அவளுடனான வாழ்க்கை நிச்சயப்படாத போதும் அவனின் செயல்கள் அனைத்தும் அவளைச் சுற்றியே இருந்திருப்பதை உணர முடிந்தது. அவனின் அந்த அன்பு அவளை அவன்பால் கட்டி இழுத்தது.
கண்கள் குளமாகும் போல் தோன்ற, “முகம் கழுவ வேண்டும். எங்கே கழுவ…?” என்றாள் கண்களை அவன்புறம் காட்டாமல்.
அவளின் நிலையை புரிந்துகொண்டவன் எதுவும் சொல்லாது, “வா….” என்று கிணற்றடிக்கு அழைத்துச்சென்று தண்ணீர் அள்ளி வாளியில் ஊற்றினான்.
அவள் முகம் கழுவவும், “நீ கழுவு. இதோ வருகிறேன்….” என்று வேகமாக உள்ளே சென்றான்.
கையில் புது துவாயுடன் அவன் வர அவள் அங்கே கொடியில் காய்ந்து கொண்டிருந்த துவாயினால் முகம் துடைத்துக் கொண்டிருந்தாள்.
“அது என்னுடைய துவாய் வது. இந்தா, இது புதிது. இதால் துடை….” என்றபடி கையில் இருந்த துவாயை நீட்டினான்.
அதை வாங்காது, “உங்களுடையது தானே. இல்லாவிட்டால் அம்மாவுடயதாக இருக்கும் என்று நினைத்துத்தான் துடைத்தேன்…” என்றவள் தொடர்ந்து துடைக்கவும், அவளின் அந்தக் கள்ளமில்லா அன்பு அவனின் உயிரின் அடிவரை சென்று அவனைப் புதிதாய் உயிர்த்தெழ வைத்தது.
வலியும் வேதனையும் நிறைந்திருந்த மனம் முழுதும் காதலும் ஆசையும் மீண்டும் மெல்ல மெல்லக் குடிவந்தது.
மனம் நிறைந்தவன், தானும் முகத்தை கழுவி, அவள் துடைத்த அவனின் துவாயினாலேயே தன்னுடைய முகத்தையும் துடைத்துக்கொண்டான். அதில் வீசிய அவளின் வாசனை அவனின் உணர்வுகளை உயிர்ப்பிக்க பார்த்தது.
ஆழ்ந்த மூச்சினை இழுத்து, அவளின் வாசத்தை சுவாசித்து, தனது மூச்சுக்காற்றுக்கு உயிர் கொடுத்தான் அவன்.
இருவரும் வீட்டுக்குள் வரும் வழியில் அவளின் முகத்தையே திரும்பித் திரும்பி பார்த்தான் இளா. அதை உணர்ந்து கொண்டவளுக்கோ குழப்பமாக இருந்தது. ஏன் பார்க்கிறான். அப்படியே பார்த்தாலும் எதுவும் பேசாமல் இருக்கிறானே என்று யோசித்தவளின் மூலையில் மின்னல் அடிக்கவும் மெல்லிய புன்னகையை உதடுகள் பூசிக்கொண்டது.
உள்ளே நுழைந்து, “சுவாமி அறைக்கு போவோம் வாருங்கள்…” என்று அவனையும் அழைத்தபடி முன்னே நடந்தாள் வதனி.
கண்கள் மகிழ்ச்சியில் மின்ன, மனம் நிறைய எதிர்பார்ப்புடன் அவள் பின்னாலேயே விரைந்தான் அவன்.
சுவாமிக்கு விளக்கினை ஏற்றியவள், கண்களை மூடிக் கை கூப்ப, இளாவின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.
அவளைப்போலவே கண்களை மூடிக் கை கூப்பியவனின் மனதின் நிறைவை வார்த்தைகளால் வடிக்க முடியாது.
கண்களை திறந்த வதனி, திருநீறு சந்தனத் தட்டை கையில் எடுத்து, “அத்தான்…..” என்றாள் நேசம் நிறைந்த குரலில்.
உயிர் மட்டும் அல்ல உடலின் மொத்தமுமே ஆடியது இளாவுக்கு. அமுதமாய் கிடைத்த அழைப்பில் இளவழகன் என்கிற ஆண்மகனே உயிர்த்தெழுந்தான்.
உடலிலும் மனதிலும் பரவசம் நிறைய, கண்களை திறந்தவனின் காதலில் கரைந்துபோனாள் வதனி. அத்தகைய அன்பும் ஆசையும் தெரிந்தது அந்தக் கண்களில்.
அவன் கண்களின் வசீகரத்தில் பேசும் சக்தியை இழந்தவள், மைவிழியால் கையில் பிடித்திருந்த திருநீறுத் தட்டைக் காட்டி உத்தரவை இட்டாள்.
உயிர் உறையும் அந்த விழி அசைவில் பறிபோன உள்ளத்தை மறுபடியும் பறிகொடுத்தவன் நடுங்கும் கரத்தால் திருநீறினை ஒற்றி எடுத்து, உள்ளம் நடுங்க அவளின் பிறை நெற்றியில் பூசினான்.
குங்குமத்தையும் சந்தனத்தையும் சேர்த்துக் குழைத்து பொட்டாக மோதிரவிரலில் தாங்கியவன், அவளின் நெற்றி அருகே கொண்டு செல்ல, கை பெரும் ஆட்டம் கண்டது அவனுக்கு.
நடுங்கிய கையை நிலைப்படுத்த நினைத்து, பெருவிரலாலும் சின்ன விரலாலும் அவளின் இரண்டுபக்க கன்னங்களையும் பற்றிக்கொண்டவன், மோதிரவிரலை அவளின் நெற்றியுடன் ஓட்டினான்.
அவளின் நெற்றி குங்குமத்தை வாங்கவும் இவன் கண்களில் இருந்து நீர்த்துளிகள் உருளவும் சரியாக இருந்தது.
பொட்டை இட்டவன் தாங்க முடியாது அவளைக் கட்டியணைத்தான். அவளைத் தன்னோடு சாய்த்தவனின் உடல் அழுகையில் குலுங்கியது.
வதனிக்குமே கண்கள் கலங்கி கண்ணீர் கொட்டியது. ஆனாலும் அவனின் முதுகை ஆறுதலாக தடவிக்கொடுக்கத் தவறவில்லை அவளின் கைகள்.
அதுதான் தாய்மை நிறைந்த பெண்மையின் அழகோ…..!
அவனின் உடலின் குலுங்கல் நின்றபாடாகத் தெரியவில்லை. அவளுக்குமே அழுகையும் நிறைவும் ஒன்றாக வந்தது. என்னதான் அவன் மேல் இத்தனை நாளும் கோபமாக இருந்தாலும் அவளின் உள் மனது மட்டுமே அறியும், அவனின் அண்மையை அவள் நாடியதை.
உடலும் உடலும் உறவாடியிருக்க உதறிவிட்டு போகலாம். இங்கே உள்ளமும் உள்ளமும் களவாடிக்கொள்ள உறவாடியது உயிரும் உயிரும் அல்லவா!
உதற முடியுமா???? உதற நினைக்க உயிர் பிரிந்திடாதா…
அவன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் அவனின் காதலைச் சொல்லியது.
“அத்தான்… என்ன இது சின்னப்பிள்ளை போல இப்படி அழுகிறீர்களே. ஆண் பிள்ளை அழலாமா……” சிறு சிரிப்போடு சொன்னவளின் குரல் கொஞ்சியது.
சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன், சிறு வெட்க சிரிப்புடன் முகத்தை இரண்டு கைகளாலும் துடைத்துக்கொண்டான்.
“நான் செய்தவைகளை உன்னால் மறக்க முடியுமாடா. என்னாலேயே முடியவில்லையே…..” கரகரத்த குரலில் கேட்டவனின் தவிப்பு புரிந்தது அவளுக்கு.
“மறக்க முடியுமா தெரியவில்லை அத்தான். ஆனால் இப்போது ஒதுக்க முடிகிறது.” என்றாள் ஆறுதலுடன்.
“மிக்க நன்றிடா. மொத்த நம்பிக்கையையுமே இழந்திருந்தேன். இப்போது கூட நம்ப முடியவில்லை. நீ இப்படி என் அருகில் நிற்கிறாய் என்பதை…”
“உங்கள் கையை கிள்ளவா. அப்போதாவது நம்புகிறீர்களா.. நடப்பது உண்மை என்பதை…” நகைப்புக்குரலில் கேட்டவளின் நகைமுகத்தை நேசம் கொண்டு பார்த்தவன், தடுமாறும் மனதை மறைத்தபடி, “மா… உன் அப்பாக்கு தெரியுமா நீ இங்கு வந்தது…” என்றான் கேள்வியாக.
“நானாகச் சொல்லவில்லை. ஆனால் ஊகித்திருப்பார்கள்…” என்றவள் நேரம் மதியமாவதை உணர்ந்து, “சரி அத்தான். நான் கிளம்பவா….” என்று கேட்டாள்.
சம்மதிக்க மனமே இல்லை அவனுக்கு. இங்கேயே தங்கிவிடு என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. அத்தோடு அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதும் புரிந்தது. விருப்பம் இல்லாதபோதும், மெதுவாக சம்மதமாக தலையை அசைத்தான்.
“எதில் வந்தாய்….?” விடைகொடுக்க விருப்பமே இல்லாமல் கேட்டான்.
“ஆட்டோவில் வந்தேன். ஸ்கூட்டியில் வரும் திடம் இருக்கவில்லை அப்போது…..” என்றவளின் மனநிலை புரிந்தவனின் உதடுகள் மெல்லிய சிரிப்பை விருப்பமில்லாமல் உதிர்த்தது.
“எப்படி போகப் போகிறாய்..? ஆட்டோவிலா? நான் கொண்டுவந்து விடவா….?”
தயக்கமாக கேட்டவனின் தயக்கம் புரிய அவனை பொய்யாக முறைத்தாள்.
“பின்னே, ஆட்டோவுக்கு கொடுக்க என்னிடம் காசு இல்லை. அதனால் மரியாதையாக நீங்களே கொண்டுபோய் விடுங்கள்…”என்றாள் பொய் மிரட்டலாக.
நொடியில் அவன் முகம் மலர்ந்தது.
“ஒரு நிமிடம் பொறு, உடை மாற்றி வருகிறேன்…” என்று கூறியவாறே துள்ளல் நடையில் விரைந்தவனின் உடல் மெலிவு வேதனையை கொடுத்தது அவளுக்கு.
வார்த்தைகளின் வலிமை புரியாமல் அவற்றை வெளியே விட்டுவிட்டு அவன் படும் பாட்டை நினைக்கையில் மனம் வருந்தியது அவளுக்கு. அவனின் செயல்களை மறந்துவிட்டாளா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் அவற்றையெல்லாம் நினைக்கையில் தோன்றும் வலி, வேதனை, அழுகை, ஆத்திரம் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தது. அவன் காதலின் நிஜம், நிழலாய் தொடர்ந்த அவளின் வலிகளை மறைத்திருந்தது.


