“பேசாதீர்கள்….! எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக திருமணத்தை நடத்திவிட்டு நீங்கள் அவர் மேல் வெறுப்புடன் ஒதுங்கி இருக்கப் போகிறீர்கள். இதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறீர்கள். நான் உங்கள் மகள் தானேப்பா. உங்களுக்குப் பிடிக்காததை எப்படி என்னால் செய்யமுடியும் என்று நீங்கள் யோசிக்கவில்லையா……” என்று கேட்டவளின் குரல் தழுதழுத்தது.
“உங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டேன் என்று சொன்னதால் தான் அன்று எங்களுக்குள் பிரச்சனையே வந்தது. அந்தப் பதினெட்டு வயதிலேயே உங்களுக்குத் தெரியாமல் எதையும் செய்ய மறுத்தவள், இன்று உங்களுக்குப் பிடிக்காமல் திருமண வாழ்வுக்குள் நுழைவேன் என்று எப்படி நினைக்க முடிந்தது உங்களால்..” ஆற்றாமையோடு கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் சங்கரன்.
மகள் சொல்வது சரிதானே…..
“ஒன்றை யோசித்தீர்களா அப்பா. இது நாள்வரை நீங்களும் அவரும் பேசிக்கொண்டுதானே இருக்கிறீர்கள். லண்டனில் இருந்தபோது கூட உங்களுடன் அவர் கதைத்தார் தானே. அப்போதெல்லாம் நடந்தவற்றை சொல்லாதவர் நேற்று மட்டும் ஏன் உங்களிடம் வந்து சொன்னார் என்று யோசித்தீர்களா…?”
அதுதானே.. என்று யோசித்த சங்கரன் கேள்வியாக மகளைப் பார்த்தார்.
இப்போது தந்தையின் பார்வையை தாங்கும் சக்தியை இழந்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“நேற்று அவர் என்னைப் பார்க்க வாணிக்கு வந்திருந்தார். பொட்டில்லாத என் நெற்றியைப் பார்த்தவர், பொட்டு வைத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்கு, பொட்டை இழந்தவள் நான் என்றேன். அதைத் தாங்க முடியாமல்தான் உங்களிடம் வந்து உண்மைகளைச் சொல்லி என்னைத் திருமணம் செய்யக் கேட்..”
அவள் சொல்லி முடிக்கமுதலே பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது. கை தானாக கன்னத்தைப் பற்ற அதிர்ச்சியோடு பார்த்தவளை கண்களாலேயே பொசுக்கினார் கலைமகள்.
“என்ன பெண் நீ? என்ன வார்த்தைகள் எல்லாம் பேசுகிறாய். உங்கள் இருவருக்கும் பைத்தியமா பிடித்திருக்கிறது. ஆளாளுக்கு வார்த்தைகளை அள்ளி வீசுகிறீர்களே.. வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியுமா? வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லையா. அல்லது அதன் முக்கியத்துவம் தெரியாதா? வாழமுதலே இப்படி அபசகுனமாக பேசுகிறாயே?” மனம் துடிக்க மகளைக் கண்டித்தார் அவர்.
“பெண் என்பவள் மங்களம் நிறைந்தவள். நீயானால் மாங்கல்யம் தாங்க முதலே என்னவெல்லாம் பேசுகிறாய். இதெல்லாம் என்ன பேச்சு வார்த்தைகள்? என்ன பிள்ளைகள் நீங்கள்? ஆசிரியையாக இருக்கும் நீ கற்றது இதைத்தானா….” மகளின் பேச்சை அந்தத் தாயால் பொறுக்கவே முடியவில்லை. பொரிந்து தள்ளினார்.
“உன்னை இப்படியா வளர்த்தோம். பொட்டு வைக்கப் பிடிக்கவில்லை என்று சொன்னாயே, மனதால் நொந்த பெண்ணை வற்புறுத்தக் கூடாது என்று பொறுத்துப் போனால்… என்ன பேச்சுப் பேசுகிறாய்……” என்று பொரிந்தவரின் கைகளோ மகளின் கன்னங்களை விலாசித்தள்ளியது.
தாயின் அடிகள் வலிக்கவே இல்லை அவளுக்கு.
கலைமகளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவள், “அம்மா, இங்கே பாருங்கள். என் நெற்றியைப் பாருங்கள். குங்குமம் வைத்திருக்கிறேன். இப்போது மங்களகரமாக இருக்கிறேன்தானே. உங்கள் மகளின் மங்களம் இனிமேல் மங்காதம்மா….” என்றாள் தாயைத் தேற்றும் முகமாக.
வதனி சொன்னதைக் கேட்டபிறகே அவளின் முகத்தை கவனித்தார் அவர். அந்த ஒளி வீசும் முகத்தில் ஒளிர்ந்த குங்குமத்தைப் பார்த்ததுமே மனமெல்லாம் நிறைந்தது. அற்புத அழகோடு திகழும் அந்த அழகிய முகத்தை பார்க்கப்பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு. பெற்ற வயிறு குளிர்ந்து. கண்கள் குளமானாலும் அது ஆனந்த கண்ணீராகவே வழிந்தது.
மகளின் முகத்தை வாரி அணைத்தவர், அதிலே தன் முகத்தை தேய்த்து, “இனிமேல் இப்படி எல்லாம் செய்யாதே கண்ணம்மா. அம்மா அப்பாவால் தாங்க முடியாதம்மா. என்றும் இன்றுபோல என்மகள் மங்களம் நிறைய மகிழ்ச்சியோடு வாழவேண்டும் செல்லம்…” என்றவரின் பாச வெள்ளத்தில் மிதந்தாள் வதனி.
தாயாரின் அன்பில் திளைத்தவள் தந்தையைப் பார்க்க, அவரோ கலங்கிய கண்களுடன் மகளையே பார்த்திருந்தார்.
அவரின் நிலை புரிய, “அப்பா….” என்று கண்ணீர்க் குரலில் கூப்பிட்டவள், அவளைத் தூக்கி வளர்த்த அவரின் மார்பிலேயே தலை சாய்த்து, “என் மேல் கோபமாப்பா……” என்றாள்.
அவரின் கைகள் மகளின் தலையைத் தடவியது. அவரின் அன்பில் கரைந்தவள், தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் விழிகள் கலங்கி இருப்பதைக் கண்டவர், பாசத்துடன் அதைத் துடைத்துவிட்டார்.
தந்தையின் விழிகளை தனது இரண்டு உள்ளங்கைகளாலும் துடைத்து, நானும் அன்பு காட்டுவதில் சளைத்தவள் இல்லை என்று காட்டினாள் வதனி.
அவளின் அன்பில் நெகிழ்ந்தவர், “என்னம்மா இதெல்லாம். இன்னும் சிறு பிள்ளைகள் போல் நடந்துகொள்கிறீர்களே….”என்றார் வேதனையோடு.
“இனிமேல் எந்தத் தவறும் விடமாட்டோம் அப்பா. அவரை மன்னித்துவிடுங்கள். எனக்காகப்பா. அவர் பாவம். இதுவரை அத்தான் பட்ட கஷ்டங்களே போதும். மிகவும் நல்லவர். கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு இன்றுவரை தண்டனையை அனுபவிப்பவரை நீங்களும் தண்டித்து விடாதீர்கள் அப்பா……” என்று கெஞ்சியவளைப் பார்க்க அவருக்குப் பெருமையாகவே இருந்தது.
கணவனுக்காகப் பெற்ற அப்பாவிடமே சண்டை இடுகிறாள், கெஞ்சுகிறாள் என்றால், அவளின் அவன் மீதான அன்பு எவ்வளவு ஆழமானது. இந்த ஆழமான அன்பைப் பெற்றவன் கெட்டவனாக இருக்கவே முடியாது. கோபத்திலோ குழப்பத்திலோ வார்த்தைகளை தவற விடுவது மனித இயல்புதானே….
“கோபமா அப்பா…..” என்று தந்தையின் எண்ணப்போக்கை அறியாது கொஞ்சியவளை பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்தது.
சற்று முன்னர் தன்னையே வாயடைக்க வைத்த மகள் இப்போது குழந்தையாக மாறி கொஞ்சுவதை பார்க்க சுகமாக இருந்தது.
மனம் நிறைய வாய்விட்டு சிரித்தவர், அவளின் தலையில் செல்லமாக குட்டி, “உன் மீது எனக்கென்ன கோபம் கண்ணம்மா. நீ சந்தோசமாக இருந்தால் அதைப் பார்த்து பூரிக்கும் இரண்டு ஜீவன்கள்தான் நானும் உன் அம்மாவும். உன் வாழ்க்கை என்றும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதுதான் எங்களின் வாழ்க்கையின் லட்சியம். ஆனாலும் கண்ணம்மா. நீங்கள் இருவரும் இனிமேல் பேசும் வார்த்தைகள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். சரிதானா…..” என்று தங்களின் சம்மதத்தைச் சொன்னபோதும், அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டவும் மறக்கவில்லை அவர்.
“இது வாழ்க்கை. விளையாட்டல்ல. வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்தால் அதன் அருமை புரியும் கண்ணா. வாழ்ந்தவர்கள் சொல்கிறோம், பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் சரிதானா……” என்றவரின் அன்பில் நெகிழ்ந்தவள் சரி என்பதாக தலையை அசைத்தாள்.
அவளின் தலை ஆட்டலில் குறும்பைக் கண்களில் குடியேற்றியவர், “எங்கே உன் அவர்…?” என்றார் கேலியுடன்.
அப்போதுதான் அவன் வீட்டிற்குள் இல்லை என்பதை உணர்ந்தவள், பதட்டத்துடன், “அத்தான்….!” என்று அழைத்தவாறே வெளியே ஓடினாள்.
அவளின் பதட்டம், அந்த பதட்டத்திலும் பாசத்துடன் அழைத்த “அத்தான்” என்கிற அழைப்பு, தாங்கள் இருக்கிறோம் என்பதையும் மறந்து அவனைத் தேடி ஓடிய ஓட்டம் அனைத்துமே, அவளின் அவன் மீதான அன்பைக் காட்டியது.
பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர். அந்த புன்னகை பெருமையுடன், நிறைவுடன், நிம்மதியுடன் இருந்தது.
அவர்களுக்கும் வேறு என்னதான் வேண்டும். பெற்ற பிள்ளைகளின் நல் வாழ்வு ஒன்று மட்டுமே, என்றும் பெற்றவர்களின் கனவாக இருப்பது. அந்த நல்வாழ்வை கண் முன்னாடி பார்த்துவிட்டால் வருமே ஒரு நிறைவு.. வாழ்க்கையில் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து ஜெயித்தவர்களுக்கு மாத்திரமே உண்டாகும் தித்திப்பு அது. அந்த நிமிடம் அதை உணர்ந்தார்கள் அவர்கள்.
வெளியே சென்றவளின் கண்கள், முதலில் அவனின் வண்டி நிற்கிறதா என்று தேடியது.


