அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் தான் இறங்காமல், “இறங்கு வது….” என்றான் மெல்ல.
இறங்கியவள் அவனை கேள்வியாகப் பார்க்கவும், தலையை மறுபுறம் திருப்பி, “நான் வருகிறேன் வது. பிறகு பார்க்கலாம்….” என்றான் தடுமாறிய குரலில்.
அவனை முறைத்தவள், “மரியாதையாக இறங்கி வாருங்கள்…” என்று உத்தரவிட்டாள்.
“இப்போது வேண்டாமே. மாமாக்கு பிடிக்காது. கோபப்படுவார். நான் பிறகு வருகிறேனே…” என்றவன், அவள் முறைத்த முறைப்பில் சட்டென்று வண்டியை விட்டு இறங்கி அதை நிறுத்தினான்.
“நான் சொல்வதைக் கேளேன் வது…”
“இப்போது உள்ளே வருகிறீர்களா இல்லையா……”
அவளின் அதட்டலில் அவளுடன் நடந்தவனின் கையோடு தன் கையை இறுக்கமாகக் கோர்த்து, “அப்பா….” என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள்.
மகளின் குரல் கேட்டு வெளியே வந்தார்கள் சங்கரனும் கலைமகளும்.
மகளின் மனதை ஓரளவுக்கு விளங்கிக் கொண்டிருந்தாலும் சோடியாக வருவார்கள் என்பதை எதிர்பாராத சங்கரன் சற்றே திகைத்தார். அதுவும் இளாவின் கையைச் சுற்றி இறுக்கி இருந்த வதனியின் கை அவளின் எண்ணப்போக்கை மிகத் தெளிவாகக் காட்டியது.
முகத்தில் தெளிவு இல்லாத போதும், வாருங்கள் என்று இருவரையும் பொதுவாக அழைத்த சங்கரன் மருந்துக்கும் இளாவின் முகத்தைப் பார்க்கவில்லை.
தந்தையின் செயலில் சீற்றம் கொண்ட வதனி, “உங்கள் மருமகனை வாருங்கள் என்று அழைக்க மாட்டீர்களா அப்பா….” என்று கேட்டாள்.
“இதுவரை பொய்யாக எதையும் நான் செய்தது இல்லை வனிம்மா…..” என்றார் அவர்.
அந்தப் பதில் அவளை இன்னுமே சீற்றம் கொள்ளச் செய்தது.
“அதாவது, உங்கள் மருமகனை வரவேற்க உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்படித்தானே…?”
கோபத்துடன் கேட்டவளிடம், “அப்படித்தான்…!” என்றார் அவரும்.
அவளையே பெற்றவர் அல்லவா அவர்.
“காரணம்..?” கேள்வி கணையெனப் பாய்ந்து வந்தது.
“என் மகளின் மனதை உடைத்தவனை எனக்குப் பிடிக்கவில்லை…..”
“அப்பா…! மரியாதை மிக மிக முக்கியம்….” அறிவிப்பாக வந்தது அவளிடமிருந்து.
“எனக்கும் தெரியும்…! ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அது!”
அவர்களின் வாக்குவாதப் போராட்டத்தில் வெந்துகொண்டிருந்தான் இளவழகன்.
“மரியாதையைப் பெற்றுக்கொள்ளும் தகுதி இவருக்கு இல்லை என்கிறீர்களா அப்பா…?”
“ஆமாம்….” என்றார் அவரும் தயங்காது.
“ஓ… அப்படியானால் இந்த ஐந்து வருடங்களும் விழுந்து விழுந்து மரியாதை கொடுத்தீர்களே, அப்போது தெரியவில்லையா அந்தத் தகுதி அவருக்கு இல்லை என்று…”
முகம் கன்றியது சங்கரனுக்கு.
“அப்போதெல்லாம் இவரின் உண்மையான சுயரூபம் எனக்குத் தெரியாது. நல்லவர் என்று நம்பினேன், அதனால் மரியாதை கொடுத்தேன்….”
பேச்சளவில் மரியாதை மீண்டிருந்தபோதும், மனதளவில் அது கொஞ்சமும் மீளவில்லை என்பதை அவர் பேச்சே சொல்லியது.
இவர்களின் இந்த வாதாட்டத்தைப் பார்த்த கலைமகளுக்கு கண்கள் கண்ணீரால் நிறைந்தது. ஒரு காலத்தில் அப்பாவுக்கும் மகளுக்கும் எவ்வளவு நெருக்கம். அப்பா ஒன்று சொல்லி மகள் தட்டியதும் இல்லை. மகள் ஒன்றை நினைத்தால் அதைக் கணவர் மாற்றியதும் இல்லை. இன்றானால் இருவரும் எதிரெதிரே நின்று வாதாடுவதைப் பார்க்கமுடியாமல் தவித்தார்.
“அவரின் உண்மையான சுயரூபம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? அல்லது அவரின் சுயரூபத்தை நீங்களாகவே அறிந்துகொண்டீர்களா அப்பா?”
பதில் சொல்ல முடியவில்லை அவரால்.
“சொல்லுங்கள். அல்லது நான் வந்து நடந்ததைச் சொன்னேனா?”
“…….”
“அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் அறிந்தவர் யாராவது வந்து சொன்னார்களா இவரைப்பற்றி….?”
என்ன சொல்வார் சங்கரன்….
“சொல்லுங்கள் அப்பா. யார் சொன்னது அவரைப்பற்றி. அவராகத்தானே வந்து சொன்னார். அந்த நல்ல மனதை புரிந்துகொள்ள முடியவில்லையா உங்களால்…?”
“அவராக வந்து சொன்னதனாலேயே அவர் நல்லவர் ஆகிட முடியுமாம்மா…..”
“அவர் வந்து சொல்லாமல் இருந்திருக்க, கடைசிவரை அவரை நல்லவர் என்று கொண்டாடி இருப்பீர்கள் தானே?”
“நீ சொல்வது உண்மைதான் வனிம்மா. ஆனால் தெரிந்தபிறகு பொய்யாக உறவு கொண்டாடச் சொல்கிறாயா…..”
“சொன்னவரின் நல்ல மனதைப் புரிந்துகொண்டால் உறவாடுவதில் என்ன பிரச்சனை வர இருக்கிறது….?” காதலனுக்காக் பெற்ற தந்தையிடம் நியாயம் கேட்டாள் அவள்.
“எதைப் புரிந்துகொண்டாலும், உனக்கு அவர் செய்த கொடுமையும், அது நிகழ்ந்தபோது நீ பட்ட பாடும்தான் எங்கள் நினைவில் முன்னுக்கு நிற்கிறது…..”
“அதற்கு இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்..?”
எதைப் பதிலாகச் சொல்வார். அவர்கள் இருவரும் வந்த விதமே மகளின் மன நிலையைக் காட்டியது. மகளின் வாழ்க்கையையே முதன்மையாக வைத்து வாழ்ந்த அந்த அன்பானவர்களால், அவளின் சந்தோசத்தை கெடுக்க முடியுமா..முடியாதே!
“உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் உன்னையும் அவரையும் சேர்த்து வைக்கிறோம்….” என்றவரை வெளிப்படையாகவே முறைத்தாள் வதனி.
“அதாவது… உங்களுக்கு அவரைப் பிடிக்காதபோதும், அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இல்லாதபோதும், நீங்கள் பெற்ற மகளின் சந்தோசம் முக்கியம் என்பதால், உங்களுக்குப் பிடிக்காத அவருடன் என்னுடைய வாழ்க்கையை அமைத்துத் தரப்போகிறீர்கள். நான் சொல்வது சரிதானே….” ஆணித்தரமாக கேட்டவளிடம் பதில் சொல்ல முடியவில்லை அவரால்.
“அது… வனிம்மா உன்..”


