நேசம் கொண்ட நெஞ்சமிது 27 – 3

தயாராகி வந்தவன், அவளின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்.

கயல்விழியாலேயே ஒன்றுமில்லை என்பதாக பதிலளித்தவளின் கண்ணசைவில் கட்டுண்டு போனான் இளா.

பெருமூச்சு ஒன்றினை சத்தமில்லாமல் வெளியேற்றி, “வா..” என்றவாறே வண்டியின் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

வீட்டைப் பூட்டிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவன், “ஏறிக்கொள் வது….” என்றவனின் நெஞ்சம் எதிர்பார்ப்பில் தடுமாறியது.

ஒரு பக்கமாக ஏறி அமர்ந்து அவனின் தோளை பற்றியபடி, “ஏறிவிட்டேன் அத்தான்…” என்றவளின் இயல்பில் இளாவின் இளம் நெஞ்சம் விண்ணில் பறந்தது.

அன்பிலே உருவான அந்த அன்பானவளின் அன்புச்செயலில் தன்னை இன்னும் இன்னுமே இழந்தான் இளா.

அவளின் அன்பே அவனுக்கு மிகப் பெரிய தண்டனையாக இருந்தது. தான் செய்த கொடுமைகளை ஒதுக்கி இன்று அவள் தன்னுடன் பயணம் செய்கிறாள் என்பதே அவனைக் குத்திக் கிழித்தது.

தப்புக்கு தண்டனைதான் பரிகாரம் என்று யார் சொன்னது. நாம் காட்டும் அன்பே, சாட்டையாக மாறி தப்பு செய்தவர்களை சாய்த்துவிடும் என்பதை அனுபவித்து அறிந்துகொண்டிருந்தான் இளவழகன்.

மனம் குன்றக்குன்ற, அவனின் மனதில் மையம் கொண்ட மங்கையை, மனம் நிறைய வாழவைக்க வேண்டும் என்கிற உறுதி அவனிடம் கூடிக்கொண்டே போனது.

இது அறியாத வதனியின் மனதோ, மனதளவில் ஒடுங்கி இருக்கும் அவனுக்கு அவள் காட்டும் அன்பே மருந்தாகும் என்று கணக்குப் போட்டது.

முகத்தில் காற்று வீச, காதலியின் கைப்பிடியில் பயணம் செய்துகொண்டிருந்தவனின் உள்ளத்தின் உணர்வை அவனாலேயே இனம் காணமுடியவில்லை. கனவில் மட்டுமே கண்டுகளித்த அற்புதங்கள் நனவாகிக் கொண்டிருப்பதை பார்க்கையில் உள்ளம் இன்னும் இன்னும் அவளுக்காக உருகியது.

பாதை மாறி வண்டி பயணித்தபோதும், எதுவும் கேட்காமல் வருபவளின் குணம் அவனை இன்னுமே அடியோடு சாய்த்தது.

“எங்கு போகிறோம் என்று தெரியுமா வது….?” என்று கேட்டவனை மோட்டார் வண்டியின் கண்ணாடி வழியாகப் பார்த்து அழகாய் சிரித்தாள் அவள்.

“உங்களோடுதானே வருகிறேன் அத்தான். எங்கு போனால் தான் என்ன…?”

அவள் உள்ளத்தின் உறுதிகொண்ட அன்பு அவனுக்கு மறுபடியும் சாட்டையாகிப்போனது.

இப்படி என்னை நம்பித்தானே அன்று குளக்கட்டுக்கு வந்தாள். அவளைப் பற்றி யோசிக்காமல், பொறுப்பில்லாமல், தனியே அவளை விட்டுச் சென்றதில் அவள் அனுபவித்த வேதனையை நினைத்தவனின் வண்டி, அவன் கையில் ஆட்டம் கண்டு அடங்கியது.

“என்னத்தான்….? என்ன ஆனது…?” பதட்டத்துடன் கேட்டாள்.

“ஒன்றுமில்லைடா. சிலது நினைவில் வந்தது. வதூ.. இனிமேல் பொறுப்பில்லாமல் எங்கும் உன்னைத் தனியே விடமாட்டேன்.. என்னை நம்புகிறாய் தானே. ” என்று கேட்டவனின் கேள்வி, அவன் என்ன நினைத்தான் என்பதைக் காட்டிக்கொடுத்தது.

“விடுங்கத்தான். நீங்களும் வேண்டுமென்று செய்யவில்லையே. அதுதான் ஒன்றும் நடக்கவில்லையே. பழையவற்றை நினைக்காதீர்கள்…” என்றாள் ஆறுதலாய்.

அன்பு எவ்வளவு மகத்தானது. அவள் அவன்மேல் கொண்ட அன்பு அவனின் தவறுகளை ஒதுக்கியது.

பூந்தோட்ட சந்தியில் எழும்பிக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் முன்னால் இளா வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தினான். கீழே மூன்று கடைகளையும் மேல வீட்டையும் கொண்டு கட்டப்பட்டுக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம்.

அதை பார்த்தவள், “அத்தான், இது கோபாலன் அண்ணாவின் நண்பர் ஒருவர் கட்டும் கட்டடமாம். என்னிடம் சொல்லி இருக்கிறார் கோபாலன் அண்ணா. மேலே வீட்டின் அமைப்புக்கள் கூட நான் சொல்லித்தான் அமைக்கிறார்கள். இதை கட்டுபவரின் சொந்தங்கள் இங்கு இல்லாததில் என்னிடம்தான் எதையும் கேட்பார் கோபாலன் அண்ணா. நானும் எனக்கு தெரிந்ததைச் சொல்லி இருக்கிறேன்…” என்றவளின் கையைப் பிடித்துக்கொண்டே கட்டிடத்தின் உள்ளே அழைத்துச் சென்றான் அவன்.

“உங்களுக்கும் அவர் நண்பரா அத்தான். கோபாலன் அண்ணாக்கு தெரிந்திருந்தால் உங்களுக்கும் அவரைத் தெரிந்திருக்குமே…”

ரசனையாக அவள் முகத்தைப் பார்த்தபடி, “வீட்டு சொந்தக்காரியின் விருப்பப்படிதானே வீடு இருக்கவேண்டும் வது. அதனால்தான் உன் ஆலோசனைப்படி வீடு எழும்புகிறது…..” என்றவனின் பேச்சு புரியாமல் விழித்தாள் வதனி.

அவன் சொன்னவற்றை உள்வாங்கியவள், கண்கள் விரிய, “அத்தான்…!!!?!!”என்றாள் ஆச்சரியம், மகிழ்ச்சி இரண்டும் கலந்து.

அவளின் நயனவிழிகள் ஆடிய நாட்டியத்தில் தன்னை தொலைத்தவனின் விழிகள் அவளை அப்படியே விழுங்கியது.

அவன் விழிப்பார்வை சொன்ன சேதியில் முகம் சிவந்தாலும், அதை மறைத்தவாறே, “விளக்கமாக சொல்லுங்கள் அத்தான்…”என்றாள் பொறுமை இழந்து.

“எதைச் சொல்ல ?ம்…? நீ சொன்ன அத்தனையும் சரிதான். கோபாலனின் நண்பன்தானே நான். இதைக் கட்டும்போது நான் வெளிநாட்டில் தானே இருந்தேன். அத்தோடு என் மனைவிக்காக நான் கட்டும் வீடு அவளின் விருப்பப்படி இருக்கவேண்டாமா….” காதலுடன் கதை பேசியவனின் நேசத்தில் உருகிப்போனாள் வதனி.

“என்னை மறந்ததே இல்லையா அத்தான் நீங்கள்…” என்று கேட்டவளின் குரல் அடைத்தது.

“அசடு, என்ன பேசுகிறாய்.. பிழை செய்தவன் நான், என்னையே உன்னால் மறக்க முடிந்ததா…? அப்படி இருக்க, என் வாழ்க்கையின் வசந்தம் நீ. உன்னை என்னால் மறக்க முடியுமா? அப்படி மறந்திருக்க, அந்த நொடியே இறந்திருக்க மாட்டேனா……”

கண்கள் கலங்க, “இப்படி எல்லாம் பேசாதீர்கள் அத்தான்…” என்றவளின் பூக்கரம் அவனின் வாயை பொத்தியது.

வாய்க்கு விருந்தளித்த கையை தனது கன்னத்துக்கு மாற்றி, “உள்ளதை சொன்னேன் கண்ணம்மா. ஆனாலும் இனி இப்படி எல்லாம் பேசவில்லை…..” என்றான்.

“உள் வேலை எல்லாம் பெரும்பான்மை முடிந்துவிட்டது வது. இந்த கட்டிடத்தின் வெளி வேலைகள் பிறகுதான் முடிக்க வேண்டும். கீழே உள்ள மூன்று கடைகளில் ஒரு கடையை புத்தகக்கடையாக அமைப்போம். ஒன்றை வாடகைக்கு கொடுக்கலாம். இன்னொறை மாமாவின் தளபாடக்கடையின் கிளையாக மாற்றி விடலாம்…”

அவன் சொல்லச் சொல்ல, அவளின் மனது அவன்பால் உருகி உருண்டோடியது. அவனின் அத்தனை செயல்களிலும் அவள் இருக்கிறாள்.

அன்று அவன் வீசிய கொடும் சொற்களுக்கும் செயலுக்கும் அடித்தளம் என்று பார்த்தால், அதிலும் அவள் மேலான அன்புதானே தெரிகிறது.

அப்படி இவனுக்கு நான் என்னதான் செய்தேன். காதலை சொன்னவனிடம் எனக்கும் பிடித்ததில் சம்மதம் சொன்னேன். அவ்வளவுதானே…

உண்மைக்காதல், உலகம் அழிந்தாலும் உயிர்வாழும் வல்லமை கொண்டது போலும். இல்லாவிடில் அவளின் உலகமே அழிந்துவிட்டதாக, வாழ்க்கையே தொலைந்துவிட்டதாக தவித்திருந்தாளே. இன்று அவன் உருவில் அவளின் மொத்த வாழ்க்கையும் அல்லவா முன்னே நிற்கிறது.

அதுவும் அழியாக்காதலுடன் வீறுகொண்டு விருட்சமாய் அல்லவா நிற்கிறான்.

அவன் காதலைப்பெற அவள்தான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். மனம் பெருமிதத்தில் விம்ம, முழுக்காதலையும் தன் முகத்தில் காட்டி, விழிகளால் அவனை அரவணைத்தவளின் பார்வையில் சொக்கியவனுக்கோ, அவளை இந்த நிமிடமே சொந்தமாக்கிக்கொண்டால் என்ன என்று தோன்றியது.

ஆனாலும் பெரும் பாடுபட்டு தன்னை அடக்கிக்கொண்டவன், “பார்த்துவிட்டாய் என்றால் போவோமா….” என்று கேட்டான்.

அங்கேயே நின்றால் தன்னை மறந்து ஏதேனும் செய்து விடுவோமோ என்று பயமாக இருந்தது அவனுக்கு. அந்தளவுக்கு நொடிக்கு நொடி அவனைத் தன்பால் இழுத்துக் கொண்டிருந்தாள் அவன் காதலி.

“போகலாம் அத்தான். பொறுங்கள்…” என்றவள் அவன் தனக்காக கட்டும் அந்த கட்டிடத்தை மேலும் கீழும் மனம் நிறைந்த மகிழ்வுடன் சுற்றிப்பார்த்தாள்.

“மிக அழகாக இருக்கிறதத்தான்….” கண்கள் மலரச் சொன்னவளை கண்களாலேயே விழுங்கினான் அவன்.

முகத்தில் மலர்ந்த முறுவலோடு, “உன் எண்ணப்படி தானே கட்டிடம் எழும்பி இருக்கிறது. அதனால்தான் மிக அழகாக இருக்கிறது….” என்றவன் தொடர்ந்து,

“மிகுதி வேலைகளை இங்கே சம்பாதித்துத்தான் முடிக்கவேண்டும் வது…..” என்றான்.

“அதெல்லாம் முடிக்கலாம் அத்தான். நானும் உழைக்கிறேன் தானே. இரண்டு பேருமாக சேர்ந்து கட்டி முடிப்போம்…” என்றவளை கண்கள் கனிய நோக்கினான்.

“இது என் மனைவிக்கு நான் கொடுக்கும் அன்புப் பரிசு. அதனால் இதை நானே கட்டி முடிக்கிறேன். உன் பணம் சேமிப்பில் சேரட்டும். என்றாவது எதுக்காவது உதவும்…” என்றவனின் அந்த ரோசம் கூட அவளுக்கு பிடித்தது.

அதுவும் அதை அவள் மனது நோகாதபடிக்கு அவன் சொன்னவிதம் இன்னுமே பிடித்தது.

“சரிதான் அத்தான். ஆனால் பிறகு காசில்லாமல், ஐந்து ரூபாய் தா பத்து ரூபாய் தா என்று நீங்கள் என்னிடம் வரக்கூடாது…” என்றவளின் குறும்பில் நகைத்தான் இளவழகன்.

“அம்மாடியோ.. மிகவும் பொல்லாதவளாக இருப்பாய் போலவே. தப்பித்தவறி ஒரு ரூபாய் தேவைப்பட்டாலும் உன்னிடம் வரமுடியாதா. பயமாக இருக்கிறதே….” என்றவனின் குரலிலும் முகத்திலும் புன்னகை மட்டுமே இருந்தது.

கதைத்துக்கொண்டே வண்டியின் அருகே வந்தார்கள் இருவரும்.

முகம் நிறைந்த சிரிப்புடன் அவர்களின் பயணம் மறுபடியும் தொடர்ந்தது. வதனியின் வீட்டை நோக்கிச் செல்கையில், இளவழகன் மனதில் பாரமேறியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock