை! என் வதுவால் என்னைத் தவிர இன்னொருவனை நினைக்கவே முடியாது. பிறகு எங்கே மணப்பது…..” திடமாக வந்தது அவனின் வார்த்தைகள்.
“ஏனோ??? ஏன் என்னால் முடியாது? பெரிய மன்மதன் என்ற நினைப்போ உங்களுக்கு…?”
“நான் மனிதனே இல்லை என்கிற எண்ணம் தான் எனக்கு. அதே போல என் மனைவி மாசு மறுவற்றவள். என் காதலியின் மனது சுத்தமானது. என்னை மறந்தாலும் இன்னொருவனை நினைக்க மாட்டாய். நீ அப்படி நினைக்காமல் நான் விவாகரத்து தரமாட்டேன்….” என்றான் உறுதியுடன்.
“இந்த பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை……” என்று கோபத்துடன் முணுமுணுத்தவள், “நான் வருகிறேன்…” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
போகிறாளே என்று தவித்தவன், “உன் கோபம் போவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி விட்டு போ வது…” என்றான் தவிப்புடன்.
வந்ததே கோபம் வதனிக்கு. அவனை திரும்பி முறைத்தவள், என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து, அவனருகில் சென்று,அவன் அணிந்திருந்த பனியனை கொத்தாக பற்றி,
“என்னவாவது செய்து தொலையுங்கள். இதற்கு முதல் செய்ததை எல்லாம் என்னிடம் கேட்டுவிட்டா செய்தீர்கள். எத்தனை நாட்கள் வலியோடு தவித்தேன். அம்மா அப்பா முன் அழவும் முடியாமல், பொய்யாக சிரித்துக்கொண்டு, இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதுகொண்டு, வாணியில் பார்க்குமிடம் எல்லாம் தெரியும் உங்களை நினைக்கவும் பிடிக்காமல் மறக்கவும் முடியாமல் தினம் தினம் தவித்தேனே… இதை எல்லாம் எதைச் செய்து மறக்க வைக்க முடியும் உங்களால்.” உடைந்த குரலில் உக்கிரமமாகக் கேட்டாள்.
“இதுவரை மணிமாமா வீட்டுக்கு கூட நான் போனதில்லை. நான் வருவதில்லை என்பதால் அவரும் நித்தியுடன் திருகோணமலை சென்றுவிட்டார். கோவிலுக்கு போவதில்லை. வீடு, வாணிநிலையம், பள்ளி இது மூன்று மட்டுமே நான் செல்லும் இடங்கள். இப்படி எனக்குள் நானே உருகி உருக்குலைந்து நிற்கிறேனே, இதையெல்லாம் என்ன செய்து மாற்ற முடியும் உங்களால். ஏன் அப்படியெல்லாம் செய்தீர்கள். உங்களுக்கு எப்படி மனம் வந்தது…..” அவன் நெஞ்சிலே சாய்ந்து கதறினாள்.
“உண்மைக் காதல் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்க முடியுமா உங்களால். என்னை ஏமாற்றி விட்டீர்களே…. அப்பா உங்களை பேசியதையே என்னால் பொறுக்க முடியவில்லையே. உங்களால் எப்படி என்னை அப்படி சொல்ல முடிந்தது…..” தன்னை மறந்து அவனை பிடித்து உலுக்கியபடி கதறியவள், அப்படியே சரிந்து அவன் காலடியிலேயே அமர்ந்து முகத்தை கைகளால் மூடிக் கதறி அழுதாள்.
கைகள் இரண்டையும் இறுக பொத்தி, கண்களை அழுத்தி மூடியவன் இரும்பாய் இறுகி நின்றான். தன்னை நினைத்தே நெஞ்சு கொதித்தது அவனுக்கு.
கதறி அழுதவளின் தலையில் இரு நீர்த் துளிகள் விழ, உணர்வுக்கு வந்தவள் தலையில் கை வைத்துப் பார்த்தபடி அப்படியே தலையை உயர்த்தி அவனைப் பார்க்கவும், அவனின் கண்ணீர்த் துளிகள் இரண்டு அவளின் கன்னங்களில் பட்டு சிதறியது.
ஏற்கனவே கோலம் கெட்டிருந்த அவனின் முகம் இப்போது கண்ணீரிலும் சுய வெறுப்பிலும் பார்க்கவே முடியாமல் சுருங்கி இருந்தது.
அவனையே பார்த்திருந்தவளுக்கு காலையில் வைதேகி சொல்லிச் சென்றது நினைவில் வந்தது. உடலாலும் ஒடுங்கி உள்ளத்தாலும் நசுங்கி வெளிப்பார்வைக்கு மட்டும் மனிதனாகத் தெரியும் அவனை இன்னும் வதைத்தால் தான் பெண்ணே இல்லை என்று தோன்றியது.
பொட்டு வைக்கமாட்டேன் என்று சொன்னதற்கே பெற்றவர்களிடம் வந்து தான் செய்தவைகளை சொன்னவனின் உண்மை அன்பு புரிந்தது. அவளின் மனக்காயத்துக்கு அவனின் இந்தக் கண்ணீர் மருந்தாக மாறுவதை உணர்வு பூர்வமாக உணர்ந்துகொண்டாள்.
தவறுகள் நிறைந்தவன் தான் மனிதன். வார்த்தையால் தவறியதற்கே இந்தப் பாடு படுகிறானே. மன்னிப்பை யாசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்க, தன்னிடம் மட்டும் அல்லாது தன்னைப் பெற்றவர்களிடமும் அவன் மன்னிப்பைக் கேட்டது,அவளின் நொந்த மனதை மயிலிறகால் நீவிவிட்டது.
தவறுகளைச் செய்துவிட்டு நான் செய்யவே இல்லை என்று கடைசிவரை சாதிக்கும் மனிதர் வாழும் உலகில், செய்த பிழையை ஏற்றுக்கொண்டதும் அல்லாமல், நான் ஆண் என்கிற கர்வம் இன்றி கண்ணீர் விட்டு மன்னிப்பை கேட்கிறானே…அவன் மனிதன் என்பதை நிரூபித்துவிட்டான். நான் ஒரு தாய்மை நிரம்பிய பெண் என்பதை நிரூபிக்க வேண்டாமா என்று மனதில் நினைத்தவள், தனது கண்களை துடைத்துக் கொண்டாள்.
மெல்ல எழுந்து, “வீட்டுக்கு வந்தளுக்கு ஒரு வாய் தேநீர் தரமாட்டீர்களா?” என்றாள் எதுவும் நடக்காததாய்.
வேதனை மிக்க உலகில் இருந்தவன் திகைத்துப்போய் கண்களை திறந்து அவளைப் பார்த்து விழித்தான்.


