“ஒரு கப்பு தேநீர் கேட்டதற்கா இந்த முழி முழிக்கிறீர்கள்…?” எதுவும் நடவாத குரலில் கேட்டாள் அவள்.
“வது, தயவுசெய்து.. மன்னிக்கமாட்டாயா…..”
“மன்னித்துவிட்டு…?”
பயந்தே போனான் இளா. அன்றொருநாள் இப்படி ஆரம்பித்தவள் பொரிந்து தள்ளியவை நினைவிலாடியது. நெஞ்சு நடுங்க அமைதியாகவே நின்றான்.
“சொல்லுங்கள். மன்னித்துவிட்டு என்ன செய்ய வேண்டும்…?”
அவளையே பார்த்தபடி பேசாமல் நின்றான்.
“என்ன பார்வை பார்க்கிறீர்கள். மன்னித்த பிறகு என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்….?” என்றாள் மறுபடியும்.
சற்று நேரம் அவளையே பார்த்தவன், “என்னை மணந்துகொள். அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வந்தாலும் காதலுடன் உன்னைக் கடைசிவரை காப்பாற்றுவேன்…” என்றான் தைரியமாக.
அவன் கண்களையே உற்றுப்பார்த்தாள் வதனி. இப்போது அவள் பார்வையை தயங்காது தாங்கியது அவன் விழிகள்.
“சரி!” என்றாள் அமர்த்தலாக.
“என்னது…?” எதிர்பார்க்கவே இல்லை இளவழகன்.
“உண்மையாகவா சொல்கிறாய்?”
“ஆமாம்…” என்றாள் உறுதியான குரலில்.
முகம் முழுதும் மலர, “அப்படியானால் என்னை மன்னித்துவிட்டாயா….?” ஆவலுடன் கேட்டான்.
“இல்லை…” என்றாள் இப்போதும் உறுதியாக.
அத்தனை ஆனந்தமும் வடிய, “பிறகு?” என்றான் ஏமாற்றமான குரலில்.
“மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு உங்களுக்கு. அந்த தண்டனைதான் என்னுடனான மிகுதி வாழ்க்கை..”என்றாள் சிரிப்பை மறைத்த முகத்துடன்.
முகம் மலர்ந்தது அவனுக்கு. உள்ளம் முழுதாய் நிறைந்தது. இதுநாள் வரை பட்ட துன்பத்துக்கு பரிசு கிடைத்ததாய் தோன்றியது. காதல் கைகூடிய அன்று கூட இந்தளவுக்கு நிறைவும் மகிழ்வும் கிடைத்ததா என்றால் தெரியாது என்றுதான் சொல்வான்.
“நீ தருவது தண்டனை இல்லை வது. என் வாழ்க்கையின் வரம். எல்லோருக்கும் எல்லாம் செய்துவிட்டேன். இனியும் இந்த உலகில் வாழவேண்டுமா என்று கூட நினைத்திருக்கிறேன். இன்றானால் இன்னும் பல ஜென்மங்களுக்கு உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்…” என்றான் உள்ளம் நிறைந்த குரலில்.
மீண்டும் மீண்டும் அவன் அதையே பேசவும், “ஆகமொத்தத்தில் ஒரு கப் தேநீர் கூடத் தரமாட்டீர்கள். அப்படித்தானே…” என்று கேட்டவளின் முகம் சாதரணமாய் இருந்தபோதும் அந்தக் கயல் விழிகள் மின்னியது.
அவளையே பார்த்தவனின் கண்கள் சிரிக்க, கன்னம் சிரிக்க, உதடுகள் கம்பீரமாக வளைந்து மனம் விட்டு அழகாய் நகைத்தான் இளவழகன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவனின் முகம் நிறைந்த சிரிப்பை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.
கலங்கிய கண்கள் சிரிக்க, கன்னமிரண்டும் மின்ன செவ்விதழ்களை விரித்தவளின் அழகில் சொக்கியே போனான் இளவழகன். ஆசையோடு, அவனின் சிரிப்பை ரசித்தவளின் பாசம் அவனை அடியோடு கட்டிப்போட்டது.
என் வாழ்வின் இறுதிவரை எந்த துன்பமும் உன்னை அண்ட விடமாட்டேன் கண்ணம்மா.. என்னால் நீ பட்ட துன்பத்துக்கு என் அன்பையே உனக்கு மருந்தாக்குவேன்… என்று மனதில் உறுதி பூண்டான் அந்தக் காதலன்.
அவளின் அழகை ரசித்தவன், “வா.. தேநீர் ஊற்றி தருகிறேன்….” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தான்.
அவன் தேநீர் தயாரிக்கும் அழகைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.
“உங்களுக்கு சமைக்க தெரியுமா…..” கேட்டவளின் குரலில் கொஞ்சமே கொஞ்சம் குறும்பும் எட்டிப் பார்த்தது.
அன்றொருநாள் நித்தியின் வீட்டில் வைத்து அவன் கேட்ட அதே கேள்வி! அன்றுக்கும் இன்றுக்கும் இடையில் ஒன்றுமே நடக்கவில்லையோ என்கிற மாயையைத் தோற்றுவித்தது.
அந்தக் குரலின் உயிர்ப்பில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் இளா. எவ்வளவு நாட்களுக்கு பிறகு அவளின் குறும்பான குரலைக் கேட்கிறான். பழைய வனி முழுதாக திரும்பியிராத போதும் திரும்பிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்ததில் நெஞ்சம் இன்னும் இன்னும் அவள் மேல் நேசம் கொண்டது.
“லண்டனில் இருந்தபோது பழகிக்கொண்டேன் வது…..”
“ஏன்? உங்கள் மாமா வீட்டில் தானே இருந்தீர்கள்…..”
“இல்லைடா, நம் திருமணம் நடந்ததில், அவருக்கு அப்போதெல்லாம் சற்று மனம் சரியில்லை. அதனால் நான் தனியாகவே இருந்துகொண்டேன். தங்கள் வீட்டில் வந்து இருக்கும்படி அழைத்தார்கள்தான். நான்தான் போகவில்லை…”
அவள் வேண்டுமென்கிற அவனின் பிடிவாதக் காதலால் அங்கும் அவன் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்பதை அறிந்தபோது பாவமாக இருந்தது அவளுக்கு.
“தனியே இருந்து சமைத்துச் சாப்பிட்டு வேலை பார்ப்பது கஷ்டமாக இருக்கவில்லையா உங்களுக்கு…” இரக்கத்தோடு கேட்டாள்.
“அது எதுவுமே எனக்கு கஷ்டமாக தோன்றியதே இல்லை வது. மனதில் மிகப்பெரிய வேதனை இருந்ததில் அவை எல்லாம் சுலபமாக தெரிந்ததோ என்னவோ… ஒருநாள் கூட கடினமாக இருக்கிறதே என்று நான் நினைத்ததே இல்லை…” என்றான் புன்னைகையோடு.
மனம் விக்கித்தது வதனிக்கு. எத்தனை நாட்கள் கலங்கி இருப்பாள். என்னை மறந்து எப்படி வாழ முடிகிறது அவனால் என்று. எத்தனை தடவைகள் அவனை திட்டி இருப்பாள். அவனானால் இரவும் பகலும் அவளின் நினைவுகளுடன் அல்லவா வாழ்ந்திருக்கிறான்.
மனம் நெகிழ, உள்ளம் அவன்பால் உருகியது. கண்கள் மறுபடியும் கலங்கும் போல் தோன்றவே, சமையலறையை சுற்றிப் பார்ப்பதுபோல் அங்கும் இங்கும் நடந்து தன் மனதை சமன் படுத்திக்கொண்டாள்.
அவன் கொடுத்த தேநீரை ஒருவாய் பருகியவள், “ம்ம்..! நன்றாகத்தான் போட்டிருக்கிறீர்கள்.” என்றாள் பாராட்டாக.
அவளை கண்களால் தழுவி, “நன்றி….” என்றான் சிரிப்புடன்.
“நன்றாக மெலிந்துவிட்டாயேடா…” அதற்குக் காரணம் நான்தானே என்றது அவன் குரல்.
தன்னைத்தானே குனிந்து பார்த்துவிட்டு, “மெலிவாக இருப்பது தானே நல்லது..” என்றாள் அவனின் எண்ணவோட்டத்தை அறிந்து.
எதுவும் சொல்லாது அவளைப் பார்த்துச் சிரித்தவனின் முகத்தில் வேதனையின் சாயல்.
அவனின் மெலிவையும் அவள் உணர்ந்தபோதும் அதைப் பற்றிப் பேசி அவனை மீண்டும் மீண்டும் நடந்தவைகளை நினைத்து வருந்த விட விரும்பாது, “தோட்டத்துக்குப் போவோமா….?” என்று கேட்டாள் வதனி.
“வா..” என்று அழைத்துச் சென்றான்.
அங்கே அமர்வதற்காக போடப்பட்டிருந்த கல்லைக் காட்டியவன், தானும் இன்னொன்றில் அமர்ந்துகொண்டான்.
காலை நேரக்காற்று இதமாக வீச, அருந்திய தேநீரே அமுதமாக இருந்தது இருவருக்கும். மனம் நிறைந்திருந்தால் மருந்தும் சுவைக்கும் எனில் தேநீர் தேனாய் இனிக்காதோ…
தோட்டத்தை சுற்றிக் கண்களை சுழற்றியவளின் பார்வையில் ஊஞ்சல் பட்டது.
“உங்கள் தங்கையின் ஊஞ்சலா அது….” என்று ஆர்வத்துடன் கேட்டவளை பார்த்துக்கொண்டே,
“அது உனக்காகக் கட்டிய ஊஞ்சல்…” என்றான் அவன்.
“மாதவியின் ஊஞ்சல் முற்றத்தில் இருந்தது. இப்போது எடுத்துவிட்டோம். அவள் இல்லை தானே. இது உனக்காக நான் கட்டியது…” என்றான் தொடர்ந்து.
பேச்சற்றுப்போய் பார்த்தாள் வதனி.
தேநீரை அருந்தியபிறகு வீட்டுக்குள் அவளை அழைத்துச் சென்றவன், வீட்டை சுற்றிக்காட்டினான். அவனின் அறையை பார்த்தவளின் மனம் இன்னுமே பாரமானது. அவனின் அறைக்குள் அவளுக்கென்று ஒரு அறையும், அதில் அவள் அணிய என்று ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை இருந்ததை பார்க்க நெஞ்சம் கரைந்துபோனது அவளுக்கு.
“இவை எல்லாம் எப்போது, ஏன் வாங்கினீர்கள்….” என்று கேட்டாள் குரல் அடைக்க…
“என் ஒவ்வொரு மாதச் சம்பளத்தின்போதும் உனக்காக வேண்டியவைதான் இதெல்லாம். என் மீது வெறுப்பாக நீ இருக்கிறாய் என்று தெரிந்தபோதும், உன்னுடனான வாழ்க்கை எனக்கு இல்லை என்று நினைத்தாலும் உன்னை என்னிடமிருந்து என்னாலேயே பிரிக்க முடியாது….” என்றான் அவனுமே ஒரு வருத்தப் புன்னகையுடன்.


